தீபாவளி --- ஒளித் திருநாள்

 


தீபாவளி என்னும் "ஒளித் திருநாள்"

-----

 

     ஒத்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பதுதான் முறை. பஞ்சபூங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து இருந்தே உலகுக்கு நன்மையை விளைக்கின்றன. உலக மக்களுள்ளும், கற்றாரைக் கற்றாரே சார்ந்து இருப்பர். கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே முகந்து இருப்பர். செல்வம் படைத்தோர் செல்வரோடு கூடி இருப்பர். இறை அடியார்கள், தம்மைப் போன்ற அடியார்களோடு கூடி இருந்து மகிழ்வர். இதுதான் உலக இயற்கை. "கூடி இருந்து குளிர்ந்து" என்றார் ஆண்டாள் நாச்சியார்.

 

     உயிரானது அறிவுள்ள பொருள். நிலையான பொருள். இறைவனும் அறிவுள்ளநிலையான பொருளே. எனவே, அறிவுள்ளதும், நிலையானதும் ஆகிய பொருளாகிய உயிரானது, அறிவுள்ள நிலையான பொருளாகிய இறைவனைச் சார்ந்து இருப்பதே முறைமை ஆகும். இறை அறிவு முற்றறிவு. உயிர் அறிவு சிற்றறிவு. அந்தச் சிற்றறிவு விளக்கம் பெற்று முழுமை அடைய வேண்டும். அவ்வாறு முழுமை அடைய ஒட்டாமல், உயிரின் இயற்கை அறிவானது விளக்கம் பெறவொட்டாமல் மறைத்து இருப்பது. உயிருக்கு இயற்கையாகவே உள்ள அறியாமை ஆகும். அறியாமை என்பது, அவிச்சை, அகங்காரம், ஆணவம், இருள், துன்பம் எனப் பலவாறாகப் பொருள்படும்.

 

     உயிரின் அறியாமை நீங்கி, அறிவு விளக்கம் பெறவேண்டுமானால், முதலில் அது தன்னை உணரவேண்டும். "தன்னை அறிவதுவே அறிவு" என்றார் திருமூலர். உணர்ந்தால், தான் சார்ந்து இருக்கின்ற நிலையும், இருக்கவேண்டிய நிலையும் விளங்கும். சிவத்தோடு அத்துவிதம் பெறாமல், ஆணவத்தோடு அத்துவிதமாகி இருக்கின்ற காரணத்தால், உண்மை அறிவு விளக்கம் பெறமுடியவில்லை. உண்மை அறிவு விளக்கம் பெறாத காரணத்தால், உண்மை இன்பம் விளங்கவில்லலை.

 

"ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி, மெய்ஞ்ஞானத்

தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ?"

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

     உயிரானது தன்னை அறியும் அறிவினைப் பெற்று, தான் சாரவேண்டிய பொருள் எது என்று நாடி இருந்து, சிவம் ஒன்றுதான், தான் நாடி இருக்கவேண்டிய பொருள் என்று உணர்ந்தால், தனது சீவத் தன்மை மாறி, சிவத் தன்மையை அடைந்து இருக்கும். 

 

"சீவன் எனச் சிவன் என்ன வெவ்வேறு இல்லை,

சீவனார் சிவனாரை அறிகிலர்,

சீவனார் சிவனாரை அறிந்த பின்,

சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே"

 

என்றார் திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     `சீவன்எனவும், `சிவன்எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லைஉடலும்உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறு இருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. அம் மறைப்பு நீங்கிச் சீவன் சிவனை அறியுமாயின், அது சீவனாய் இராதுசிவமாகவே இருக்கும்.

 

     பகல் காலத்தில், இருள் இல்லாமல்படிக்கு விளக்கம் தருவது கதிரவன். இரவுக் காலத்தில் இருள் இல்லாமல் செய்வது சந்திரன். இப்படி ஒவ்வொன்றும் வேறு ஒன்றால் விளக்கம் பெறுகின்றன. அதுபோலவே, ஆன்மாவும், இறையருளால் அறிவு விளக்கம் பெறவேண்டும்.

 

"பகல் விளக்குவது இரவிநிசி விளக்குவது மதி,

     பார் விளக்குவது மேகம்,

பதி விளக்குவது பெண்குடி விளக்குவது அரசு,

     பரி விளக்குவது வேகம்,

 

இகல் விளக்குவது வலிநிறை விளக்குவது நலம்,

     இசை விளக்குவது சுதிஊர்

இடம் விளக்குவது குடிஉடல் விளக்குவது உண்டி,

     இனிய சொல் விளக்குவது அருள்,

 

புகழ் விளக்குவது கொடைதவம் விளக்குவது அறிவு,

     பூ விளக்குவது வாசம்,

பொருள் விளக்குவது திருமுகம் விளக்குவது நகை

     புத்தியை விளக்குவது நூல்,

 

மகம் விளக்குவது மறைசொல் விளக்குவது நிசம்,

     வாவியை விளக்குவது நீர்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே".

 

     இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     பகல் விளக்குவது இரவி --- பகல் பொழுதை விளக்கம் உறச் செய்வது கதிரவன் ஆகும்நிசி விளக்குவது மதி --- இரவை ஒளிசெய்வது திங்கள் ஆகும்பார் விளக்குவது மேகம் --- நிலத்தைச் செழிப்புறச் செய்வது மழை பொழியும் மேகம் ஆகும்பதி விளக்குவது பெண் --- கணவனை விளக்கமுறச் செய்பவள் பெண் ஆவாள்குடி விளக்குவது அரசு --- குடிகள் அச்சம் இல்லாமல் வாழுமாறு காப்பவன் அரசன் ஆவான்பரி விளக்குவது வேகம் --- குதிரைக்கு விளக்கம் தருவது அதனுடைய வேகம்இகல் விளக்குவது வலி --- பகைமைக்கு விளக்கம் தருவது வலிமை.நிறை விளக்குவது நலம் --- ஒழுக்கம் விளக்குவது அழகுஇசை விளக்குவது சுதி --- இசைக்கு இனிமை தருவது சுருதி என்னும் இசைக் கருவிஊர் இடம் விளக்குவது குடி --- ஊரை அழகுறச் செய்வது குடிவளம்உடல் விளக்குவது உண்டி --- உடம்பை வளர்த்து அழகு படுத்துவது உணவுஇனிய சொல் விளக்குவது அருள் --- இனிய சொல்லால்  அருள் விளக்கம் பெறும்புகழ் விளக்குவது கொடை --- புகழைப் பரப்புவது வரையாது வழங்கும் பண்பு ஆகும்தவம் விளக்குவது அறிவு --- தவத்தை விளக்கம் பெறச் செய்வது அறிவுபூ விளக்குவது வாசம் --- மலரை விளக்கமுறக் காட்டுவது அதன் மணம்பொருள் விளக்குவது திரு ---- செல்வத்தை எடுத்துக் காட்டுவது திருமகளின் அருள்முகம் விளக்குவது நகை --- முகத்தை அழகாக்குவது புன்சிரிப்புபுத்தியை விளக்குவது நூல் --- அறிவை விளக்கம் பெறச் செய்வது நூலைக் கற்பதுமகம் விளக்குவது மறை --- வேள்வியை விளங்கச் செய்வது வேத மந்திரம் ஓதுதல்சொல் விளக்குவது நிசம் --- சொல்லுக்கு அழகு உண்மைவாவியை விளக்குவது நீர் --- குளத்திற்கு அழகு நீர் நிறைந்து இருத்தல்.

 

     இருள் ஒளி என்னும் இரண்டும், ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்காது. உண்மையில் இருள் என்பது இல்லவே இல்லை. ஒளி இல்லாத இடத்தில் இருள் வந்து சூழுகின்றது.

 

இருள் --- அறியாமை, அவிச்சை, அகங்காரம், ஆணவம், மருள், துன்பம், பாவம் என்று பலவிதமாகப் பொருள்படும்.

 

ஒளி --- மேலே சொன்னதற்கு நேர் மாறானது.

 

     "இருள், வெளி இரண்டிற்கு ஒன்று இடம்" என்று ஔவையார் பாடி அருளிய "விநாயகர் அகவல்" கூறும். இருளைச் சார்ந்த போதும்,ஒளியைச் சார்ந்த போதும்,அந்த இரண்டிற்கும்கண்ணே இடம் ஆக இருக்கும்.

 

"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா,

ஒளி உ(ள்)ளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்,

ஒளி இருள் கண்டகண் போல் வேறாய், உள்

ஒளி இருள் நீங்கி உயிர் சிவம் ஆமே."

 

என்பது திருமூலர் அருளிய திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     ஒளிஇருள்`என்றும் இரண்டில் எதுவும் எக்காலத்திலும் அழிந்து ஒழிவதில்லை. ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்கும். அழிந்து போகாது. அது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். ஒளியோடு பொருந்தி நீங்காது நின்கின்ற  கண்ணுக்கு, ஒருபோதும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளியாகவே விளங்கும் நிலை உண்டாகும். ஆகவேஒளியோடு கூடும்பொழுது ஒளியாயும்இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்ணைப் போன்றது ஆன்மை.

 

     ஆன்மாவானது, ஒளிப் பொருளும் அல்ல.  இருட்பொருளும் அல்ல. ஒளியோடு கூடிய பொழுது ஒளியாயும்,இருளோடு கூடியபோது இருளாயும் நிற்கும். ஆன்மாவானது, பாசத்தோடு கூடிய போது, பாசமாகவும், இறையோடு கூடிய போது, இறையாகவும் இருக்கும். உயிரின் தன்மை அறிவாயும்அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். 

 

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம், 

     ஒன்று மேலிடில் ஒன்று

ஒளிக்கும், எனினும் இருள் அடராது, 

     உள் உயிருக்கு உயிராய்த்

தெளிக்கும் அறிவு திகழ்ந்து 

     உளதேனும், திரிமலத்தே

குளிக்கும் உயிர் அருள் கூடும்படி 

     கொடி கட்டினனே.

 

என்று மெய்கண்ட சாத்திரங்க்ளில் ஒன்றான "கொடிக்கவி" கூறும்.

 

     சிவஞானப் பேரொளிக்கும், ஆணவமாகிய காரிருளுக்கும் இடம் கொடுத்து நிற்பது உயிர் ஒன்றே. உயிரில் பதிஞானம் மேலிட்டு நின்றால்,ஆணவம் ஒளித்து நிற்கும். ஆணவமலம் மேலிட்டு நின்றால்,ஞானப் பேரொளி விலகி நிற்கும். ஆயினும் இருளுக்கு, ஒளியை அடர்த்து மறைக்கின்ற ஆற்றல் இல்லை. 

 

     உயிர்களுக்கு இறைவன் திருவருளால் சற்றே அறிவு விளங்கித் தோன்றுமாயினும்உயிர்களின் ஆணவ மலச் சார்பால் அவை மும்மலங்களுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து உயிர்கள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளும் வலிமையற்று இருக்கின்றன.

 

      அரசன் ஒருவன் கொடி கட்டி ஆளுகிறான் என்றால்அவனுடைய ஆணை அந்த நாட்டில் வாழும் உயிர்களைக் காப்பதற்காகத் தடையற்று நிகழ்ந்தேறுகிறது என்று பொருள். இவ்வாறு கொடி உயர்த்திய மன்னவன் குடிமக்கள் தன்னால்தன் பரிசனத்தால்கள்வரால்உயிர் தம்மால்ஊனமிகு பகைத்திறத்தால் வருகின்ற அச்சங்களைப் போக்கி ஆட்சி புரிகிறான்.

 

     திருக்கோயிலில் நடைபெறுகிற திருவிழாக்களுக்கு முன்னதாக நிகழும் கொடியேற்றம்இறைவன் திருவருள் ஆணை வழி உயிர்களை எல்லாம் இடர்க்கடலில் இருந்து ஏற வாங்கிப் பேரின்ப வழியிலே செலுத்துவான் என்பதற்கு உரிய குறியீடாகும். 

 

     கொடி என்பது அவரவர் சமயக் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும் என்றாலும்குறிப்பு ஒன்றுதான் என்பதை உணர்தல் வேண்டும்.

 

     உயிரைப் பற்றும் இருளானது,பேரறிவுப் பிழம்பாகிய இறைவனைப் பற்றாது என்பதையும்இறைவனின் திருவருள் பதிந்த உயிரையும் பற்றாது என்பதையும் குறிக்க,"ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்,எனினும் இருள் அடராது" என்று விளக்கப்பட்டது.

 

     திருவருளாகிய ஒளிவந்த பின்னர், அகவிருள் நீங்கி, ஒளி மயமாகவே ஆன்மா நிற்கும். புறவிருள் நீங்க ஒளி விளக்கினை ஏற்றுவது போல,ஆன்மாவானது, அகவிருள் ஆகிய ஆணவம் நீங்கி, அருள் ஒளியைப் பெறுவதற்கு, மெய்ஞ்ஞான விளக்கை ஏற்றுதல் வேண்டும்.

 

"அருள் ஒளி விளங்கிட,ஆணவம் என்னும் ஓர்

இருள் அற என் உள்ளது ஏற்றிய விளக்கே"

 

என்பார் வள்ளல்பெருமான்.

 

     இதுதான் "தீபாவளி" என்னும் "ஒளித் திருநாள்"  உணர்த்துவது. "ஆவளி" என்றால் "வரிசை" என்று பொருள். வரிசையாகத் தீபங்களை ஏற்றுதல். "வரிசை" என்னும் சொல்லுக்கு,  ஒழுங்குமரியாதைமேம்பாடுதகுதிபாராட்டுநன்னிலை என்று பொருள் உண்டு. புற இருள் அகல ஒளி விளக்கு ஏற்றுவதுபோல்அகஇருள் அகலஉள்ளத்தில் அருள் விளக்கை ஏற்றுதல் வேண்டும். அது ஞானவிளக்கு ஆகும்.

 

     ஆன்மா இருள் நிலையில் இருந்து விடுபட்டுஒளி நிலையை அடைவதற்குஅடையாளமாகவே "தீபாவளித் திருநாள்" உண்டானது. இதற்கு ஒரு புராண வராலறும் உண்டு.

 

     ஆறு நாள்களில் இறைவனுக்குத் தொண்டு செய்துதிருவடியை அடைந்தார் கண்ணப்ப நாயனார். இன்று தீபாவளித் திருநாள் தொடங்கிஆறு நாள்கள் கழித்து, "சஷ்டி" தினமானது "கந்தர் சஷ்டி" என்று கொண்டாடப் படுகின்றது. உயிருக்கு உள்ளஉட்பகைகள் ஆனகாமம்குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களும் நீங்கிஆன்மா இறையருளைப் பெறுகின்ற நாள்இன்றிலிருந்து வருகின்ற ஆறாம் நாள் ஆகும். காமக் குரோதாதிகளுக்குக் காரணமாக அமைந்தவைஆணவம்மாயைகன்மம் என்னும் மும்மலங்கள் ஆகும்.

 

     ஆணவ வடிவாக இருந்தவன் சூரபதுமன். மாயை வடிவாக இருந்தவன் தாரகன். கன்ம வடிவாக இருந்தவன் சிங்கமுகன். இம் மூவரையும்ஞானமே வடிவாகிய முருகப் பெருமான் திருக்கையில் விளங்கும் ஞானசத்தியாகிய வேல் அழித்துவெற்றி கொண்டதுஇன்று தொடங்கி ஆறாம் நாளில் நிகழப் போகும் சூரசம்மாரம் உணர்த்துவது இதையே.

 

     இதைமிகவும் இரத்தினச் சுருக்கமாகஅருணைவள்ளலார்திருப்புகழ்ப் பாடல் ஒன்றில்,பின்வருமாறு பாடிக் காட்டினார்.

 

"சீவன் ஒடுக்கம்,பூத ஒடுக்கம்

    தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண,எனக்கு உன்

    சீதள பத்மம் ...... தருவாயே".

 

இதன் பொருள் ---

 

     உயிரைப் பற்றி அறிகின்ற பசுஞானத்தை நீக்கும் தன்மையும்உலகப் பொருள்களைப் பற்றி அறிகின்ற பாசஞானத்தை நீக்கும் தன்மையும் தெளிந்த போது உதிப்பதாகிய மேலான பதிஞான ஒளி விளக்கத்தினை அடியேன் கண்டு களிக்குமாறு,அடியேனுக்கு உமது குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

 

     "சீவன் ஒடுக்கம்" என்பது உயிர் அறிவு ஒடுக்கம் பெறுவதைக் குறிக்கும்.பசுஞானம் என்பது உயிர் அறிவு எனப்படும். உயிரைப் பொருள் என அறிவது பசுஞானம்.  உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ளநிலையில்ஆன்மாதனது உண்மையியல்பை உணராமல்அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று மயங்கி உணரும்.அது கழலுதல் வேண்டும். அந்தக்கரண ஒடுக்கம் இதுவே ஆகும். விடயங்களைப் பற்றி நிச்சயித்து அபிமானித்து சிந்தித்து நிற்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் அந்தக்கரண வாசனை நீங்குதல் வேண்டும். 

 

     "பூத ஒடுக்கம்" என்பது பொருள்களைப் பற்றி அறியும் "பாசஞானம்" நீங்குதல் ஆகும்.பாசத்தைப் பற்றி அறியும் ஞானம் பாசஞானம்ஆகும். அதுவும் நீங்குதல் வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிகின்ற அறிவானது,பாச அறிவு அல்லது பாசஞானம் எனப்படும். பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோலஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி,ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையற்றதுஎன்பது பொருள்.

 

     பரஞானம் என்பது,பதிஞானம்அநுபவஞானம்சிவஞானம் எல்லாம் ஒன்றே. இதுவே திருவருள் ஞானம். இதுவே பரகதிக்கு சிறந்த சாதனம்.

 

     எனவேபரஞான தீப விளக்கத்தை ஆன்மா பெறுதல் பொருட்டே, "தீபாவளி" என்னும் "ஒளித் திருநாள்" உண்டானது என்பதை அறியலாம். உள்ளத்தில் அருள் விளக்கை ஏற்றிஅறியாம்பை என்னும் அஞ்ஞானம் நீங்கிஅதனால் உண்டான துன்பங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றுஅருள்ஞான இன்பத்தில் திளைக்கவேண்டும் என்பதே கருத்து.

 

     சிவத்தைக் குறித்துச் சொன்னதால்இது சைவர்களுக்கு ஆனது என்று கொள்ளுதல் பிழை. யார் யார் எந்த வடிவில் இறைவன் வழிபடுகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். எல்லாச் சமயத்தவரும்தீப வழிபாடு மேற்கொள்ளுகின்றனர். தீபத்தில் சமயக் குறிப்பு இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...