பொது --- 1006. போதில் இருந்து

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

போதில் இருந்து (பொது)


முருகா! 

அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்ச அருள்வாய்.

 

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன

     தானன தந்தன தாத்தன ...... தனதான

 

போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி

     னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான

 

போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக

     ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண

 

ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட

     ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென்

 

ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி

     யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே

 

காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி

     வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின்

 

காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை

     மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை

 

சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு

     மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே

 

சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி

     வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

  

போதில் இருந்து விடாச் சதுர் வேதம் மொழிந்தவனால்,புளின்

     ஆகம் உகந்தவனால்,தெரிவு ...... அரிது ஆன,

 

போது உயர் செந்தழலாபெருவானம் நிறைந்த,விடாப் புக-

     ழாளன்,அரும் சிவகீர்த்தியன் ...... நெறிகாண

 

ஆதரவு இன்பு அருள் மாக் குருநாதன் எனும்படி போற்றிட,

     ஆன பதங்களை நாக் கரு ...... திடவேஎன்

 

ஆசை எணும்படி மேல் கவிபாடும் இதம்பல பார்த்து,டி

     யேனும் அறிந்துனை ஏத்துவது ...... ஒருநாளே?

 

காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால்கனி

     வாய் இதழின்சுவையால்பயில் ...... குறமாதின்

 

கார் அடரும் குழலால்கிரி ஆன தனங்களினால்கலை

     மேவும் மருங்கு அதனால்செறி ...... குழை ஓலை

 

சாதனம் என்று உரையாப் பரிதாபம் எனும்படி,வாய்த் தடு-

     மாறி,மனம் தளராத் தனி ...... திரிவோனே!

 

சாகரம் அன்று எரியாகொடு சூரர் உகும்படியாதிணி

     வேலை உரம் பெற ஓட்டிய ...... பெருமாளே.

 

பதவுரை

 

 

            காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் --- காதோடு மோதுவது போல் சென்று அதனோடு பூசல் இடுகின்ற மீன் போன்ற கண்களாலும்,

 

           கனிவாய் இதழின் சுவையால் --- கனியமுதம் போன்ற வாயிதழின் சுவையாலும்,

 

           பயில் குறமாதின்--- அழகு மிகுந்துள்ள குறமகள் ஆகிய வள்ளிநாயகியின்,

 

            கார் அடரும் குழலால்--- கருமேகம் போன்ற கூந்தலாலும்,

 

           கிரியான தனங்களினால்--- மலை போன்ற மார்பகங்களாலும்,

 

           கலை மேவு(ம்) மருங்கு அதனால்--- மேகலை என்னும் ஆடை அணிந்துள்ள இடையினாலும்கவரப்பட்டு,

 

            செறிகுழை ஓலை சாதனம் என்று உரையா--- உனது காதோலையே நான் உனக்கு எழுதித் தந்த சாசனம் என்று சொல்லி,

 

           பரிதாபம் எனும்படி வாய்த் தடுமாறி--- பரிதாபமாவாய் குழறி,

 

           மனம் தளராத் தனி திரிவோனே --- மனம் தளர்ந்து வள்ளிமலையில் தனியாகத் திரிந்தவரே!

 

            சாகரம் அன்று எரியா--- கடலானது அன்று கொந்தளிக்கும்படி,

 

           கொடு சூரர் உகும்படியா--- கொடிய அரக்கர்கள் மடியும்படி,

 

           திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே--- வலிய வேலை அவர்களது மார்பில் விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            போதில் இருந்து விடாச் சதுர்வேத(ம்) மொழிந்தவனால்--- தாமரை மலரை இருக்கையாகக் கொண்டு இருந்து,எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டு இருக்கின்ற பிரமதேவனாலும்,

 

           பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால்--- புள்ளரசு ஆகிய கருடனை விரும்பி வாகனமாக் கொண்ட திருமாலாலும்,

 

           தெரிவு அரிதான--- அறிதற்கு அரியவராகி,

 

           போது உயர் செம் தழலா--- அவர்கள் தம்மில் செருக்கித் தாமே கடவுள் என்று வாது புரிந்த போதுஉயர்ந்து எழுந்த செம்மையான நெருப்புப் பிழம்பாக,

 

           பெருவான(ம்) நிறைந்த விடாப் புகழாளன்--- வானளவும் நிறைந்து விளங்கிய பொருள் சேர் புகழாளன் ஆகி,

 

           அரும் சிவகீர்த்தியன்--- அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் 

 

            நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள்--- உண்மை நெறியினை அறியும்படியாக உள்ளம் மகிழ்ந்து மெய்ப்பொருள் இன்பத்தை உபதேசித்து அருளிய,

 

           மாக் குருநாதன் எனும்படி போற்றிட--- சிறந்த குருநாதன் என்று வணங்கித் துதிக்க,

 

            ஆன பதங்களை நாக் கருதிடவே--- இருக்கின்ற தேவரீரது திருவடிகளை எனது நாவாரப் பாடி உணர்ந்து,

 

           என் ஆசை எ(ண்)ணும்படி--- எனது ஆசையானது உம்மை எண்ணியே இருக்கும் நிலையில்,

 

          மேல் கவிபாடும் இதம் பல பார்த்து--- தேவரீர் மேல் கவி பாடுகின்ற இனிமையை பலவகையாக உணர்ந்து,

 

          அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒருநாளே--- அடியவன் ஆகிய நான் உம்மை (அறிவால்) அறிந்து தொழுது வழிபடுவதான ஒரு நாளும் வாய்க்குமோ?

 

பொழிப்புரை

 

     காதோடு மோதுவது போல் நீண்டு சென்று பூசல் இடுகின்ற மீன் போன்ற கண்களாலும்கனியமுதம் போன்ற வாயிதழின் சுவையாலும்அழகு மிகுந்துள்ள குறமகள் ஆகிய வள்ளிநாயகியின்கருமேகம் போன்ற கூந்தலாலும்மலை போன்ற மார்பகங்களாலும்மேகலை என்னும் ஆடை அணிந்துள்ள இடையினாலும்கவரப்பட்டு,உனது காதோலையே நான் உனக்கு எழுதித் தந்த சாசனம் என்று சொல்லிபரிதாபமாவாய் குழறி,மனம் தளர்ந்து வள்ளிமலையில் தனியாகத் திரிந்தவரே!

 

      கடலானது அன்று கொந்தளிக்கும்படிகொடிய அரக்கர்கள் மடியும்படிவலிய வேலை அவர்களது மார்பில் விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

     தாமரை மலரை இருக்கையாகக் கொண்டு இருந்து,எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டு இருக்கின்ற பிரமதேவனாலும்புள்ளரசு ஆகிய கருடனை விரும்பி வாகனமாக் கொண்ட திருமாலாலும்அறிதற்கு அரியவராகிஅவர்கள் தம்மில் செருக்கித் தாமே கடவுள் என்று வாது புரிந்த போதுஉயர்ந்து எழுந்த செம்மையான நெருப்புப் பிழம்பாக,வானளவும் நிறைந்து விளங்கிய பொருள் சேர் புகழாளன் ஆகி,அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன்உண்மை நெறியினை அறியும்படியாக உள்ளம் மகிழ்ந்து மெய்ப்பொருள் இன்பத்தை உபதேசித்து அருளிய,சிறந்த குருநாதன் என்று வணங்கித் துதிக்கஇருக்கின்ற தேவரீரது திருவடிகளை நாவாரப் பாடி உணர்ந்துஎனது ஆசையானது உம்மை எண்ணியே இருக்கும் நிலையில்,

தேவரீர் மேல் கவி பாடுகின்ற இனிமையை பலவகையாக உணர்ந்துஅடியவன் ஆகிய நான் உம்மை (அறிவால்) அறிந்து தொழுது வழிபடுவதான ஒரு நாளும் வாய்க்குமோ?

 

 

விரிவுரை

 

போதில் இருந்து விடாச் சதுர்வேத(ம்) மொழிந்தவனால்--- 

 

போது --- மலர். தாமரை மலர்.

 

மலர் என்றாலே தமாரையைத் தான் குறிக்கும். "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்னும் அப்பர் வாக்கை எண்ணுக.

 

சதுர்வேதம் --- நான்கு வேதங்கள்.

 

தாமரை மலரைத் தனது இருக்கையாக் கொண்டு எப்போதும் நான்கு வேதங்களையும் ஓதிக் கொண்டு இருப்பவர்் பிரமதேவர்.

     

பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால்--- 

 

புள் --- பறவை.  ஆகம் --- உடம்பு.

 

பொதுவாகப் பறவையைக் குறித்தாலும்இங்கே அது புள்ளரசு ஆகிய கருடனைக் குறிக்கும். கருடன் உடம்பின் மீது ஊர்ந்துள்ளவர் திருமால்.

 

தெரிவு அரிதான போது உயர் செம் தழலாபெருவான(ம்) நிறைந்த விடாப் புகழாளன்--- 

 

தெரிவு அரிதான போது --- திருமாலும்பிரமனும் அடிமுடி தேடத் தொடங்கியபோது.

 

செந்தழல் --- சிவந்த நெருப்புப் பிரம்பு.

 

விடாப் புகழாளன் --- பொருள் சேர் புகழ் நிறைந்தவன்.

 

ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். நானே கடவுள்நானே கடவுள்என்று வாதுப் போர் புரிந்த பிரமனும் திருமாலும்,அச் சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

 

"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ"     --- திருவாசகம்.

 

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். 

 

பிரமனோகல்வியில் மிகுந்தவன் அல்லவா?அன்னப்பறவை உருவெடுத்துமுடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காண முடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேச வைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

 

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே". --- திருமந்திரம்.

                                         

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம்,அத் தீயிலிருந்து வெளிப்பட்டுபிரமனுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும்திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன்இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 

 

மால் அயன் அடிமுடி தேடிய வரலாறு.

அதன் உட்பொருள்.

 

(1)       கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது இராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

 

(2)       அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும்தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடிஇயற்கைக்கு மாறாக முயன்றதால்அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

 

(3)       திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும்படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

 

(4)       "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும்,"எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

 

(5)       "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

 

(6)       புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

 

(7)       பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

 

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

 

அரும் சிவகீர்த்தியன் நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குருநாதன்--- 

 

சிவபரம்பொருளுக்கு மெய்ப்பொருளை ஆதரவுடன் உபதேசம் புரிந்து அவருக்கு இன்பத்தை அருளியவர் முருகப் பெருமான். அவரே பெரிய குருநாதர். சனகாதி முனிவர்க்கும் பிறருக்கும் குருவாக இருந்து அருள் புரிந்பரம்பொருளுக்கேசுவாமிக்கே உபதேசம் புரிந்ததால் "சுவாமிநாதன்" என்றும், "பரமகுருநான்" என்றும் பெயர் பெற்றார்.

 

     இப்படிஎண்ணும்போதேபிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவத்திலும் உயர்ந்தவர் முருகப் பெருமான் என்று ஏற்றம் கற்பித்துக் கொள்ளுதல் பிழை ஆகும். தேவதேவன் ஆகிய சிவபெருமான். சிஷ்ய (மாணவ) பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பொருட்டுதனக்குத் தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்தழங்கி நின்றாடினான்.       ---  தணிகைப் புராணம்.

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                         

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்

                                    .

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் "தணிகைப் புராணம்" கூறுமாறு காண்க.

 

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.

 

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்துஅதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல்உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையதுஅறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

 

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்துமுறையினால் கழறவல்லேம்” என்றனர். 

 

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை;ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறதுநீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுதம் புரிசடைத் தூங்கவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.  --- தணிகைப் புராணம்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.   

                                                                               

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 

 

தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”

                                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளிஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட,

மழலை மொழி கொடு தெளிதர, ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

பதங்களை நாக் கருதிடவே என் ஆசை--- 

 

முருகப் பெருமான் திருப்பாதங்களை நவாரப் பாடித் துதிக்க ஆசை என்று கூறுகின்றார். 

 

அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒருநாளே--- 

 

அறிந்து --- அறிவால் அறிந்து வழிபடுதல். அதுவே ஞானபூசை. ஞானவழிபாடு.

 

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்,

ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்,

ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,

ஞானத்தாய் உனை நானும் தொழுவனே. --- அப்பர்.

 

ஞானமே வடிவாகிய பரம்பொருளைஅவனருள் பெற்றுஞானபூசை செய்யவேண்டும். 

 

"அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அறிவுறுத்தியத் காண்க.

 

காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் --- 

 

கயல் --- மீன் வகைகளில் ஒன்று. இது பெண்களின் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்படும். காது வரை நீண்டு இருந்துகாதோடு மோதிப் பூசல் இடுகின்ற கண்கள்.


கார் அடரும் குழலால்--- 

 

கருமேகம் போன்று அடர்ந்து உள்ள கருங்கூந்தல்.

 

கிரியான தனங்களினால்--- 

 

மலை போனறு புருத்துள்ள மார்பகங்கள்.

 

கலை மேவு(ம்) மருங்கு அதனால்--- 

 

கலை --- ஆடை.

 

மருங்கு --- இடை. 

            

செறிகுழை ஓலை சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய்த் தடுமாறிமனம் தளராத் தனி திரிவோனே--- 

 

"உனது காதில் உள்ள ஓலையைத் தா. அந்த ஓலையில்உனது காதளவு ஓடிய நீண்ட கண்களாலும்கருமேகம் போன்ற கூந்தலாலும்பருத்த தனங்களினாலும்,சிறுத்த இடையினாலும்மிகவும் மனம் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்பதைச் சாசனமாகவே எழுதித் தருகின்றேன்" என்று வள்ளியம்மையிடம் முருகவேள் கூறிஅவரது காதலுக்கு உருகினார்.

 

முருகப் பெருமான் மனம் தளர்ந்துதினைப்புனத்தில் உருமாறி இருந்ததை"வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படிவியாகுல மனத்தினொடு போம் விற்காரனும்என்றார் அடிகளார்திருவேளைக்ககாரன் வகுப்பில்.

 

ஆடிய மயிலினை ஒப்பு உற்று,

     பீலியும் இலையும் உடுத்திட்டு,

          ஆரினும் அழகு மிகப்பெற்று, ...... யவன் ஆளும்

ஆகிய இதண் மிசை உற்றிட்டு,

     மான்இனம் மருள விழித்திட்டு,

          ஆயுத கவண் ஒருகைச் சுற்றி ...... விளையாடும்,

 

வேடுவர் சிறுமி ஒருத்திக்கு,

     யான் வழி அடிமை எனச் செப்பி,

          வீறு உள அடி இணையைப் பற்றி, ...... பலகாலும்

வேதமும் அமரரும், மெய்ச் சக்ர

     வாளமும் அறிய விலைப்பட்டு,

          மேருவில் மிகவும் எழுத்திட்ட ...... பெருமாளே.

 

எனவரும் திருப்புகழ்ப் பாடலில்முருகப் பெருமான் வள்ளியம்மைக்குத் தம்மை அடிமையாக ஒப்புவித்ததைக் கூறியுள்ளது காண்க. 

 

வள்ளியம்மையிடம் முருகப் பெருமான் மன்றாடியதை, பாம்பன் சுவாமிகள் மிக அருமையாகப் பாடி உள்ளார்.

 

"மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி

வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றிள

மானினியே கனியே இனிநீ

 

வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்

மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்

மயிலே குயிலே எழிலே  . . . . . . மட வனநினதுஏர் ஆர்

 

மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்

வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்

வாஎனும் ஓர் மொழியே சொலுநீ

 

மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு

மதங்கி இன்றுளம் மகிழ்ந் திடும்படி

மான்மகளே எனைஆள் நிதியே!  . . எனும் மொழி பலநூறே

 

படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன

படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்தகிரு

பா கரனே வரனே அரனே

 

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு

பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்

பா வகியே சிகியூர் இறையே  . . . . . . திருமலிசமர் ஊரா!"

 

இதன் பொருள் ---

 

     கொடி போன்ற வள்ளிநாயகியின் முன் ஆசையுடன் வந்து,  காட்டினில் வாழும் வேடர் வடிவம் கொண்டு நின்று, "அழகிய மான் போன்றவளே! இனிமையானவளே! பழம் போல இனிப்பவளே!இனி நீ உன்னை அடைவதற்காக ஏங்கியிருக்கும் என்னை அணைத்து, எப்பொழுதும் என் மனம் குளிர்ந்திடும்படி இசைந்து வருவாயாக. மயிலே! குயிலே!அழகே! இளைய அன்னம் போன்றவளே! எழுச்சி மிகுந்ததும் அழகியதுமான உனது மடிக்கு ஒரு வணக்கம், உனது பாதத்திற்கு ஒரு வணக்கம், உனது வளையலணிந்த கரத்திற்கு ஒரு வணக்கம், உனது கண்களுக்கு ஒரு வணக்கம். என்னை வா என்று ஒரு சொல் நீ சொல்லுவாயாக. நறுமணம் வீசிடும் மேனியோடு ஆடல் பாடலில் வல்லவளே! என்னுடைய உள்ளம் இன்று இன்புறும்படி, மான்மகளே! என்னை ஆட்கொள்ளும் நிதியமே!" என்னும் சொற்கள் பலவற்றையும் சொல்லிஅவள் கைகளைப் பற்றிக் கொண்டு, முற் பிறவியில் வாக்கு கொடுத்தவாறு மணந்து, அருள் புரிந்த, எல்லையற்ற கருணை உள்ளவனே! வரம் அருள்பவனே! சிவனே! இனிய தமிழ்ப் பாடல்களை தினமும் கூறி, இன்பத்துடன் உன் திருவடியை வணங்குபவர்களின் நெஞ்சத்தைத். தெரிந்து அருள்பவனே! நெருப்பில் தோன்றிய முருகனே! மயிலேறும் பெருமானே! செல்வம் மிக்க திருப்போரூரா!

                  

கருத்துரை

 

முருகா! அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்ச அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...