045. பெரியாரைத் துணைக்கோடல் --- 07. இடிக்கும் துணையாரை

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில்"தீயனவற்றைச் செய்தல் கண்டால்கோபித்துப் புத்தி சொல்லும் துணை ஆயினவரைஇவர் நமக்குச் சிறந்தவர் என்று கொண்டுஅவரைத் தழுவி நடப்பவரைக் கெடுக்கும் தகுதியினை உடையவர் உலகில் யாரும் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     தீயன --- பாவச் செயல்களும்நீதி அல்லாதனவும் ஆகும். பாவங்கள் --- பாவத்தை உண்டு பண்ணும் செயல்கள். அவை ஐம்பெரும் பாதகங்கள். நீதி அல்லாதன --- அறநூல்களில் சொல்லபட்டுள்ளஇக் காலத்ததிற்குப் பொருந்தாதவற்றை ஒழித்துசொல்லாதவனவற்றுள் பொருந்தவனவற்றை மேற்கொண்டு உலகநடையோடு பொருந்த ஒழுகாதுதான் விரும்பியவாறே செய்யும் செயல்கள்.

 

     தீயனவற்றையும்நீதி அல்லாதனவற்றையும் ஒருவன் செய்யும் காலத்துஅவனுக்குச் சிறிதும் அஞ்சாதுஅவனை நெருங்கிச் சென்று அறிவுரை கூறுதல் வேண்டும். அவ்வாறு செய்பவர் துணையாக இருந்தால்ஒருவனுக்குக் கேடு நேராது.

 

திருக்குறளைக் காண்போம்....

 

இடிக்கும் துணையாரை ஆள்வாரையாரே

கெடுக்கும் தகைமை யவர்.  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            இடிக்கும் துணையாரை ஆள்வாரை--- தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை

 

     கெடுக்கும் தகைமையவர் யார் --- கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?

 

            (தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது தமக்கு அவையின்மையும்அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின்அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரைஎன்று உரைப்பாரும் உளர்.)

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்

ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு;

மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்

செல்லாவாம் செற்றார் சினம்.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கொல்லை இரு புனத்துக் குற்றியடைந்த புல் --- கொல்லையாகிய பெரிய நிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்த புல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு --- உழவரது உழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம் --- வலிமை இல்லாதவரேயாயினும் நல்லினத்தார் என்னும் வலிய சார்பினைச் சார்ந்தவர்மேல் பகைவரது சினம் பயன்படாமல் போம்.

 

     நல்லாரினத்தில் சேர்ந்திருப்பார் மேல் பகைவர் சினம் செல்லாது.

 

செயல்வேண்டா நல்லன செய்விக்கும்தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும்இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்.  --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மூத்தார் வாய்ச்சொல் --- அறிவால் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள்செயல் வேண்டா நல்லன செய்விக்கும் --- செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்தீய செயல் வேண்டி நிற்பின் --- அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின்விலக்கும் --- இடைநின்று தடுத்தலைச் செய்யும்இகல் வேந்தன் தன்னை --- மாறுபாடுடைய அரசனைநலிந்து --- வலியுறுத்திதனக்கு உறுதி கூறலால் --- அவன் தனக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால். முன் இன்னா --- முன்னே துன்பந்தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)

 

     அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும்,தீயன விலக்கும் என்பதாம்.

 

    அரசனை நலிதலாவது - அவன் தனித்திருந்த விடத்து அது செய்தல் தகாது என்று பன்முறையும் எடுத்துக் கூறுதல். அமைச்சர்கள் கூறும்பொழுது சிறிதுகாலம் இன்னாதாய் இருப்பினும் பின்னர் நெடுங்காலம் அடையக்கூடிய இன்பத்தை அஃது அளித்தலின் அரசர்கள் அமைச்சர் சொற்கேட்க என்பதாம்.

 

 

செய்தவ வேடம் மெய்யில் தாங்கிக்

கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்

வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன

கடவுள் மன்றில் திருநடங் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன் யானே,உய்தற்கு

ஒருபெருந் தவமும் உஞற்றிலன்ஞற்றாது

எளிதினில் பெற்றதுஎன்எனக் கிளப்பில்,

கூடா ஒழுக்கம் பூண்டும்,வேடம்

கொண்டதற்கு ஏற்பநின் தொண்டரொடு பயிறலில்,

பூண்ட அவ் வேடம் காண்தொறும் காண்தொறும்

நின்நிலை என்னிடத்து உன்னி உன்னி,

பல்நாள் நோக்கினர்கலின்ன்னவர்

பாவனை முற்றியப் பாவகப் பயனின்,யான்

மேவரப் பெற்றனன் போலும்,ஆகலின்,

எவ்விடத்து அவர் உனை எண்ணினர்,நீயும் மற்று

அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே,அதனால்

இருபெருஞ் சுடரும் ஒருபெரும் புருடனும்

ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்

மாபெருங் காயம் தாங்கி,ஓய்வு இன்று,

அருள் முந்து உறுத்த ஐந்தொழில் நடிக்கும்

பரமா னந்தக் கூத்த! கருணையொடு

நிலையில் பொருளும் நிலையியல் பொருளும்

உலையா மரபின் உளங்கொளப் படுத்திப்

புல்லறிவு அகற்றி,நல்லறிவு கொணீஇ

எம்ம னோரையும் இடித்துவரை நிறுத்தி,

செம்மைசெய்து அருளத் திருவுருக் கொண்ட

நற்றவத் தொண்டர் கூட்டம்

பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே.

                       --- சிதம்பர மும்மணிக்கோவை.

 

இதன் பொருள் ---

 

     தவ வேடத்தை உடம்பிற்கு வெளியே தாங்கிஅத் தவக் கலத்திற்கு மாறான வஞ்சக ஒழுக்கத்தை உள்ளத்தின் உள்ளே வைத்து இருந்தும்திருச்சிற்றம்பலத்தில் ஐயம் திருநடம் கும்பிட்டு உய்தியை நான் பெற்றேன். உய்தியைப் பெறுதற்கு ஒரு தவத்தையும் நான் புரியவில்லை. அவ்வாறு இருக்கையில் உய்தியைப் பெற்றது எப்படி எனக் கேட்டால்உள்ளத்தில் கூட ஒழுக்கம் பூண்டு இருந்தும்வேட மாத்திரத்தால்சிவனடியார்களோடு நான் கூடி இருந்தேன். எனது வேடத்தைக் கண்ட அளவில் அந்த மெய்யடியார்கள்என்னில் சிவத்தை வைத்துப் பலநாளும் பார்த்தார்கள். அப்படிப் பாவனையால் அவர்கள் பார்த்தபார்வையின் பலம் முற்றுப் பெற்றது. சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோஅவ்விடத்தில் அந்தப் பரம்பொருள் வீற்றிருந்து அருளுவன் என்பதில் ஐயமில்லை. வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக்கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

 

     இதன் உண்மையாவதுசிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோஅவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால்பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால்பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

 

     குருட்டு மாட்டைமந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால்அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

 

     முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும்அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...