இறைவன் எழுந்தருளும் கோயில்

 


இறைவன் விரும்பி அமரும் கோயில்

-----

 

     இறைவன் எங்கே இருக்கின்றான் என்றால் அவன் இல்லாத இடமே இல்லை. அவன் எல்லாப் பொருள்களிலும்எல்லா உயிர்களிலும் நிறைந்து இருக்கின்றான் என்பர் பெரியோர். "ஏகன் அநேகன் இறைவன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும்உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான்என்று இதற்குப் பொருள்.

 

     உருவம் இல்லாத பரம்பொருள்இந்த உலகத்தைத் தொழிற்படுத்தும் போதுஉருவங்களை மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் உருவங்கள் அனைத்தும்நாம் கற்பனை செய்துகொண்ட உருவங்களே ஆகும். எச்செயலையும் இறைவன் தனக்கு என ஓர் உருவம் இல்லாமலேயே செய்யவல்லவன். என்றாலும்உருவம் கொள்ளாவிட்டால்உயிர்கள் அவனை அறியமாட்ட. என்பதால் இறைவன் உரும் கொள்கின்றான். யார் யார் எந்தெந்த வடிவில் வழிபடுகின்றார்களோஅந்த வடிவில் எழுந்தருளுவது இறைவனது இயல்பும் கருணையும் ஆகும். 

 

     இறைவனை நாம் எல்லோரும் வீட்டில் ஒரு குறியை வைத்து வழிபடுகின்றோம். பிறகு திருக்கோயிலுக்குச் சென்றும் வழிபடுகின்றோம். தீர்த்தங்களில் முழுகியும் வழிபடுகின்றோம். நாம் கருதுகின்ற இடங்களில் எல்லாம் எழுந்தருள் புரிவான் இறைவன் என்பதை உணராமல்சில திருக்கோயில்களுக்கும்சில தீர்த்தங்களுக்கும் முக்கியத்துவத்தைக் கற்பித்து வைத்ததால்அந்த இடங்களை நாடி ஓடுகின்றோம். உண்மையில் பார்த்தால்இறைவன் இல்லாத இடமே இல்லை. ஆனாலும்இந்த உண்மையை உணராமல்அவன் இங்கே இருக்கின்றான்அங்கே இருக்கின்றான் என்று ஓடுகின்றோம். "பள்ளமும் மேடும் பரந்து திரிவரே" என்று நம்மைப் பார்த்துக் கூறுகின்றார் திருமூல நாயனார்.

 

     நாம் இயல்பாக நாள்தோறும் வழிபடுகின்ற நமது இல்லங்களிலேயே இறைவன் எழுந்தருளுகின்றான். எதற்காகநம்மிடத்தில் இன்பம் பெருகுவதற்காக. எப்படிப்பட்ட இன்பம்சிவந்த கண்களை உடைய திருமாலினிடத்தும்படைப்புக் கடவுள் ஆகிய பிரமனிடத்தும்இந்திரன் முதலாகிய தேவர்களிடத்தும்இன்னும் பிறிதாக உள்ள அண்டங்களில் உள்ள உயிர்களினிடத்தும்மற்ற எங்கும் இல்லாத ஒப்பற்ற பேரின்பத்தை நம்மிடத்தில் கொண்டு கூட்டவேதமது வீடுகள்தோறும் எழுந்தருளுகின்றான் என்கின்றது மணிவாசகப் பெருமான்  அருளிய "திருவெம்பாவை"

 

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்து அருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடு ஏல்ஓர் எம்பாவாய்.

 

இதன் பொருள் ---

 

     மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலினிடத்தும்நான்முகனிடத்தும்பிற தேவர்களிடத்தும்எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகியஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து உண்டாகும்படிநம்மைப் பெருமைப் படுத்திஇவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்துசெந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளுகின்ற வீரனைஅழகிய கருணை நோக்குடைய மன்னனைஅடிமைகளாகிய நமக்கு அமுதம் போல்பவனைநம் தலைவனைப் புகழ்ந்து பாடிநன்மைகள் பெருகதாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

 

     தேவர்கள் கனவிலும் கூடக் கண்டு அறியமுடியாத தனது செம்மையான திருவடிகளைதனது அடிவர்களுக்குக் காட்டி அருளி புரிபவன் இறைவன் என்பதை, "தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்" என்றும், "கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றிநனவிலும் நாயேற்கு அருளினை போற்றி" என்றும் காட்டி அருளினார் மணிவாசகப் பெருமான்.

 

     எல்லா உயிர்களையும் படைக்கின்ற முதற்கடவுளாகவும்எல்லா உயிர்களையும் காத்து அருள் புரிகின்றவனாகவும்எல்லா உயிர்க்கும் இறுதியைப் புரிபவன் ஆகவும் இருக்கின்ற அந்தப் பரம்பொருளைஅவனது ஆணையின்படிபடைத்தல்காத்தல்மறைத்தல் ஆகிய முத்தொழிலையும் புரிகின்ற மும்மூர்த்திகளும் கூட அறியமாட்டர் என்னும்போதுஅவனை மற்ற யாரும் அறிந்து கொள்ள முடியாது.  ஆயினும் தன்னை உள்ளன்போடு வழிபடுகின்ற அடியார்களுடைய பழைமையானதும் சிறியதும் ஆகிய இல்லங்களில்,தனது அருட்சத்தியோடும் எழுந்தருளுகின்றவன் இறைவன் என்பதைப் பின்வரும் பாடலால் மணிவாசகப் பெருமான் அருளுகின்றார்.

 

"முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்,

            மூவரும் அறிகிலர்,யாவர் மற்று அறிவார்?

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்

            பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

            திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்,

            ஆரமுதே! பள்ளி எழுந்தரு ளாயே.

 

இதன் பொருள் ---

 

     அருமையான அமுதம் போன்றவனே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும்நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்வேறு யாவர் அறியக்கூடியவர்?பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டிஅழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளி எழுந்து அருள்வாயாக.

 

     அப்படி இறைவன்,தனது தேவியோடும் எழுந்தருளுவதை உயிர்கள் முன்னதாகவே உயிர்கள் அறிந்து கொள்ள முடியுமாஎன்றால்அது முடியாது. அவன் நம்மை அறியாமலே எழுந்தருளிபின்புதான் தன்னைக் காட்டுவான். அறிவில் சிறந்த அடியார்கள் எல்லாம் வழிபடுகின்ற தில்லையிலே எழுந்தருளி உள்ள பெருமான்முதலில் இந்த உலகில்,குருநாதனாகத் திருமேனி தாங்கி எழுந்தருளி வருவான். குருநாதனாக எழுந்தருளி வந்தது மனித வடிவில் என்பதால்குருநாதரை முதலில்ஒரு மனிதராகப் தான் நாம் அறிவோம். அவர் அருளால் மெய்யறிவைப் பெற்ற பின்னர் தான்,நமது வீட்டுக்கு எழுந்தருளி வந்து நம்மை ஆட்கொண்டது இறைவன்தான் என்பதை அறிவோம்.

 

"பத்தர் சூழப் பராபரன்

            பாரில் வந்துபார்ப்பான் எனச்

சித்தர் சூழச் சிவபிரான்

            தில்லை மூதூர் நடஞ்செய்வான்,

எத்தன் ஆகிவந்து இல்புகுந்துமை

            ஆளும் கொண்டும் பணிகொள்வான்

வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்

            சென்னி மன்னி மலருமே.      --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     தில்லையாகிய பழமையான பதியிலே ஆனந்தத் தாண்டவம் புரிபவனும்மிகவும் மேலானவனும் ஆகியசித்தர்கள் சூழ்ந்து வணங்கும் அந்தச் சிவபெருமான் அடியார் புடை சூழபூமியில் வந்து அந்தணக் கோலத்தோடு,ஏமாற்றுபவனாய் (அறியாமல்) வந்து எங்கள் வீடுகளில் புகுந்து எம்மை அடிமை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்ளும் படியாகச் சூட்டிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழேநமது தலை நிலைபெற்று பொலிவு பெற்று விளங்கும்.

 

     எத்தன் --- ஏமாற்றுபவன். நம்மை அறியாமல் வருபவன். நம்மை அறியாமலேயே நமது உள்ளத்தில் புகுந்துந்தம்மை நெறிப்படுத்துவான் இறைவன் என்பதைபின் வரும் அப்பர் திருத்தாண்டகத்தால் அறியலாம்.

                                                

"ஊன்ஆகி,உயிர்ஆகிஅதனுள் நின்ற

            உணர்வுஆகி,பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து

            நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,

தேன்ஆருங் கொன்றையனே! நின்றி யூராய்!

            திருஆனைக் காவில் உறை சிவனே! ஞானம்

ஆனாய்! உன் பொற்பாதம் அடையப் பெற்றால்

            அல்லகண்டங் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

 

இதன் பொருள் ---

 

     திருவானைக்காவில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! ஞானவடிவானவனே! என் உடம்பாய்,உயிராய்உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். நான் ஏதும் அறியாத நிலையில்,என்னுள் வந்து சேர்ந்துஎனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய்தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.

 

     எனவேநாம் உள்ளன்போடு வழிபட்டால்நமது இல்லங்களில் பெருமான் எழுந்தருளுவான். இல்லத்தில் தானேநமது முதல் வழிபாடு தொடங்குகின்றது. எனவேஅங்கேயே வந்து அருள் புரிவான். நமது இல்லங்கள்தோறும் என்றதுநாம் வாழும் வீடு என்பது மட்டுமல்ல. உயிரானது வாழுகின்ற இந்த உடம்பும் ஆகும் என்பதை நுனித்து உணர்தல் வேண்டும். 

 

     "உடம்பு உள்ளே உத்தமன் கோயில் கொண்டான்" என்று திருமூல நாயனாரும், "அடியார் உடல் இல்லமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே" என்று மணிவாசகப் பெருமானும், "என்னுள் வந்து" என்று அப்பர் பெருமானும் காட்டியபடிநமது உடம்பினுள் புகுந்து,நமது உயிரிலும் நிறைந்து அருள்வான் இறைவன்.

 

     வானுலகத்தில் உள்ள பிரமதேவர்கள்நாராயணர்கள் மற்ற எல்லாரும்பலகாலம் தவம் புரிந்துஇறைவன் எழுந்தருள வேண்டும் என்று பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பளிங்கு அறையைத் தயார்படுத்தி வைத்துள்ளார்கள். ஆனால்அவற்றைப் பொருட்படுத்தாமல்அடியவர்களின் குடிசையில்அவர்களை அறியாமல் வலிய வந்து நுழைந்துஅவரகள் உள்ளம் என்னும் சிறுகுடிசையின் உள்ளும் நுழைந்து அருளுகின்றான்.

 

"வான்இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

     மாதவம் பன்னாள் புரிந்து,மணிமாடம் நடுவே

தேன் இருக்கும் மலரணைமேல் பளிக்கு அறையின் ஊடே

     திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்,

நான்இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து,எனக்கே

     நல்லதிரு அருள் அமுதம் நல்கியது அன்றியும்என்

ஊன்இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்துடியேன்

     உள்ளம் எனும் சிறுகுடிசை உள்ளும் நுழைந்தனையே!"

 

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தை அனுபவித்துஇறையருளைப் பெற்றவள்ளல்பெருமான் அவரது அனுபவத்தை இப்படி இனிமையாகப் பாடி அருளி உள்ளார்.

 

இதன் பொருள் ---

 

     மேலுலகில் இருக்கும் பிரமன்நாரணன் முதலிய தேவர்களும்மற்றவர்களும் பல்லாண்டுகள் பெரிய தவம் செய்து இறைவன் எழுந்தருளும் மணிகள் இழைத்த நெடிய வானத்தின் நடுவில் அமைந்த பளிங்குப் பாறை மேல் பரப்பிய தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த அணை மேல் திருவடியைச் சேர்த்து அருள்க எனத் துதித்து வருந்தவும்நான் இருக்கும் குடிசை வீட்டிற்குத் தானே வலிய வந்து உள்ளே நுழைந்து எளியனாகிய எனக்கு நல்ல திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளியதோடு,என் தசையோடு கூடிய உடம்பாகிய குடிசைக்குள் மனம் உவந்து நுழைந்து அடியேனுடைய இல்லம் என்னும் சிறு குடிசைக்குள்ளும் நுழைந்து அருளினாய்உனது திருவருட் செயலை என்னவென்று புகழ்வேன். 

 

     எனவேஇந்த இடம்அந்த இடம்இந்த தீர்த்தம்அந்த தீர்த்தம் என்று காடு மேடுகள் எல்லாம் அலைவதை விடுத்துநம்முடைய இல்லத்திலேயே உள்ளன்போடு வழிபாடு செய்து வந்தால்இறைவன் நாம் இருக்கும் இடத்திலேயே எழுந்தருளுவான். தமது உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு அருள்வான் என்பதை அறிதல் வேண்டும். வாய்ப்பு இருந்தால்தூரத்தே உள்ள திருக்கோயில்களுக்கும்தீர்த்தங்களுக்கும் சென்று வழிபட்டு வரலாம். ஆனால்அங்கே சென்று வழிபட்டால்தான் இறைவன் அருளுவான் என்று எண்ணுவது அறியாமை.

 

     புற உலகில் மக்களால் அமைக்கப்பட்டு உள்ள குடிசைகள் மட்டுமல்லாது மாடமாளிகைகள் கூட காலவெள்ளத்தில் அழிந்து போகக் கூடியவை. அதுபோலவேநமது உடலும் நாளடைவில் நைந்து சிதைந்து போகும். உடல் நைந்து போகும் முன்நமது உள்ளம் நைந்து போகவேண்டும். நைந்த உள்ளமே இறைவனுக்கு உகந்த கோயில் ஆகும். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம்" என்றார் அப்பர் பெருமான். "காலை எழுந்து் தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 

"நகம் எல்லாம் தேயக் கையால்,

     நாள்மலர் தொழுது தேவி,

முகம் எல்லாம் கண்ணீர் சோ,

     முன்பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அல்லால் கோயில் இல்லை,

     ஐயன் ஐயாறனார்க்கே"

 

என்னும் அப்பர் பெருமான் அருட்பாடலின்படி "காதலாகிகண்ணீர் மல்கி" வழிபடுகின்ற அடியார்கள் உள்ளமே ஆண்டவன் உறையும் கோயில் ஆகும். பல்லவன் மன்னன் எழுப்பிய அழகான கோயிலுக்கு எழுந்தருளுவதை விடுத்து, பூசலார் நாயனார் எழுப்பிய மனக் கோயிலுக்கே முதலிடம் கொடுத்தார் இறைவர்.

 

"நெஞ்சமே கோயில்நினைவே சுகந்தம்அன்பே

மஞ்சனநீர்பூசை கொள்ள வாராய் பராபரமே"

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...