042. கேள்வி --- 02. செவிக்கு உணவு

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோதுவயிற்றினுக்கும் சிறிது உணவு இடப்படும்" என்கின்றார் நாயனார்.

 

     வயிற்றுக்கு உணவு பெரிதெனத் தோன்றும் போதுஉணவைத் தேடுதலில் துன்பம். உணவிற்காகப் பொருள்களைத் தேடுதலிலும் துன்பம். உணவின் மிகுதியால் உண்டாகும் உடல் துன்பம். உணவின் செறிவினால் உண்டாகும் காம உணர்வினால் துன்பம்.

 

     கேள்வியால் மிகுந்த சுவை உண்டாவதையும்பின்னே மிகுந்த பயன் விளைவதைம் கருதி உணவு வெறுக்கப்படும்.  காதால் ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பின்ஏனைய புலன் இன்பங்கள் மறக்கப்படும். அது இல்லாதபோதுஉடலின் நலம் கருதி சிறிது உணவு கொடுத்தால் போதும். உணவு மிகுந்தால்மனமானது கேள்வியில் பொருந்தாது. 

 

     வயிற்றைப் பேணுதல் உயிர் பொருட்டே அன்றிஉடம்பின் பொருட்டு அல்ல என்பது தோன்ற "வயிற்றுக்கும்" என்றார்.

 

     "இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்" என்றும், "கழிபேர் இரையான்கண் நோய்" என்றும் நாயனார் காட்டி உள்ளதும் அறிக.

 

திருக்குறளைக் காண்போம்...

 

செவிக்கு உணவு இல்லாத போழ்துசிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.    

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

       செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுதுவயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

 

       (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து'என்றும்பெரிதாயவழித் தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிதுஎன்றும் அதுதானும் பின் இருந்து கேட்டற் பொருட்டாகலான் 'ஈயப்படும்என்றும் கூறினார். ஈதல்வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வைத்துகுமார பாரதி என்பார்,"திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள பாடல்...

 

பொருள்துறைஉன் பாட்டேநல் பூசைஎன்றார் ஊரர்க்கு

அருள்துறையார் அன்புசெய்வார் ஆனார் --- மருள்தேர்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.              

 

இதன் பொருள் ---

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்டு திருவெண்ணெய்நல்லூரிலே திருவருட்டுறையிலே சென்று அற்புதக் காட்சி அளித்தருளினார் சிவபிரான். "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்தொண்டன் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத் தக்க அருச்சனையாவது பாடலேயாம். ஆதலால்நம்மேலே தமிழ்ப் பாட்டுக்களைப் பாடு" என்று மேலும் அருளிச் செய்தார். சுந்தரர் வணங்கி, "அருட்பெருங் கடவுளே! தேவரீருடைய அநந்த குணங்களில் எதை அறிவேன்என்ன சொல்லிப் பாடுவேன்?" என்றார். அதற்குக் கடவுள், "நீ முன்னே என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தன் என்றே பாடு" என்று சொல்லி அருளினார். உடனே சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அருளினார். சிவபிரான் மகிழ்ந்து, "தொண்டனே!  நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பலவகையாகப் பாடு" என்று அருளினார். அக்கட்டளையின்படியே சுந்தரர் பல திருத்ததலங்கட்கும் சென்று திருப்பதிகங்களை அருளிச் செய்தார். பற்பல அற்புதங்களையும் நிகழ்த்தினார்.  

 

       செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

      பொருள் என்றது அகப்பொருள் புறப்பொருள்களை.  அருட்டுறை என்பது திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர். மருள்தேர் - மயக்கத்தினின்றும் தெளிந்த. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்ற பெரியபுராணத் திருப்பாடல் பகுதி ஈண்டு நினைவுக்குரியது.

 

     பின்வரும் பாடல்இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது காண்க.

                                                                                    

துயில்சுவையும்தூநல்லார் தோள்சுவையும்எல்லாம்

அயில்சுவையின் ஆகுவஎன்று எண்ணி - அயில்சுவையும்

பித்துஉணாக் கொள்பபோல்கொள்பபிறர்சிலர்போல்

மொத்துணா மொய்ம்பின் அவர்.  --- நீதிநெறி விளக்கம்.

            

இதன் பொருள் ---

 

     பிறர் சிலர் போல் --- வேறு சிலர் போல,மொத்துணா மொய்ம்பினவர் --- ஐம்புல இன்பங்களால் அடிபடாத தவ வலிமையுடையோர்துயில் சுவையும் --- தூக்கத்தின் இன்பமும்தூ நல்லார் தோள்சுவையும் --- அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும்எல்லாம் --- மற்றுமுள்ள எல்லா இன்பங்களும்அயில்சுவை இன் --- உணவினால் உண்டாகும் இன்பத்தால்ஆகுவ என்று எண்ணி --- வருவன என்று நினைத்துஅயில் சுவையும் --- அவ்வுண்டி கொள்ளுதலையும்பித்து உணா கொள்வ போல கொள்ப --- மிகச் சிறுகவே உண்பார்கள்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...