043. அறிவுடைமை --- 01. அறிவுஅற்றம் காக்கும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும் கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "அறிவு உடைமையாவது அழிவிலிருந்து காக்கின்ற கருவியும்எதிர்ப்பவர்க்கும் நெருங்கி வந்து அழிக்க இயலாத பாதுகாப்பான அரணும் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அற்றம் --- அழிவுகுறைகேடு. அற்றத்தைக் காத்தல் என்பதுஅதனை முன்பே அறிந்து நீக்குதல்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அறிவு அற்றம் காக்கும் கருவிசெறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.       

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அறிவு அற்றம் காக்கும் கருவி--- அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்

 

     செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும்- அதுவேயும் அன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.

 

      (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல்உள்ளரண் - உள்ளாய அரண்உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால்அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பிறர்க்கு உண்டோ இல்லை அவர் பேராண்மைகுன்ற

மதிக்கண் நுழை மதனை மாய்த்தார் தமக்கே

அறிவு அற்றம் காக்கும் கருவிசெறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.

 

            குன்ற --- அறிவு முதலிய அனைத்தும் குறையும்படி. மதிக்கண் நுழை மதனை --- புத்தியில் நுழைகின்ற மன்மதனை.  

 

     "மதனை" என்பதற்கு "அறியாமை", "செருக்கு" "வலிமை" "மடமை" எனினும் அமையும். 'புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்எனவரும் பாடலையும் 'விழித்த கண் குருடாத் திரி வீரரும் பலரால்எனவரும் திருவிளையாடல் புராணப் பாடலையும் நோக்குக. மாய்த்தார் தமக்கே என்பதனோடு பேராண்மையைக் கூட்டுக.

 

     தாம் இருந்த தவநிலையைக் குலைக்க வந்த மன்மதனது அறிவற்ற செயலைத் தமது ஆற்றலால் அழித்தார் சிவபெருமான். அறிவின்மையால் மன்மதன் செய்த செயலானது அவனுக்கு அழிவைத் தந்தது.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...