042. கேள்வி --- 07. பிழைத்து உணர்ந்தும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "நூல்களின் பொருளை நுட்பமாக ஆராய்ந்து கற்று அறிந்துகேள்வி ஞானமும் உடையவர்கேட்கும் காலத்தில் தாம் பிழைபட உணர்ந்தாலும்அறியாமையை உண்டாக்கும் சொற்களைச் சொல்லமாட்டார்" என்கின்றார் நாயனார்.

 

     ஈண்டுதல் --- நிறைதல்செறிதல்நெருங்குதல்விரைதல்கூடுதல்.

 

     ஈண்டிய கேள்வி என்பது நிறைந்த கேள்விசெறிந்த கேள்வி ஆகும்.

 

     "ஈண்டுதல்" என்பதற்கு, "பல்லாற்றான் வந்து நிறைதல்" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.

 

நூல்பயில் இயல்பே நுவலின்,வழக்கு அறிதல்,

பாடம் போற்றல்கேட்டவை நினைத்தல்,

ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்,

அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்,

வினாதல்வினாயவை விடுத்தல்,என்று இவை

கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்".

 

"ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்,

பெருக நூலில் பிழைபாடு இலனே"

 

"முக்கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்"

 

"ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்,

கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்".

 

"அவ்வினையாளரொடு பயில்வகை ஒருகால்

செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்

மைஅறு புலமை மாண்பு உடைத்து ஆகும்".

 

என்னும் நன்னூல் சூத்திரங்கள் பாடம் கேட்டலின் சிறப்பை உணர்த்தும்.

 

     மாணவன் ஒரு நூலை ஒரு முறை பாடம் கேட்டதோடு விடக் கூடாது. எங்ஙனமாயினும் முயன்று மற்றொரு முறையும் கேட்பது நலம். அங்ஙனம் இருமுறை கேட்டால்அந்நூலில் பெரிதும் பிழை படாமல் புலமை உள்ளவன் ஆவான்மூன்றாவது முறையும் பாடம் கேட்பானேயாயின்தானே பிறர்க்குப் பாடம் சொல்லக்கூடிய முறைமையினையும் உணர்ந்து கொள்வான் என்பது உறுதி.  ஆனால்ஆசிரியர் சொல்லும் பாடங்களை எத்துணை முறை ஊக்கத்தோடு கேட்பினும்அந்நூல்களில் கால்பங்குப் புலமைத் திறம் பெற்றவனாகவே கருதப்படுவான்.ஆசிரியரிடம் பன்முறையும் பாடம் கேட்டதோடு அமைந்து விடக்கூடாது. தன்னைப் போன்ற மற்றைய மாணவர்களோடு சேர்ந்து பழகியும் படிக்க வேண்டும். தனக்குத் தெரியாதனவற்றை அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரியாமல் வினாவுவனவற்றையும் தான் அவர்கட்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஒருவர்க்கொருவர் ஆராய்ந்து கற்றுப் பரிமாறிக் கொள்ளவேண்டும். இம்முறையில் ஒரு கால் பங்குப் புலமை உண்டாகும். ஆகவேஇதுகாறும் கூறியவற்றால் மாணவன் அரைப் பங்குப் புலமையைப் பெற்றுவிடுவான் என்பது உறுதி.பின்புதானே ஓர் ஆசிரியனாக அமர்ந்து மாணவர் பலர்க்குப் பன்முறை பாடங் கற்பிக்க வேண்டும். இம்முறையில் எஞ்சியுள்ள அரைப் பங்குப் புலமையும் நிரம்பமுழுப் புலமையும் நிறைவுறும்.

     இவ்வாறு நூற்பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்துஅறிந்தவருடனும் கூடி இருந்துஅவர் சொல்லக் கேட்டு ஒப்புப் பார்த்தும் இருப்பவர்தமக்கு ஒரோவழி நிகழும் தமோ குணத்தால் அறிவு மயங்கினாரானாலும்அறிவீனமான சொற்களைச் சொல்லார் என்பது தெரிவித்தவாறு.

திருக்குறளைக் காண்போம்....

 

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்,இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.   

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்--- பிறழ உணர்ந்த வழியும்தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார்

 

     இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்--- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.

 

      ('பிழைப்பஎன்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்துஅறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும்அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

 

     கேட்டலின் சிறப்பைப் பின்வரும் பாடல்கள் வாயிலாகவும் அறியலாம்...

 

சந்தித்து மீன நோக்கி தலைவனை மூன்று போதும்

வந்தித்து மீசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்

அந்தித்தும் அறியான் செய்த திருவிளையாடல் கேட்டுஞ்

சிந்தித்தும் அன்பர் பூசை செய்துநாள் கழிப்பர் பல்லோர்.

                                                                          ---  தி.வி.புராணம்திருநகரச் சிறப்பு

 

இதன் பொருள் ---

 

     மீன நோக்கி தலைவனை --- அங்கயற்கண்ணி தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளைமூன்று போதும் சந்தித்து வந்தித்தும் --- மூன்று காலங்களிலும் சென்று கண்டு வணங்கியும்ஈசன் பூசை மரபுளி முடித்தும் --- சிவபூசையை ஆகம முறையால் நிறைவேற்றியும்வேதம் அந்தித்தும் அறியான் செய்த --- வேதங்கள் அணுகியும் அறிய முடியாதவனாகிய அவ்விறைவன் செய்தருளியதிருவிளையாடல் கேட்டும் --- திருவிளையாடல்களைப் பெரியோர் சொல்லக் கேட்டும்சிந்தித்தும் --- (அவற்றை) நினைத்தும்அன்பர் பூசை செய்தும் --- அடியார்களைப் பூசித்தும்நாள் கழிப்பர் பல்லோர் --- நாளை நடத்துவார்கள் பலர் (அப்பதியில் இருந்தனர்.)

 

 

கற்பவை கற்றும் கேட்டும்,

            கேட்பவை கருத்துள் ஊறச்

சொற்பொருள் நினைந்தும்,கேட்போர்க்கு

            உணர்த்தி உள் துளக்கம் தீர்த்தும்,

எல்பகல் இரவு நீங்கும்

            இடத்துமெய்யறிவு ஆனந்த

அற்புத வெள்ளத்து ஆழாது

            ஆழ்ந்து நாள் கழிப்பர் சில்லோர்.  ---  தி.வி.புராணம்திருநகரச் சிறப்பு

 

இதன் பொருள் ---

 

     கற்பவை கற்றும் --- கற்கத் தகுவனவாய மெய்ந்நூல்களைக் கற்றும்கேட்டும் --- (அந்நூற் பொருளைப் பெரியார் வாய்க்) கேட்டும்கேட்டவை --- (அங்ஙனங்) கேட்டவைகள்கருத்துள் ஊற --- கருத்தில் பதியும்படிசொல் பொருள் நினைந்தும் --- சொல்லையும் பொருளையும் பலகாலும் சிந்தித்தும்,கேட்போர்க்கு உணர்த்தி --- கேட்பவருக்கு அறிவித்துஉள் துளக்கம் தீர்த்தும் --- (அவர்கள்) உள்ளத்திலுள்ள ஐயத் திரிபாகிய கலங்களைப் போக்கியும்எல் பகல் இரவு நீங்கு இடத்து --- ஒளி பொருந்திய பகலும் இரவும் அற்ற இடத்தில்மெய் அறிவு ஆனந்த அற்புதவெள்ளத்து --- சச்சிதானந்த சொரூபமாகிய அற்புத வெள்ளத்தின்கண்ஆழாது ஆழ்ந்தும் --- படியாமல் படிந்தும்நாள் கழிப்பர் சில்லோர் --- நாளைப் போக்குவர் சிலர் (அப்பதியில் இருந்தனர்). 

 

     கற்பவை --- கற்கத் தகுவனவாகிய ஞான நூல்கள். நினைதல் ---சிந்தித்தல். கேட்போர்க்கு உணர்த்தி என்றது கேட்பித்து என்றவாறு.இவற்றுடன் கற்பித்தலையுங் கூட்டி ஞான பூசை என்பார்;

 

     "ஞானநூல் தனை ஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றாஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை'"என்பது சிவஞானசித்தியார்.

 

      எல் - ஒளி. இரவு பகல் என மாற்றிக் கொள்க. இரவு பகலற்ற இடமாவது கேவல சகலங்களின் நீங்கிய சுத்தாவத்தையில் நிற்கும் அருளா தார நிலை;

 

'இரவு பகல் இல்லா இன்ப வெளியூடே,

விரவி விரவிநின்று உந்தீபற,

விரைய விரைய நின்று உந்தீபற'

 

என மெய்ந்நூல் கூறுதலுங் காண்க.

 

       மெய் --- அழிவில்லதுசத்து. ஆழாது ஆழ்தல் --- அதுவாதலும் வேறாதலுமின்றிப் பேரின்ப நிட்டை கூடியிருத்தல். 

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...