043. அறிவுடைமை --- 05. உலகம் தழீஇயது

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "உயர்ந்தோரைச் சார்ந்து இயங்குவது ஒளி பொருந்திய அறிவு. அந்த அறிவானது முதலில் விரிதலும்பின்னர் குவிதலும் இல்லாத ஒரு தன்மையானது" என்கின்றார் நாயனார்.

 

     உலகம் என்பது உயர்ந்தோரைக் குறித்தது. அறிவு உடைய ஒருவன் உயர்ந்தோரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுவது அறிவுடைமை ஆகும். அவ்விதம் நட்புச் செய்யும் காலத்துமுன்னர் மிகுதியாக நட்புப் பூண்டு இருத்தலும்பின்னர் சிறிது சிறிதாக அற்றுப் போதலும் இல்லாமல் இருத்தல் வேண்டும். 

 

     குளத்தில் உள்ள தாமரை முதலிய நீர்ப் பூக்கள்சூரியனைக் கண்ட காலத்து மலர்ந்தும்அவன் மறைந்த காலத்து மூடிக்கொள்வதும் போல்ஒருவனிடத்தில் செல்வம் உள்ள போது அவனோடு நட்புக் கொண்டுஇன்பத்தை அனுபவித்தலும்அவன் செல்வம் வற்றிய போதுஅவனை விட்டு அகல்வதும் இல்லாமல்கொம்புகளில் பூத்த மலர்கள் போல ஒருநிலையாக இருப்பது போல் இருத்தல் வேண்டும்.

 

     முன்னே விரிதலும்பின்னே குவிதலும் இன்றி என்றும் ஒரு தன்மையதாக உயர்ந்தோரை நேசிப்பதே அறிவாகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

உலகம் தழீஇயது ஒட்பம்மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.   

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     உலகம் தழீஇயது ஒட்பம்--- உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்,

 

     மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு- அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.

 

            ('தழீஇயது', 'இல்லதுஎன்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்எல்லா இன்பமும் எய்தும் ஆகலின்அதனை அறிவு என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர்.)

 

     பின்வரும் பாடல்இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...

 

கோட்டுப் பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.        ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கோட்டுப் பூப் போல மலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி --- மரங்களில் பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் தாம் உதிரும் வரையில் குவியாமை போலத் தலைநாளில் உள்ளம் மலர்ந்து பின் தமது முடிவு வரையில் சுருங்காமல் விரும்பியது விரும்பியதாய் இருப்பதே நட்புடைமையாம்தோட்ட கயப் பூப்போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை --- அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்த நீர்நிலைகளில் பூக்கும் இதழ் மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில் மனம் சுருங்கும் இயல்பினரைநயப்பாரும் நட்பாரும் இல் --- விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

 

     கூடிப் பின் பிரியா இயல்பினரே நேசித்தற்கு உரியர்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...