042. கேள்வி --- 09. நுணங்கிய கேள்வியர்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நூற்பொருளின் நுட்பத்தைக் கேட்டு உணராதவர்பணிவான மொழிகளை உடையவராக இருத்தல் அரியது" என்கின்றார் நாயனார்.

 

     கேட்கப்படுகின்ற பொருளினது நுட்பம்கேள்வியின் மேல் ஏற்றப்பட்டது. நூல்களைக் கற்று வல்லாரிடத்தில் கேட்டு அறிந்தவர்தம்மை உணர்ந்து அடங்கி இருப்பர். அவ்வாறு இல்லாதார்தம்மைத் தாமே தருக்கி இருப்பர். தருக்கி இருப்பவரிடத்தில் பணிவு இராது.

 

     "பணிவு உடையன்இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி" என்று நாயனார் முன்னரே காட்டியது போலபணிவுடன் இனிய சொற்களைப் பேசுவது "வணங்கிய வாய்" ஆகும்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

நுணங்கிய கேள்வியர் அல்லார்வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.                                         

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     நுணங்கிய கேள்வியர் அல்லார்--- நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்

 

     வணங்கிய வாயினர் ஆதல் அரிது--- பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.

 

     (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்என்பதூஉம் பாடம்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...

 

கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்

தெற்ற உணரார் பொருள்களை,- எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை

நாவல்கீழ்ப் பெற்ற கனி.          --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் இல்லாதார் --- நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும்கல்வி கேள்வி இல்லாதவர்கள்தெற்ற உணரார்பொருள்களை --- பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள்அறிவில்லான் மெய்தலைப் பாடு --- கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல்எற்றேல் --- எத்தன்மைத்து எனில்நாவல் கீழ் பெற்ற கனி --- நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றிபிறிதில்லை --- கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

 

      கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.

 

கற்று அறிந்தார் கண்ட அடக்கம்,அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பார் --- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர் தளும்பல் இல்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     அறைகல் அருவி அணிமலை நாட --- பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!நிறைகுடம் நீர்தளும்பல் இல் --- நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் --- நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் --- கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார்பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் --- மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.    

 

நூல்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன்

    நோக்கினன்மறம் கூரும்

வேல் பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய

     வெள்ளிடை வியன் கோயில்

பால் பெருங்கடல் பல்மணிப் பல்தலைப்

     பாப்பு உடைப் படர்வேலை

மால் பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர்

     வனப்பினன் துயில்வானை.     --- கம்பராமாயணம்ஊர்தேடு படலம்.

 

இதன் பொருள் ---

 

     பெருங்கடல் நூல் --- பெருங்கடல் போன்ற நூல் அறிவையும்நுணங்கிய --- நுட்பமானகேள்வியன் --- கேள்வி அறிவையும் உடையஅனுமன்மறம்கூரும் --- வீரம் நிரம்பியபெரும் --- பெரியவேல் கடல் ---வேலேந்திய வீரர்கள் திரள்புடை --- பக்கங்களில்பரந்து ஈண்டிய --- பரவிநெருங்கியுள்ளவெள்ளிடை --- வெளி முற்றங்களையுடையவியன் கோயில் ---பெரிய அரண்மனையில்பெரும் --- பெரியபாற்கடல் --- பாற்கடலின்கண்ணேபல்மணி --- பல மணிகளையும்பல்தலை --- பல தலைகளையும்உடையபாப்பு --- ஆதிசேடனைஉடை --- உடையபடர்வேலை --- விரிகின்றஅலைகளையுடைய கடலிலேமால் --- திருமாலாகியபெருங்கடல் --- பெரியகடல்வதிந்தது அனையது --- தங்கியிருப்பது போன்றவனப்பினன் ---அழகை உடையவனாய்துயில்வானை --- உறங்குகின்றவனை (இராவணனை)நோக்கினன் --- பார்த்தான்.

  

'நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை 

போலுமால்!-உறு பொருள் புகலும் பூட்சியோய்! 

காலம்மேல் விளை பொருள்உணரும் கற்பு இலாப் 

பால!-நீ இனையன பகரற்பாலையோ   --- கம்பராமாயணம்இராவணன் மந்திரப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     காலம் மேல் விளை பொருள் உணரும் ---  காலத்தையும்  பின்னால் நிகழும் காரியத்தையும்  உணர்கின்ற;  கற்பு இலா  பால! --- அறிவற்ற  சிறுவனேநூலினால் --- பல நூல்களையும்  கற்றநூலறிவினாலும்நுணங்கிய அறிவு --- நுணங்கிய அறிவாற்றலும்;   நோக்கினை போலும் ---  எதிர்காலத்தை நோக்கும் திறமுடையாய் போலும்;  உறுபொருள் புகலும்  பூட்சியோய் --- நேரஇருப்பதைக் கூறும் மனஉறுதியுடன் பேசுகிறாய்நீ  இனையன பகர்தற் பாலையோ --- நீ  இத்தகையவைகளைப் பேசுதல் தகுமோ?

     

 

'இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்,

கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்என

வணங்கிய சென்னியன்மறைத்த வாயினன்,

நுணங்கிய கேள்வியன்நுவல்வதாயினான்:  --- கம்பராமாயணம்வீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     இணங்கினர் அறிவிலர் எனினும் --- நம்மை அடைக்கலமாக வந்து அடைந்தவர்கள் அறிவில்லாதவர் என்றாலும்எண்ணுங்கால் ---நினைத்துப் பார்த்தால்கணம் கொள்கை --- அவர்களை இனமாகக்கொண்டு சிறப்பித்தல்;  நும்மனோர்  கடன்மை காண் என ---உங்களைப் போன்றவர்களுக்கு உரிய   கடமையாகும் என்றுவணங்கிய சென்னியன் --- வணங்கிய தலையை உடையவனாகவும்மறைத்த வாயினன் --- கைகளால் மறைத்த வாயினை உடையவனாகவும்;   நுணங்கி கேள்வியன் ---   நுணுக்கமான கேள்வி ஞானம் உடையவனான அனுமன்;    நுவல்வதாயினான் ---சொல்லுவானானான்.

 

     "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர்  ஆதல்அரிது" என்ற திருக்குறள் நெறிக்கேற்ப அமைந்தவன்  அனுமன்ஆகலால் அனுமனை 'நுணங்கிய கேள்வியன்  வணங்கிய வாயினன்என்றார். ஒரு புறாவுக்கு அடைக்கலம்  தந்து காத்த சிபி பிறந்தசூரியகுலத்தில் தோன்றிய உன்னைப் போன்றவர்களுக்குஉரியதொரு கடமை என்பதனை "நும்மனோர் கடன்மை" என்றார்.

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...