043. அறிவுடைமை --- 06. எவ்வது உறைவது

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "உலகமானது எவ்வாறு நடைபெறுவதோஅப்படிப்பட்ட உலகத்தோடு அவ்வாறு நடைபெறுவதே அறிவுடைமை ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     மேல் திருக்குறளில் குறித்தபடிஉலகம் என்பது உயர்ந்தோரைக் குறிக்கும். உயர்ந்தோர் காட்டிய வழியில் நடத்தலே அறிவுடைமை ஆகும்.

 

     ஒருவனுக்கு அறிவு என்று சொல்லப்படுவதுஉலகத்தில் உள்ளார் எவ்விதம் உலகத்தில் பொருந்தி நடந்து வருகின்றார்களோஅவ்விதம் நடந்துகொள்ளுதல் ஆகும். அதை விடுத்துதன் அறிவின் மிகுதியால்,தான் எதைச் செய்யினும் கேட்பார் இல்லை என்றுதான் எண்ணியவாறே ஒருவன் செய்வானாயின்பழியும் பாவமும் அவனுக்கு உண்டாகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

எவ்அது உறைவது உலகம்உலகத்தொடு

அவ்அது உறைவது அறிவு.                  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     உலகம் எவ்வது உறைவது--- உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று,

 

     உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு--- அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.

 

     ('உலகத்தை எல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின்,பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

சனகன் உலகநெறி தாவாத ஞான

தினகரன்ஆ னான் சிவசிவா - மனதினுடன்

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.             

 

     சனக வேந்தன் பெருஞானியாக இருந்தேஉலகநெறி வழுவாமல்தனது நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். 

 

     அடுத்துஇத் திருக்குளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

இறைவ!திருப்புல்லை மாலேதிருவுள்ளம் என்கொல்எவ்வது
உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு
அறைவது நூல்கண்டு,உலகத்து இயல்பு அறியாது நின்ற
மறைவு அதுமாற,நின் பேரறிவு என்று வரும் எனக்கே.

 

இதன் பொருள் ---

 

     உலகத்தில் உயர்ந்தோர் எந்த நெறியில் ஒழுகுகின்றனரோஅந்த நெறியில் அவ்வாறு ஒழுகுவதே அறிவுடைமை என்று சொல்லப்பட்டுள்ள அறிவுநூல் சொன்னபடிஉலகப் போக்கைத் தெரிந்துகொள்ளாமல்எனது மனம் போன போக்கில் வாழும் எனது அறிவின்மை கெடுமாறுஉனது பேரருள் எனக்கு என்றைக்கு வருமோஇறைவா! திருப்புல்லாணியில் எழுந்தருளி உள்ள பெருமாளை! உன் திருவுள்ளம் எதுவோ

 

     உலகப் போக்கு என்றது,உலகில் வாழும் திருமால் அடியார்கள் வாழும் நெறி.

 

     உலகத்தில் புரியாது நின்ற --- உலகப் போக்கைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கும். மறைவு --- அறிவின்மை.   மாற --- கெட.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்....

                       


எவர்எவர் எத்திறத்தர் அத்திறத்தராய் நின்று  

அவரவர்க்கு ஆவன கூறி, - எவர் எவர்க்கும்  

உப்பாலாய் நிற்பமற்று எம்முடையார்,தம்முடையான்  

எப்பாலும் நிற்பது என.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     தம் உடையான் எப்பாலும் நிற்பது என --- தம்மை ஆளுடைய இறைவன் சேர்ந்தும் சேராமலும் எங்கெங்கும் நிறைந்து நிற்பதுபோல்எம்முடையார் --- எம்மை ஆளுந் தன்மையுடைய பெரியோர்எவர்க்கும் உப்பாலாய் --- யாவர்க்கும் புறத்தாராய்;  எவர் எவர்எத் திறத்தார் --- யார் யார் எத்தன்மையராய் இருப்பரோஅவர் அவர்க்கு அத் திறத்தராய் நின்று --- அவரவர் தன்மைக்கேற்பத் தாமும் நின்று. ஆவன கூறி --- அவர்கள் செய்ய வேண்டிய நற்காரியங்களை அவர்க்கு எத்துச் சொல்லிநிற்ப --- தாம் யாதிலும் பற்றின்றி நிற்பார்கள்.

 

     பற்றற்ற துறவிகள் உலக நடையோடு ஒழுகிஉலகத்தாருக்கு நல்வழிகளை அறிவுறுத்தி வந்தாலும் தாம் உலகப் பற்று இன்றி  நீங்கியே நிற்பர்.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...