செய்யத் தகுவது அறம் --- தவிரத் தகுவது பாவம்.

 


 

செய்யத் தகுவது அறம்தவிரத் தகுவது பாவம்

-----

 

     திருக்குறளில் "அருள் உடைமை" என்னும் ஓர் அதிகாரம். அருளுடைமை என்பது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் என்று பொருள்படும். உயிர்கள் மீது செல்லுகின்ற ஆசையே அன்புடைமை என்றும்அருள் உடைமை என்றும் சொல்லப்படும். அன்பு என்பது தனக்குத் தொடர்பு உடைய மனைவி மக்கள்சுற்றத்தார் மீது காட்டுவது. அருள் என்பது தனக்குத் தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மீதும் செலுத்தப்படுவது.

 

     இல்லற இயலில் மக்கள் பேற்றுக்குப் பின்பு அன்புடைமையைக் கூறிய நாயனார்இல்லறத்தை அடுத்து வரும்  துறவற இயலில்முதலில் அருளுடைமையைக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பிரமாணங்களாலும்அறிவாலும் நல்வழியிலே நின்றுநமக்குத் துணையாக வரும் அறம் இன்னதென்று ஆராய்ந்து,அருள் வழியில் ஒழுகவேண்டும். ஒன்றை ஒன்று ஒத்து இராத சமய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தாலும்அருளே ஒருவனுக்கு உற்ற துணை ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     பிரமாணம் என்னும் சொல்லுக்குஅளவைஆதாரம்விதிசான்றுஆணைபத்திரம்கடவுள் நம்பிக்கை,மேற்கோள்உண்மையான நிலைமூவகைக் கால அளவு,மெய்யறிவை அறிதற்கு உதவும் கருவி என்று பலவகைப் பொருள்கள் உண்டு.

 

     அளவை என்பது பலவகைப்படும் என்பதைப் பின்வரும் சிவஞானசித்தியார் பாடல் ஒன்றினால் தெளியலாம்....

 

அளவை காண்டல்கருதல்உரை,

            அபாவம்பொருள்ஒப்பு ஆறு என்பர்;

அளவை மேலும் ஒழிபுஉண்மை,

            ஐதிகத்தோடுஇயல்பு என நான்கு

அளவை காண்பர்அவையிற்றின்

            மேலும் அறைவர்அவை எல்லாம்

அளவை காண்டல்கருதல்உரை

            என்ற இம்மூன்றில் அடங்கிடுமே.

 

            அளவை என்பது காண்டல் அளவைகருதல் அளவை,உரை அளவைஇன்மை அளவைபொருள் அளவைஉவமை அளவைஎன்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவைஉண்மை அளவைஐதிக அளவைஇயல்பு அளவைஎன்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறு சிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவைகருதல் அளவைஉரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.

 

            "அளவை" என்பது வடமொழியில் "பிரமாணம்" என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். 

 

            உலகத்துப் பொருள்களை எண்ணல் அளவைநீட்டல் அளவைநிறுத்தல் அளவைமுகத்தல் அளவை போன்றவற்றால் அளந்து காண்பது போல,மெய்ப்பொருள் இயலில் கூறப்படும் கருத்துக்களை அளந்து அறிவதற்கு அளவை இயல் பயன்படுகிறது. அளவையில் குறை இருந்தால் அளக்கப்படும் பொருளினைப் பற்றிய அறிவும் குறையுடையதாய் முடியும். அதனால் தான்,அளவை இயல் இன்றியமையாததாகச் சொல்லப்படுகின்றது.

 

            1. காண்டல் அளவை என்பது காட்சி என்றும்பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். அட்சம் என்னும் வடமொழிச் சொல்லுக்குதமிழில்கண் என்று பொருள். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.

 

            2. கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும்அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை "அவிநா பாவம்" என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

 

            3. உரை அளவை,ஆகமப் பிரமாணம் என்றும்சத்தப் பிரமாணம் என்றும்ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டவை இறைவனால் அருளப்பட்டனவும்இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

 

            4. இன்மை அளவை என்பதுஉண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை "அபாவம்" என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.

 

            5. பொருள் அளவை --- இந்த அளவை வடமொழியில் "அருத்தாபத்தி" என்று வழங்கும். ஒன்றைக் கொண்டு ஒன்றை உய்த்து அறிவது,இந்த அளவை. எடுத்துக் காட்டாக,ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லுகிறார். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை. பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகும் அவர் உடம்பு வாடாமல் இருப்பாரானால்,யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து (அருத்தாபத்தியால்) அறியலாம். இதனைப் பகல் உண்ணான் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.

 

            6. உவமை அளவை --- செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால்வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.

 

            சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று சொல்லப்படுகின்றது. இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு "பாரிசேட அளவை" என்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன்சராசந்தன்கீசகன்பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனந்தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும்சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத் தான் இருத்தல் வேண்டும் என்று உய்த்து அறியப்படும்.

 

            உண்மை என்பது "சம்பவ அளவை" என்று வடமொழியில் கூறப்படும். ஒருவனிடம் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன என்று கூறும்போதுஅவனிடம் நூறு பொற்காசுகள் உண்டு என்பது சொல்லாமலே பெறப்படும். ஏனெனில் நூறுஆயிரத்துள் அடங்கும் என்பது உண்மை.

 

            ஐதிகம் என்பது வழிவழியாக வழங்கி வரும் வழக்கமாகும். இம்மரத்தில் பேய் ஒன்று குடி இருக்கிறது எனும் போது தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டு வந்த ஒரு செய்தியை அது உணர்த்துகிறது.

 

            இயல்பு என்பது "சுபாவ அளவை" என்று கூறப்படும். சொற்களுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளுவது இந்த அளவையினுள் அடங்கும். மரம் என்ற தமிழ்ச் சொல் இயல்பாக நின்று மரம் என்ற பொருளை உணர்த்தும் என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும்.

 

            இவ்வாறு பத்து அளவைகள் கூறப்படினும் அவை யாவும் காட்சிகருதல்உரை எனும் மூன்றினுள் அடங்கும். இன்மையும்இயல்பும் காட்சி அளவையில் அடங்குவன. பொருள்ஒழிப்புஉண்மை என்ற நான்கு அளவைகளும் கருதல் அளவையில் அடங்குவன. ஐதிகம் என்பது உரை அளவையில் அடங்கும்.

 

     ஒன்று ஒன்று ஒவ்வாத சமய நெறிகள் என்றதுபின்வரும் திருவாசகப் பாடலால் அறிய வரும்...

 

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்து,கழலிணைகள் தந்து அருளும்

செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

 

இதன்பதவுரை --- 

 

     உவலைச் சமயங்கள் --- பொய்ச் சமயங்களும்ஒவ்வாத சாத்திரம் ஆம் --- ஒன்றற்கொன்று பொருந்தாத சாத்திரங்களுமாகியசவலைக் கடல் உளனாய்க் கிடந்து --- குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்துதடுமாறும் --- தடுமாறுகின்றகவலை --- துன்பத்தைகெடுத்து --- போக்கிகழல் இணைகள் தந்தருளும் --- திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்றசெயலைப் பரவி --- திருவருட்செயலைப் போற்றிநாம் தெள்ளேணம் கொட்டாமோ --- நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

     நெறி --- வழி. சமய நெறி --- சமயங்கள் காட்டு வழி. சமய நெறி எதுவும் ஞானத்தை அடைந்து கடவுளை அடைதற்கு உரிய வழியைக் காட்டுவனவே. அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவரவர் வாழ்வியல் நிலைக்கு ஏற்பவேசமயங்கள் வழியை வகுத்துக் காட்டும். எந்த வழியாக இருந்தாலும்ஞானத்தைப் பெறுவதற்கும்கடவுளை அடைவதற்கும் உபாதானம் (முதற்காரணம்) ஆனவையே. ஆனால்,சமய உண்மைகளை உள்ளபடி அறியாதார்தாம் அறிந்ததையே உண்மை என்று சாதித்துக் காட்டுவர். சமயநெறிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவர்.

 

     இதைப் பின்வரும் திருமந்திரப் பாடலால் தெளியலாம்...

 

ஒன்றதே பேரூர்,வழிஆறு அதற்கு உள,

என்றது போலும் இருமுச் சமயமும்,

நின்று இது தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

 

இதன் பொழிப்புரை ---

 

     செனறு அடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றால் போன்று,கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,ஒரு பொருளாகிய கடவுளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. யாம் கூறும் இதுவே நன்று,பிறர் கூறும் இது தீது என்று,இங்ஙனம் தம்முள் பிணங்கும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்து ஓடும் நாயை ஒத்தவர் ஆவர்.

 

     இக் கருத்தை ஔவைப் பிராட்டியார்தாம் பாடி அருளிய நல்வழி என்னும் நூலில் மேலும் தெளிவுபடுத்தி உள்ளார்...

 

புண்ணியம்ஆம்,பாவம்போம்,போனநாள் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள், --- எண்ணுஙகால்

ஈது ஒழிய வேறுஇல்லை,எச்சமயத்தோர் சொல்லும்

தீது ஒழிய நன்மை செயல்.

 

இதன் பொருள் ---

 

     அறமானது விருத்தியைச் செய்யக் கூடியது.பாவமானது அழிவினைச் செய்யக் கூடியது. ஒருவன் முற்பிறப்புகளில் செய்த புண்ணிய பாவங்களே இந்தப் பூமியிலே வந்து பிறந்த பின்னர்இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி விதிக்கப்பட்டவை ஆகும். ஆராய்ந்து பார்த்தால்எந்த மதத்தினர் சொல்லுவதும்9பண்ணியம் செய்யத் தக்கதுபாவம் தவிரத் தக்கது என்னும்) இது அல்லாமல் வேறு இல்லை. ஆகையால் பாவதைச் செய்யாது,புண்ணியத்தையே செய்து வருதல் வேண்டும்.

 

     சமயநெறிகள் சொல்லுவதுபாவத்தைப் பயின்று,துன்பத்தை அனுபவித்து,பிறவியில் மீண்டும் மீண்டும் புகுவதை  விடுத்துஅறத்தைச் செய்துஅருள் வழியில் சென்று,இறையருளால் ஞானத்தைப் பெற்றுஇறைவன் திருவடியை அடைந்துமீண்டும் பிறவாத நிலையைப் பெற்று,இறவாத இன்ப வாரிதியில் திளைக்கவேண்டும் என்றே அறிவுறுத்துகின்றன. சமயங்கள் சொல்லும் உண்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதை வலியுறுத்த,

 

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க,பல் ஆற்றான்

தேரினும் அஃதே துணை.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார். 

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

வாழ்கணங்கள் ஆக்கினன் சதாநந்தன் வன்நரகின்

மூழ்கு கொடியோரை,முருகேசா! - தாழ்கிலா

நல்லாற்றான் நாடி அருள்ஆள்க பல்லாற்றான்

தெரினும் அஃதே துணை.     

 

இதன் பதவுரை ---

 

     முருகேசா --- முருகப் பெருமானே!  சதாநந்தன் --- சதாநந்தர் என்னும் முனிவர்வல் நரகில் மூழ்கு கொடியோரை --- கொடிய நரகத்திலே அமிழ்ந்து கிடந்த பொல்லாதவர்களை எல்லாம்வாழ் கணங்கள் ஆக்கினன் --- சிவலோகத்தில் வாழுகின்ற சிவகணங்களாகச் செய்தார். தாழ்கிலா --- இகழ்ச்சியில்லாதநல் ஆற்றால் நாடி --- நல்வழியை ஆராய்ந்துஅருள் ஆள்க --- அருளை எல்லா உயிரிடத்தும் செலுத்துகபல் ஆற்றால் தேரினும் --- பலவழிகளால் ஆராய்ந்து பார்த்தாலும்அஃதே துணை --- அந்த அருளே சிறந்த துணையாக உயிர்கட்கு விளங்கும்.

 

            சதாநந்த முனிவர் நரகத்தில் கிடந்து வருந்திய உயிர்த்தொகைகளை எல்லாம் சிவகணங்களாகச் செய்து திருக்கயிலைக்கு அனுப்பினார். நல்ல நெறியை நாடி அருளை எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தவேண்டும்.  பலவழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அவ் அருளே உயிர்களுக்குத் திறந்த துணையாக விளங்கும் என்பதாம்.

 

                                                            சதாநந்தர் கதை

 

            சதாநந்தர் என்பவர் பதரிகாச்சிரமத்திலிருந்த பூரணவித்து என்னும் முனிவருடைய புதல்வர். இவருடைய தாய் பெயர் பத்திரதத்தை. சில முனிவர்கள் கூடிப் புராணம் படித்தார்கள்.  அப்போதுஉயிர்த் தொகைகள் நரகத்தை அடைந்து வருந்துகிற செய்திகளை எல்லாம் விளக்கமாகக் கூறினார்கள். இதனைக் கேட்ட சதாநந்தர்,அவ் உயிர்களிடத்திலே மிகுந்த இரக்கம் கொண்டார். தம்முடைய தவச் சிறப்பினால் ஒரு விமானத்தில் ஏறி எமலோகத்திற்குச் சென்றார். எமன் முனிவரை வரவேற்றுப் போற்றினான். நரகங்கட்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினான். நரகத் துன்பத்தைப் பார்த்து உள்ளம் பதைத்தார்.  சிவபிரானுடைய திருப்பெயரைக் கூறி அவ் உயிர்த்தொகைகளை எல்லாம் விடுவித்தார். சிவகணங்களாக்கித் திருக்கயிலைக்கு அனுப்பிவிட்டார். முனிவருடைய அருளுடைமையைக் கண்டு அனைவரும் மனம் மகிழ்ந்தார்கள்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண்டு,உள்ளம்

எரியின் இழுது ஆவார் என்க,- தெரிஇழாய்!

மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்

கண்டு கழலுமே கண்.             ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     தெரிந்து எடுத்த அணிகலன்களை அணிந்தவளே!  கண்கள் நெருங்கிய நோயினால் வருந்தும் பிற உறுப்பைக் கண்டு அழும். அதுபோல,  பெரியவர்கள்,பிறர் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதிநெருப்பிலே பட்ட நெய் போல மனம் உருகுவர்.

 

தன்ஒக்கும் தெய்வம் பிறிதில்லை,தான் தன்னைப்

பின்னை மனம் அறப் பெற்றானேல்--என்னை

எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு

அருட்கண்ணே நிற்பது அறிவு.    ---  அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     இன்பம் தருவது போன்று காட்டிதன்னைத் தீநெறிகளில் செலுத்தி,பின்னர் வருந்துகின்ற மனத்தினை ஒருவன் அடக்குவானானால்அவனே தெய்வம் ஆவான். அவனுக்கு நிகர் ஆன தெய்வம் வேறு இல்லை. எனவேஇலக்கணம்சோதிடம் முதலியவற்றை ஆராய்வதால் உண்டாகும் பயன் ஏதும் இல்லை.

இப்பிறப்பில் புகழையும்மறுபிறப்பில் இன்பத்தையும் தரைக் கூடிய அறநூல்களையே ஒருவன் ஆராய்ந்து கற்று அறிந்துஅறச் செயல்களையே மேற்கொண்டு ஒழுகுதலை அறிவுடைமை ஆகும்.

 

பொருள்உடையான் கண்ணதே போகம்அறனும்

அருள்உடையான் கண்ணதே ஆகும்ருள்உடையான்

செய்யான் பழி,பாவம் சேரான்புறமொழியும்

உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.  --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

     உலக இன்பமானதுசெல்வப் பொருள் உடையவனிடத்தே உண்டாகும்நல்லொழுக்கமும்இரக்கம் உள்ளவனிடத்தில் உள்ளதாகும்அத்தகைய அருள் உள்ளத்தை உடையவன்  பழிக்கப்படுகின்ற தீய செயல்களைச் செய்யமாட்டான்.  பாவச் செயல்களைச் செய்ய மனத்திலும் நினையான்புறங்கூறுதல் பெரும்பாவம் என்பதால்அதனைச் செய்யான்.

 

வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்

செய்ததனால் ஆகும் செழுங்குலமும்செய்த

பொருளினால் ஆகுமாம் போகம்நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.         --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் பிறனை வைததனால்அவனுக்குப் பழி உண்டாகும்நன்மை தரும் செயலையும்,வணக்கத்தையும் பிறர்க்கும் செய்ததனால் அவனுக்குவளமையாகிய குடிப்பிறப்பும் உண்டாகும். அப்படிப்பட்டவன் ஈட்டிய பொருளினால்உலக இன்பம் உண்டாகும். பிறர் படும் துன்பத்தைக் கண்டு,தன் மனம் நெகிழ்ந்தஅருள் காரணமாக அவனிடத்தே  தருமம் உண்டாகும்.

 

     எனவேஎவ்விதத்தால் ஆராய்ந்தாலும்ஒருவன் செய்யத்தக்கது அறமே,செய்யக் கூடாதது பாவமே என்பதும்அவைதான்இந்த உலகத்தில் பிறந்த பின்னர் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்குக் காரணமாக அமைவது என்பதும் அறிவுறுத்தப்பட்டது.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...