பொது --- 1010. கமல குமிளித

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கமல குமிளித (பொது)

 

முருகா! 

உபதேசப் பொருளை அருள்வாய்

                        

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

கமல குமிளித முலைமிசை துகிலிடு

     விகட கெருவிக ளசடிகள் கபடிகள்

     கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ......ளிளைஞோர்கள்

 

கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்

     அநெக விதமொடு தனியென நடவிகள்

     கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி

 

அமுத மொழிகொடு தவநிலை யருளிய

     பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை

     அடைவு நடைபடி பயிலவு முயலவு ......     மறியாத

 

அசட னறிவிலி யிழிகுல னிவனென

     இனமு மனிதரு ளனைவரு முரைசெய

     அடிய னிதுபட அரிதினி யொருபொரு .....ளருள்வாயே

 

திமித திமிதிமி டமடம டமவென

     சிகர கரதல டமருக மடிபட

     தெனன தெனதென தெனவென நடைபட ......முநிவோர்கள்

 

சிவமி லுருகியு மரகர வெனவதி

     பரத பரிபுர மலரடி தொழஅநு

     தினமு நடமிடு பவரிட முறைபவள் ......      தருசேயே

 

குமர சரவண பவதிற லுதவிய

     தரும நிகரொடு புலமையு மழகிய

     குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே

 

குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை

     மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை

     குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கமல குமிளித முலைமிசை துகில் இடு

     விகட கெருவிகள், அசடிகள், கபடிகள்,

     கலகம் இடு விழி வலைகொடு தழுவிகள்,..... இளைஞோர்கள்

 

கனலில் இடு மெழுகு என நகை அருளிகள்,

     அநெக விதமொடு தனி என நடவிகள்,

     கமரில் விழுகிடு கெடுவிகள், திருடிகள் ...... தமைநாடி,

 

அமுத மொழிகொடு, தவநிலை அருளிய

     பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை

     அடைவு நடைபடி பயிலவும் முயலவும் ......அறியாத,

 

அசடன், அறிவிலி, இழிகுலன் இவன் என

     இனமும், மனிதருள் அனைவரும் உரைசெய,

     அடியன் இது பட அரிது, இனி ஒரு பொருள் ......அருள்வாயே.

 

திமித திமிதிமி டமடம டம என

     சிகர கரதல டமருகம் அடிபட,

     தெனன தெனதென தெனவென நடைபட, ......முநிவோர்கள்

 

சிவமில் உருகியும், அரகர என, அதி

     பரத பரிபுர மலரடி தொழ, அநு-

     தினமும் நடம் இடுபவரிடம் உறைபவள் ......தருசேயே!

 

குமர! சரவண பவ! திறல் உதவிய

     தரும! நிகரொடு புலமையும் அழகிய

     குழக! குருபரன் என ஒரு மயில்மிசை ...... வருவோனே!

 

குறவர் இடு தினை வனமிசை இதண் இடை

     மலையும் மரையொடு பசலைகொள் வளர்முலை

     குலவு குறமகள் அழகொடு தழுவிய .....பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            திமித திமிதிமி டமடம டமவென--- திமித திமிதிமி டமடமடம என்று,

 

            சிகர கரதல டமருகம் அடிபட--- உயர்த்திய திருக்கையில் உள்ள தமருகம் ஒலிக்கவும்,

 

            தெனன தெனதென தென என நடைபட--- தெனன தெனதென என விரைவாகவும் அழகாகவும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தேறவும்,

 

           முநிவோர்கள் சிவமில் உருகியும் அரகர என--- முனிவர்கள் உள்ளம் உருகிசிவத் தியானத்தில் ஈடுபட்டுஅரகர என்று ஒலி செய்யவும்

 

            அதி பரத பரிபுர மலர்அடி தொழ --- சிறந்த திருநடனத்திற்கு ஏற்ப சிலம்புகளை அணிந்துள்ள,மலர் போலும் திருவடிகளை வணங்கவும்,

 

          அநுதினமும் நடம் இடுபவர் இடம் உறைபவள் தருசேயே --- அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் உறைகின்ற உமாதேவியார் பெற்றருளிய குழந்தையே!

 

            குமர--- குமாரக் கடவுளே!

 

           சரவணபவ--- சரவணப் பொய்கையில் தவழ்ந்தவரே!

 

           திறல் உதவிய தரும--- உயிர்களுக்குஅருள் வல்லமையை உதவுகின்ற அறவடிவானவரே!

 

            நிகரொடு--- ஒளியோடு,

 

           புலமையும் அழகிய குழக--- புலமையும் விளங்கும் அழகிய இளையவரே!

 

           குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே--- குருநாதன் என்னும்படி ஒப்பற்ற மயிலின் மீது வருபவரே!

 

            குறவர் இடு தினைவனம் மிசை இதணிடை --- குறவர்கள் பயிரிடுகின்ற தினைப்புனத்தில் பரண் மீது காவல் கொண்டு இருந்,

 

           மலையும் அரையொடு--- துவள்கின்ற இடையோடு,

 

           பசலை கொள் வளர் முலை குலவு--- பசலை படர்ந்கச்சணிந்து வளர்கின்ற முலைகளோடு விளங்குகின்ற,

 

            குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே--- குறமகளான வள்ளிநாயகியை அழகு பெறத் தழுவிய பெருமையில் மிக்கவரே!

 

            கமல குமிளித முலைமிசை துகில் இடு--- தாமரையின் மொட்டுப் போல உள்ள முலைகள் மீது ஆடையை ஆணிந்துள்ள,

 

           விகட கெருவிகள்--- உன்மத்தமும் கருவமும் கொண்டவர்கள்,

 

           அசடிகள்--- மூடர்கள்,

 

           கபடிகள்--- வஞ்சகர்கள்,

 

            கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள்--- பூசல் இடுகின்ற கண்வலையை விரித்துத் தழுவுபவர்கள்,

 

           இளைஞோர்கள் கனலில் இடு மெழுகு என நகை அருளிகள்--- இளைஞர்களை நெருப்பில் இட்ட மெழுகைப் போல ஆக்குவித்துச் சிரிப்பவர்கள்,

 

            அநெக விதமொடு தனி என நடவிகள்--- பல வழிகளிலும்இணை சொல்ல முடியாத வகையில் நடத்தையை உடையவர்கள்,

 

           கமரில் விழுகிடு கெடுவிகள்--- படுகுழிக்குள் விழுமாறு கேடு நினைப்பவர்கள்,

 

           திருடிகள் தமை நாடி--- திருடர்களாகிய விலைமாதர்களை நாடி(த் திரிந்த அடியவன் ஆகிய நான்)

 

            அமுத மொழி கொடு--- அமுதம் போன்று உயிர்களை உய்விக்கும் அருள்வாக்குகளால்,

 

           தவநிலை அருளிய--- தவநிலையை உயிர்களுக்கு அருளிச் செய்,

 

           பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை--- அமுதம் போன்ற சொற்களால் (எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய சிவபரம்பொருள் உபதேசித்த மொழியின்படி,

 

            அடைவு நடைபடி பயிலவும் முயலவும் அறியாத அசடன்--- தக்க ஒழுக்க நிலையில் இருந்துதவத்தைப் பயில்வதில் முயல அறியாத இழிநிலையை அடைந்தவன்,

 

           அறிவிலி--- அறிவில்லாதவன்,

 

           இழிகுலன் இவன் என--- இழிகுலத்தைச் சார்ந்தவன் இவன் என்னும்படி,

 

            இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய--- சுற்றத்தார்களும்மனிதர்கள் அனைவரும் இழித்துப் பேச,

 

           அடியன் இது பட அரிது--- அடியவன் ஆகிய நான்இத்தகைய சொல்லில் படுதல் முடியாது.

 

           இனி ஒரு பொருள் அருள்வாயே --- இனி அடியேன் ஈடேற ஒப்பற்ற மெய்ப்பொருளை அறிவித்து அருள்வாயாக.

 

 

பொழிப்புரை

 

 

           திமித திமிதிமி டமடமடம என்றுஉயர்த்திய திருக்கையில் உள்ள தமருகம் ஒலிக்கவும்தெனன தெனதென என விரைவாகவும் அழகாகவும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தேறவும்முனிவர்கள் உள்ளம் உருகிசிவத் தியானத்தில் ஈடுபட்டுஅரகர என்று ஒலி செய்து,  சிறந்த திருநடனத்திற்கு ஏற்ப சிலம்புகளை அணிந்துள்ளமலர் போலும் திருவடிகளை வணங்கவும்அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் உறைகின்ற உமாதேவியார் பெற்றருளிய குழந்தையே!

 

            குமாரக் கடவுளே!

 

           சரவணப் பொய்கையில் தவழ்ந்தவரே!

 

           உயிர்களுக்குஅருள் வல்லமையை உதவுகின்ற அறவடிவானவரே!

 

            ஒளியோடுபுலமையும் விளங்கும் அழகிய இளையவரே!

 

           குருநாதன் என்னும்படி ஒப்பற்ற மயிலின் மீது வருபவரே!

 

            குறவர்கள் பயிரிடுகின்ற தினைப்புனத்தில் பரண் மீது காவல் கொண்டு இருந்துவள்கின்ற இடையோடுபசலை படர்ந்துகச்சணிந்து வளர்கின்ற முலைகளோடு விளங்குகின்ற,குறமகளான வள்ளிநாயகியை அழகு பெறத் தழுவிய பெருமையில் மிக்கவரே!

 

            தாமரையின் மொட்டுப் போல உள்ள முலைகள் மீது ஆடையை அணிந்துள்ளஉன்மத்தமும் கருவமும் கொண்டவர்கள்மூடர்கள்வஞ்சகர்கள்பூசல் இடுகின்ற கண்வலையை விரித்துத் தழுவுபவர்கள்இளைஞர்களை நெருப்பில் இட்ட மெழுகைப் போல ஆக்குவித்துச் சிரிப்பவர்கள்பல வழிகளிலும்இணை சொல்ல முடியாத வகையில் நடத்தையை உடையவர்கள்,படுகுழிக்குள் விழுமாறு கேடு நினைப்பவர்கள்திருடர்களாகிய விலைமாதர்களை நாடித் திரிந்த அடியவன் ஆகிய நான்அமுதம் போன்று உயிர்களை உய்விக்கும் அருள்வாக்குகளால்தவநிலையை உயிர்களுக்கு அருளிச் செய்,அமுதம் போன்ற சொற்களால் எனக்குத் தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய சிவபரம்பொருள் உபதேசித்த மொழியின்படிதக்க ஒழுக்க நிலையில் இருந்துதவத்தைப் பயில்வதில் முயல அறியாத இழிநிலையை அடைந்தவன்,அறிவில்லாதவன்இழிகுலத்தைச் சார்ந்தவன் இவன் என்று சுற்றத்தார்களும்மனிதர்கள் அனைவரும் இழித்துப் பேசஅடியவன் ஆகிய நான்இத்தகைய சொல்லில் படுதல் முடியாது.இனி அடியேன் ஈடேற ஒப்பற்ற மெய்ப்பொருளை அறிவித்து அருள்வாயாக.

 

விரிவுரை

 

            

கமல குமிளித முலைமிசை துகில் இடு--- 

 

கமல குமுளி --- தாமரையின் மொட்டு. 

 

விகட கெருவிகள்--- 

 

விகடம் --- உன்மத்தம்.

 

கெருவம் --- செருக்குகர்வம்.

     

அசடிகள்--- 

 

அசடன் --- மூடன். அசடி பெண்பால்.

 

கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள்--- 

 

விலைமகளிர் தமது கூர்மையான கண் பார்வையால் ஆடவர்பால் கலகத்தை விளைவிப்பார்கள். அன்றியும் அந்தக் கரணங்களை வளைத்து  மாறுபாட்டை விளைவிப்பார்கள். அதனால் உள்ளத்திலும் ஒரு கலகம் ஏற்படுகின்றது.

 

கலகவிழி மாமகளிர் கைக்குளே ஆய்           --- திருப்புகழ்

 

வீரர்கள் வில்லம்பால் கொல்வார்கள். விலைமாதர் கண்ணம்பால் கொல்வார்கள்.  விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

 

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

 

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால்அதற்கு ஒரே வழிஇறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

 

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனேதுறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துபதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணார்க்கு

இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே?      ---  கந்தர் அலங்காரம்.     

                                                                                                    

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச் செவ்வாய்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே.            ---  திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.       --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?      --- திருப்புகழ்.

 

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய

வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....      ---  திருப்புகழ்.                                                  

 

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி

     வார்ஆர் சரங்கள் ...... எனநீளும்

மதர்விழி வலைகொடு,உலகினில் மனிதர்

     வாழ்நாள் அடங்க ...... வருவார்....       --- திருப்புகழ்.

 

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!        --- பட்டினத்தார்.

 

இளைஞோர்கள் கனலில் இடு மெழுகு என நகை அருளிகள்--- 

 

நன்கு கொதிக்கின்ற நெருப்பில் மெழுகினை இட்டால்அது உடனே கரைந்து குமுகுமு எனக் கொதிக்கும். மாகநோயால் பீடிக்கப்பட்ட இளைஞர்களைத் தமது வசமாக்கி,அவர்களை அந்த நோயில் தவிக்க வைத்து வேடிக்கை பார்த்துச் சிரிப்பார்கள் விலைமாதர்கள்.

 

கமரில் விழுகிடு கெடுவிகள்--- 

 

கமர் --- நிலவெடிப்பு. படுகுழி.

 

 

அமுத மொழி கொடு தவநிலை அருளிய பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை அடைவு நடைபடி பயிலவும் முயலவும் அறியாத அசடன்--- 

 

அமுதம் போன்று உயிர்களை உய்விக்கும் அருள்வாக்குகளால்இறைவனை அடையும் நெறியைப் பெரியோர்கள் அருளிச் செய்து உள்ளனர். அவற்றின்படி ஒழுகிதவநிலையைப் பயில்வதில் முயலுதல் வேண்டும். நூல்களைப் பயிலாமல்,இழிநிலை அடைதலும் கூடாது. நூல்களைப் பயின்று வைத்துதவத்தை முயலாமல் இருப்பதும் கூடாது. அது மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செலுத்தும். "உரைத்த புத்திகள் கேளா நீசனை" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.காமவயப்பட்டு நிற்கும் மூடர்கள்,பெரியோர் சொல்லும் அறிவுரைகளைக் காது கொடுத்தும் கேளார். "அறிவுரை பேணாத மானுட கசனி" எனப் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில் அடிகளார் காட்டி உள்ளது காண்க.

 

பெரிய குணதரர் என்பது பெரியோர்களைக் குறிக்கும். "பெரியவர் தந்தசிறியவ" எனத் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில் அடிகளார் போற்றி உள்ளதற்கு ஒப்பபெரியவர்பெரிய குணதரர் என்பதைசிவபெருமான் எனப் பொருள் கொண்டால்அவர் கல்லாலின் புடை அமர்ந்துநால்வர்க்கு சொல்லாமல் சொன்ன பொருளைக் குறிக்கும்.  

 

அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய அடியன் இது பட அரிது--- 

 

அறிவில்லாதவன்இழிகுலத்தவன் என்று தனது இனத்தைச் சார்ந்தவர்களே பழித்தல் மிகக் கொடிது. 


இனி ஒரு பொருள் அருள்வாயே --- 

 

ஒரு பொருள் --- ஒப்பற்ற உபதேசப் பொருள்.

 

நிகரொடு--- 

 

நிகர் --- ஒளி. இங்கு மெய்யறிவைக் குறிக்கும்.

 

கருத்துரை

 

     

முருகா! உபதேசப் பொருளை அருள்வாய்

                        

 

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...