043. அறிவுடைமை --- 10. அறிவுடையார் எல்லாம்

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும் கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "அறிவு உடையவர் என்பவர்,வேறு ஒன்றும் இல்லாதவராய் இருந்தாலும்அவர் எல்லாப் பேறுகளையும் உடையவர் ஆவார். அறிவில்லாதவர் என்ன பேறுகளை உடையவராய் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர் ஆவார்" என்கின்றார் நாயனார்.

 

     செல்வங்கள் எல்லாம் அறிவினால் சம்பாதிக்க முடியும் என்பதால் அறிவு உடையாரை "எல்லாம் உடையார்" என்றார். செல்வங்கள் யாவும் முன்னரே அமைந்து கிடந்தாலும்அவற்றை அழியாமல் காப்பதற்கும்ஊழ்வினையால் இழக்க நேர்ந்தாலும்சம்பாதித்துக் கொள்வதற்கும் கருவியாகிய அறிவு இல்லாதவரை, "என் உடையரேனும் இலர்" என்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அறிவு உடையார் எல்லாம் உடையார்,அறிவு இலார்

என் உடையரேனும் இலர்.   

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அறிவுடையார் எல்லாம் உடையார்--- அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர்

 

     அறிவிலார் என் உடையரேனும் இலர்--- அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.

 

       (செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின்அஃது உடையாரை 'எல்லாம் உடையார்'என்றும்அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின்அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்'  என்றும் கூறினார். 'என்னும்என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்.

 

அறிவு உடையான் அரு மாமறை உள்ளே

செறிவு உடையான்மி கு தேவர்க்கும் தேவன்,

பொறி உடையான் புலன் ஐந்துங் கடந்த

குறி உடையானொடும் கூடுவன் நானே. ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், "அறிவுடையான்எனப்படுதற்கு உரிமையுடையவனும்அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும்பெரிய தேவர்கட்கும் தேவனும்கண்செவி முதலிய பொறிகளையுடையனாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும்ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.

 

நுண்ணுணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால்

பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,

கண்ணவாத் தக்க கலம்.               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எண்ணுங்கால் --- ஆராயுமிடத்துநுண் உணர்வு இன்மை வறுமை --- ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமையாவது;அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் --- அந் நுட்ப அறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் --- மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதல்ண்ட உன்றோ! அதனை ஒத்ததே அறிவிலார் ஏனைச் செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க.

 

       நுண்ணுணர்வு இல்லாமை ஏனை எவை இருப்பினும் இல்லாமையையே தரும்.

 

அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன்

பிறிதினால் மாண்டது எவனாம்?- பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணியெல்லாம் ஆடையின் பின்.--- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பொறியின் --- சாணையால் கழுவுதலையுடையமணி பொன்னும் --- இரத்தினாபரணமும் பொன்னாபரணமும்சாந்தமும் மாலையும் இன்ன அணி எல்லாம் --- கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும்ஆடையின் பின் --- அழகுறச் செய்வதில் உடையின் பின்னே வைத்து எண்ணத்தக்கனவாம். ஆதலால்அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் --- அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன்பிறிதினால் மாண்டது எவனாம் --- செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?

 

       செல்வம் உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.

 

      ஆடை இல்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போலஅறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம். 

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...