041. கல்லாமை --- 05. கல்லா ஒருவன்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "நூல்களைக் கல்லாத ஒருவன்,தன்னை அறிவு உடையவனாக மதிக்கும் மதிப்பானதுகற்றவன் கண்டு பேச இழுக்கு அடையும்" என்கின்றார் நாயனார்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

கல்லா ஒருவன் தகைமைதலைப் பெய்து

சொல் ஆடச் சோர்வு படும்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கல்லா ஒருவன் தகைமை--- நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு

 

     தலைப் பெய்து சொல்லாடச் சோர்வுபடும்- அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.

            

     ('கற்றவன்என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பதுசொல்லியவழி வழுப்படுதலின்அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஈசர்இடத்து அன்பர் என்பவர்பால் புத்தர் எலாம்

பேசும் இடத்து ஊமைஆம் பெற்றிமையால்,ஆகமத்தைக்

கல்லா ஒருவன் தகைமை தலைப் பெய்து

சொல் ஆடச் சோர்வு படும்.

 

            ஈசரிடத்து அன்பர் --- மணிவாசகப் பெருமான். புத்தர் --- இலங்கையில் இருந்து வந்த புத்தர்கள்.  

 

போதவூர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில் வென்ற 

வாதவூர் ஐயன்.அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

     புத்தர் தமது மதத்தினது சிறப்பைக் கூறிசைவத்தை மறுத்து மணிவாசகரிடம் வாது செய்தபோதுதமது கொள்கையைத் தாபிக்கும் திறம் அற்றவர்களாய் ஊமையானார்கள்.

 

மணிவாசகர் புத்தர்களை வாதில் வென்ற வரலாறு

 

     மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில் சிவனடியார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார் செம்பொன்னம்பலம்திருவம்பலம்திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கி இருந்தது. சிவனடியாரின் இயல்பைக் கண்ட சிலர்,அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம்திருவம்பலம்என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தார். அரசன் வியந்து இதன் பொருள் யாதுஎன்று அவரைக் கேட்டான். அவ் வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து `தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந்தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்என்று கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடியார் கூறுவதைக் கேட்டுச் சினந்து"திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ?இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்து அரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையை அடைந்த புத்தகுருஅரசன் முதலானோர் திருக்கோயிலை அடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு "யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம்" என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியதுஅவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி "தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவம் இயற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்கஅவன் அவர்களை வெல்வான்கவலற்கஎன்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் "அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும்புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்என்று அழைத்தார்கள்.

 

     வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி,அவனருள் பெற்று,புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீது என்றெண்ணி,அவர்களுக்கு எதிரே ஒரு திரையிடச் செய்து,தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும்புலவர்களும் அவ்வவையில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, "புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமைதோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்து என் கடமைஎன்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து,"வந்த காரியம் என்ன?" என்று வாதத்தைத் தொடங்கினார். வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றிசிவநிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி "சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோஇவர்கள் நாவைவிட்டு அகல்வாயாகஇது இறைவன் ஆணைஎன்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும்அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன் வாதவூரரை வணங்கி `அடிகளே! என் பெண்பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படிச் செய்தால் நான் தங்களுக்கு அடிமை யாவேன்என்று கூறினான். வாதவூரர் அதற்கு இசைந்து அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, "பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு" என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படிபுத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள். அந்த வினா - விடைகள்திருவாசகத்தில்திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவம் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து,புத்த குருவும்மற்றவர்களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டுமென்று வேண்டினான்.

 

     மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மணிவாசகரும் திருக்கோயிலுக்குள் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். 

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்,,,,,

 

ஈண்டி வசவேசர் முன்னோர்க்கு ஈடுஅழிந்தார் வீண்வாதம்

மூண்ட மறையோர்,முருகேசா! - வேண்டுவன

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்ஆடச் சோர்வு படும்.              

 

இன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானே!  வீண்வாதம் மூண்ட மறையோர் --- வீணான சொற்போரைச் செய்யத் தொடங்கிய அந்தணர்கள்ஈண்டி --- நெருங்கிவசவேசர் முன்னோர்க்கு ஈடு அழிந்தார் --- வசவேசர் முதலியோரிடம் தோற்றுப் போனார்கள். வேண்டுவன --- கற்க வேண்டியவைகளை எல்லாம்கல்லா ஒருவன் --- கற்றுணராத ஒருவன்தகைமை --- மதிப்பானதுதலைப்பெய்து --- கற்றோரை அடைந்துசொல்லாட --- பேசத் தொடங்கினால்சோர்வு படும் --- பெருமை கெட்டொழிவதாகும்..

 

            வசவேசர் முதலியோரிடத்திலே வீணாக சொற்போர் செய்யத் தொடங்கிய அந்தணர்கள் தோற்றுப் போனார்கள். கற்க வேண்டிய நூல்களை எல்லாம் நன்கு கல்லாத ஒருவனுடைய மதிப்பானதுகற்றவர்களிடத்திலே உரையாடத் தொடங்கினால் கெட்டொழிந்து போகும் என்பதாம்.


                                                மறையோர்கள் கதை

 

            கலியாணபுரி என்னும் ஊரிலே வசவதேவர்சென்ன வசவதேவர்மடிவாலமாச்சையர்சிவநாகமையர் முதலிய பல பேர் வேதாகம ஆராய்ச்சியிலே வல்லவர்களாக விளங்கி இருந்தார்கள். இவர்களிடத்திலே பொறாமை கொண்ட சில அந்தணர்கள் விச்சலராசனுடைய அவையில் அவ் அடியார்களுடைய கொள்கையை மறுத்துத் தமது,வைதீகக் கொள்கையை நிலைநிறுத்த எண்ணி வீணாகச் சொற்போர் செய்தார்கள். அவர்களுடைய கேள்விக்கு இவ் அந்தணர்களால் மறுமொழி கூற முடியவில்லை. அதனால் தோல்வி அடைந்து பெருமை இழந்தார்கள்.

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளதை அறிக.

 

எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்

எழுத்து அறிவார் காணில் இலையாம் --- எழுத்து அறிவார்

ஆயும் கடவுள் அவிர்சடை முன் கண்ட அளவில்

வீயும் சுரநீர் மிகை.              ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     எழுத்துக்களின் இயல்பை அறியும் சான்றோரால் ஆராயப்படும் சிவபெருமானது விளங்குகின்ற சடைமுடியைக் கண்ட அளவில்கங்கையின் வெள்ளமானது அடங்கிவிடும். அதுபோல,இலக்கண நூலைக் கல்லாதவருடைய மற்றைய கல்வி அறிவினது மிகுதி முழுவதும்இலக்கண நூல் அறிந்தவரைக் கண்டால் பெருமை இல்லாமல் போகும்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...