பொது --- 1013. பகிர நினைவொரு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

பகிர நினைவொரு (பொது)

 

முருகா! 

அடியேன் சிவபதம் அடைய அருள்வாய்.

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

பகிர நினைவொரு தினையள விலுமிலி

     கருணை யிலியுன தருணையொ டுதணியல்

     பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப்

 

பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்

     பழகி யழகிலி குலமிலி நலமிலி

     பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன்

 

திகிரி வருமொரு செலவினி லெழுபது

     செலவு வருமன பவுரிகொ டலமரு

     திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத

 

திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி

     திருடன் மதியிலி கதியிலி விதியிலி

     செயலி லுணர்விலி சிவபத மடைவது ......மொருநாளே

 

மகர சலநிதி முறையிட நிசிசரன்

     மகுட மொருபது மிருபது திரள்புய

     வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...ந்ருபதூதன்

 

மடுவில் மதகரி முதலென வுதவிய

     வரத னிருதிறல் மருதொடு பொருதவன்

     மதலை குதலையின் மறைமொழி யிகழிர...ணியனாகம்

 

உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி

     திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்

     உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே

 

உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு

     முதய தினகர இமகரன் வலம்வரும்

     உலக முழுதொரு நொடியினில் வலம்வரு .....பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி,

     கருணை இலிஉனது அருணையொடுதணியல்,

     பழநி மலை,குரு மலை,பணி மலை,பல ......மலைபாடிப்

 

பரவும் மிடறு இலி,படிறுகொடு இடறுசொல்

     பழகி,அழகிலி,குலமிலி,நலமிலி,

     பதிமை இலிபவுஷதுமிலி,மகிமையிலி,......குலாலன்

 

திகிரி வரும் ஒரு செலவினில்,எழுபது

     செலவு வரு மன பவுரிகொடுலமரு

     திருகன்ருகுதல்ழுகுதல்,தொழுகுதல்,......நினையாத

 

திமிரன்யல்பிலி,அருளிலி,பொருளிலி,

     திருடன்,மதியிலி,கதியிலி,விதியிலி,

     செயலில் உணர்விலி,சிவபதம் அடைவதும் ......ஒருநாளே?

 

மகர சலநிதி முறையிட,நிசிசரன்

     மகுடம் ஒருபதும்இருபது திரள்புய

     வரையும் அறஒரு கணைதெரி புயல்,குரு .....ந்ருபதூதன்,

 

மடுவில் மதகரி முதல் என உதவிய

     வரதன்ருதிறல் மருதொடு பொருதவன்,

     மதலை குதலையின் மறைமொழி இகழ் இர...ணியன் ஆகம்

 

உகிரின் நுதிகொடு வகிரும் ஒர் அடல் அரி,

     திகிரி தர மரகத கிரி எரி உமிழ்

     உரக சுடிகையில் நடம் நவில் அரி திரு ...... மருகோனே!

 

உருகும் அடியவர் இருவினை இருள்பொரும்

     உதய தினகர! இமகரன் வலம்வரும்

     உலக முழுது ஒரு நொடியினில் வலம்வரு ......பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            மகர சலநிதி முறையிட--- மகர மீன்கள் வாழுகின்ற கடலானது ஓ என்று கதறும்படியும்,

 

            நிசிசரன் மகுடம் ஒருபதும்---  இரவில் சஞ்சரிப்பவனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளும்

 

           இருபது திரள்புய வரையும் அற--- மலைபோல் திரண்ட இருபது தோள்களும் அற்று விழவும்,

 

            ஒரு கணை தெரி புயல்--- ஒப்பற்ற கணையை விடுத்த நீலமேகம் போன்றவரும்,

 

            குரு ந்ருப தூதன்--- குருகுலத் தலைவராகிய தருமனுடைய தூதுவரும்,

 

            மடுவில் மதகரி முதல் என உதவிய வரதன்--- மடுவினிடத்தே முதலை பற்றிக் கொள்ள கஜேந்திரம் என்ற யானை ஆதிமூலம் என்று அழைத்த உடன் உபகரித்த வரதராஜரும்,

 

            இருதிறல் மருதொடு பொருதவன்--- வலிமை மிக்க இரண்டு மருத மரங்களைத் திருவடியால் உதைத்தவரும்,

 

            மதலை குதலையின் மறைமொழி இகழ் இரணியன் ஆகம் 

--- குழந்தையாகிய பிரகலாதர் இளமையான வாக்கினால் கூறிய வேதமொழியை இகழ்ந்த இரணியனுடைய உடம்பை

 

             உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி---  நகத்தின் நுனியைக் கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை பொருந்திய நரசிங்க மூர்த்தியாக வந்தவரும்,

 

            திகிரி தர--- சக்ராயுதத்தை ஏந்தியவரும்

 

           மரகத கிரி--- பச்சை மாமலைபோல் விளங்குபவரும்,

 

            எரி உமிழ் உரக சுடிகையில் நடம் நவில் அரி--- நெருப்பைக் கொப்பளிக்கின்ற காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனம் புரிந்தவரும் ஆகிய திருமாலின்

 

            திரு மருகோனே --- மேன்மை மிக்க மருகரே!

 

            உருகும் அடியவர் இருவினை இருள்பொரும் --- உள்ளம் உருகும் அடியார்களுடைய நல்வினைதீவினைகள் ஆகிய இருள்சேர் இருவினைகளை நீக்குகின்ற

 

            உதய தினகர--- இளம் சூரியரே!

 

            இமகரன் வலம் வரும் உலகம் முழுது--- பனியை நீக்கும் கதிரவன் வலம் வருகின்ற உலகம் முழுவதையும்,

 

            ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே--- ஒரு நொடிப் பொழுதுக்குள் வலம் வந்த பெருமையின் மிக்கவரே!

 

            பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி--- வறியவர்க்குப் பங்கிட்டுத் தரும் எண்ணம் ஒரு தினை அளவேனும் இல்லாதவன்.

 

            கருணை இலி--- கருணை இல்லாதவன்.

 

            உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை பணிமலை பலமலை பாடி பரவு மிடறு இலி  --- தேவரீர் எழுந்தருளி உள்ள திருத்தலங்களாகிய திருவண்ணாமலைதிருத்தணிகைபழநிமலைசுவாமிமலைநாகமலை என்னும் திருச்செங்கோடு முதலிய பற்பல மலைகளையும் பாடித் துதிக்கின்ற கழுத்து (குரல்) இல்லாதவன்,

 

            படிறுகொடு இடறு சொல் பழகி--- பொய்யைக் கொண்டு தடுமாறுகின்ற சொற்களைப் பழகுகின்றவன்.

 

            அழகு இலி --- அழகு இல்லாதவன்.

 

           குலம் இலி--- நல்ல குலத்தில் பிறவாதவன்.  

 

            நலம் இலி--- நன்மை இல்லாதவன்.

 

            பதிமை இலி--- முதன்மை இல்லாதவன் யான்,

 

            பவுஷதும் இலி--- பெருமையும் இல்லாதவன்.

 

            மகிமை இலி--- மகிமை இல்லாதவன்.

 

             குலாலன் திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும்--- குயவனுடைய சக்கரமானது ஒருமுறை சுற்றுவதற்குள் எழுபது முறை சுற்றுகின்ற,

 

            மன பவுரி கொடு அலமரு திருகன்--- மனத்தின் சுழற்சியைக் கொண்டு கலங்குகின்ற மாறுபாட்டை உடையவன்.

 

            உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன்--- உள்ளம் உருகுதலையும்காதலினால் கண்ணீர் வடித்தலையும்கும்பிடுதலையும் நினைக்காத ஆணவ இருளை உடையவன்.

 

            இயல்பு இலி--- நல்ல இயல்பு இல்லாதவன்.

 

          அருள் இலி--- திருவருள் துணை அற்றவன். (உயிர்கள்பால் அருள் இல்லாதவன்)

 

           பொருள் இலி--- இம்மைக்கு உரிய பொருட்செல்வமும் இல்லாதவன்.

 

            திருடன்--- உள்ளத்தில் கரவு பூண்டவன்.  

 

           மதி இலி--- அறிவு இல்லாதவன்.

 

            கதி இலி--- திக்கு இல்லாதவன். 

 

           விதி இலி--- ஒழுங்கு இல்லாதவன்.

 

            செயலில் உணர்வு இலி--- செய்கின்ற காரியங்களில் உணர்ச்சி இல்லாதவன்.

 

            சிவபதம் அடைவதும் ஒருநாளே--- இத்தகைய அடியேன் சிவபதவி அடையக் கூடிய ஒரு நாள் உண்டாகுமோ?

 

பொழிப்புரை

 

            மகர மீன்கள் வாழுகின்ற கடலானது ஓ என்று கதறும்படியும்இரவில் சஞ்சரிப்பவனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளும்மலைபோல் திரண்ட இருபது தோள்களும் அற்று விழவும்ஒப்பற்ற கணையை விடுத்த நீலமேகம் போன்றவரும்குருகுலத் தலைவராகிய தருமநந்தனனுடைய தூதவரும்மடுவினிடத்தே முதலை பற்றிக் கொள்ள கஜேந்திரம் என்ற யானை ஆதிமூலம் என்று அழைத்த உடன் உபகரித்த வரதராஜரும்,  வலிமை மிக்க இரண்டு மருத மரங்களைத் திருவடியால் உதைத்தவரும்,  குழந்தையாகிய பிரகலாதர் இளமையான வாக்கினால் கூறிய வேதமொழியை இகழ்ந்த இரணியனுடைய உடம்பை நகத்தின் நுனியைக் கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை பொருந்திய நரசிங்க மூர்த்தியாக வந்தவரும்,

சக்ராயுதத்தை ஏந்தியவரும்,  பச்சை மாமலைபோல் விளங்குபவரும்,  நெருப்பைக் கொப்பளிக்கின்ற காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனம் புரிந்தவரும் ஆகிய திருமாலின்மேன்மை மிக்க மருகரே!

 

            உள்ளம் உருகும் அடியார்களுடைய நல்வினைதீவினைகள் ஆகிய இருள்சேர் இருவினைகளை நீக்குகின்ற இளம் சூரியரே!

 

            பனியை நீக்கும் கதிரவன் வலம் வருகின்ற உலகம் முழுவதையும்ஒரு நொடிப் பொழுதுக்குள் வலம் வந்த பெருமையின் மிக்கவரே!

 

            வறியவர்க்குப் பங்கிட்டுத் தரும் எண்ணம் ஒரு தினை அளவேனும் இல்லாதவன். கருணை இல்லாதவன். தேவரீர் எழுந்தருளி உள்ள திருத்தலங்களாகிய திருவண்ணாமலைதிருத்தணிகைபழநிமலைசுவாமிமலைநாகமலை என்னும் திருச்செங்கோடு முதலிய பற்பல மலைகளையும் பாடித் துதிக்கின்ற கழுத்து இல்லாதவன். பொய்யைக் கொண்டு தடுமாறுகின்ற சொற்களைப் பழகுகின்றவன். அழகு இல்லாதவன். நல்ல குலத்தில் பிறவாதவன். நன்மை இல்லாதவன். முதன்மை இல்லாதவன்பெருமையும் இல்லாதவன். மகிமை இல்லாதவன். குயவனுடைய சக்கரமானது ஒருமுறை சுற்றுவதற்குள் எழுபது முறை சுற்றுகின்றமனத்தின் சுழற்சியைக் கொண்டு கலங்குகின்ற மாறுபாட்டை உடையவன். உள்ளம் உருகுதலையும்காதலினால் கண்ணீர் வடித்தலையும்கும்பிடுதலையும் நினைக்காத ஆணவ இருளை உடையவன். நல்ல இயல்பு இல்லாதவன். திருவருள் துணை அற்றவன். இம்மைக்கு உரிய பொருட்செல்வமும் இல்லாதவன். உள்ளத்தில் கரவு பூண்டவன். அறிவு இல்லாதவன். திக்கு இல்லாதவன். ஒழுங்கு இல்லாதவன். செய்கின்ற காரியங்களில் உணர்ச்சி இல்லாதவன். இத்தகைய அடியேன் சிவபதவி அடையக் கூடிய ஒரு நாள் உண்டாகுமோ?

 

விரிவுரை

 

பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி--- 

 

"தர்மம் சர" என்று வேதத்தின் தொடக்கத்திலும், "அறம்செய விரும்பு" என்று ஆத்திசூடியின் தொடக்கத்திலும்தருமமானது வற்புறுத்தி உபதேசிக்கப்பட்டது. உயிர்க்கு உறுதுணையாக என்றும் நின்று உதவுவது அறம் ஒன்றே ஆகும். "பொன்றுங்கால் பொன்றாத் துணை" என்பார் திருவள்ளுவ நாயனார்.

 

வறியவர்க்கு வழங்குவது மிகமிகச் சிறந்த புண்ணியம். வறியவர் வயிற்றில் விழுந்த ஒரு அரிசிமறுபிறப்பில் ஒரு பொற்காசாக வந்து உதவும்.

 

அற்றார் அழிபசி தீர்த்தல்அஃதுஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.               ---  திருக்குறள்.

 

எப்போதும் தரும சிந்தையுடன் இருத்தல் வேண்டும். இயல்பு உள்ளவர்கள் நிரம்பவும் அறம் செய வேண்டும்.

 

கோச்செங்கட்சோழன்சுந்தரமாற பாண்டியன்சேரமான் பெருமாள் முதலிய மன்னர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்த அரண்மனைஅவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் முதலியன ஒன்றேனும் இல்லை. ஆனால்அவர்கள் செய்த அறச் செயல்களாகிய திருக்கோயில்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. அழியாமல் நிற்பது அறம் ஒன்றே ஆகும்.

 

உலக முழுவதும் ஒடுங்கிய போதுஅறம் ஒன்றே ஒடுங்காது விடை வடிவாக நின்று இறைவனைத் தாங்கியது. உலகங்களை எல்லாம் தாங்கும் இறைவனையும் தாங்கும் ஆற்றல் அறத்திற்கு உண்டு.

 

இறைவனுக்கு அறவன் என்ற திருநாமமும் உண்டு. காரைக்கால் அம்மையார் இறைவனை, "அறவா" என்று விளிக்கின்றார்கள். "அறவாழி அந்தணன்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறக் கடலாகிய ஆண்டவனை அடைவதற்கு வழி அறமே ஆகும்.

 

இயல்பு இல்லாதவர்கள் ஒல்லும் வகையால் இம்மி அளவேனும் அறம் செய்தல் வேண்டும்.

 

"அவர் ஒருவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார். அவர் பணத்தையும் ஒருவருக்குத் தர மாட்டார்" என்று சிலரைச் சுட்டி உலகம் சொல்லும். அப்படிப்பட்டவர்கள் இருப்பதை விட மறைவது நல்லது. எனெனில்கல்லும் ஆலயம் ஆகின்றது. கட்டம் (மலம்) வயலுக்கு உரமாகின்றது. புல்லும் கூட்டுவதற்கு ஆகின்றது. நாய் வேட்டைக்கு உதவுகின்றது. கழுதை பொதி சுமந்து உபகரிக்கின்றது. எட்டியும் மருந்துக்கு ஆகின்றது. துரும்பும் பல் குத்த உதவுகின்றது. மனிதனாகப் பிறந்து ஒருவருக்கும் உதவாமல் இருப்பானாயின்அவன் இருப்பதனால் பயனில்லை.  

 

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லைபிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோவது இல்லைஇடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததுஎன்று கொடுக்கஅறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

 

நாயாய் பிறந்திடில் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்

காயா மரமும்வறளாம் குளமும்கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய்கச்சி ஏகம்பனே!---  பட்டினத்தார்.

 

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள்உப காரம் ஆகும்;

சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,

மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என்உண் டாமே?           ---தண்டலையார் சதகம்.

 

ஆதலினால்மிகமிகக் குறைந்த அளவிலாவது ஒவ்வொருவரும் வறியார்க்கு உதவுதல் வேண்டும். உதவுவதற்கு ஆற்றல் இல்லையேல்உதவவேண்டும் என்ற நினைவாவது இருக்கவேண்டும்.  அந்த நினைவும் பனையளவு இல்லையேனும்,தினையளவாவது இருத்தல் வேண்டும்.

 

தினை திறிய தானியம். ஆதலினாலேயே, "பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி" என்று அடிகளார் கல்லும் கரையுமாறு உபதேசிக்கின்றார்.

 

தினைத்துணை நன்றி செயினும்பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.                      ---  திருக்குறள்.

 

வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்திவறிஞர்க்குஎன்றும்

நொய்யில் பிளவுஅளவு ஏனும் பகிர்மின்கள்உங்கட்குஇங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.     ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                           

எமதுபொருள் எனுமருளை இன்றிகுன்றிப்

     பிளவளவு தினையளவு பங்கிட்டு உண்கைக்கு

     இளையுமுது வசைதவிரஇன்றைக்கு அன்றைக்கு... எனநாடாது

இடுககடிது எனும்உணர்வு பொன்றிக் கொண்டிட்

     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு

     எனஅகலு நெறிகருதி நெஞ்சத்து அஞ்சிப் ......பகிராதோ..

                                                                                                --- (அமுதுததி) திருப்புகழ்.

 

 

கருணை இலி--- 

 

இறைவனுடைய கருணையை நாடுகின்ற ஒவ்வொருவரும் தாங்கள் உள்ளத்தில் கருணை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.  இனத்தைக் கொண்டு இனத்தைப் பெறவேண்டும். கருணை உள்ள இடத்திலேயே கருணை நிரம்பும். பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு மனம் பொறாது இரக்கம் கொண்டுஅத் துன்பினை அகற்ற முற்படுதலே கருணையின் செயல் ஆகும்.

 

உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை பணிமலை பலமலை பாடி பரவு மிடறு இலி --- 

 

மிடறு --- கழுத்து. ஒலியினை எழுப்பும் உறுப்பு.

 

வாயாரப் பாடுதலைக் குறிக்கும்.

 

"பதி எங்கிலும் இருந்து விளையாடிபல குன்றிலும் அமர்ந்த பெருமாளே" என்று அடிகளார் பாடியுள்ளபடிமுருகப் பெருமான் குன்றுகள் தோறும் எழுந்தருளிஉயிர்களுக்குக் குன்றாத வாழ்வை அருளுகின்றான்.

 

குருமலை --- திருத்தணிகை.

 

பணிமலை --- நாகமலைநாககிரி என்கின்ற திருச்செங்கோடு. (பணி --- பாம்பு).

 

நாக்கைக் கொண்டு அரம் நாமம் நவிலாதவர்காக்கைக்கே இரை ஆகிக் கழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். இறைவன் திருப்புகழைப் பேசாத நாள்கள் எல்லாம் பிறவாத நாள்களே என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

படிறுகொடு இடறு சொல் பழகி--- 

 

இறைவனைப் பாடமாட்டார். ஆனால்பொய்களையும்தடுமாற்றத்தைத் தருகின்ற சொற்களையுமே நாளும் பேசிக் கொண்டு இருப்பர் அறிவில்லாத சிலர். நாளும் பொய்யையை பேசிக் கொண்டு இருந்து பிறரைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கிதானும் தடுமாறிக் கொண்டு இருப்பவர் என்பதால், "பழகி" என்றார்.

 

அழகு இலி ---

 

அழகு என்பது உருவ அழகைக் குறித்தது அல்ல. உள்ளத்து அழகையே குறிக்கும்.

 

உயர்ந்த குடியில் பிறந்துசிறந்த உருவமும், பருவமும் அமைந்து இருந்தாலும்அவன் மணமில்லாத மலரைப் போல ஓளி (புகழ், பெருமை) இழந்து நிற்பான் என்கின்றனர் பெரியோர் எல்லாம்.

 

மண்ணில் செய் பாவை மீது 

     வயங்குபொன் பூச்சோ?தண்பூங்

கண்ணியை மாற்றில் சூடும் 

     காட்சியோ?பழம் பாண்டத்தில்

பண்ணிய கோலமோநற் 

     பண்பொடு ஞானம் கல்வி

புண்ணியம் ஏதும் இல்லான் 

     பூண்ட பேரெழில் உடம்பே.     --- நீதிநூல்.

            

நல்ல பண்புகள், மெய்யறிவு, அதற்கேற்ற கல்வி, நற்செய்கை ஆகிய இவைகள் ஏதும் உள்ளத்தில் இல்லாத ஒருவன், புறத்தில் கொண்டுள்ள உடம்பு அழகானது, மண்ணால் செய்த பொம்மையின் மீது பூசப்பட்ட பொன்வண்ணமோ? அழகான மலர்மாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணுகின்ற காட்சியோ? பழைய பாத்திரத்தில் செய்யப்பட்ட அழகோ?

 

பழைய பாத்திரத்தைப் புதிய பாத்திரம் போல மெருகு ஏற்றுவதைபழைய பாத்திரத்தில் செய்யப்பட்ட அழகு என்றார். "துடைப்பத்திற்குப் பட்டுக் குஞ்சம்" கட்டுவது என்று ஒரு வழக்குச் சொல் உள்ளது. இங்கே துடைப்பத்திற்குப் பூமாலையைச் சூட்டிப் பார்ப்பது என்றார்.

 

கல்லாதவனது உருவ அழகை இவ்வாறு மேலோர்கள் இழித்துக் கூறினர்.கல்வி இல்லாதவனிடம் சேர்ந்து உள்ள சிறந்த இயற்கை அழகும் கூட இழிவாகவே எண்ணப்படும். கல்வி உள்ளத்திற்கு அழகு செய்வது. மற்ற நலங்கள் எல்லாம் உடலை அழகு செய்வன. அவற்றால் உள்ளத்திற்குஅறிவு மயக்கம் உண்டாகுமே தவிர, யாதொரு நன்மையும் இல்லை.

 

அறிவிற்கு மாட்சிமையாவதுநூல்களின் பொருளை விரைவாக உணர்தலும், உணர்ந்தவற்றை மறவாமையும்,அதன் வழி ஒழுகுதலும் ஆகும். உருவினால் அழகு மிக்க உடம்பை ஒருவன் பெற்றிருப்பது அரிதாகையால்,அவனது எழில் நலமும் விரும்பத் தக்கதே. ஆனாலும், நூலறிவு இல்லாதவனுடைய வடிவழகு காலத்தால் அழியக் கூடியது. கல்வி அறிவு அழியாதது. எனவே, புற அழகால் பயனில்லை என்பது சொல்லப்பட்டது. உடல் அழகு தேயும். உள்ள அழகு வளரும்.

 

"நுண்மாண்நுழைபுலம்இல்லான் எழில்நலம்,

மண்மாண் புனை பாவை அற்று".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

 நுண்ணியமாட்சிமை மிக்க அறிவு இல்லாதவனுடைய உடல் அழகு எப்படிப்பட்டதுஎன்றால், மண்ணால் செய்யப்பெற்ற பொம்மையை அழகு படுத்தியது போன்றது என்கின்றார்.

 

நுண் புலம் --- நுட்பமாய்க் கூர்ந்து ஓர்ந்து உணர்வது.

மாண்புலம் --- மாண்பு உடையதையே மதித்துத் தெளிவது.

நுழைபுலம் --- எதையும் ஊடுருவித் துருவித் தெளிவது.

     

 மற்றவர்க்கு வேண்டுமானால் தனது உடல் அழகே பெரிதாகத் தோன்றலாம். அதனை மேலும் மெருகு ஏற்றிக் கொள்ளலாம். ஆனால்கற்றவர்க்கு, கல்வியால் உண்டான நலமே சிறந்த அணிகலம் ஆகும். அவருக்கு வேறு அணிகலன்கள் தேவையில்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

"கற்றார்க்குக் கல்வி நலனே நலன்அல்லால்

மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்;- முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டாயாரே

அழகுக்கு அழகுசெய் வார்".      --- நீதிநெறி விளக்கம்

 

இதன் பொருள் ---

 

எக்காலத்திலும் முழுமையான மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு அழகு செய்ய, வேறு ஆபரணங்கள் தேவையில்லை. யாராவது அழகுக்கு அழகு செய்வார்களா? அது போல, நன்கு கற்றவர்க்கு,கல்வியால் உண்டாவதே அழகு. அவருக்கு அழகு செய்ய வேறு ஓர் அணிகலன் வேண்டுவது இல்லை.

 

குஞ்சி அழகும்,கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும்,அழகு அல்ல;- நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும்நன்கு உடுத்தப்பட்ட அழகிய கரையோடு கூடிய வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படுகின்ற மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராய் வாழுகின்ற, நடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்துகின்ற கல்வியே சிறந்த அழகு ஊட்டும் அணிகலம் ஆகும்.

 

  நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

 

இப் பாடல் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எண்ணவேண்டாம். தலைமயிர் அழகுஉடை அழகு இரண்டும் ஆண், பெண் இருபாலர்க்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுக. 

 

"மயிர்வனப்பும்,கண்கவரும் மார்பின் வனப்பும்,

உகிர்வனப்பும்காதின் வனப்பும், --- செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும்வனப்புஅல்லநூற்குஇயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு".          --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

தலைமயிரால் உண்டாகும் அழகும்கண்டவர் கண்களைக் கவர்தற்கு உரியஎடுப்பான மார்பினால் உண்டாகும் அழகும்நகத்தால் உண்டாகும் அழகும்காதினால் உண்டாகும் அழகும்குற்றம் நீங்கின (வெண்மையான) பல்லினால் உண்டாகும் அழகும்அழகு அல்லகற்ற நூல்களுக்குப் பொருந்தியசொல்லின் அழகே அழகு ஆகும்.

 

 புற அழகு நாளாக நாளாகக் குன்றும். அக அழகு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

 கல்லாமையால் உண்டாகும் இழிவை எடுத்துக் காட்டவே இவ்வளவும் சொல்லப்பட்டது. புற அழகு கூடாது என்று சொல்லப்பட்டவில்லை. புற அழகோடுகல்வி அறிவினால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் தேவை என்பதே சொல்லப்பட்டது.

 

"இடைவனப்பும் தோள்வனப்பும்,ஈடின் வனப்பும்,

நடைவனப்பும்,நாணின் வனப்பும்,- புடைசால்

கழுத்தின் வனப்பும்,வனப்பு அல்ல;எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு".            --- ஏலாதி.

 

இதன் பொருள் ---

 

இடுப்பின் அழகும்தோள்களின் அழகும்,செல்வத்தின் அழகும்நடக்கின்ற நடையின் அழகும்நாணத்தின் அழகும்பக்கங்களில் தசை கொழுவியுள்ள கழுத்தின் அழகும்உண்மை அழகு ஆகாமக்களுக்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

 

தனக்கு ஒரு கேடு அல்லது தாழ்வு வந்தபோதுபுற அழகு எவ்விதத்திலும் துணை செய்யாது. கல்வி அறிவு ஒன்றே துணை நிற்கும்.

 

 உடம்பு எடுத்ததன் பயன் கல்வி அறிவு பெறுவதே. உண்பதற்குத்தான் பிறவி எடுத்தோம் என்றால்நிறைய உண்ணுகின்ற விலங்குகளாகவே இருந்திருக்கலாம். 

 

 கல்வி அறிவு இல்லாத உடம்பு பாழான உடம்பு என்கின்றது "நான்மணிக் கடிகை" என்னும் நூல்.

 

"மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை,தான் செல்லும்

திசைக்குப் பாழ் நட்டோரை இன்மைஇருந்த

அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை,தனக்குப் பாழ்

கற்று அறிவில்லா உடம்பு".        ---  நான்மணிக் கடிகை.

 

இதன் பொருள் ---

 

 வாழுகின்ற மனைக்குப் பாழாவதுஒளி பொருந்திய நெற்றியினை உடைய மனையாளை இல்லாமைதான் போகும்ஊர்ப்புறங்கட்குப் பாழாவதுஅவ்விடங்களில் நண்பர்கள் இல்லாமைபலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவதுகல்வி கேள்வி முதலியவற்றால் சிறந்த சான்றோரை இல்லாமைபிறவி எடுத்த தனக்குப் பாழாவதுகல்வியறிவு பெறாத வெறும் புலால் உடம்பு உள்ளமையே.

 

 கண் இல்லாத உடல் போலகல்வி அறிவு இல்லாத உயிர் பயனற்றது. கல்லாமையின் இழிவைக் காட்ட இவ்வளவும் சொல்லப்பட்டது. "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்றார் ஔவைப் பிராட்டியார். எனவே, கண்ணைப் போன்ற கல்வியைப் போற்றிப் பயிலுவது அவசியம். அதுவே உண்மை அழகைத் தரும்.

 

குலம் இலி--- 

 

குணம் குலத்தின் பண்பில் அமைந்துளது. நற்குலத்திலே பிறந்தவன் நற்குணம் உடையனாய் இருத்தல் கண்கூடு. யாதாம் ஒருவன் தீக்குணம் உடையவனாகக் காணப்படின்அவன் பிறப்பிலே ஐயப்படவேண்டும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"நலத்தின்கண் நார்இன்மை தோன்றின்அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்".

 

பசுகுதிரை முதலிய விலங்குளிடையும் பரம்பரைக் குணம் காணப்படுகின்றது.

 

சித்திரமும் கைப் பழக்கம்செந்தமிழும் நாப் பழக்கம்

வைத்தது ஒரு கல்வி மனப் பழக்கம்; - நித்தம்

நடையும் நடைப் பழக்கம்நட்பும்

தயையும் கொடையும் பிறவிக் குணம்.

 

நீர்அளவே ஆகுமாம் நீர்ஆம்பல்தான்கற்ற

நூல்அளவே ஆகுமாம் நுண்அறிவு - மேலைத்

தவத்துஅளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்,

குலத்துஅளவே ஆகுமாம் குணம்.

 

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்

ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும், - ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.       

 

என்ற ஔவையார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகின்றது. மாம்பழம் முதலிய பழவகைகளிலும் உயர்வு உடையவை காணப்படுகின்றன.

 

"இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்,

குலன் உடையான் கண்ணே உள".

 

என்ற பொதுமறையும் சிந்தனைக்கு உரியது.

 

"குலம் பொல்லேன்" என்கின்றார் அப்பரடிகள். "குலத்திடையும் கொடியன்" என்கின்றார் வள்ளல்பெருமான்.

 

நலம் இலி--- 

 

நன்றாக உண்பதும் உறங்குவதும் நலம் ஆகாது. பறவைகளும் விலங்குகளும் கூட உண்டு உறங்கி உலாவுகின்றன. மனிதனும் அவைகள்போல உண்டு உறங்கி உலாவுவானாயின்மனிதனுக்கும் அவைகளுக்கும் வேற்றுமை இல்லாமல் போகும். கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் மனிதனை உயர்த்துகின்றது.

 

கடவுள் உணர்ச்சி எதன் பொருட்டுநமது வாழ்க்கைக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்புஎன்ற வினாக்கள் எழும்.  

 

மனித வாழ்க்கைக்கு அரசியல் முறை இன்றியமையாதது. களவு செய்வாரையும்பிறன்மனை விழைவாரையும்அரசாங்கத்தார் தண்டித்து நீதியை நிலைநிறுத்துவார்கள். அரசாங்கத்தார் அறியாமல் பல தீமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அல்லது அறிந்தும் தயவு தாட்சணியத்தினால் தண்டிக்காமலும் விட்டுவிடலாம். அரசாங்கத்தார் விடுவாராயினும்குற்றம் புரிவாரைத் தெய்வநீதி விடாது ஒறுக்கும். "நாம் குற்றம் புரியின் அரசாங்கத்தார் தண்டிப்பர்" என்று தீமை புரிவார் அஞ்சி தீமையினின்றும் விலகுகின்றனர். அதுபோல், "இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றான்அவன் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்,அவன் நமது சொற்களைக் கேட்டுக்கொண்டு உள்ளான். அவனுக்கு எங்கணும் கண்கள் உள.  உள்ளும் புறமும் கீழும் மேலும் உயிருக்கு உயிராய் எள்ளுக்குள் எண்ணெய் போல் நிறைந்து இருக்கின்றான். நாம் செய்யும் குற்றங்களை அறிந்து அவன் ஒறுப்பான். நாம் எண்ணுகின்ற எண்ணங்களையெல்லாம் அவன் அறிகின்றான். நாம் சொல்லுகின்ற சொற்களையெல்லாம் அவன் கேட்டுக்கொண்டு இருக்கின்றான். நாம் செய்கின்ற செயல்களையெல்லாம் அவன் அறிகின்றான். ஆதலின்எண்ணத்தினாலும்சொற்களினாலும்செயல்களினாலும் நாம் தீயவை புரியக் கூடாது. அவன் சர்வபூத சாட்சியாக இருக்கின்றான்" என்ற நல்லுணர்ச்சி தெய்வ உணர்ச்சி உடையார்க்கே உண்டாகும். தெய்வ உணர்ச்சி உடையாரும் பிழை புரிகின்றாரேஎனின்அவர்கள் உள்ளத்தில் கடவுள் உணர்ச்சி வேர் கொள்ளாது நீர்க்குள் பாசிபோல் நிற்பதே காரணம் என்க. "எங்கும் உளன் ஒருவன் காணும்கொல் என்று அஞ்சிஅங்கம் குலைவது அறிவு" என்றார் குமரகுருபர அடிகள்.

 

ஆகவேபரம்பொருளை உன்னியும்உரைத்தும் போற்றுவதே நலம் என்று தெளிக. நலமுடையார் என்பவர் கடவுள் உணர்ச்சி மிக்கவரே ஆகும் என்பது உறுதி. கடவுள் உணர்ச்சி இல்லாதவர்கள்எத்துணை பெரிய செல்வந்தர்களாயினும் நாள்தோறும் ஒன்பது வேளை பாலும் பழமும் சோறும் உண்டுபட்டு உடுப்பார்களாயினும் நலம் இல்லாதவரே ஆவார்கள்.

 

விலங்கு மனத்தால்விமலாஉனக்குக்

கலந்த அன்பாகிகலந்துஉள்உருகும்

நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி..             ---  மணிவாசகம்.

 

ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்துஆடும்

நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்...  ---  பெரியபுராணம்.

                                                                                                                   

பதிமை இலி--- 

 

பதி --- முதன்மைதலைமை.

 

பதிமை என்பதை பத்திமை என்றும் கொள்ளலாம்.

     

பவுஷதும் இலி--- 

 

பவிசு --- மதிப்பு. செல்வம்ஒளிஒழுங்கு.

            

மகிமை இலி--- 

 

மகிமை --- சிறப்பு. மதிப்புபெருமை.

 

குலாலன் திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும்  மன பவுரி கொடு அலமரு திருகன்--- 

 

அலமருதல் --- அஞ்சுதல்வருநுத்தல்மனம் சுழலுதல்.

 

திருகு --- முறுக்குமாறுபடுதல்குற்றம்.

 

குயவனாருடைய மண்பானை வனையும் சக்கரம் வேகமாகச் சுழலும். அதைவிட எழுபது மடங்கு வேகமாக மனம் சுழலும்.

 

குயவனாருடைய சக்கரம் ஒருமுறை சுற்றுவதற்குள் ஆயிரம் கோடி முறை என் மனம் சுற்றுகின்றது என்று கந்தரந்தாதியில் கூறுகின்றனர்.

 

திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்

திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்

திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்

திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே

 

இதன் பதவுரை ---

 

திரிகை இலாய் - மாறுபடாத நித்தியனேஇரவு - இரவையும்எல் - பகலையும்ஆழி - கடலையும்மண் - பூமியையும்விண் - ஆகாயத்தையும்தரு - மூவரின் முதல்வனாய் இருந்து படைத்தவரும்சிர பாத்திரி - பிரம கபாலத்தை உடையவரும்ரவு - ஆரவாரத்தை உடையஆனந்த நாடகி - ஆனந்த நடனம் செய்கின்ற பரமசிவனுக்கும்சேர் - அவர் பால் இருக்கின்றஇம கோத்திரி கையில் - இமய மலையின் இடத்தில் உற்பவித்து வளர்ந்தஆயி - பார்வதிக்கும்ரமிக்கும் - மகிழ்வை விளைக்கும்மைந்தா - புதல்வனேசெந்திலாய் - திருச்செந்தில் பதியோனேஒருகால் - ஒருதரம்திரிகையில் - குலாலன் சக்கரம் சுற்றி வருவதற்குள்ஆயிரக்கோடி சுற்றோடும் - ஆயிரம் தரம் சுற்றி வருவதாகியதிருத்து உளம் - என்னுடைய மனத்தைத் திருத்தி அருள வேண்டும்.

 

வேகமாக காடும் கரையும் சென்று திரியும் மனத்தின் ஓட்டத்தை நிறுத்துவதே முயற்சிகளுக்குள் தலையாய முயற்சி. மனமடங்கிய இடத்திலே பூரண சுகம் உண்டாகின்றது.

 

காடும் கரையும் மனக்குரங்கு

            கால்விட்டு ஓடஅதன்பிறகே

ஓடும் தொழிலால் பயன்உளதோ?

            ஒன்றாய்பலவாய்உயிர்க்குஉயிராய்

ஆடும் கருணைப் பரஞ்சோதி

            அருளைப் பெறுதற்கு அன்புநிலை

தேடும் பருவம் இதுகண்டீர்,

            சேர வாருஞ் சகத்தீரே.            --- தாயுமானார்.

 

உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன்--- 

 

திமிரன் --- மந்த புத்தி உடையவன்.

 

உள்ளம் உருகி இறைவனைத் தியானித்தல் வேண்டும். அதுவே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு எளிய வழியாகும்.

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வுஎன்று அருள்வாய்..---  கந்தர் அநுபூதி.

 

என்பு உருகிமயிர் சிலிர்த்துஉள்ளம் குழைந்துகண்ணீர் சொரிந்துஅன்பு மயமாய் நிற்கும் அடியார்க்குகற்ப கோடி காலம் தவம் புரியினும் காணக் கிடைக்காத இறைவன்அமிர்த சஞ்சீவி போல் முன் நின்று அருள் புரிவான்.

 

என்பெலாம் நெக்குஉடையரோமம் சிலிர்ப்ப,உடல்

                 இளகமனது அழலின் மெழுகாய்

     இடையறாது உருகவருமழைபோல் இரங்கியே

                 இருவிழிகள் நீர் இறைப்ப,

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு,அங்ஙனே

                 அமிர்தசஞ் சீவிபோல்வந்து

     ஆனந்த மழைபொழிவைஉள்ளன்பு இலாதஎனை

                 யார்க்காக அடிமைகொண்டாய்,....       --- தாயுமானார்.

 

உடல்குழைய,என்பு எலாம் நெக்கு உருக,விழிநீர்கள்

                    ஊற்று என வெதும்பி ஊற்ற,

      ஊசி காந்தத்தினைக் கண்டு அணுகல்போலவே

                    ஓர் உறவும் உன்னி உன்னி,

படபடஎன நெஞ்சம் பதைத்து,உள்நடுக்குறப்

                    பாடி ஆடிக் குதித்து,

      பனிமதி முகத்திலே நிலவு அனையபுன்னகை

                    பரப்பி,ஆர்த்து ஆர்த்து எழுந்து,    

மடல் அவிழும் மலர் அனையகை விரித்துக் கூப்பி,

                    வானே! அவ் வானில் இன்ப

      மழையே!மழைத்தாரை வெள்ளமே!நீடூழி

                    வாழி! என வாழ்த்தி ஏத்தும்

கடல்மடைதிறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை,

                    கல் செஞ்சனுக்கு எளியையோ?

      கருத அரியசிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு

                    கருணா கரக்கடவுளே.            --- தாயுமானார்.

 

அருள் இலி --- 

 

அன்பு --- தொடர்பு உடையார் மாட்டு உண்டாவது.

 

அருள் --- அன்பானது முதிர்ந்த நிலையில்,தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மாட்டும் உண்டாவது.

 

அன்பு இருந்தால்,அன்பு வடிவாகிய பரம்பொருளை அடையலாம்.

அருள் இருந்தால் அருள் வடிவாகிய பரம்பொருளை அடையலாம்.

 

"அன்பு உருவாம் பரசிவமே" என்றார் வள்ளல்பெருமான். "கருணையே உருவம் ஆகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

செயலில் உணர்வு இலி--- 

 

செய்கின்ற காரியங்கள் நல்லவையாக இருக்கவேண்டும். அவற்றில் உள்ளம் பொருந்திச் செயல்படவேண்டும். 

            

மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒருபதும் இருபது திரள்புய வரையும் அற ஒரு கணை தெரி புயல்--- 

 

புயல் --- மேகம். மேக வண்ணர் ஆகிய திருமால்.

 

திருமால் இராமச்சந்திரமூர்த்தியாக அவதரித்து இராவணனை அவனது பத்துத் தலைகளும்இருபது தோள்களும் இற்று விழுமாறு ஒப்பற்ற ஒரு கணையை விடுத்தார்.

 

குரு ந்ருப தூதன்--- 

 

குரு --- குருகுலம்.

 

நிருபன் --- அரசன். 

 

பாண்டவர்களில் முதன்மையானவர் ஆகிய தருமபுத்திரனைக் குறிக்கும்.

 

பாண்டவர்களுக்காதுரியோதனனிடம் தூது சென்றவர் கிருட்டிணர்.

 

மடுவில் மதகரி முதல் என உதவிய வரதன்--- 

 

திருமால் யானைக்கு அருள் புரிந்த வரலாறு

 

திருப்பாற் கடலால் சூழப்பட்டதாயும்பதினாயிரம் யோசனை உயர முடையதாயும்பெரிய ஒளியோடு கூடியதாயும்திரிகூடம் என்ற ஒரு பெரிய மலையிருந்தது. சந்தனம்மந்தாரம்சண்பகம் முதலிய மலர்த் தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும்இந்திரர் முதலிய இமையவரும்அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில்வளமை தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானதுஅநேக பெண் யானைகளாலே சூழப்பட்டுதாகத்தால் மெலிந்துஅந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்ததுகஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்ய முடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்திபக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலைபாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,உடனே கருடாழ்வான் மீது தோன்றிசக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்துகஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால்உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை அருளினார்.

 

வாரணம் மூலம் என்ற போதினில்,ஆழி கொண்டு,

     வாவியின் மாடு இடங்கர் பாழ்படவேஎறிந்த

     மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் ...... மருகோனே!

                                                                           --- திருச்செந்தூர்த் திருப்புகழ்

 

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

 

இருதிறல் மருதொடு பொருதவன்--- 

 

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்ற இருவர்களும்அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை இல்லாமல்நீரில் விளையாடினார்கள். ஆடை உடுத்தியே நீராட வேண்டும். "உடுத்து அல்லால் நீராடார்" என்பது ஆசாரக் கோவை. அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

 

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றி வளர்ந்துதேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

 

கண்ணபிரானுக்கு யசோதைபாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாதுஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும்அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும்,உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்றுதாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டுஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினால். வேறு பல கயிறுகளை எடுத்துஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டுஇடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை, யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுதுமெல்லத் தவழ்ந்துவாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

 

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால்தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன்மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று,தாமோதரனைப் போற்றி செய்துதங்கள் பதவியை அடைந்தார்கள்.

 

மதலை குதலையின் மறைமொழி இகழ் இரணியன் ஆகம் உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி---  

 

மதலை குதலை மறைமொழி --- சிறு குழந்தையாகிய பிரகலாதர் தமது மழலை மொழியால் கூறியருளிய வேதமொழிகள். அவை வேதமொழி என்று உணராமல் இகழ்ந்தான் அவரது தந்தையாகிய இரணியன். திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த்,தமது அடியவர் ஆகிய பிரகலாத ஆழ்வாரைக் காக்கஇரணியனைச் சங்கரித்தார்.

 

இதன் வரலாறு

 

பிரமதேவருடைய புதல்வர் மரீசிமரீசியின் மைந்தர் காசிபர்காசிபமுனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து, தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப்போல் ஒளி செய்தனர்அந்தக் காசிபமுனிவருக்குத் திதிவயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும்பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர்இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோதுதிருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

 

இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான்தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன்தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டனன்மனம் வெருண்டனன்பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டனன்அப்போது அவன் மனைவி லீலாவதிபால் ஹிலாதன்சம்ஹிலாதன்அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர்நான்காவதாகலீலாவதி உலகம் உய்யபிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றதுபோல்கருக்கொண்டு இருந்தனள்.

 

தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்குகனல் நடுவே நின்றுஊசியின்மேல் ஒருகாலை ஊன்றிபுலன்களை அடக்கிமூலக்கனலை மூட்டிநீரையும் வாயுவையும் புசித்துக்கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன்.  இரணியன் தவத்தால்தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன் சேனையுடன் வந்து, அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன்இடையில் நாரதர் தடுத்துலீலாவதியை சிறைமீட்டுதனது தவச்சாலைக்குக் கொண்டு போய் கருப்பவதியும் கற்பு நெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர்கணவன் வரும் வரை கரு வளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்துகொண்டாள்கருவில் உருப்பெற்று உணர்வுபெற்று இருந்த பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர். கருவிலே திரு உருவாகியது.

 

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்னவாகனத்தில் நான்முகக்கடவுள் தோன்றினர்அவர்பால் இரணியன், மண்ணிலும்விண்ணிலும்அல்லிலும்பகலிலும்வீட்டிலும்வெளியிலும்இருளிலும்ஒளியிலும்அத்திரத்தாலும்சத்திரத்தாலும்நரராலும்சுரராலும்நாகங்களினாலும்விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும்மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும்முவுலக ஆட்சியையும்எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்றுஇரணியபுரம் சேர்ந்தனன்.  நாரதர் லீலாவதியைக் கொணர்ந்துஉற்றதை உரைத்துஆறுதல்கூறிஅவன்பால் சேர்த்தனர்.  பின்ன ர்லீலாவதிஅன்புமயமான பிரகலாதரைப் பெற்றனள்.  மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.

 

பின்னர் ஒருநாள்தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்று எண்ணிதன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான்காலனிலும் கொடிய அக்கொடியவர் வைகுந்தத்திலும்திருப்பாற்கடலிலும் தேடி, திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திராஅரியைக் காண்கிலேம்என்றனர்இரணியன் சினந்துமூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.  எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து, மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்என்றனர்இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி, எங்ஙனமோ ஒளிந்து கொண்டான்போலும்பயங்கொள்ளிஅத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும்ஞானிகள் சிந்தையிலும்அடியார்கள் இதயத்திலும்இருப்பன்கட்டையைக் கடைந்தால் அக்கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும்பாலைக் கடைந்தால்பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவதுபோலும்அடியார்களையும்ஞானிகளையும்முனிவர்களையும் பிடித்து த்துன்புறுத்தினால்அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன்ஆதலினால்ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும்முனிவர்களையும்அடியார்களையும் துன்புறுத்துங்கள்என்று கட்டளை இட்டனன்காலதூதரினும் கொடிய அப்பாதகர்கள்பூமரங்களை ஒடித்தும்முனிவர்களை அடித்தும்கோயில்களை இடித்தும்வேதாகமங்களைப் பொடித்தும்ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாயநமஎன்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும்அதனை எங்கும் எழுதியும்வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும்எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

 

தேவர்களும்முனிவர்களும்ஞானிகளும்அடியார்களும் பெரிதும் வருந்தி, திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.  திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும்வரை காகம் கூகைக்கு அஞ்சியிருக்கும்ஆதலினால், நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின்யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்க்குதும்என்று அருளிச் செய்தனர்.

 

பிரகலாதர்இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்துதியானபரராக இருந்தனர்ஆடும்போதும்ஓடும்போதும்பாடும்போதும்வாடும்போதும்உண்ணும்போதும்உறங்கும்போதும்எழும்போதும்அழும்போதும்விழும்போதும்தொழும்போதும்இவ்வாறு எப்போதும் தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது,கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்துஉணர்ந்து உணர்ந்துநெகிழ்ந்துநெகிழ்ந்துஅன்பு நிறைந்துநிறைந்துஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

 

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோதுஇவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர்,தீர்த்தயாத்திரை சென்றனர்அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன்மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன்.  சண்டாமார்க்கர், பிரகலாதரை நோக்கி, "இரண்யாயநமஎன்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் தமது செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரேபிழைபடக் கூறலுற்றனைஇன்றிருந்து நாளை அழியும் ஒருஉயிரினை இறைவன் எனக் கூறுதல் நலமன்றுஎனமொழிந்து, "ஓம் நமோநாராயணாயஎன்று கூறினர்.

 

ஓதப்புக்கவன் "உந்தை பேர்உரை" எனலோடும்,

போதத்தன் செவித் தொளைஇருகைகளால் பொத்தி,

"மூதக்கோய்!  இது நல்தவம் அன்று"எனமொழியா

வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.

 

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பிஆனந்தக் கண்ணீர் சொரிந்துஉரோமங்கள் சிலிர்த்துதிருமந்திரத்தைக் கூறியவண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடாபாலகனேஇந்த மந்திரத்தைக் கூறாதேஉன் தந்தை கேட்டால், எம்மையும் உன்னையும் தண்டிப்பன்இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர்சிறுபிள்ளைத்தனமாக இதனை நீ கூறினைஇனி இதனைக் கூறாதேகூறி எம்மைக் கெடுக்காதேஉன்னையும் கெடுத்துக் கொள்ளாதேஎன்றனர்.

 

கெடுத்து ஒழிந்தனை என்னையும்உன்னையும் கெடுவாய்

படுத்து ஒழிந்தனைபாவிஅத்தேவரும் பகர்தற்கு

அடுத்தது அன்றியே அய ல்ஒன்று பகர நின் அறிவின்

எடுத்தது என்இதுஎன்செய்த வண்ணம் நீ என்றான்.

 

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயஇத்திருமந்திரத்தைக் கூறுவதனால்என்னையும் உய்வித்தேன்எனது பிதாவையும் உய்வித்தேன்உம்மையும் உய்வித்தேன்இந்த உலகையும் உய்வித்தேன்வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன்அப்படிக்கு இருக்கநான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

 

என்னை உய்வித்தேன்எந்தையை உய்வித்தேன்இனைய

உன்னை உய்வித்தேன்உலகையும் உய்விப்பான் அமைந்து,

முன்னை வேதத்தின் முதல்பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்ற ம்நான்இயம்பியது? இயம்புதி என்றான்.

 

ஆசிரியர், "அப்பாகுழந்தாய்நாங்கள் கூறுவதைக் கேள்.  இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம்.  இதை ஒருவரும் கூறலாகாது  என உன் தந்தையின் கட்டளைநீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்என்றனர் .  

 

பிரகலாதர், "ஐயாஇம்மந்திரமே வேதத்தின் விழுமியது.  எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லைஎன்றார்.

 

ஆசிரியர் மனம் மறுகிஇரணியன்பால் ஓடி, "எந்தையேஉமது சிறுவன்நாங்கள் கூறிய வேதமந்திரத்தை மறுத்துசொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்என்றார்

 

இரணியன், "என்ன கூறினான் கூறும்என்று வினவினான்ஆசிரியர், "வேந்தேஅவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால்எமக்கு நரகம் எய்தும்நாவும் வெந்து அழியும்என்று நடுங்கி நவின்றனர்.

 

இரணியன் தன் மகனை அழைப்பித்தான்பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர்மகனை எடுத்து உச்சிமோந்து முத்தமிட்டுமடித்தலத்தில் வைத்து, "மகனேநீ என்ன கூறினாய்என்று வினவினான்

 

அறிவின் மிக்க அப்புதல்வர், "தந்தையேஎதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோஎதனை வேதம் வியந்து ஓதுகின்றதோஎது நம்மை வாழ்விக்கின்றதோஅதனையே அடியேன் கூறினேன்என்றார்.  இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்புலிக்குப் பூனையா பிறக்கும்என்கண்ணேஅதுஎன்னஎனக்கு எடுத்துச் சொல்என்று கேட்டான்.

 

"காமம் யாவையும் தருவதும்அப்பதம் கடந்தால்

சேம வீடு உறச் செய்வதும்செந்தழல் முகந்த

ஓமவேள்வியின் உறுபதம் உய்ப்பதும், ஒருவன்

நாமம், அன்னது கேள் நமோநாராயணாய".

 

"அப்பாஓம் நமோநாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டும்  எழுத்தாம்என்றார்

 

தானவன் விழியில் தழல் எழுந்ததுகோபத்தால் கொதிப்புற்றான். "மகனேமுனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய "இரணியாயநம" என்றே கூறுகின்றனர்யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குலவைரிஎலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோஅந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன்.  அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன்எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான்கண்ணேநீ சிறுகுழந்தையாரோ உன்னை இப்படி மயக்கி, மாறுபடக் கூறி உள்ளனர்இனி அதைக் கூறாதேமூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறுஎன்று பலவும் கூறினான்.

 

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனேசிறிது அமைதியாக இருந்து கேளும்உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால்எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர்மாதவர்களுடைய மாதவப்பயனாய் விளங்குபவர்அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லைகடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பதுபோல்விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர்நமது குலமும் நீயும் பிறரும் ஈடேறவேண்டும் என்றால்அவரை வணங்குவாயார வாழ்த்து.  நெஞ்சார நினைஎன்றார்.

 

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன், ஆலகால விடம் போல் சீறினான்அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன்இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன்கூற்றினும் கொடிய அரக்கர்கள்துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டுபோய்வாள்வேல்மழுதண்டுகோடாலிஈட்டி முதலிய பல வேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர்.  பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிது ம்ஊனம் ஏற்படவில்லைஅவர் கண்களைமூடி, "நமோநாராயணாயஎன்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டனஅது கண்ட தீயவர்கள் ஓடிஇரணியன்பால் உற்றது உரைத்தனர்.

 

நிருதன் வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்விண்ணளவாகஎண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்துவிண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர்தியானபரர் ஆகிய அவருக்கு அத்தீதண்ணிலா எனக் குளிர்ந்ததுதாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம்போல்கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார்காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

 

அவுணன் வெகுண்டுஅவனைச் சிறையிட்டு, "அட்டநாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்என்றான்அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டுபிரகலாதரைக் கொடிய நச்சுப்பற்களால் பலகாலு ம்கடித்தனதிருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர்.  பாம்புகளின் பற்கள் ஒடிந்துபணாமகுடம் உடைந்துஉள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

 

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான்வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர்முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதாஎன்று கூறினார்யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றனதூதர் ஓடிஇதனை மன்னன்பால் புகன்றனர்அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன்.  அதைக் கண்ட யானைகள் அஞ்சிதங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின.  வாழைத்தண்டு பட்டது போல்அவருக்கு மென்மையாக இருந்ததுதந்தங்கள் ஒடிந்தனயானைகள் அயர்வுற்று அகன்றன.

 

ஏவலர் ஓடிஇதனைக் காவலன்பால் இயம்பினர்கனகன் சிரித்து"அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்என்றான்.  பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டிஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர்அவர் 'ஓம்நமோநாராயணாயஎன்று உருண்டார்பூமிதேவி பெண்வடிவம் தாங்கிஅக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கிஉச்சிமோந்துமுத்தமிட்டு ஆதரித்தனள்பிரகலாத ர்பூமிதேவியைப் போற்றி நின்றார்.  பூதேவி"கண்ணேகுழந்தாய்உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்என்று அருள் புரிந்தனள்.  ஞான க்குருந்தர்"அம்மா இளம் பருவத்தில் தவழுமபோதும், நடக்கும்போதும் தவறி விழுந்தால்உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்என்று வரம் கேட்டனர்அவ்வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

 

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான்நிலவறைக்குள் அடைப்பித்தான்விஷத்தை உண்பித்தான்பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான்சாந்தசீலராகிய அவர், "சாகரசயனாஎன்று துதித்தனர்கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர்இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான்ஒன்றாலும் பிரகலாதருக்குஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லைஇவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லைமேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

 

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர்இரணியன் அவரை அழைத்துசிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான்அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம்நமோநாராயணாய" என்று சிந்தித்தவண்ணமாக நின்றார்

 

இரணியன் அவருடைய உறுதியைக் கண்டுஇறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களேஎன் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன்.  இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன்என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன்.  நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும்பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்கவேண்டும்.  அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு, இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவதுபோல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான்என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்"என்று சொல்லி"கண்ணேபிரகலாதாஉனது அறிவின் திட்பத்தை மெச்சினேன்இப்படிவாமகனேஅந்த மாயவன் எங்குளன் கூறுஎன்று வினவினான்.

 

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர்"ஐயனே! மலரில் மண ம்போல்எள்ளுக்குள் எண்ணெய போல், என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான்உன்னிலும் உள்ளான்என்னிலும் உள்ளான்அவன் இல்லாத இடமில்லைஎன்றார்இரணியன், "மைந்தாஎன்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படிஉன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லைஇதோஇந்தத் தூணில்உள்ளானோஉரைஎன்று கேட்டான்.

 

"சாணிலும்உளன்ஓர்தன்மை அணுவினைச் சதகூறுஇட்ட

கோணிலும்உளன்மாமேருக் குன்றிலும்உளன்இந்நின்ற

தூணிலும்உளன்முன்சொன்ன சொல்லிலும்உளன்இத்தன்மை

காணுதி விரைவின்"என்றார், "நன்று"எனக் கனகன் சொன்னான்.

 

பிரகலாதர்"தாதாய்அப்பரமன் சாணிலும் உளன்அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன்மேருவிலும் உளன்இத்தூணிலும் உளன்உளன் என்னும் சொல்லிலு ம்உளன்.  காணுதிஎன்று அருளிச் செய்தார்.

 

இரணியன் சீற்றம் மிக்கு"பேதாய்நீ கூறியபடி இத்தூணில் அந்த அரி இல்லையானால்சிங்கம் யானையைக் கொன்று தின்பது போல், உன்னை யான் கொன்று தின்பேன்என்றான்.  பிரகலாதர்"அப்பா! என்னை உம்மால் கொல்ல முடியாதுஎன் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின்என் உயிரை யானே விடுவன்நான் அவன் அடியனும் அல்லன்என்றார்.

 

"என்உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்றுஅன்றுயான்முன்

சொன்னவன் தொட்டதொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.

என்உயி ர்யானே மாய்ப்பன்பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,

அன்னவற்கு அடியேன் அல்லேன்"என்றனன் அறிவின் மிக்கான்.

 

கனகன் உடனே தனது கரத்தினால் அத்தூணை அறைந்தான்.  அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன்பிரகலாத ர்சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார்

 

இரணியன்"ஆரடா சிரித்தாய்சொன்ன அரிகொலோஅஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படுஎன்றான்பிளந்ததது தூண்நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும்ஆயிரம் ஆயிரம் சிரங்களும்அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டுஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும்பிடித்தும்கொன்றும்தின்றும்மென்றும்எற்றியும்உதைத்தும்வதைத்து அழித்தனர்.

 

அது கண்ட கனகன் அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான்பிரகலாதர்பிதாவை வணங்கி"தந்தையேஇப்போதாவது மாதவனை வணங்குஉன் பிழையைப் பொறுப்பன்என்றார்இரணியன்"பேதாய்உன் கண்காண இந்த நரசிங்கத்தையும் உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்என்றான்.

 

"கேள்இதுநீயும்காணக் கிளர்ந்த கோள்அரியின்கேழல்

தோளொடு தாளும்நீக்கிநின்னையும் துணித்து,பின்எ ன்

வாளினைத் தொழுவது அல்லால் வணங்குதல் மகளீரூடல்

நாளினு ம்உளதோ என்னா அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்.

 

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றிபகலிலும் இல்லாமல்இரவிலும் இல்லாமல்அந்தி வேளையிலேவீட்டிலும் இல்லாமல் வெளியிலும் அல்லாமல்அவன் அரண்மனை வாசற்படியிலேவிண்ணிலும் அல்லாமல்மண்ணிலும் அல்லாமல்மடித்தலத்தில்  வைத்துஎந்த ஆயுதத்திலும் அல்லாமல்தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறிஅவனுடைய குடலை மாலையாகத் தரித்துஅண்டங்கள் நடுங்க ஆர்த்தனர்

 

திருமகளை வேண்டஅத் தாயார் நரசிங்கத்தை அணுகினர்நரசிங்கப்பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர்நரசிங்கர் பிரகலாதரை எடுத்துஉச்சிமோந்துசிரமேல் கரமலரை வைத்து"குழந்தாய்!உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன்.  என்ன வரம் வேண்டும்என்று கேட்டருளினர்பிரகலாதர்"பெருமானேஎன் தந்தை உயிருக்கு நன்மையும்உன் திருவடியில் மறவாத அன்பு வேண்டும்என்றார்நரசிங்கமூர்த்தி மகிழ்ந்துவானவர்க்கும் தானவர்க்கும் அரசாகிசிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.

 

உரிய தவநெறியில் நமநாராயணாய என,

     ஒருமதலை மொழிஅளவில் ஓராதகோபமுடன்,

     உனதுஇறைவன் எதனில்உளன் ஓதாய்,  அடாஎனுமுன் ...... உறுதூணில்                            

உரம்உடைய அரிவடிவதாய்மோதிவீழவிரல்

     உகிர்புதையஇரணியனை மார்பீறி,வாகைபுனை

     உவணபதிநெடியவனும்வேதாவும்நான்மறையும்   ...... உயர்வாக                                         

வரிஅளிகள் இசைமுரல,வாகான தோகைஇள

     மயில்இடையில் நடனம்இடஆகாச ம்ஊடுஉருவ

     வளர்கமுகின் விரிகுலைகள் பூண்ஆரம் ஆகியிட     ......மதில்சூழும்                                        

மருதுஅரச ர்படைவிடுதி வீடாகநாடி,மிக

     மழவிடையின் மிசைஇவரும் சோமீசர் கோயில்தனில்

     மகிழ்வுபெற உறை முருகனேபேணு வானவர்கள்          ......பெருமாளே.                                       

                                                                        --- (கரியகுழல்திருப்புகழ்.

 

கனகன் அங்கையினால் அறைதூண்இடை

     மனிதசிங்க ம்அதுஆய்வரைபா ர்திசை

          கடல் கலங்கிடவே பொருதேஉகிர்...... முனையாலே

கதறவென்று,உடல் கீணவன் ஆருயிர்

     உதிரமு ம்சிதறாத அமுதாய் உணும்,

          கமல உந்தியன் ஆகியமால் திரு...... மருகோனே!  --- (மனமெனும்திருப்புகழ்.                         .

 

அருமறை நூல்ஓதும் வேதியன்,

     இரணிய ரூபாநமோ என,

          அரிஅரி நாராயணா என...... ஒருபாலன்,

அவன் எவன் ஆதாரம் ஏதுஎன,

     இதன் உளனோ ஓது நீஎன,

          அகிலமும் வாழ்வான நாயகன்...... என,ஏகி

 

ஒருகணை தூணோடு மோதிட,

     விசைகொடு தோள்போறு ,வாள்அரி,

          உகிர்கொடு வாரா நிசாசரன்...... உடல்பீறும்

உலகு ஒருதாள் ஆன மாமனும்,

     உமைஒரு கூறுஆன தாதையும்,

          உரைதருதேவா!  சுரஅதிபர்...... பெருமாளே.  --- (இருகுழைமீதோடிதிருப்புகழ்

                           .

 

திகிரி தர--- 

 

திகிரி --- சக்கரம். 

 

சிவபெருமான் சலந்தரனைக் கொன்ற சக்கராயுதம் தனக்கு வேண்டும் என்று திருமால்தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களால் அருச்சனை புரிந்து கொண்டு இருந்தார். திருமால் புரிந்த பூசைக்கு இரங்கிஅவர் கொண்டு வந்த விண்ணிழி விமானத்தில் இருந்துசக்கரத்தை அருள் புரிந்தார் சிவபெருமான்.

 

நீற்றினை நிறையப் பூசி,நித்தல் ஆயிரம்பூக் கொண்டு

ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக் கண் இறைய இட்ட

ஆற்றலுக்கு ஆழி நல்கி,அவன்கொணர்ந்து இழிச்சும் கோயில்

வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்த னாரே.   --- அப்பர் தேவாரம்.

                                          

 

மரகத கிரி--- 

 

மரகத கிரி --- பச்சை மலை.

 

பச்சை மலை போல் திருமேனி உடைழவர் திருமால்.

 

எரி உமிழ் உரக சுடிகையில் நடம் நவில் அரி--- 

 

உரகம் --- பாம்பு.  எரி உமிழ் உரகம் --- நெருப்பைக் கக்குவது போன்று கொடிய விடத் தன்மை உடைய பாம்பு.

 

சுடிகை --- தலை உச்சி.

 

காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் தலை உச்சியில் கண்ணன் நர்த்தனம் புரிந்தார்.

 

யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று,மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்துபாம்பினுடன் போர்புரிந்து வென்று அப் பாம்பின் படத்தின்மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.

 

காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.

 

"லகரமே போல் காளிங்கன் அல் உடல் நெளிய நின்று 

தகர மர்த்தனமே செய்த சங்கு அரி"

 

என்றார் பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய சண்முக கவசத்தில்.

 

காளிங்க நர்த்தனத்தின் உட்பொருள் இதுதான்.

 

உருகும் அடியவர் இருவினை இருள்பொரும் உதய தினகர --- 

 

தினகரன் --- கதிரவன். 

 

நல்வினைதீவினைகள் ஆகிய இருவினைகளை "இருள்சேர் இருவினை" என்றார் திருவள்ளுவ நாயனார். இருள் என்பது இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பம். இவ்வுலகை விட்டுச் சென்ற பின்னர்நரகத்தில் அனுபவிக்கும் துன்பம். 

 

கதிரவனைக் கண்டதும் இருள் ஓடுவதைப் போஇறைவனுடைய அருள் வெளிப்பட்டதும்உயிர்களின் இருவினை அகலும்.

 

அருணன் இந்திரன்திசை அணுகினன்,இருள்போய்

            அகன்றது,உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

            கடிமலர் மலரமற்று அண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

            திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

            அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. --- திருவாசகம்.

 

இமகரன் வலம் வரும் உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே--- 

 

இமம் --- பனி.  இமகரன் --- பனியை நீக்குபவன்.

 

கதிரவன் உதயமாகும் பொழுதுபனியானது நீங்கி விடும். கதிரவன் வலம் வருகின்ற உலகத்தை ஒரு நொடிப் பொழுதில் வலமாக வந்தவர் முருகப் பெருமான்.

 

தந்தையார் கரத்தில் இருந்த கனி காரணமாகஉலகங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதுக்குள் மயில் மிசை அயில்வேற் கடவுள் வலம் வந்தார் என்பது வரலாறு.

 

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆறுமுகக் கடவுள்பிரணவ வடிவமாகிய மயில்மிசை எழுந்தருளியபோதுஅவருடைய அருட்பிரகாசம் எங்கும் ஒளிர்கின்றது. அந்த உண்மையை உணர்த்துவதே இவ்வரலாறு என உணர்க.

 

கருத்துரை

 

முருகா! அடியேன் சிவபதம் அடைய அருள்வாய்.

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...