044. குற்றம் கடிதல் --- 03. தினைத்துணையாம் குற்றம்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழவிப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. "கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்ததுஅது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "பழிக்கு அஞ்சுபவர்,தினையளவு சிறிய குற்றமானது தம்மிடத்து உண்டானாலும்அக்குற்றத்தைஅவ்வளவாகக் கருதாமல்பனை அளவு பெரிதாகக் கொள்ளுவார்" என்கின்றார் நாயனார்.

 

     புகழினை விரும்பிபழிக்கு அஞ்சுகின்ற பெரியோர்தம்மிடத்தில் தினை அளவு சிறியதோர் குற்றம் உண்டானாலும்அதனைச் சிறியதாக எண்ணாமல்மிகப் பெரிய குற்றமாவே மதித்து வருந்துவர். அத்தகைய குற்றமானது தம்மிடத்தே பின்னர் நேராவண்ணம் காத்துக் கொள்வர். ஏனவேபழிக்கு அஞ்சுகின்ற பெரியோர்சிறிதளவு குற்றமும் தம்மிடத்து நேராமல் காத்துக் கொள்வர்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

தினைத் துணைஆம் குற்றம் வரினும்,பனைத் துணையாக்

கொள்வர்பழி நாணுவார்.              

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     பழி நாணுவார்--- பழியை அஞ்சுவார்

 

     தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர்--- தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும்அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.

 

     (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார்பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

கையரிந்தான் மாறன் கதவுஇடித்த குற்றத்தால்,

எய்யும் சிலைக்கை இரங்கேசா! - பையத்

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.                        

 

இதன் பொருள்---  

 

     எய்யும் சிலைக் கை இரங்கேசா --- அம்பு வைத்து எய்யும் கோதண்டத்தை ஸ்ரீராமாவதாரத்தில் ஏந்திய கையை உடைய திருவரங்கநாதக் கடவுளே! கதவு இடித்த குற்றத்தால் --- ஒரு வேதியன் வீட்டுக் கதவைத் தட்டின குற்றம் காரணமாகமாறன் கை அரிந்தான் --- பாண்டியன் தன் கையை வெட்டிக்கொண்டான்,  (ஆகையால்இது) பழி நாணுவார் --- பழிக்கு அஞ்சும் பெரியோர்தினை துணை ஆம் குற்றம் பைய வரினும் --- தினை அரிசி அளவு சிறிய குற்றம் தம்மை அறியாமலே நேரிட்டாலும்பனை துணை ஆக் கொள்வர் --- பனையத்தனை பெரியதாகக் கொள்வார்கள் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- சிறிய குற்றத்திற்கும் அஞ்சி நடக்கவேண்டும்.

 

            விளக்கவுரை --- மதுரையில் ஒரு காலத்தில் வேதியர் வாழும் கிராமத்தில்ஓர் ஏழை வேதியன் காசி யாத்திரை செல்வதாகத் தன் மனைவிக்கு அறிவித்தான். அவளுக்கு வேறு துணை இல்லையாகையால்அவள், "எனக்கு ஆர் துணை?" என்றாள். "உனக்கு அரசன் துணை" என்றான் கணவன்.  அப்போது பாதி இரவு ஆகையால்நகர் சோதனை வந்த பாண்டியன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.  தன் விஷயத்தில் குடிகளுக்கு இருக்கும் நம்பிக்கைக்காக மன மகிழ்ந்த அரசன்மறுநாள் முதல் அவ்வீட்டையும் அதற்காக மற்ற வீடுகளையும் காவல் புரிந்து வந்தான். அவ் வேதிய மாதுக்குக் கொடுத்தது போலவேஅவ் அக்கிரகாரத்தில் இருந்த மற்றப் பெண்களுக்கும் அரிசி பருப்பு ஆடை அணிகள் வழங்கினான். இப்படிப் பதினெட்டு மாதம் கழிந்தது. கடைசியாய் ஒருநாள் இரவில் பாண்டியன் அவ் வீட்டண்டை வந்தபோது, ஓர் ஆண்பிள்ளையின் பேச்சரவம் கேட்டது. ஆகையால்அவன் சந்தேகம் தெளியக் கதவைத் தட்டினான். "யாரடா கதவை இடிக்கின்றவன்?" என்று கணவன் சந்தேகத்தோடு அதட்டிக் கேட்டான். "ஐயோஇவனுக்குச் சந்தேகத்துக்கு இடம் பண்ணிவிட்டோமே. கற்புடைய பார்ப்பனிக்குக் கெடுதி வருமே" என்றுஅரசன் கொஞ்சமேனும் தாழ்க்காமல் மற்ற வீட்டுக் கதவுகளையும் தட்டிக் கொண்டே போய்விட்டான். விடிந்ததும் அக்கிரகாரத்தார் அனைவரும் அரசனை அணுகி, "யாரோ ஒருவன்போக்கிரிஎங்கள் அக்கிரகார வீதியில் நுழைந்துநிர்நிமித்தமாகக் கதவுகளைத் தட்டி எங்களுக்குப் பயம் காட்டினான். அவனைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும்" என்றார்கள். "அப்படியே செய்யலாம்" என்றான் பாண்டியன். அது கேட்ட வேதியர், "அவனைக் கண்டு பிடிக்கத் தாமதிக்கக் கூடாது. ஒருகால் அவன் இன்றைக்கு வந்தாலும் வருவான். அவனை அதி சாக்கிரதையாய்ப் பிடித்துக் கையை வாங்கிவிட வேண்டும்" என்றார்கள். "நான்தான் அவன்" என்று சொல்லி வாளால் தன் கையைத் தறித்துக் கொண்டான் அரசன். அது கண்ட வேதியர்அரசனால் உண்மை அறிந்துஅவன் கை இழந்தமைக்கு வருந்திஎப்போதும் போல அது வளரும் பொருட்டு யாகம் செய்தார்கள். அப்படியே அவனுக்குப் பொற்கை வளர்ந்துபொற்கை மாறன் என்று பெயர் பெற்றான். குற்றம் சிறிதாயினும்பெரிதாக் கொண்ட பாண்டியன் செய்கை வியக்கற்பாலது.

                                                                                    

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்குந்

திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்,- திங்கள்

மறு ஆற்றும்சான்றோர் அஃது ஆற்றார்,தெருமந்து

தேய்வர் ஒருமாசு உறின்.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அங்கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் --- அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற் பெரும்பாலும் ஒத்த பெருமை உடையவராவர்திங்கள் மறு ஆற்றும், சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசு உறின் --- ஆனால்திங்கள் களங்கத்தைத் தாங்கும்மேன்மக்கள் தமது ஒழுக்கத்தில் சிறிது கறை உண்டானால்அது பொறாராய் உள்ளங் குழம்பி அழிவர்.

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...