042. கேள்வி --- 05. இழுக்கல் உடையுழி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், " ஒழுக்கம் உடையவர் வாயில் இருந்து பிறக்கும் சொல்லானதுவழுக்குதலை உடைய சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் போல் உதவி செய்யும்என்கின்றார் நாயனார்.

 

     சேற்று நிலத்தில் நடப்பவனுக்குத் தான் விழுந்து விடாமல் இருக்க ஊன்றுகோல் ஒன்று வேண்டும். உலக வாழ்வில் ஒருவனுக்கு வறுமையின் காரணமாகவாவதுஅறியாமை காரணமாகவாவது துன்பம் நேருமாயின்ஒழுக்கம் உடையவர் வாயில் பிறக்கும் சொற்கள் அத் துன்பதைப் போக்க உதவும்.

 

     "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலாதார்" என்னும் திருக்குறளின் விசேட உரையில்,"கல்விக்குப் பயன் அறிவும்அறிவிற்குப் பயன் ஒழுக்குமும் ஆகலின்அவ்வொழுகுதலைக் கல்லாதார்பல கற்றும் அறிவிலாதார்" என்று கூறியிருத்தல் காண்க. 

 

     எனவேகல்வி அறிவு உடையவர் ஆயினும்,ஒழுக்கம் இல்லாதார் அறிவில்லாதவர். ஆகையால்அவர் வாய்ச்சொல் கேட்டல் ஆகாது என்பது தோன்ற, "ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்" என்றார் நாயனார். "பேதை அவன் வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடையார்" என வரும் திருவள்ளுவ மாலைப் பாடல் வரிகளை எண்ணுக.

 

திருக்குறளைக் காண்போம்...

 

இழுக்கல் உடைஉழி ஊற்றுக் கோல் அற்றே,

ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.              

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று--- வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்

 

     ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்--- காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.

 

     (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின்அவர் வாய்ச்சொல் கேட்கப்படாதுஎன்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க'  என்பது குறிப்பெச்சம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஆலடியார் பால்பட்ட அந்தணர்போல் உய்வதற்கு,

சீலம் உடையார்பால் செவி தாழ்க்க, ---  சால

இழுக்கல் உடைஉழி ஊற்றுக் கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.    

 

      ஆலடியார் --- ஆலமரத்தின் அடியில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி. அந்தணர் --- சனகாதியர் என்று சொல்லப்படுகின்ற நால்வர். நால்வர் ஆலமர் கடவுளின்பால் பெற்ற ஞானத்தால் உய்தி பெற்றதைப் போல,  நாமும் உய்யவேண்டும் என்றால்ஒழுக்கம் உடைய சான்றோர்பால் செவி தாழ்த்து நிற்கவேண்டும். நல்லவர்கள் வாயில் பிறக்கும் சொல்ஒருவருக்கு ஆபத்து வரும்போது ஊன்றுகோல் போல.

 

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை,ஆறு

     அங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும்,வாக்கு இறந்த

     பூரணமாய்,மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை

     இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை,நினையாமல்

     நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

 

என்னும் திருவிளையாடல் புராணப் பாடலின்படிக்குவேதங்களையும்ஆறு அங்கங்களையும் கற்றதோடுகேள்வியிலும் வல்லவர்களான முனிவர்க்குஅவருடைய கல்வி அறிவின் துணைக்கொண்டுஎல்லாம் வல்ல பரம்பொருளை உள்ளவாறு உணர முடியவில்லை. கற்று உணர்ந்த பெரியோர்பால் தாழ்ந்து இருந்து கேட்டு உய்யும் பேறு அவர்க்கு வாய்க்கவில்லை. எந்தப் பரம்பொருளைத் தெளியமுடியாமல் வருந்தினார்களோஅந்தப் பரம்பொருளே குருமூர்த்தமாக எழுந்தருளி வந்துகல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து,சின்முத்திரையைக் காட்டி உணர்த்தி அருளப் பெற்றனர்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பாகவதங் கேட்டுப் பரிச்சித்தன் முத்திபெற்றான்,

ஏக வுருவாம் இரங்கேசா! - சோக

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.          

 

இதன் பொருள் ---  

 

     ஏக உருவாம் இரங்கேசா --- ஏகமூர்த்தியாகிய திருவரங்கநாதக் கடவுளே! பரிச்சித்தன் --- பரிச்சித்து மகாராஜன்பாகவதம் கேட்டு --- சுகரிடத்திலே பாகவத புராணத்தைச் சிரவணம் செய்துமுத்தி பெற்றான் --- மோட்சம் அடைந்தான், (ஆகையால்இது) ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் --- கல்வி ஒழுக்கம் உடையவர்களுடைய வாயில் பிறக்கும் சொல்சோகம் இழுக்கல் உடை உழி --- சோர்ந்து வழுக்குதலை உடைய சேற்று நிலத்தில்,ஊற்றுக் கோல் அற்று --- உன்றுகோல் போல் உதவும் தன்மையை உடையது (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- மேன்மக்கள் சொல் கேள். கேள்வி முயல்.

 

            விளக்கவுரை--- பரிசித்து மகாராஜன் பெரியோராகிய சுகமுனிவரை அடுத்துஅவர்க்குப் பெருமை பண்ணிஅவர் வாய் வார்த்தையை விரும்பிக் கேட்டான். அவர் கல்வி ஒழுக்கங்களில் நிரம்பிய பெரியோராகையால் அவனுக்குப் பாகவத புராணத்தை உபதேசித்து அருளினார். அவர் திருவாய் மலர்ந்தருளிய பரிசுத்த மொழியாகிய பாகவத புராணம்விடத்தால் அவனுக்கு நேர்ந்தமரணத்தையும்அதற்குக் காரணமான பாவத்தையும் போக்கி அவனைப் பரிசுத்தனாக்கி முத்தி அடைவித்தது. இழுக்கலுடைய சேற்று நிலத்தில் அலைபவர் போல்,விடமாரணத் துயரத்தில் மூழ்கியிருந்த பரிசித்தனுக்குச் சுகமுனிவர் திருவாய்மொழி ஊன்றுகோல் போல உதவிற்று.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...