047. தெரிந்து செயல்வகை --- 07. எண்ணித் துணிக


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில்"எந்தத் தொழிலையும்அதை முடிக்கும் உபாயத்தை ஆராய்ந்து பார்த்து செய்யத் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் ஆராய்ந்து பார்ப்போம் என்பது குற்றம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     செயலை முடிக்கும் உபாயமாவது,கொடுத்தல்இன்சொல் சொல்லல்வேறுபடுத்தல்ஒறுத்தல் என நால்வகைப்படும். இதனை வடநூலார்,தானசாமபேததண்டம் என்பர்.

 

     சாமம் ஆவதுஇனிதாகக் கூறல். பேதம் ஆவதுமென்மையாலும்வன்மையாலும் மனத்தினைப் பேதித்தல். தானம் ஆவது,பகைவர் மனம் மகிழ அவர்க்கு வேண்டிவற்றைக் கொடுத்தல்தண்டமாவதுபின்பு அவர் ஆகாமல் அழித்தே விடுதல்.

 

     இவற்றுள் சாமம் என்பதுஐந்து வகைப்படும். அவையாவன,  வணங்குதல்புகழ்தல்எதிர்கொள்ளல்நட்புக் கூறல்உறவு கூறல் என்பன ஆகும்.

 

     தானம் என்பது ஐந்து வகையாகும். அவையாவனகிடைத்தற்கு அரிய பொருளைக் கொடுத்தல்தனக்குத் தரும் பொருளை வாங்காது விடுதல்கொடுக்க வேண்டிய பொருளைக் கொடுத்தல்பிறர் பொருளைக் கொடுத்தல்கப்பம் வாங்காது ஒழிதல் என்பன ஆகும்.

 

     பேதம் மூன்று வகைப்படும். அவையாவனநட்பு ஒழிதல்கூடினவரைப் பிரித்தல்வேறு பகை விளைத்தல்.

 

     தண்டம் மூன்று வகைப்படும். அவையாவனதுன்பம் செய்தல்பொருளைக் கொள்ளுதல்கொல்லுதல்.

 

     இந்த வகையான உபாயங்களை எல்லாம் எண்ணாது ஒரு தொழிலைத் தொடங்கினால்அது பகைவரால் விலக்கப்பட்டு முடியாமல் போகும். இடையில் விடுதலும் கூடும். இது துன்பத்தைத் தரும். அவ்வாறு எண்ணாமல் தொடங்குதல், "இழுக்கு" எனப்பட்டது.

 

     ஆக,செய்யத் தக்கனவற்றையும்,உபாயம் அறிந்தே தொடங்க வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

எண்ணித் துணிக கருமம்துணிந்த பின்

எண்ணுவம் என்பது இழுக்கு.          

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      கருமம் எண்ணித் துணிக --- செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக

 

     துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு--- தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.

 

      (துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய் நிலையான் வந்தது. அதுகொடுத்தல்இன்சொல் சொல்லல்வேறுபடுத்தல்ஒறுத்தல்என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான,சாமபேததண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகையஅவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும்இடையின் ஒழிதல் ஆகாமையானும் அரசன் துயருறுதலின்,அவ்வெண்ணாமையை'இழுக்குஎன்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குக என்பதாம்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...

 

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.  --- கொன்றைவேந்தன்.

 

இதன் பொருள் ---

 

     சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத் துணி.

 

யாதொரு கரும மேனும் 

     எண்ணியே துணிக என்றும்,

காதலில் துணிந்து செய்தால் 

     எண்ணுதல் கடன் அன்று என்றும்,

ஓதுநூல் புலவர் சொன்னார்,

     உமக்கு உள உணர்வு அற்று அன்றே

பேதுஉற அடர்த்தும் பின்னை

     உருகிநீர் பிழைசெய் தீரேக்.       --- வில்லிபாரதம். சூதுபோர்ச் சருக்கம்.


இதன் பொருள் ---

 

      யாது ஒரு கருமம் ஏனும் --- (ஒருவர் செய்வது) எந்தக் காரியமாய் இருந்தாலும், (செய்வதற்கு முன்பு)எண்ணியே --- ஆராய்ந்து பார்த்தே,துணிக --- (தமது மனத்திற்கு ஒத்ததாயின் அந்தக் காரியத்தைத்) துணிந்து செய்கஎன்றும் --- என்றும், (அங்ஙனம் ஆராய்ந்து பின் துணிந்து செய்யாமல்)காதலின் --- (அந்தக். காரியத்தின் மீதுள்ள) ஆசையினால்துணிந்து செய்தால் --- துணிவு கொண்டு (ஒரு காரியத்தைச்) செய்தால், (பிறகு)எண்ணுதல் --- (அதைப் பற்றிச்) சிந்தித்தல்,கடன் அன்று --- முறைமை அல்ல', என்றும் --- என்றும்நூல் ஓது புலவர் சொன்னார் --- சாத்திரங்களைக்  கற்றறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் உமக்கு உள உணர்வு --- உங்களுக்கு உள்ள அறிவானதுஅற்று அன்றே --- அப்படிப்பட்டதன்று [அந்தச் சாத்திர முறைமைக்கு ஒத்திருக்கவில்லையே!  நீர் பேது உற அடர்த்தும் --- நீங்கள் (பாண்டவர்க்குப்) பெருந் துன்பம் உண்டாகுமாறு (அவர்களைச்) சயித்திருந்தும்பின்னை ---மறுபடியும்உருகி --- மனமிரங்கி,பிழை செய்தீரே --- தவறான காரியத்தைச் செய்து விட்டீர்கள்.

 

     ஒரு காரியத்தைச் செய்துவிட்ட பின்பு ஆராய்தற்கு இடமில்லை. ஆதலால்ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்இவ்வாறு இருக்கவும்நீங்கள் மிகவும் வருந்திப் பேராலோசனை செய்து அரிதில் சூது வழி கொண்டு சயித்துப் பின்பு பாண்டவர்களிடத்தில் பேரருள் கொண்டு சிறிதும் ஆலோசனை இன்றி அவர்களை அடிமைத் திறத்தினின்று நீக்கி அவர்கட்கு அரசாட்சியையும் அளித்து விட்டீர்களே! முன்னம் உங்களால் மிகவும் அவமதிக்கப்பட்ட அப் பாண்டவர்கள் நீங்கள் செய்த அபகாரங்களை எல்லாம் மறவாது மனத்தில் கறுக் கொண்டு இனி உங்களுக்குப் பெருங்கேடு புரிவார்கள் என்பதைக் குறித்து நீங்கள் சிறிதும் ஆலோசனை கொள்ளவில்லையே! இனி யாது செய்யத் தக்கதுஎன, பாண்டவர்கள் சூதில் இழந்ததை எல்லாம் மீளப் பெற்றுச் செல்வதைப் பொறுக்காத சகுனி அநுதாபத்தால் கூறுகின்றான்.. 

 

     "எண்ணித்துணிக கருமம்துணிந்த பின்எண்ணுவம் என்பது இழுக்கு" என்ற திருக்குறள் இங்கு உணரத் தக்கது.  'பாண்டவர்களை முன்னமே துன்புறுத்தாது இருந்திருக்க வேண்டும். துன்புறுத்திய பின்பு அன்பு கொண்டு உருகாது இருக்க வேண்டும்.  துன்பத்தைச் செய்துவிட்டு, பின்பு உருகுதல் எவ்வாற்றாலும் தக்கது அல்ல என்பது, "பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீர்" என்பதன் கருத்து. 

 

ஐந்தறிவால் கண்டாலும்,ஆர்ஏது சொன்னாலும்,

எந்த விருப்பு வெறுப்பு ஏய்ந்தாலும்,--- சிந்தையே

பார விசாரத்தைப் பண்ணாதே, ஏதொன்றும்

தீர விசாரித்துச் செய்.            --- சிவபோகசாரம்.

 

இதன் பொருள் ---

 

     பொறிகளால் காண்பனவும், பிறர் சொல்லக் கேட்பனவும், உவகை வெகுளிகளைச் செய்வவனவும் ஆவகியவற்றுள் யாது ஒன்றனையும், அவ்வாற்றான் எதிர்ப்புலம் ஆயவழி அதனை அங்ஙனம் புலனாயவாறே துணியாது, நன்கு ஆராய்ந்து துணிதல் வேண்டும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...