044. குற்றம் கடிதல் --- 08. பற்றுள்ளம் என்னும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்),மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழந்தைப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக."கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீது உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்ததுஅது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத் தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "பொருளை விடத் தகும் இடத்து விடாது,பற்றுதலைச் செய்யும் உள்ளமாகிய உலோபத் தன்மையானதுகுற்றங்கள் எதனுள்ளும் சேர்த்து எண்ணப்படாத பெரும் குற்றம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தன்னுடைய பொருளைச் செலவழிக்க வேண்டிய இடத்துச் செலவழிக்காதுஅதனிடத்து ஆசையை வைக்கும் உலோபத் தனமானதுஅவனுக்கு உள்ள நற்குணங்கள் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தி,தான் மேம்பட்டு நின்று நிற்குமாதலால்அதுவே குற்றங்கள் எல்லாவற்றுள்ளும் பெரிய குற்றம் என்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

பற்றுள்ளம் என்னும் இவறன்மைஎற்று உள்ளும்

எண்ணப் படுவது ஒன்று அன்று.            

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     பற்றுள்ளம் என்னும் இவறன்மை--- பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை

 

     எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று--- குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்றுமிக்கது.

 

     (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அது மாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்றுஎன்றார். 'எவற்றுள்ளும்என்பது இடைக் குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமைகூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா"திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பவம் மன்னு துன்பவினை அணுகாதுபற்றுள்ளம் என்னும்
இவறன்மை எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று  எனநூற்
றுவர்மன்னன் நெஞ்சின் எண்ணாமை கண்டு ஐவருடன் துணைச் சென்

றவன் என்னும் ஆதிபுல்லாணிப் பிரான் தன் அடியவர்க்கே.

 

இதன் பொருள் ---

 

     பொருளை விடத் தகும் இடத்துவிடாது பற்றுதலைச் செய்யும் உள்ளமாகிய உலோபத் தன்மையானதுகுற்றங்கள் எதனுள்ளும் சேர்த்து எண்ணப்படாத பெரும் குற்றம் ஆகும் என்று எண்ணிபாண்டவர்க்கு உரிய நாட்டைத் துரியோதனன் தந்துவிட எண்ணாது தானே எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்று உலோபத் தன்மை கொண்டிருந்தது கண்டுபாண்டவர்களுக்குத் துணை நின்றவனாகிய கண்ணபிரானாக அவதரித்தவன் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டு இருப்பவன். அவனுடைய அடியார்களை (பற்றுள்ளம் கொண்டு இருக்கமாட்டாதவர்களை) பிறவியாகிய துன்பத்தைத் தரும் வினையானது வந்து சேராது.

 

     பற்றுள்ளம் கொள்ளாதுஅருள் உள்ளம் கொண்டு யாவருக்கும் உதவி புரியும் அன்பர்கள்பால் இறைவன் இருப்பான். எனவேஅவர்க்குப் பிறவித் துன்பம் இல்லை.

 

     பவம் மன்னு துன்பம் --- பிறவிப் பிணியைக் கொடுக்கிற தொல்லை.  நூற்றுவர் மன்னன் --- துரியோதனன். ஐவருடன் துணைச் சென்றவன் --- கண்ணன்.

 

     

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...

                       

உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே

அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்.

கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா

வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் --- கம்பராமாயணம். தாடகை வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     உளம் பரும் பிணிப்பு அறா --- உள்ளத்தில் பருத்த பிணிப்பு நீங்காதஉலோபம் ஒன்றுமே --- உலோபகுணம் ஒன்று  மட்டுமேஅளப்ப அரும் குணங்களை --- அளப்பதற்கரிய பல  நற்குணங்களை எல்லாம்;  அழிக்கும் ஆறுபோல் --- அழிக்கின்ற தன்மையைப் போலகிளப்ப அரும் கொடுமைய அரக்கி ---   சொல்ல முடியாத கொடுமைகளை உடைய இந்த அரக்கி;  கேடு  இலா வளம் பரும் மருத வைப்பு --- கேடே இல்லாத வளம் நிறைந்த இந்த மருத நிலத்தை எல்லாம்அழித்து மாற்றினாள் ---  கொன்று தின்று பாலை நிலமாக மாற்றிவிட்டாள்.

 

     உள்ளத்தின்பெரிய பிணிப்பு நீங்காத உலோபம்: ஈகையற்ற தன்மை. குணம்குலம்கல்வி,கேள்வி.அறிவு,ஆற்றல் ஆகிய பல நல்ல குணங்களைஉடையவராயினும் உலோபம் என்ற ஒன்று இருந்தால் அந்த நல்ல குணங்களை அழித்துவிடும். அதுபோல,வளம் மிக்க  மருதநிலத்தை அழித்துப் பாலை நிலமாக்கி விட்டாள் கொடிய அரக்கி இவள் என்றான் விசுவாமித்திர முனிவன்.

 

 

கட்டுரையின்தம கைத்து உள போழ்தே

இட்டு,இசைகொண்டு,அறன் எய்த முயன்றோர்

உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;

விட்டிடல் என்று விலக்கினர் தாமே.   --- கம்பராமாயணம்வேள்விப் படலம். 

 

இதன் பொருள் ---

 

     தம கைத்து உள போழ்தே --- தமது செல்வம் இருக்கும்  காலத்திலேஇட்டு இசை கொண்டு --- இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று: அறன்எய்த முயன்றோர் --- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்உள்தெறு வெம் பகையாவது  உலோபம் --- மனத்தை அழிக்கும்கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்;  விட்டிடல் என்று ---(அதனை) விட்டுவிட வேண்டும் என்றுதாம் கட்டுரையின் விலக்கினர்--- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.

 

     கட்டுரை --- நீதி நூல் (வரையறுத்த  உரைகள் என்பது  பொருள்.) செல்வம் இருக்கும் போதே ஏற்பவர்களுக்கு ஈந்து புகழ் பெற வாழவேண்டும். உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம். அதனை விட்டொழிக்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் துணிவு என்பது கருத்து.                                                  

 

 

பதர் ஆகிலும்கன விபூதிவிளை விக்கும்;

     பழைமைபெறு சுவராகிலும்

பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும்மலம்

     பன்றிகட்கு உபயோகம்ஆம்;

 

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும்;வன்

     கழுதையும் பொதிசுமக்கும்;

கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்

     கான்புற்று அரவமனை ஆம்;

 

இதம் இலாச் சவம் ஆகிலும் சிலர்க்கு உதவிசெய்யும்;

     இழிவுறு குரங்காயினும்

இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும்;வாருகோல்

     ஏற்ற மாளிகை விளக்கும்;

 

மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்

     மற்றொருவருக்கும் உண்டோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     பதர் ஆகிலும் கன விபூதிவிளைவிக்கும் ---பதராக இருந்தாலும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப்  பயன்படும் பழைமை பெறு சுவராகிலும் பலருக்கு மறைவாகும்மாடு உரிஞ்சிடும் --- பழைமையான குட்டிச்சுவராக இருந்தாலும் அமர்வோருக்கு மறைவைத் தருவதோடுமாடு தன் உடல் தினவைத் தீர்க்கஉடம்பைத் தேய்த்துக் கொள்ளவும் பயன்படும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் ---மலமானது பன்றிகளுக்கு உணவாகப் பயன்படும் கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் ---சீற்றம் மிகுந்த எருமைக்கடாவானது உழுது உலகை உண்பிக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் ---வலிய கழுதையும் பொதியைச் சுமக்கும் கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் ---கல்லானது தெய்வச் சிலைகளை வடிக்கப் பயன்படும்திருக்கோயில்களை அமைக்க உதவும் பெருங்கான் புற்று அரவ மனையாம் ---பெரிய காட்டிலுள்ள புற்றுக்கள் பாம்பிற்கு இருப்பிடம் ஆகும் இதம் இலாச் சவமாகிலும் சிலர்க்கு உதவி செய்யும் ---நலம் இல்லாத பிணமானாலும் அதை அடக்கஞ் செய்யும் சில தொழிலாளிகட்கு வருவாயைக் கொடுக்கும் இழிவுறு குரங்கு ஆயினும் பிடித்தவர்க்கு இரக்க உதவி செயும் ---இழிவான குரங்காக இருந்தாலும்தன்னைப் பிடித்தவர்களுக்குப் பிச்சை எடுக்கத் துணை புரியும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் ---துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை செய்ய உதவும்;  மதமது மிகும் பரம லோபரால் மற்றொருவருக்கு உபகாரம் உண்டோ--- செல்வத்தால் செருக்குப் பிடித்துமிகுந்த கஞ்சத்தனத்தை உடையவர்களால் பிறருக்கு நன்மை உண்டோஇல்லை.

     

பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார்,தாம்துவ்வார்

கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா

வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!

மரங்குறைப்ப மண்ணா மயிர்.         --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     கற்றா --- கன்றினை உடைய பசுவரம்பிடை பூமேயும் வண்புனல் ஊர --- வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!மரம் குறைப்ப மயிர் மண்ணா --- மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள்,மயிரினை நீக்குதல் செய்யா; (ஆனால்) கற்றாரும் --- பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வம் பெற்றாலும் --- செல்வத்தை ஒருகால் பெற்றாலும்பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் --- வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலும்ல இர்தாமுந் துய்த்தலும் இலராகிபற்றி இறுகுப --- பற்றுள்ளம் உடையவராய் நெகிழாது இறுகப் பிடிப்பர்இஃது என்னோ என்றவாறு.

 

      கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப் பிடித்தல் அடாத செய்கையாம்.

 

நாயாய்ப் பிறந்திடில் நல் வேட்டையாடி நயம் புரியும்

தாயார் வயிற்றில் நாராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்  

காயா மரமும் வறளாங் குளமும் கல் ஆவும் என்ன 

ஈயா மனிதரை ஏன் படைத்தாய்?கச்சி ஏகம்பனே.  ---  பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

     திருக்கச்சியில் எழுந்தருளி உள்ள ஏகாம்பர நாதரே! நாயாகிப் பிறந்தாலும் நல்ல வேட்டையினை ஆடிதன்னை வளர்ப்பவனுக்குத் துணை புரியும். தாயார் வயிற்றில் பிறந்துபின்னர் செல்வம் உடையவர்களாக இருந்துகாய்க்காத மரத்தையும்கல்லால் ஆன பசுவைப் போலவும்ஒருவர்க்கும் ஒன்றையும் கொடுத்து உதவாத மனிதரைஇந்தப் பூமியில் எதுக்குப் படைத்தாய்?

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...