043. அறிவுடைமை --- 07. அறிவுடையார் ஆவது

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும், கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "அறிவு உடையவர் என்பார்பின்னர் வரப்போவதனை அறிபவர் ஆவார். அறிவு இல்லாதவர் என்பார்அவ்வாறு அறிய முடியாதவர்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவு உடையவர் என்பார்பின்னர் வரக் கூடிய நன்மை தீமைகளை முன்னரே அறிந்து அதனால் ஆகிய தீமைகைள விலக்கிநன்மைகளை அடைவார். அதனால் அவர்க்கு இன்பம் மிகும். அறிவில்லாதவர் வந்த பிறகுதான் நன்மை தீமைகளை அறிவார். அதனால் அவர்க்குத் துன்பம் மிகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அறிவுஉடையார் ஆவது அறிவார்அறிவுஇலார்

அஃது அறிகல்லா தவர்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அறிவுடையார் ஆவது அறிவார்--- அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார்

 

     அறிவிலார் அஃது அறிகல்லாதவர்--- அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.

 

      (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்என்று உரைப்பாரும் உளர்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சீதரனைப் பார்த்தன் அன்று சேர்ந்தான்,அரவுயர்த்தோன்

யாதவரைச் சேர்ந்தான்,இரங்கேசா! --- ஓதில்

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லா தவர்.           

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! அன்று --- பாரதப் போருக்கு முன்புசீதரனை --- சீதேவி மணாளனாகிய கண்ணனைபார்த்தன் சேர்ந்தான் --- (படைத் துணைவனாகப் பெற்றுஅவனோடு) அருச்சுனன் சேர்ந்துகொண்டான். அரவு உயர்த்தோன் --- பாம்புக் கொடியோன் ஆகிய துரியோதனன்யாதவரைச் சேர்ந்தான் --- (கண்ணபிரானுடைய சேனா வீரர்களாகிய) யாதவரைப் படைத் துணைவராகப் பெற்றுஅவர்களோடு சேர்ந்து கொண்டான். (ஆகையால்இது) ஓதில் --- சொன்னால்ஆவது அறிவார் அறிவு உடையார் --- இனி வரும் காரியத்தை அறிய வல்லவர் அறிவு உடையவர் ஆவார்அஃது அறிகல்லாதவர் அறிவு இலார் --- அதை அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர் ஆவர் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- ஆவது அறியான் அறிவிலான். முன்பின் அறியாதவன் மூடன்.

 

            விளக்கவுரை--- பாரதப் போருக்கு சற்று முந்திதுரியோதனனும் அருச்சுனனும் கண்ணன் படைத் துணையை நாடிச் சென்றார்கள். அப்போது கண்ணன் அவர்களை நோக்கி, "போரில் நான் ஆயுதம் எடுக்க மாட்டேன்நிராயுதபாணியாகிய நான் வேண்டுமாஆயுத வீரர்களாகிய என் சேனை வேண்டுமா?" என்றான். உடனேஅருச்சுனன், "நிராயுதபாணியானாலும் நீயே எனக்கு வேண்டும்" என்று கண்ணனோடு சேர்ந்து கொண்டான்.  துரியோதனன், "நிராயுதபாணியால் பலனில்லைஆயுதபாணிகளாகிய யாதவ வீரரே வேண்டும்" என்று அவர்களோடு கூடிக் கொண்டான். பிறகு யார் வென்றதுயார் தோற்றது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அருச்சுனன் அறிவு உடையான். ஆகையால்இனி ஆவது அறிந்த கண்ணனோடு சேர்ந்து கொண்டான். துரியோதனன் அறிவிலான். ஆகையால்,இனி ஆவது அறியாமல் யாதவ வீரரோடு கூடிக்கொண்டு தோற்று மடிந்தான்.

 

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தீதைஉன்னி  நீங்கினன் சுசீலன் புயபலன்பின்

மூதுஅஞர்கோள் பட்டான்,முருகேசா! - ஓதில்

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல் லாதவர்.      

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேசிசீலன் தீதை உன்னி நீங்கினன் --- சுசீலன் என்பவன் தீமை என்று நினைத்து நீங்கிவிட்டான்புயபலன் --- புயபலன் என்பவன்மூது அஞர் கோள் பட்டான் --- மிகுந்த துன்பத்தினாலே பீடிக்கப்பட்டான். ஓதில் --- சொன்னால்அறிவுடையார் ஆவது --- அறிவுடையார்கள் ஆவதுஅறிவார் --- பின்னாலே நிகழப் போவதனை முன்னே அறிய வல்லவராவார்அறிவிலார் --- அறிவற்றவர்கள்அஃது அறிகல்லாதவர் --- அதனை அறிய முடியாதவர் ஆவர்.

 

            சுசீலன் என்பவன் பிறகு தீமை விளையும் என்று நீங்கிவிட்டான். புயபலனோ பிறகு மிகுந்த துன்பத்துக்கு உள்ளானான். பின்னாலே நிகழப் போவதனை முன்னாலே அறிந்து கொள்பவர்தாம் அறிவுடையவர். அறிவு அற்றவர்களோ பின்னாலே நிகழப் போவதனை முன்னை அறிந்து கொள்ளமாட்டார்கள் என்பதாம்.

 

                                                            புயபலன் கதை

 

            வங்க நாட்டிலே முன்னாளில் புயபலன் என்னும் பெயருடைய அரசன் அரசாட்சி செய்துகொண்டு இருந்தான். அவன் ஒரு நன்னாளிலே பலருக்கும் தானம் அளிக்க எண்ணினான். விதர்ப்ப நாட்டிலேயிருந்த சுசீலன் என்னும் அந்தணன் இதனை உணர்ந்து தானம் பெறுதற்குச் சென்றான். சுசீலன் மிகுந்த பெருமையுடையவன் என்பதைப் பிறரால் உணர்ந்த அரசன் அவனை மிகுதியாகப் பாராட்டித் தானம் அளிக்கத் தொடங்கினான். சுசீலன் தானம் பெறச் சென்றபோது புயபலனுடைய நெற்றியைப் பார்த்தான். அவனது நெற்றியில் திருநீறு இல்லாதிருத்தலைப் பார்த்து வெறுத்து, "நீர் திருநீறு அணிந்துகொண்டு தானம் அளிப்பீராக. இன்றேல் இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறினான். இதனைக் கேட்ட புயபலன், "திருநீறு அணிவதால் யாது பயன்அதனை நான் அணியமாட்டேன். விருப்பமானால் வாங்கிக்கொண்டு போம்இன்றேல் சும்மா போம்" என்று கூறிவிட்டான். சுசீலன் பின்னால் நேரப் போவதை உணர்ந்து, "நீ சிவபிரானுக்குக் குற்றம் செய்தவனாகையால் நான் இத் தானத்தை நான் வாங்கமாட்டேன்" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது அரசனுடைய மனைவி மூக்கிலே துரும்பை விட்டுத் தும்மித் தடுத்தாள். அவ்வாறு தடுத்தும் சுசீலன் தானத்தை வாங்காமலே சென்று விட்டான். அரசன் திருநீற்றை இகழ்ந்த குற்றத்தினால் பெரும்பிணி உடையவன் ஆனான். அவனுடைய நாட்டைப் பகைவர்கள் கவர்ந்து கொண்டார்கள். பிறகு அரசன் தன்னுடைய மனைவியோடு காட்டை அடைந்து தங்கியிருந்தான். அப்பொழுது ஒரு வேடன் அரசனுடைய மனைவியைக் கவர்ந்து சென்றான். அவனை ஒரு புலி தாக்கிக் கொன்றது. அவள் உயிர் பிழைத்து விதர்ப்ப நாட்டை அடைந்தாள். ஐயமேற்றுத் திரிந்தாள். ஒரு வீட்டில் களவுசெய்து பொழுது காவலரால் மூக்கும் தனமும் அறுபட்டு வருந்தி அலைந்தாள்.

 

            அரசனும் அந்நாட்டை அடைந்து ஐயமேற்று வருந்தித் திரிந்தான். ஒருநாள் களவு செய்ய முயன்ற பொழுது,காலும் கையும் வெட்டப்பட்டு முடவனாக வருந்தி உழன்றான்.  அப்பொழுதுமுன்பு தன் இல்லத்தில் தானம் ஏற்க வந்து சுசீலனுடைய இல்லத்தை அடைந்து உணவு வேண்டினான்.  சுசீலன் அரசனைப் பார்த்து ஐயுற்று வினவினான். அரசன் யாதும் மறுமொழி கூறாமலிருக்கவே, "நீ முன்பு திருநீற்றை இகழ்ந்த புயபலன் அல்லவோ" என்று உசாவினான். அரசனும் அதை உணர்ந்துதான் செய்த குற்றத்தைப் பொறுத்துத் தனக்குத் திருநீறு வழங்கி ஆட்கொள்ளுமாறு சுசீலனை வேண்டினான். சுசீலன் தந்த திருநீற்றைச் சிறிது உட்கொண்டவுடன் தன்னுடைய உடல் குறை தீர்ந்து,தனது பழைய உருவைப் பெற்றான். அச்சமயத்தில் அவ்வழியே வந்த அரசனுடைய மனைவியும் அரசனைக் கண்டு வணங்கினாள். பிறகு அவளும் சுசீலனிடம் திருநீறு பெற்று அணிந்து குறைக்கப்பட்ட உறுப்புக்கள் வளரப் பெற்றாள். அந்நாட்டரசன் இவர்களுடைய செய்தியை அறிந்து சுசீலரிடம் வந்து வணங்கினான். அங்கிருக்கும் அரசனும் அரசியும் தன்னுடைய மாமனும் மாமியும் என்றறிந்து தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். சிலநாள் சென்ற பிறகு புயபலன் படைகளோடு சென்று தன்னுடைய நாட்டை அடைந்து அதனைக் கைப்பற்றி அரசாட்சி செய்தான்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது அறிக.

                                                            

ஆவது அறியா உயிர் பிறப்பால் உறும்,

ஆவது அறியும் உயிர் அருட்பால் உறும்,

ஆவது ஒன்று இல்லை அகப்புறத்து என்று அகன்று

ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே        ---  திருமந்திரம்.

     

இதன் பொருள் ---

 

     "அறிவுடையார் ஆவது அறிவார்அறிவிலார்  அஃது அறிகல்லாதவர்என்றபடிபின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்து உணர்பவரே `அறிவுடையார்எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும்அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே,பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும்உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லைஎன்பதை உணர்ந்துஅவனது அருளைப் பெற்றுஅந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...