044. குற்றம் கடிதல் --- 02. இறவலும் மாண்பு இறந்த

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்டவர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழவிப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. "கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது.அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பொருளைப் பிறர்க்குக் கொடாமல் இறுக்கி வைத்தலும்மாட்சிமை அற்ற தன்மானமும்நலம் அல்லாதவற்றில் தங்கும் அளவற்ற மகிழ்ச்சியும் தலைவனுக்குக் குற்றங்கள்" என்கின்றார் நாயனார்.

 

     ஆறுவகையான பகைகளில்முன்னர் மதமும்வெகுளியும்காமமும் பற்றிக் கூறிய நாயனார்இத் திருக்குறளில் ஏனைய மூன்று குற்றங்களைக் கூறினார்.

 

     இவறல் --- பொருள் மேல் இவர்ந்து எழுகின்ற பேராசை. அகப்பட்ட பொருளைக் கைவிடாமை. உலோபம் எனப்படும். தானும் நுகராமல்பிறரையும் நுகரச் செய்யாமல் தடுத்தல் ஆகிய குணம். இம்மை மறுமை நலன்களைக் கெடுக்கவல்லத இந்தத் தீய குணத்தை அறவே விட்டு ஒழித்தல் வேண்டும்.

 

     மாண்பு இறந்த மானம் --- வணங்க வேண்டிய இடத்து வணங்குதற்கு மனம் கொள்ளாது பெருமிதம் கொண்டு இருத்தல். வணங்க வேண்டிய பெரியோர்தாய்தந்தைதம்முன் பிறந்தான் ஆகிய இவர்களைஎத்துணைப் பெரியவன் ஆயினும் வணங்கியே ஆதல் வேண்டும். செல்வச் செருக்கால் வணங்காது அவமதிப்பானாயின்அதனால் உண்டாகும் பெரும்பாவத்திற்கு ஆளாகிஇருமை நலனையும் இழக்க நேரிடும்.

 

     மாணா உவகை --- அளவில் அடங்காத மகிழ்ச்சி கொள்ளுதல். இது,நன்மை தீமை அறியாதுஅறிவைக் கெடுத்துத் தீயவழியில் செலுத்தும். ஆதலால்இதனை முற்றும் ஒழித்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

     

இவறலும்மாண்பு இறந்த மானமும்மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.                      

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     இவறலும்--- வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்

 

     மாண்பு இறந்த மானமும்--- நன்மையின நீங்கிய மானமும்

 

     மாணா உவகையும்--- அளவிறந்த உவகையும்

 

     இறைக்கு ஏதம்--- அரசனுக்குக் குற்றம்.

 

     (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்என்றார். அஃதாவது, 'அந்தணர்சான்றோர்அருந்தவத்தோர்தம் முன்னோர்தந்தைதாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண்-33) வணங்காமையும்முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவதுகழிகண்ணோட்டம்பிறரும், 'சினனே காமம் கழிகண்ணோட்டம்என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார்.)

 

பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்....

 

எழு இனி நெஞ்சம்,செல்கம்,யாரோ

பருகு அன்ன வேட்கை இல்வழி,

அருகில் கண்டும் அறியார் போல

அகம் நக வாரா முகன் அழி பரிசில்,

தாள் இலாளர் வேளார் அல்லர்,

வருக எனல் வேண்டும் வரிசையோர்க்கே

பெரிதே உலகம்,பேணுநர் பலரே,

மீளி முன்பின் ஆளி போல

உள்ளம் உள் அவிந்து அடங்காது,வெள்ளென

நோவா தோன் வயின் திரங்கி

வாயா வன்கனிக்கு உலமரு வோரே.    --- புறநானூறு.

 

     இளவெளிமான் தந்த சிறு பரிசிலை வெறுத்துக் பெருஞ்சித்திரனார் பாடியது. புலவரை மதித்துப் போற்றத் தவறிய இளவெளிமானை வெறுத்துதன் நெஞ்சுக்கு நீதியாய்ச் சொன்னது.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! எழுந்திரு. நாம் வேறு எங்காகினும் போகலாம். விருப்பம் இல்லாது தருகின்ற பரிசிலை யாராவது விரும்பி ஏற்பார்களாகண்டும் காணாதவர் போல் செல்லும்உள்ளன்பு இல்லாதவர் தருகின்ற பரிசு நமக்கு எதற்குஇப்படிப்பட்டவர்கள் பரிசிலரும் அல்லர். பரிசில் வேண்டி வருவோரை வரவேற்றுப் பரிசில் தருவோர் உலகம் மிகப் பெரியது. பரிசில் பெறுகின்ற நம் போன்றவர்களும் நாட்டில் மிகப் பலர் உண்டு. உள்ளன்போடு வரும்பி வரவேற்றுப் பரிசில் தராதவர்களை நாடிஎன் போன்றவர்கள் பரிசில் பெற விரும்பார். கனியாத பழங்களைப் போன்றவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களிடம் சென்று இரங்கி நிற்பதை விடுத்துவிரும்பி வரவேற்றுப் பிரிசில் தரக் காத்திருப்போரிடம்நெஞ்சேநாம் போவோம்.

            

அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும்கல்லார்

அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும்,- நவைஅஞ்சி

ஈத்து உண்ணார் செல்வமும்,நல்கூர்ந்தார் இன்னலமும்

பூத்தலில் பூவாமை நன்று.            --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்றார் அவைக்கு அஞ்சி உடம்பு நடுங்குவோருடைய கல்வி அறிவும்படிக்காதவர்கள் உடைய அவைக்கு அஞ்சாத ஆரவாரச் சொல்லும்குற்றத்துக்கு அஞ்சிக் கொடுத்து உண்ணாதவர்கள் செல்வமும்வறியவர்களுடைய ஈகை முதலிய இனிமையான தன்மைகளும்ஆக இந்த நான்கு தன்மைகளும்உண்டாதலை விட உண்டாகாமலிருத்தலே நன்று.

 

 

பட்டார்ப் படுத்து,படாதார்க்கு வாள்செறித்து

விட்டு ஒழிவது அல்லால் வெங்கூற்றம்--ஒட்டிக்

கலாய்க் கொடுமை செய்யாது. கண்டது பாத்து உண்டல்

புலால் குடிலால் ஆய பயன்.     --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     கொடிய இயமன் ஆனவன்முற்பிறவியில் அறம் செய்யாதுகுறைந்த வாழ்நாளை இப் பிறவியில் பெற்றவர்களைக் கொல்வான்முற்பிறவியில் அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளை இப்பிறவியில் பெற்றவர்களைக் கொல்லாமல்தனது வாளை உறையின் உள் புதைத்து விடுவான். எனவேஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துதானும் உண்ணுதலேஇந்தப் புலால் உடம்பைப் பெற்றதன் பயன் ஆகும்.

 

 

மலர்ந்தசெவ் வந்திப் போதும் 

     வகுளமும் உதிர்ந்து வாடி

உலர்ந்துமொய்த்து அளி தேன் நக்கக் 

     கிடப்பன,உள்ளம் மிக்க

குலந்தரு நல்லோர் செல்வம் 

     குன்றினும் தம்பால் இல்என்று

அலந்தவர்க்கு உயிரை மாறி

     ஆயினும் கொடுப்பர் அன்றோ.  --- திருவிளையாடல் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     விரிந்த செவ்வந்தி மலரும் மகிழம் பூவும்நிலத்தில் உதிர்ந்து வாடிப் புலர்ந்தும்வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பன ஆயினஉயர்ந்த உள்ளம் உடையஉயர்குடிப் பிறந்த நல்லோர்கள் தமது செல்வம் சுருங்கிய இடத்தும்தம்மிடத்து வந்து இல்லை என்று கூறி வருந்தியவர்க்கு,  தம் உயிரை மாறியாகிலும் கொடுப்பார் அல்லவா.

                                                            

  

வைத்த அதனை வைப்பு என்று உணரற்க,தாம் அதனைத்

துய்த்து வழங்கி,இருபாலும் --- அத்தகத்

தக்குழி நோக்கி அறம் செய்யின்,அஃது அன்றோ

எய்ப்பினில் வைப்பு என்பது.     --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தான் தேடிப் பாதுகாவலாக வைத்த செல்வத்தை,பின்னர் ஆபுத்துக் காலத்திலே வந்து பயன் தரக் கூடிய வைப்பு என்று கருதவேண்டாம். அப்பொருளைத் தாமும் நுகர்ந்தும்பிறருக்குக் கொடுத்தும்இருமைக்கும் அழகு உண்டாகுமாறுசெய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்தால்தளர்ந்த காலத்து உதவும் பொருள் ஆகிய வைப்பு என்பது அது அன்றோ?

 

 

மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,

செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்,--- மெல்லியல்

சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்! பைங்கரும்பு

மென்று இருந்து பாகு செயல்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மென்மையான சாயலையும்தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையவளே! அறிவாலே மாட்சிமை உடைவயர்தாம் வளமான செல்வத்தைப் பெற்றபோதுஅதனைக் கொண்டு தாம் மறுபிறப்பிலும் இன்புறும்படியாகதமக்குப் பாதுகாப்பைத் தருவதான அறச் செய்ல்களைச் செய்து வருவார்கள். அவ்வாறு செய்வதுபசுமையான கரும்பினை, அது கிடைத்தபோது தின்று சுவைத்து அறிந்துபின்னரும் பயன்படுமாறு அதன் சாற்றினைப் பாகு காய்ச்சி வெல்லக் கட்டியாக்கி வைத்துக் கொள்வது போன்றது என்பதை அறிவாயாக.

 

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லைபிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோவது இல்லைஇடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று  கொடுக்க அறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

                                                                                                ---  பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

            திருக்கச்சியம்பதியில் திருக்கோயில் கொண்டு இருக்கும் ஏகாம்பர நாதரே! அடியேன் பூமியில் பிறக்கும் காலத்தும் கொண்டு வந்ததாகிய பொருள் ஒன்றும் இல்லை. பூமியில் வந்து பிறந்து சாகும் காலத்திலும் கொண்டுபோகும் பொருள் வேறு ஒன்றும் இல்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வாழும் வாழ்க்கையில் தோன்றிய செல்வம்எல்லாம் வல்லவனாகிய இறைவனால்ஆன்மாக்களின் வினைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்டது என்று எண்ணிஇரப்பார்க்குக் கொடுக்க அறியாமல்வீணாக உயிரைவிடும் கீழ்மக்களுக்கு நான் ஏது சொல்லுவேன்?

 

நாயாய் பிறந்திடில் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்

காயா மரமும்வறளாம் குளமும்கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய்கச்சி ஏகம்பனே!    ---  பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

     திருக்கச்சியம்பதியில் திருக்கோயில் கொண்டு இருக்கும் ஏகாம்பர நாதரே! நாயாகப் பிறந்தாலும் நல்ல வேட்டை ஆடித் தன்னை வளர்ப்பவனுக்கு நலம் புரியலாம். தாயார் வயிற்றில் மனிதர்களாகப் பிறந்துபின் செல்வம் உள்ளவர்களாய்,காயாத மரத்தையும்நீர் வற்றிப் போன குளத்தையும்கல்லால் ஆன பசுவையும் போலஒருவர்க்கும் ஒன்றையும் கொடாத மனிதரைஇந்தப் பூமியில் யாது பயன் கருதிப் படைத்தாய்?

 

 

பதர் ஆகிலும்கன விபூதிவிளை விக்கும்,

     பழைமைபெறு சுவர் ஆகிலும்

பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும்மலம்

     பன்றிகட்கு உபயோகம்ஆம்,

 

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும்வன்

     கழுதையும் பொதிசுமக்கும்,

கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம்,பெருங்

     கான்புற்று அரவமனை ஆம்,

 

இதம் இலாச் சவம் ஆகிலும் சிலர்க்குதஉவிசெய்யும்,

     இழிவுறு குரங்காயினும்

இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும்வாருகோல்

     ஏற்ற மாளிகை விளக்கும்,

 

மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்

     மற்றொருவருக்கும் உண்டோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.                          --- குமரேச சதகம்.

 

     இதன் பொருள் ---

 

மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

பதராக இருந்தாலும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப் பயன்படும்பழைமையான குட்டிச் சுவராக இருந்தாலும் அமர்வோருக்கு மறைவைத் தருவதோடு,மாடு தன் உடல் தினவைத் தீர்க்கஉடம்பைத் தேய்த்துக் கொள்ளவும் பயன்படும்மலமானது பன்றிகளுக்கு உணவாகப் பயன்படும்சீற்றம் மிகுந்த எருமைக் கடாவானது உழுது உலகை உண்பிக்க உதவும். வலிய கழுதையும் பொதியைச் சுமக்கும்கல்லானது தெய்வச் சிலைகளை வடிக்கப் பயன்படும்திருக்கோயில்களை அமைக்க உதவும்பெரிய காட்டிலுள்ள புற்றுக்கள் பாம்பிற்கு இருப்பிடம் ஆகும்நலம் இல்லாத பிணமானாலும் அதை அடக்கம் செய்யும் சில தொழிலாளிகட்கு வருவாயைக் கொடுக்கும்இழிவான குரங்காக இருந்தாலும்,தன்னைப் பிடித்து ஆட்டுபவர்களுக்குப் பிச்சை எடுக்கத் துணை புரியும்துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை செய்ய உதவும்செல்வத்தால் செருக்குப் பிடித்துமிகுந்த கஞ்சத் தனத்தை உடையவர்களால் பிறருக்கு நன்மை உண்டாகாது.

 

 

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள்உப காரம் ஆகும்;

சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,

மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என்உண் டாமே?        --- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் --- 

 

     மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே!தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே!வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும்,என்  உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார்  வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும்,என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டிவைக்கப்படுகின்ற மாவாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம்--- அது போலவேசிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

 

 

திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்,பணம்

     தேடிப் புதைத்துவைப்பார்;

சீலைநல மாகவும் கட்டார்கள்;நல்அமுது

     செய்து உணார்;அறமும்செயார்;

 

புரவலர்செய் தண்டம் தனக்கும் வலுவாகப்

     புகும் திருடருக்கும் ஈவார்;

புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்;

     புராணிகர்க்கு ஒன்றும் உதவார்;

 

விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்

     வெகுபணம் செலவாகலால்,

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என

     மிகுசெட்டி சொன்னகதை போல்,

 

வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள்

     மற்றொருவருக்கு ஈவரோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.           --- குமரேச சதகம்.

 

இதன் பொருள் ---

 

     மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.  நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.  நல்ல உணவு சமைத்துச் சாப்பிடமாட்டார்அறவழியிலும் செலவிடார்.  அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும்வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார்புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார்புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.  குழந்தையானது அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்மிக்க பொருள் செலவழிவதனாலே,  கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்றுமிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி ஒருவன் கூறிய கதையைப் போல,  உலோபியர்கள் பொருள் வருவாயை மட்டுமே நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ? (கொடுக்கமாட்டார்)

 

பொருட் பாலை விரும்புவார்கள்,காமப்பால் 

     இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே 

     விரும்பார்கள்,அறிவொன்று இல்லார்,

குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் 

     புரவலர்பால் கொடுக்கக் கோரார்,

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி 

     செம்பொன் சேவித்து இடுவார்.    --- விவேக சிந்தாமணி.

 

     அறிவு சிறிதேனும் இல்லாத மூடர்கள்நிலையற்ற செல்வத்தின் தன்மையை விரும்புவார்கள். (அவ்வாறு விரும்பிச் செல்வம் தேடிய செருக்கு காரணமாக) பெண்ணாசை என்னும் கடலில் விழுந்து புரளுவார்கள். செல்வத்தால் தேட வேண்டிய புகழைப் பற்றியும்அறம் செய்து அருளைத் தேட வேண்டியதைப் பற்றியும்கனவிலும் விரும்பமாட்டார்கள். குருவுக்கோகடவுள் பூசைக்கோஅந்தணர்களுக்கோஅறச் செயல்களைப் பாதுகாத்து நடத்தும் புரவலர்களுக்கோ தாம் தேடிய செல்வத்தை ஈய சிறிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால்தங்களைப் பிடித்து செருப்பாலே அடித்துத் துன்புறுத்தும் திருடர்துட்டர் முதலியோருக்குமனம் விரும்பிதங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பொன்னைக் கொடுப்பார்கள்.

 

     நல்ல வழியில் செலவிடாத பொருள்கள் எல்லாம்தீய வழியில் தான் போகும் என்பது தெளிவாக்கப்பட்டது. "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்" என்பது கொன்றைவேந்தன்.

 

 

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...