043. அறிவுடைமை --- 02. சென்ற இடத்தால்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள்வரும் இரண்டாம் திருக்குறளில், "மனத்தை,அது போன விடயங்களில் போகவிடாமல்விடயங்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்துதீயதில் இருந்து நீக்கிநல்லதன் இடத்துச் செலுத்துவது அறிவுடைமை ஆகும்" என்றார் நாயனார்.

 

     அதாவதுகுதிரையைச் செலுத்துகின்ற வாதுவன் என்னும் குதிரைத் தலைவன்தான் குதிரையை ஓட்டும் காலத்தில்செல்லுகின்ற நிலத்தின் தன்மையை அறிந்துசேறு முதலிய இடங்களில் செல்லவிடாதுநல்ல நிலத்திலேயே செல்லவிடுவான். அதுபோலஅறிவு உடைய ஒருவனும்தனது மனத்தைசுவை ஒளிஊறுஓசைநாற்றம் என்கின்ற ஐம்புலன்களில் செலுத்தும்போதுதீயதை விடுத்துநன்னெறியில் செலுத்துவது அறிவுடைமை ஆகும். 

 

திருக்குறளைக் காண்போம்....

  

சென்ற இடத்தால் செலவிடாதுதீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.

 

இதற்குப் பரிமேலகர் உரை ---

 

     சென்ற இடத்தால் செலவிடாது--- மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது

 

     தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு--- அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.

 

            (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசைஊறுஒளிசுவைநாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்என்றார். 'விடாதுஎன்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவுஎன்றார்அஃது உயிர்க்குணம் ஆகலான்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்....

 

மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்

    புலன் ஐந்தின் வழி அடைத்துமுதே

ஊறி நின்றுன்னுள் எழுபரஞ் சோதி!

    உள்ளவா காணவந்து அருளாய்,

தேறலின் தெளிவே! சிவபெரு மானே!

    திருப்பெருந் துறையுறை சிவனே!

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த

    இன்பமே! என்னுடைய அன்பே!.  --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து,என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின்வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

 

 

அறிவு உடையார் நெஞ்சு அகலிடம் ஆவது,

அறிவு உடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது,

அறிவு உடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்

அறிவு உடையார் நெஞ்சத்து ஆகி நின்றானே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்து உலகங்களையும் உட்கொள்ள வல்லனசெய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால்முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்துஅவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.

 

 

அறிவு வடிவு என்று அறியாத என்னை,

அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி;

அறிவு வடிவு என்று அருளால் அறிந்தேன்,

அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே.  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     மயக்கத்தால், `எனது வடிவம் அறிவுஎன்னும் உண்மையை அறியாது. `உடம்பேஎன்று மயங்கியிருந்த என்னைநந்திபெருமான் தோன்றி,அம் மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பு அன்றுஅறிவுஎன அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்றுஎன உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.

 

 

அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்மின்,

அறிவு அறிவாக அறியும் அவ் வண்ணம்

அறவு அறிவாக அணிமாதி சித்தி

அறிவு அறிவாக அறிந்தனன் நந்தியே.  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     மெய்யறிவு வேண்டுவீர்உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின்அதனைச் சிவனும் அறிந்துபயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றிஇடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.

 

அறவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்,

அறிவு அறியாமையை யாரும் அறியார்,

அறிவு அறியாமை கடந்துறிவு ஆனால்

அறிவு அறியாமை அழகிய வாறே.    ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உலகினர், `எமக்கு அறிவு வேண்டும்அறிவு வேண்டும்என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும்அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு, அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார்அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கிஅறிவு அறிவாகுமானால்முன்பு `அறிவுஎன்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுக்கு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.

 

சென்றவரைத் தாம் ஆக்குந் தில்லைச் சிற்றம்பலத்து

மன்றவரைத் தாம் ஆக்க வல்லவர்யார்?- என்றும்இவர்

ஆடப் பதம் சலியார் ஆக்கினார்,என்பிறவி

சாடு அப் பதஞ்சலியார் தாம்.    --- சிதம்பர மும்மணிக் கோவை.

 

     தம்பாலே வந்தவரைத் தம்மைப்போல் ஆக்குவிக்கும் நடராசப் பெருமானைப் பதஞ்சலி முனிவர்,தம்மைப் போலப் பதம் சலியாதார் ஆக்கினார் என்பது இதில் உள்ள நயம். 

 

காடுங் கரையும் மனக்குரங்கு

     கால்விட்டு ஓட,அதன்பிறகே

ஓடும் தொழிலால் பயன் உளதோ?

     ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்கு உயிராய்

ஆடும் கருணைப் பரஞ்சோதி

     அருளைப் பெறுதற்கு அன்புநிலை

தேடும் பருவம் இதுகண்டீர்

     சேர வாரும் சகத்தீரே.   --- தாயாமானவர்.

 

இதன் பொருள் ---

 

     நொடிப்பொழுது கூட அமைதியில்லாமல் காட்டிலும் மேட்டிலும் ஓய்வின்றி ஓடி உழலும் குரங்கை ஒத்த மனத்தின் பின்னால்,ஆராயாமல் நாமும் ஓடுகின்ற தொழிலால் பெறும் பயன் ஏதும் இல்லைகலப்பினால் ஒன்றாய்,பொருள் தன்மையால் வேறாய்உயிர்க்கு உயிராய் நின்று உதவும் தன்மையால் உடனாய் நின்று அருளும் சிவபெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் ஐம்பெருந் திருக்கூத்தினையும் ஆடியருளும் பேரறிவுப் பெருஞ்சுடராவன்அவனுடைய திருவருளைப் பெறுதற்கு வேண்டிய இறவாத இன்ப அன்பு நிலையினைத் தேடும் நற்பருவம் இதுவாகும்அதனால்,உலகவரே! சேர வருவீராக.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...