பொது --- 1012. நெடிய வடகுவடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நெடிய வடகுவடு (பொது)

 

முருகா! 

தேவரீரைக் குற்றமறப் பாடி உய்வதற்கு அருள்புரிவீர்.

 

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி

     நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி

     நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும்

 

நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்

     நினது கருணையு முறைதரு பெருமையும்

     நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப

 

முடியு மபிநவ வனசரர் கொடியிடை

     தளர வளர்வன ம்ருகமத பரிமள

     முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும்

 

மொகுமொ கெனமது கரமுரல் குரவணி

     முருக னறுமுக னெனவரு வனபெயர்

     முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே

 

கொடிய படுகொலை நிசிசர ருரமொடு

     குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு

     குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக்

 

குமுறு கடல்குடல் கிழிபட வடுமர

     மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்

     குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா

 

இடியு முனைமலி குலிசமு மிலகிடு

     கவள தவளவி கடதட கனகட

     இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக்

 

கிறைவ குருபர சரவண வெகுமுக

     ககன புனிதையும் வனிதைய ரறுவரும்

     எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நெடிய வடகுவடு இடியவும்,எழுகிரி

     நெறுநெறு என நெரியவும்முது பணிபதி

     நிபிடமுடி கிழியவும்நிலம் அதிரவும்,...... விளையாடும்

 

நிகர்இல் கலபியும்,ரவி உமிழ் துவசமும்,

     நினது கருணையும்,உறைதரு பெருமையும்,

     நிறமும்,இளமையும்,வளமையும்,இருசர ...... ணமும்,நீப

 

முடியும்பிநவ வனசரர் கொடி இடை

     தளர வளர்வன,ம்ருகமத பரிமள

     முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரள்தோளும்,

 

மொகுமொகு என மதுகரம் முரல்,குரவு அணி

     முருகன் அறுமுகன் என வருவனபெயர்

     முழுதும் இயல்கொடு பழுது அற மொழிவதும்....ஒருநாளே?

 

கொடிய படுகொலை நிசிசரர் உரமொடு

     குமுகுமு என இசையுடன் இசை பெற,மிகு

     குருதி நதி வித சதியொடு குதிகொள,...... விதி ஓட,

 

குமுறு கடல் குடல் கிழிபட,வடுமரம்

     மொளுமொளு என அடியொடு அலறி விழ,உயர்

     குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா!

 

இடியும் முனைமலி குலிசமும்,இலகிடு

     கவள தவள விகட தட கன கட

     இபமும்ரணிய தரணியும் உடையதொர்......தனியானைக்கு

 

இறைவ! குருபர! சரவண! வெகுமுக

     ககன புனிதையும்,வனிதையர் அறுவரும்

     எனது மகவு என உமைதரும் இமையவர் ...... பெருமாளே.

 

பதவுரை

 

            கொடிய படுகொலை நிசிசரர் உரமொடு--- கொடுமையாகப் படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில்

 

            குமுகுமு என விசையுடன் இசை பெற--- குமுகுமு என்னும் ஒலியுடன் தாக்கவும்,

 

            மிகு குருதி நதி வித சதியொடு குதி கொள--- அதிகமான இரத்த வெள்ளம் தாள ஒத்துடன் பெருகிப் பாயவும்

 

           விதி ஓட--- பிரமதேவன் அஞ்சி ஓடவும்,

 

            குமுறு கடல் குடல் கிழி பட--- ஒலிக்கும் கடலின் நடுப்பகுதி கிழிபடவும்,

 

            வடு மரம் மொளு மொளு என அடியொடு அலறி விழ--- பிஞ்சுகளுடன் கூடிய மாமரமானது மொளுமொளு என்று அடியுடன் ஒடிந்து அலறி விழவும்,

 

            உயர் குருகு பெயரிய வரை தொளை பட விடு சுடர் வேலா--- கிரவுஞ்சம் என்ற பறவையின் பெயர் கொண்ட உயர்ந்த மலையானது தொளைபட்டு அழியவும் விடுத்தருளிய ஒளிமிக்க வேலாயுதத்தை உடையவரே!

 

            இடியும் முனை மலி குலிசமும்--- இடியின் கூர்மையை விடவும் மிகவும் கூர்மையாக விளங்கும் வச்சிராயுதமும்,

 

            இலகிடு கவள --- இனிய வாயளவு உணவும்,

 

     தவள விகட தட கன கட இபமும்--- வெண்மையும், விசாலமான முகப் பரப்பும், மிகுந்த மதநீர்ப் பெருக்கும் உடைய அயிராவதம் என்ற யானையையும், 

 

            இரணிய தரணியும் உடையதொர் தனி யானைக்கு இறைவ --- பொன்னுலகத்தையும் தனக்குச் சொந்தமாகக் கொண்ட ஒப்பற்ற, சிறந்த தெய்வயானை அம்மையாருக்குத் தலைவரே!

 

           குருபர--- மேலான குருநாதரே!

 

           சரவண--- சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

 

            வெகு முக ககன புனிதையும்--- பல முகங்களாய்ப் பாய்ந்து வரும் ஆகாய கங்கையும்,

 

           வனிதையர் அறுவரும் எனது மகவு என--- கார்த்திகைப் பெண்கள் அறுவரும்,எங்கள் குழந்தை என உரிமை பாராட்டும்படி

 

            உமை தரும் இமையவர் பெருமாளே --- உமையம்மையார் பெற்றருளிய, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

            நெடிய வட குவடு இடியவும்--- வட திசையில் உள்ள நீண்ட மேருமலை இடிந்து பொடிபடவும்,

 

            எழு கிரி நெறுநெறு என நெரியவும்--- ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிந்து விழவும்,

 

            முது பணிபதி நிபிட முடி கிழியவும்--- முதுமை வாய்ந்தபாம்புகளுக்குத் தலைவன் ஆகிய ஆதிசேடனது நெருங்கிய பணா முடிகள் கிழியவும்,

 

            நிலம் அதிரவும் விளையாடும்--- பூமி குலுங்கவும் விளையாடுகின்ற

 

            நிகர் இல் கலபியும்--- ஒப்பில்லாத மயிலையும்

 

           ரவி உமிழ் துவசமும்--- சூரியனைத் தனது கூக்குரலினால் அழைத்து உமிழ்கின்ற கோழிக்கொடியையும்,

 

            நினது கருணையும், முறை தரு பெருமையும் --- தேவரீருடைய கருணையின் தன்மையும்முறைமையைத் தருகின்ற பெருமையும்,

 

            நிறமும்--- உயர்ந்த பவள நிறத்தையும்,

 

           இளமையும்--- என்றும் அகலாத இளமைத் தன்மையும்,

 

           வளமையும்--- அருள் வளப்பத்தையும்,

 

           இரு சரணமும்--- இரண்டு திருவடிகளையும்,

 

           நீப முடியும்--- கடப்ப மலர் மாலை புனைந்த திருமுடிகளையும்,

 

            அபிநவ வனசரர் கொடி இடை --- புதுமையான, வேடர்களின் குலமகளாகிய வள்ளியம்மையாரின் கொடி போன்ற இடையானது

 

            தளர வளர்வன ம்ருகமத பரிமள--- தளர்வுறும்படி வளர்கின்றதும்,கத்தூரி மணம் கமழ்கின்றதும்,

 

            முகுள புளகித தனகிரி தழுவிய திரள் தோளும்--- குவிந்து பூரித்துள்ள தனபாரங்களாகிய மலைகளைத் தழுவியுள்ள திரண்ட திருத்தோள்களையும்,

 

            மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி--- மொகுமொகு என்ற ஒலியுடன் வண்டுகள் பாடும் குரா மலர் மாலையை அணிந்த

 

            முருகன் அறுமுகன் என வருவன பெயர் முழுதும்--- முருகப் பெருமான்ஆறுமுகக் கடவுள் என்று வரும் திருநாமங்கள் எல்லாவற்றையும்,

 

            இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே --- இயல் தமிழில் அமைத்துகுற்றமறப் பாடி வழிபடுவதும் ஆகிய ஒரு நாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

 

 

பொழிப்புரை

 

 

     கொடுமையாகப் படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில் குமுகுமு என்னும் ஒலியுடன் தாக்கவும், அதிகமான இரத்த வெள்ளம் தாள ஒத்துடன் பெருகிப் பாயவும்பிரமதேவன் அஞ்சி ஓடவும்ஒலிக்கும் கடலின் நடுப்பகுதி கிழிபடவும்பிஞ்சுகளுடன் கூடிய மாமரமானது மொளுமொளு என்று அடியுடன் அலறி விழவும்கிரவுஞ்சம் என்ற பறவையின் பெயர் கொண்ட உயர்ந்த மலையானது தொளைபட்டு அழியவும் விடுத்தருளிய ஒளிமிக்க வேலாயுதத்தை உடையவரே!

 

      இடியின் கூர்மையை விடவும் மிகவும் கூர்மையாக விளங்கும் வச்சிராயுதமும்இனிய வாயளவு உணவும், வெண்மையும், விசாலமான முகப்பரப்பும், மிகுந்த மதநீர்ப் பெருக்கும் உடைய அயிராவதம் என்ற யானையையும்,  பொன்னுலகத்தையும் தனக்குச் சொந்தமாகக் கொண்ட ஒப்பற்ற, சிறந்த தெய்வயானை அம்மையாருக்குத் தலைவரே!

 

     மேலான குருநாதரே!

 

     சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

 

     பல முகங்களாய்ப் பாய்ந்து வரும் ஆகாய கங்கையும்கார்த்திகைப் பெண்கள் அறுவரும்எங்கள் குழந்தை என உரிமை பாராட்டும்படி உமையம்மையார் பெற்றருளிய, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

     வட திசையில் உள்ள நீண்ட மேருமலை இடிந்து பொடிபடவும்ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிந்து விழவும்முதுமை வாய்ந்த பாம்புகளுக்குத் தலைவன் ஆகிய ஆதிசேடனது நெருங்கிய பணாமுடிகள் கிழியவும்பூமி குலுங்கவும் விளையாடுகின்ற ஒப்பில்லாத மயிலையும்,  சூரியனைத் தனது கூக்குரலினால் அழைத்து உமிழ்கின்ற கோழிக்கொடியையும்தேவரீருடைய கருணையின் தன்மையும்முறைமையைத் தருகின்ற பெருமையும்உயர்ந்த பவள நிறத்தையும்என்றும் அகலாத இளமைத் தன்மையும்அருள் வளப்பத்தையும்இரண்டு திருவடிகளையும்கடப்ப மலர் மாலை புனைந்த திருமுடிகளையும்புதுமையான, வேடர்களின் குலமகளாகிய வள்ளியம்மையாரின் கொடி போன்ற இடையானது தளர்வுறும்படி வளர்கின்றதும்கத்தூரி மணம் கமழ்கின்றதும்குவிந்து பூரித்துள்ள தனபாரங்களாகிய மலைகளைத் தழுவியுள்ள திரண்ட திருத்தோள்களையும்மொகுமொகு என்ற ஒலியுடன் வண்டுகள் பாடும் குரா மலர் மாலையை அணிந்த முருகப் பெருமான்ஆறுமுகக் கடவுள் என்று வரும்  திருநாமங்கள் எல்லாவற்றையும்இயல் தமிழில் அமைத்துகுற்றமறப் பாடி வழிபடுவதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமோ?

 

விரிவுரை

 

 

நெடியவடகுவடு இடியவும்......விளையாடும் நிகரில் கலபி ---

 

அயிலேந்தும் பெருமானுடைய மயிலின் பெருமையை இத் திருப்புகழில் அடிகளார் இனிது விளக்குகின்றார்.

 

வடகுவடு --- மேருமலை. அது வடதிசையில் இருப்பதனால் வடமேருமலை எனப்படும். அது பூமிக்கு நடுவில் இருப்பது.  மலைகள் எல்லாவற்றுக்கும் தலையானது. நிடத மலைக்கு வடக்கே ஒன்பதினாயிரம் யோசனைக்கு அப்பால் உள்ளது.  முப்பத்திரண்டு ஆயிரம் யோசனைப் பரப்பும், ஆயிரம் சிகரங்களையும் உடையது. பூமிக்கு அச்சாக நிற்பது. திரிபுர தகன காலத்தில் சிவமூர்த்திக்கு வில்லாக விளங்கியது. பொன்னிறம் உடையது.

 

முருகப் பெருமான் வாகனம் ஆகிய மயில் நடனம் செய்கின்ற போது, அதன் வன்மையைத் தாங்கமாட்டது மேருமலை இடிந்து பொடிபடுகின்றது.

 

 

எழுகிரி நெறுநெறு என நெரியவும் ---

 

குலமலைகள் எட்டு என்றும், ஏழு என்றும் வழங்கப்படும். எட்டு மலைகளில் திருக்கயிலையை நீக்கி, ஏழு ஏழுமலைகள். இந்த மலைகள் நெறுநெறு என்று முறியும்படியான பேராற்றல் வாய்ந்தது மயில்.

 

 

முது பணிபதி நிபிட முடி கிழியவும் ---

 

முதுமை --- பழமை. பணிபதி --- ஆதிசேடன். நிபிடம் --- நெருக்கம்.

 

சேடன் --- பாம்பு இனங்களுக்கு அரசன். ஆயிரம் பணாமகுடங்களை உடையவன். சிறந்த கல்வி அறிவும், அறப்பண்பும் பூண்டவன். அவனுடைய நெருக்கமான தலைகள் கிழியும்படி மயில் திருநடனம் புரியும்.

 

மயிலின் திருநடனத்தின் பெருமையை அடியில் வரும் திருவிருத்தத்தால் அறிக.

 

சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் க்ரவுஞ்சசயிலம்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும்எண்
தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்..                --- மயில்விருத்தம்.

 

"தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்

   செகதலமும் நின்று சுழலத்

திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத்

   தீக்கொப்புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம்

   பதைபதைத்தே நடுங்கப்

படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு

   பச்சை ப்ரவாள மயிலாம்"       --- மயில் விருத்தம்.

 

ரவி உமிழ் துவசமும் ---

 

நாள்தோறும் வைகறையில் கோழி, "கொக்கறுகோ" என்று கூவி, கதிரவனை வரவேற்கின்றது. உலகமெல்லாம் உவக்க வரும் உத்தமனை உயிர்களின் பிரதிநிதியாக சேவல் வரவேற்கின்றது.  பிரணவத்தை ஒலிவடிவாக அது கூவுகின்றது. ஒளியைக் கண்டு உவக்கும் உத்தம குணம் படைத்தது கோழி. யாருக்கும் ஒரு கேடும் செய்யாமல் உபகரிப்பது. நெருப்பு மயம் போல் சிவந்த நிறத்துடன் விளங்குவது.

 

நாளும் உலகம் உவக்க வரும் ஞாயிற்றின் வரவை முன் கூட்டியே நமக்கு உவகையுடன் உணர்த்தும் சேவலின் புகழை நாம் இனிது எடுத்து ஓதித் துதிக்க வேண்டும்.

 

வந்திப்பேன் அநுதினமும் வாழ்த்திடுவேன், 

     உனதுதிருவடியை நாளும்

சிந்திப்பேன், முப்பொழுதும் சேவிப்பேன்,

     செஞ்சூட்டுச் சேவலே! கேள்,

வந்திப்பேன் எனதுவலி பார்என்னும்

     ஆணவமாம் பகைவிண்டு ஓட

கொந்தில் தேன் பொழிசாரல் தணிகைவரை

     யான்வர நீ கூவுவாயே.      --- தணிகைச் சந்நிதிமுறை.

 

"ரவி உமிழ் கொடியும்" என்று அடிகளார் திருச்செங்கோட்டுத் திருப்புகழில் கூறியுள்ளது காண்க.

 

நினது கருணையும் ---

 

இறைவனது கருணை அளவிடற்கு அரியது. அது மலையினும் பெரியது என்பதால் "கருணை மேருவே" என்றும், கடலினும் பெரியது என்பதால் "கருணை வாரியே" என்றும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் மழை பொழிவது என்பதால், "கருணை மேகமே" என்றும் பேசப்படுகின்றது. 

 

கருணை மேகமே! தூய கருணை வாரியே! ஈறில்

   கருணை மேருவே! தேவர்              பெருமாளே.  --- (அமலவாயு) திருப்புகழ்.

                                                  

இறைவனது திருமுக மலரில் இருந்து கருணைத் தேன்,பெருவெள்ளம் போல் இடையறாது பெருகி வழிந்துகொண்டே இருக்கும். 

 

மருவறு கடல் என மருவு ப(ன்)னிருவிழி

வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்...  --- கொலு வகுப்பு.

 

"மூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி".

 

கொடி இடை தளர வளர்வன ---

 

வள்ளியம்மையார் இச்சா சத்தி. உயிர்கட்கு எல்லாம் இன்னருள் புரியும் பொருட்டு இளம்பூரணன் இச்சா சத்தியை உடையவனாக விளங்குகின்றான். வள்ளியம்மையாருடைய இரு தன பாரங்கள் பரஞானம், அபரஞானம் என்ற இருஞானங்களே ஆகும். அந்த இரு ஞானங்கள் வளர்வதால் அஞ்ஞானம் ஆகிய இடை தளர்ந்து மெலிகிறது.

 

முருகன் அறுமுகன் என வருவன பெயர் முழுதும் இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே ---

 

குமாரக் கடவுளுடைய திருநாமங்களுள் மிகச் சிறந்தது முருகன் என்பதே ஆகும். "மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்" என்னும் கந்த ர்அலங்காரத் திருவாக்கை எண்ணுக.

 

முருகன் என்ற சொல்லில் முருகு என்பது பகுதி. அன் என்பது விகுதி. முருகு என்பதில் மூன்று உகரங்கள் உள்ளன. ம்-உ, ர்-உ, க்-உ,

 

அ - படைத்தல் தொழிலைச் செய்யும்.

எ - காத்தல் தொழிலைச் செய்யும்.

ம - அழித்தல் தொழிலைச் செய்யும்.

 

சென்ற காலம், நிகழ்காலம், வரும்காலம் என்னும் முக்காலங்களிலும், சுவர்க்க மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்களிலும் உயிர்களைக் காத்து, இம்மை மறுமை வீடு என்ற மும்மையும் அருளவல்லவர் அப் பரமபதியே என்ற ஒரு பெரு உண்மையை விளக்க, மூன்று உகரங்களுடன் கூடி, முருகு என்ற திருநாமத்தினால் அவரை உண்மை ஞானிகள் உரைத்து அருளினார்கள்.

 

ஐந்து முகங்களுடன் வீற்றிருந்த சிவபெருமான், அமரராதி அடியவர்கட்காகத் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டு அருளி, அந்த ஆறுதிருமுகங்களினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர்களே ஆறுமுகம் கொண்டன. ஆதலின், எல்லையில்லாத கருணையுடன் கூடிய மூர்த்தி ஆறுமுகமூர்த்தி.

 

மண் அளந்திடு மாயனும் வனச மேலவனும்

எண்ண அரும்பகல் தேடியும் காண்கிலாது இருந்த

பண்ணவன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய்

உள்நிறைந்த பேரருளினால் மதலையாய் உதித்தான்.   --- கந்தபுராணம்.

                                        

ஆதிசத்தி, பராசத்தி, ஞானந்ததி, கிரியாசத்தி, இச்சாசத்தி, குடிலாசத்தி என்ற சத்திகளே ஆறுமுகம்.

 

ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் 

ஆறுமுகம் என்று     தெரியேனே.--- (வாதினை) திருப்புகழ்.

 

அ, உ, ம, நாதம், விந்து, கலை என்ற ஆறும் ஆறுமுகம். 

 

மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை, தத்துவம் என்னும் ஆறு அத்துவாக்களே ஆறுமுகம். 

 

சருவஞ்ஞிதை, திருப்தி, அநாதிபேதம், அலுப்தசத்தி, அநந்தசத்தி, சுவதந்திரத்துவம் என்ற ஆறு அருட்குணங்களே ஆறுமுகம்.

 

ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறும் ஆறுதிருமுகங்களாக உள்ளன. இந்த ஆறுமுகங்களினின்றும் அறுவகை ஒளிகள் வீசுகின்றன. அவை, ஞானப்ரகாசம், ஞானானந்தப்ரகாசம், சருவஞான வியாபகப்ரகாசம், சுத்தஞான சாட்சிப்ரகாசம், சர்வபரிசுத்த பிரமஞானானந்தப்ரகாசம், அநாதி நித்ய பிரம ஞானானந்த சிவப்ரகாசம்.

 

உல்லாசம், நிராகுலம், யோகம், இதம், சல்லாபம், விநோதம் என்ற ஆறுமே ஆறுதிருமுகங்கள்.

 

உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனும் நீ அலையோ..        --- கந்தர் அநுபூதி.

 

வாக்கிலே மூன்று அழுக்குகள் உண்டு. பொய், புறம்கூறல், தீச்சொல் என்பவை. இந்த அழுக்குகளை அகற்றும் தண்ணீர் இறைவனுடைய திருநாமங்களே. 

 

திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

        செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்;பொய்,புறங்கூறல்,

        தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

        அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

        அசுத்தனேன் உய்யும் நாளு உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

        வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

        விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து,மின்னொளி கடந்த

        ஈர்ஞ்சடை,பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

        ஈசனே,மாசிலா மணியே.          --- சிவப்பிரகாசர்.

 

மன அழுக்கு ஆகிய அழுக்காறுஅவாவெகுளிபகைமை உணர்வு ஆகியவற்றை,தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.

 

பொய் சொல்லுதல்,புறம் கூறுதல்தீய சொற்களைக் கூறுதல் என்னும் வாயால் உண்டாகும் அழுக்கைஇறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.

 

பாவச் செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் உடல் அழுக்கைஅருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.

 

இவ்வாறுமன அழுக்குவாய் அழுக்குஉடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதிஉணர்ந்துஒழுக வேண்டியது.

 

இதனைச் சுருக்கமாகத் திருவள்ளுவர்"மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற" என்று அருளிச் செய்தார். மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும். மன அழுக்கு நீங்கினாலேவாய் அழுக்கும்மெய் அழுக்கும் இல்லாது ஆகும்.

 

ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்

ஒன்றோடு ஒன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து--ஒன்றோடுஒன்று

ஒவ்வா உயிர் ஓம்பி,உள் தூய்மை பெற்றதே

அவ்வாயது அறம் ஆகும்.             --- அறநெறிச்சாரம்.

 

ஒன்றோடு ஒன்று பொருந்தாத புறச் சமய நூல்கள் பலவற்றுள்ளும்ஒன்றோடு ஒன்று வேறுபட்ட பொருள் இவை என நன்கு ஆராய்ந்து அறிந்துபல்வேறு வகைப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றி,உள்ளத் தூய்மை பெற்றதே சிறந்த அறம் ஆகும்.

 

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்.... --- அப்பர்.

 

முருகவேளுடைய திருநாமங்களை அன்புடன் ஓதுவாருக்கு இம்மையில் கொடிய வறுமை நோய் எய்தாது. முடிவில் வீடுபேறு எய்தும். 

 

முடியாப் பிறவிக் கடலில் புகார்முழுதும் கெடுக்கும்

மிடியால் படியில் விதனப்படார்வெற்றிவேல் பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்

பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.         --- கந்தர் அலங்காரம்

                                         .

இறைவனுடைய திருநாமங்களைக் குற்றம் அறக் கூறவேண்டும். எழுத்துப் பிழை, சொற்பிழை இருக்கக் கூடாது. பற்பல எண்ணங்களுடனும், பற்பல தீச்செயல்களைச் செய்துகொண்டும் கூறக் கூடாது. "அயில் வேலவன் கவியை அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்" என்ற அலங்காரத்தின்படி, இறைவனுடைய திருநாமங்களை அன்புடன், உள்ளம் குழைந்து, ஒருமைப்பட்ட மனத்துடன் ஓதவேண்டும். அவ்வாறு ஓதியவர்க்கு, முழுப்பலன் உடனே கைகூடும். இது உறுதி.

 

குருகு பெரிய வரை ---

 

குருகு --- பறவை. கிரவுஞ்சம் என்ற பறவையின் வடிவம் போன்ற மலை.

 

தாரகாசுரனுக்கு நண்பனான ஓர் அரக்கன். அவன் பெரிய மாயாவி. வஞ்சனையும் தந்திரமும் செய்ய வல்லவன்.

 

மக்கள் பலர் சென்று மீளும் ஒரு வழியில் மலை வடிவாக நிற்பான்.  வருகின்ற மக்களுக்கு அம் மலையில் பல வழிகளைக் காட்டுவான்.  அவ் வழியே அம் மக்கள் சென்றால்பின்னர் சென்ற வழி அடைபட்டுவிடும்.  மீள வழி இன்றிஇடியும் மின்னலும் தோன்றஇடர்ப்பட்டு மாளுவர். இங்ஙனம் பல்லாயிரம் முனிவர்களையும் மக்களையும் மாய்த்து வந்தான்.

 

மகத்துவம் மிக்க அமத்திய முனிவர்தென்னாடு நோக்கி வரும்போதுவழக்கம் போல்மலை உருவம் கொண்டு எதிர்த்து நின்றனன். அம் மலையுள் பல வழிகள் காணப்பட்டன. அவ் வழியுள் அகத்திய முனிவர் சென்றார். நாற்புறமும் வழி மறைந்துகாட்டுத்தீசூறாவளிஇடிமழைமுதலியன தோன்றின.  அசுர மாயை என்பதை ஞான நோக்கால் அறிந்த குறுமுனிவர்தமது திருக்கரத்தில் இருந்த யோக தண்டத்தினால் இடித்துப் பல குகைகளை உண்டாக்கிவெளியே வந்து, "நீ இப்படியே மலை வடிவாக இருந்து குமாரக் கடவுள் வடிவேலால் அழியக் கடவாய்" என்று சபித்தனர். 

 

மலை உருவாகவே கிடந்த அவ் அசுரன்தாரகனுக்குத் துணையாக நின்று போரில் பலப்பல மாயங்களைச் செய்தான்.  முடிவில்வீரவாகு தேவரையும்இலக்கத்து எண்பான் வீரர்களையும்பூதசேனாதிபதிகளையும் தனக்குள் புகுமாறு செய்து மயக்கினான். வெற்றிவேல் பெருமானுடன் போர் புரிந்துவேலாயுதத்தினால் பிளக்கப்பட்டு அழிந்தனன்.

 

"வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன

வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும்"  --- வேடிச்சி காவலன் வகுப்பு.

                                

 

வெகு முக ககன புனிதையும்வனிதையர் அறுவரும் எமது மகவு என உமை தரும் ---

 

வெகுமுக ககன புனிதை என்பது வானநதியான கங்கையைக் குறிக்கும். "ஆயிர மாமுகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர் சடைமேல் பயில" என்பது அப்பர் தேவாரம். "ஆயிர முகத்து நதி பாலன்" என்றார் அடிகளார் வேளைக்காரன் வகுப்பில். "சானவி முளை" என்பார் பாம்பன் சுவாமிகள். சானவி --- கங்கை. முளை --- புத்திரன்.

 

சிவபிரானுடைய நுதல் விழியினின்றும் எம்பிரான் அருட்பெரும் சோதியாகத் தோன்றிகங்கா நதியில் தவழ்ந்து சென்றுசரவணப் பொய்கையில் திருவுருவம் கொண்டு அருளினார். கார்த்திகைப் பெண்கள் அறுவரும் பால் ஊட்டினார்கள்.

 

"உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க,அவர்

ஒருவர் ஒருவர்க்கு அவண் ஒர் ஓர் புத்ரன் ஆனவனும்" 

                                                                                   --- வேடிச்சி காவலன் வகுப்பு.

                                

சிறிது நேரம் தவழ்ந்த காரணத்தினால் கங்கையின் மைந்தர் என்றும்பால் ஊட்டிய காரணத்தினால் கார்த்திகை மைந்தர் என்றும்உலகம் அழைக்கஉமையம்மையார் தமது புதல்வராகிய முருகப் பெருமானை அளித்து அருளினார். அது அவரது கருணைத் திறம் ஆகும். 

 

கருத்துரை

 

முருகா! தேவரீரைக் குற்றமறப் பாடி உய்வதற்கு அருள்புரிவீர்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...