045. பெரியாரைத் துணைக்கோடல் --- 06. தக்கார் இனத்தனாய்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் ஒரும் ஆறாம் திருக்குறளில், "ஆய்ந்து அறியும் சான்றோர் இனத்துள் தானும் ஒருவனாக வாழ வல்லவனுக்குபகைவர் யாரும் செய்யக் கூடிய துன்பம் எதுவும் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     எவன் ஒருவன் அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியாரைத் தனக்கு இனம் என்று கொண்டுஅவர் கூறிய வழியில் ஒழுகுகின்றானோஅவனுக்குப் பகைவர்கள் எந்த ஒரு துன்பத்தையும் செய்வதற்கு இல்லை. எனவேஅவனை வெல்பவரும் இல்லை.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை,

செற்றார் செயக் கிடந்தது இல்.                   

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை --- தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை

 

           செற்றார் செயக் கிடந்தது இல்--- பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.

 

            (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல்கூடினவரைப் பிரித்தல்வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும்வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும்தானும் அறிந்துஅறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்என்றார்.)

 

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

யோகமுனி ராகவனை உற்றுஅரக்கர் போர்களைந்தே

யாகம் முடித்தான்,இரங்கேசா! --- ஆகையால்

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்.    

 

இதன் பொருள் ---        

 

            இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! யோகமுனி --- இராஜயோக சாதக மாமுவனிவராகிய விசுவாமித்திரர்ராகவனை உற்று --- இராம பிரானைத் துணையாகப் பெற்றுஅரக்கர் போர் களைந்து --- மாரீசன் சுவாகு என்னும் அசுரர் சண்டையை நீக்கியாகம் முடித்தான் --- தாம் தொடங்கின யாகத்தை நிறைவேற்றிக் கொண்டார்,  (ஆகையால்இது) தக்கார் இனத்தனாய் --- மேலாரோடு சேர்ந்து கொண்டவன் ஆகிதான் ஒழுக வல்லானை --- (ஒருவன்) தான் தக்கபடி நடந்துகொள்ள வல்லவனானால் (அவனை)செற்றார் --- பகைவர்செயக் கிடந்தது இல் --- செய்யக் கூடியதாகிய தீங்கு ஒன்றும் இல்லை (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- பெரியாரைச் சேர்ந்தாரைப் பகைவர் அஞ்சுவார்கள்.

 

            விளக்கவுரை--- விசுவாமித்திரர் இராமபிரானைத் துணையாகக் கொண்டுபோய்த் தமக்கு முதற்பகையாகிய தாடகையைக் கொல்வித்துபிறகு யாகபங்கம் செய்த தாடகையின் மக்களாகிய மாரீசன்சுவாகு என்பவரில் முன்னவனை வெருட்டித் துரத்திக் கடலில் இடுவித்துபின்னவனை ஓரே அம்பால் இயமபுரம் சேர்ப்பித்தார். பிறகு அவர் தமது யாகத்தை இடையூறு இன்றி முடித்து,  "உதவி வரைத்து அன்று உதவிஉதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்றபடி, இராமபிரான் தமக்குச் செய்த உதவிக்கு மாறுதவியாகஅவர்க்குத் தெய்வ வாளிகள் வழங்கிஅவரை அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குப் போய்சிவ வில்லை வளைப்பித்துச் சீதையைத் திருமணம் செய்வித்தார்.     

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...                  

 

சிறியர் ஆயினார் சார்பினை விழையன்மின்,

     திறல்கெழு பெரியோராம்

அறிஞர் ஆயினார் சார்பினை விழைமினோ,

     அலர் இதழ் விரிகொன்றை

வெறி நறுந்தொடை எம்பிரான் சார்பினை 

     விழைதலால்,உரகங்கள்

மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின 

     வாழ்ந்தனையோ என்ன.          --- காஞ்சிப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     சிறியராவார் சார்பினை விரும்பாது இருங்கள். வலிமை பொருந்திய பெரியோர் ஆகும் அறிஞர் தொடர்பினை விரும்பி இருங்கள். இதழ் அலர்ந்து விரிகின்ற கொன்றையின் நறுமணங்கமழும் மாலையை அணிந்த எமது சிவபெருமான் சார்பினை விரும்பி இருந்த பாம்புகள்குற்றமற்ற வலிமை நிரம்பிய கருடனை நல் வாழ்க்கையையோஎன்ன வினாவின.

 

 

ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்

ஏன் பிள்ளாய்! கருடா! நீசுகமோ?என்று

      உரைத்தவிதம் என்னல் ஆமே!--- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் ---

 

     பிள்ளாய் ஆம் எனக் கொடுக்கும் பெரியோரை அடுத்தவர்கள் --- இளைஞனே! முடியும் என்று அளிக்கும் சான்றோரைச் சார்ந்தவர்கள்பிள்ளாய்! அவனிக்கெல்லாம் நாம் அதிகம் என்பர் --- இளைஞனேஉலகிலே நாமே சிறப்புடையேம் என்று  நடந்து கொள்வர்!நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார் --- பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர்பிள்ளாய் வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் --- பிள்ளாய்! வானமே எனும் எங்கும் நிறைந்த மேனியை உடைய தண்டலையாரின் அணிகலனாக வளர்க்கப் பெற்ற பாம்புஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோஎன்று உரைத்த விதம் என்னலாமே --- ‘என்ன பிள்ளாய்! கருடனேநீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

 

       கருடனைக் கண்டாற் பாம்பு நடுங்குவது இயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால் ,கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தாற் சுகம்என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும் என்பதாம்.

 

 

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்,

வலியோர் தம்மைத் தான் மருவின்;--- பலியேல்

கடவுள் அவிர்சடைமேல் கட்செவி அஞ்சாதே

படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.       --- நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்றுக் கொள்ளும் சிவபெருமானது ஒளிவிளங்கும் சடைமேல் உள்ள பாம்பானதுவிரிந்த சிறகுகளை உடைய பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து அஞ்சாது. அது போல்,  வலிமை இல்லாதவர்வலிமை உடைய பகைவர்க்குத் தாம் அவரினும் வலிமை உடைய ஒருவரைப் பொருந்தி இருந்தால் அஞ்சமாட்டார்கள்.

 

 

கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்

ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு;

மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்

செல்லாவாம் செற்றார் சினம்.        --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கொல்லை இரு புனத்துக் குற்றியடைந்த புல் --- கொல்லையாகிய பெரிய நிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்த புல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு --- உழவரது உழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம் --- வலிமை இல்லாதவரேயாயினும் நல்லினத்தார் என்னும் வலிய சார்பினைச் சார்ந்தவர்மேல் பகைவரது சினம் பயன்படாமல் போம்.

 

            நல்லாரினத்தில் சேர்ந்திருப்பார் மேல் பகைவர் சினம் செல்லாது.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...