047. தெரிந்து செயல்வகை --- 09. நன்றாற்றல் உள்ளும்

                                                                         திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவதுதான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்,சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அவரவருடைய இயல்புகளை ஆராய்ந்து  செயல்களைச் செய்யாவிட்டால்நல்ல உபாயத்தால் செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

 

     நல்ல உபாயமாவதுகொடுத்தலும்இனிய சொற்களைச் சொல்லுதலும் ஆகும். அவரவர் குணங்களை அறியாதுஉபாயத்திற்கு உரியவர் அல்லாதவரிடத்தில் செய்தல் தவறு.

 

திருக்குறளைக் காண்போம்...

 

      

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டுஅவர் அவர்

பண்பு அறிந்து ஆற்றாக் கடை.         

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு--- வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்

 

     அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை --- அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.

 

       (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின்உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவதுஅவற்றிற்கு உரியர் அல்லாதார் கண்ணே செய்தல். தவறுஅவ்வினை முடியாமை.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஆய்தொடியார் கண்ணுதல்பால் அன்பின் உமிழ்தலுமே

வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர்போல்,--- தூய்மையொடு

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டுஅவர் அவர்

பண்பு அறிந்து ஆற்றாக் கடை.    

 

      ஆய்தொடியார் --- திருநீலநக்க நாயனாரின் மனைவியார்.  

 

     உண்மை அறியாது தம் மனைவியைக் கண்டித்தவர் திருநீலநக்க நாயனார். திருநீலநக்கர் தம் மனைவியுடன் கோயிலுக்குச் சென்று பரமனை வழிபடுங்கால்ஒரு சிலம்பி சுவாமியின் மேல் விழுதல் கண்ட அவர் மனைவியார் அதனைத் தம் வாயால் ஊதி விலக்கினார். இச்செயலை அனுசிதம் எண்ணிய கணவனார், தமது மனைவியை நீத்தார். அன்று இரவு சிவபெருமான் நாயனாரின் கனவில் தோன்றி, 'உம் மனைவி ஊதிய பாகம் போக,மற்ற இடங்களில் என் உடலில் இதோ பார் கொப்புளங்கள்''என்று காட்டி அவருடைய மனைவியாரின் தலையன்பைப் புலப்படுத்தினார் என்பது பெரியபுராணத்தில் கண்ட வரலாறு ஆகும். தம் மனைவியை இவர் கண்டித்தது உலக இயல்புக்கு ஒத்ததேனும்அது தவறு என்பது இவ்வரலாற்றால் விளங்கும்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

                                                                                    

பன்மறையோர்க்கு ஆன்அளித்த பாரரசன் கோம்பிஎனும்

சென்மம் எடுத்தான்,சிவசிவா! - உன்னின்மிகு

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்

பண்புஅறிந்து ஆற்றாக் கடை.               

 

இதன் பொருள் ---

 

     ஓர் அரசன் பல மறையவர்க்கு நாளும் ஆயிரம் பசுத் தானம் பண்ணினான். அம் மறையவர் சாபத்தால் அவ் அரசன் பச்சோந்தியாகப் பிறந்தான். இதன் வரலாறு அறியக் கூடவில்லை.

                                                                        

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...