046. சிற்றினம் சேராமை --- 07. மனநலம் மன்னுயிர்க்கு

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடு,சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "நிலைபெற்ற உயிர்களுக்கு மனத்தினது நன்மையானது செல்வத்தைத் தரும். அவன் சார்ந்துள்ள இனத்தின் நன்மையானதுசெல்வத்தோடு எல்லாப் புகழையும் தரும்" என்கின்றார் நாயனார்.

 

     இவ்வுலக வாழ்க்கையாகிய வழியைக் கடந்து செல்வதற்குத் துணைக் காரணம் ஆகிய பொருளும் மனத் தூய்மை உடையார்க்கே உண்டாகும். அவ்விதம் பொருள் என்னும் பொய்யா விளக்கமாகிய செல்வமானதுஅவன் நல்லினத்தைச் சேர்ந்து இருப்பதால்புகழ் என்னும் ஒளியையும் தரும்.

 

     மன நலம் என்பது, "மனத்துக்கண் மாசு இலன் ஆதல்" என்று நாயனார் முன்னரே அருளி இருத்தலால் விளங்கும்.

 

     இன நலம் என்பது,

 

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி

உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே

பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே

நாட்டா ரெனப்படு வார்.

 

என வரும் அறநெறிச்சாரச் செய்யுளால் விளங்கும்.

 

இதன் பொருள் ---

 

     இம்மை அடக்கத்தைச் செய்து --- இப் பிறப்பில் மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து,புகழ் ஆக்கி --- புகழினைப் பெருக்கி,  உம்மை --- மறுபிறப்பில்உயர்கதிக்கு உய்த்தலால் ---வீடுபேற்றை அடைவித்தலால் பட்டாங்கு --- இயல்பாகவேமெய்ம்மை அறம் உரைக்கும் --- அத்தகைய உண்மை அறத்தினை உரைக்கும்பண்புடையாளரே --- குணத்தினை உடையவர்களேநட்டார் எனப்படுவார் --- நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்)--- நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்

 

     இனநலம் எல்லாப் புகழும் தரும்--- இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.

 

      ('மன்உயிர்என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. மனம் நன்றாதல்தானே அறம்ஆகலின்அதனை 'ஆக்கம் தரும்என்றும்புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டுஅஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்எனஅவர்க்கும் இது வேண்டும் என்பதுஇவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"காப்பு மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்
லாப்புகழும் தரும் என்றார்,  நலம் என்று அமைவதுநின்
பூப்பதம் எண்ணும் மனம்,இனம் மெய்யன்பர்,புல்லைவளர்
மாப் பதுமாசனி கொண்கா! சங்கு ஆழி மலர்க்கையனே".

 

இதன் பொருள் ---

 

     நிலைபெற்ற உயிர்களுக்கு காப்பாகிய மனத்தினது நன்மையானது செல்வத்தைத் தரும்அவன் சார்ந்துள்ள இனத்தின் நன்மையானதுசெல்வத்தோடு எல்லாப் புகழையும் தரும் என்றார் (திருவள்ளுவ நாயனார்). திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ளசிறந்த தாமரை மலரை இருக்கையாக் கொண்ட திருமகள் தலைவனே! )பாஞ்சசன்னியம் என்னும்) சங்கையும், (சுதரிசனம் என்னும்) என்னும் சக்கரப் படையையும் மலர் போன்ற திருக்கையில் கொண்டவனே! நலம் என்று எனக்கு அமைவது நினது மலர் போன்ற திருவடிகளை எண்ணுகின்ற மனம் ஆகும். (நன்மை தரும்) இனமானது உனது மெய்யன்பர் திருக்கூட்டமே ஆகும்.

 

     பூப்பதம் எண்ணும் --- மலரைப் போன்ற திருவடிகளை நினைக்கும். மாப்பதுமாசனி --- சிறந்த தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகள். கொண்கா --- தலைவனே.  சங்காழி மலரக்கையன் --- சங்கையும் உருளைப் படையையும் மலர் போன்ற கையில் கொண்டவன்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...