மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்...

 


மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

-----

 

     துக்கத்தில் அழுதாலும் கண்ணீர் வரும். அன்பின் மிகுதியாலும், கருணை மிகுதியாலும் கண்ணீர் வரும். அது அழுகை அல்ல. கண்ணீரை அடைத்து வைக்க இயலாது. "ஆர்வலர் புண்க(ண்)ணீர் பூசல் தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     "மகாபாரதப் போரில் கண்ணன் அழுத இடம்" என்று ஒரு பதிவு வலம் வருகின்றது. அழுகையால் கண்ணீர் வடியும். அளவில்லாத அன்பினால், கருணையாலும் கண்ணீர் வரும். கண்ணன் அழவில்லை. காரணம் அவன் துக்கத்துக்கு ஆட்பட்ட மனிதன் இல்லை. அவன் கடவுள். கருணை வடிவானாவன். எல்லையற்ற கருணையால் கண்ணனின் திருக்கண்களில் இருந்து கருணைகப் பெரு வெள்ளம் வடிந்தது என்கின்றார் வில்லிப்புத்தூர் ஆழ்வார். இதுதான் உண்மை.

 

     அழுகைக்கும், கருணைக்கும் வேறுபாடு உண்டு.

 

     பதினேழாம் நாள், போர்க்களத்திலே அம்புகளால் கர்ணனது உடல் முழுதும் தொளைக்கப்பட்டுஉயிர் நீங்கும் தருணத்தில்போரைச் சற்றே நிறுத்திவேதியர் வடிவம் தாங்கிக் கண்ணன்கர்ணனிடம் சென்று, அவன் இதுவரையில் செய்திருக்கும் புண்ணியத்தைத் தானமாகக் கேட்டான். காரணம், புண்ணியமும் பிறவியைத் தரும். பிறவாத பெருநிலையைக் கர்ணன் பெறவேண்டுமானால், அவனுக்குப் புண்ணியமும் இருப்பில் இருக்கக் கூடாது. புண்ணியம், பாவம் என்னும் இருவிளைகளும் அற்றால்தான், திருவடிப் பேறு என்னும் முத்தி வாய்க்கும். கண்ணன், தானமாக இதுவரையில் செய்திருந்த புண்ணியத்தின் பலனைக் கேட்கின்றான். தானமாக ஒன்றைத் தருகின்றபோது, "எனது இல்லை" என்று, தாரை வார்த்துக் கொடுக்கவேண்டும். உயிர் போகின்ற நிலையில், தனது இருப்பை உணர்ந்து கர்ணன் சொல்கின்றான். அதற்கு, கண்ணன் விடை பகருகின்றான். கண்ண,கர்ண சம்பாஷணையை, வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடுகின்றார்.

 

     "என் உயிரோ நிலை கலங்கி உள்ளது. அந்த உயிர் உடலின் உள்ளே இருக்கின்றதோவெளியே இருக்கின்றதோ அறியேன். தீவினையேன் ஆகிய நான் இரப்பவர் வேண்டும் பொருளை எல்லாம் விரும்பிக் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் வராமல்இப்போது வந்து இரக்கின்றீர். நான் இதுவரை செய்துள்ள புண்ணியம் அனைத்தையும் தந்தேன்பெற்றுக் கொள்வீராக" என்று சொல்லிக் கர்ணன் வணங்கினான்.  தன்னை வணங்காத பகைவர்க்கு மேகத்தில் தோன்றும் பேரிடியைப் போன்றவனான கண்ணன்கர்ணனை மகிழ்வோடு பார்த்து, "நீர் வார்த்துத் தருக" என்றான். தன் மார்பில் பட்டுள்ள அம்பின் வழியே வெளிப்படும் குருதியால் தாரை வார்த்துக் கொடுத்தான் கர்ணன். முன் வாமனாவதாரத்தில் மாவலிபால் மூவடி மண்ணைக் கேட்டு, அவன் வார்த்த தாரையை எற்று, அவனை உய்வித்த திருமால்இப்பொழுது கண்ணனாகத்  தாரையை ஏற்றான். அந்தணனாக வந்த கண்ணன் மகிழ்ந்துகர்ணனைப் பார்த்து, "நீ விரும்பிய வரங்களைக் கேள்" என்றான். பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்போம்.

 

"மல்லல்அம் தொடையல் நிருபனை முனிவன்

            மகிழ்ந்து "நீ வேண்டிய வரங்கள்

சொல்லுகஉனக்குத் தருதும்" என்று உரைப்ப

            சூரன்மா மதலையும் சொல்வான்

"அல்லல்வெவ் வினையால் இன்னம் உற்பவம்உண்

            டாயினும் ஏழ்எழு பிறப்பும்

இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா

            இதயம் நீ அளித்தருள்" என்றான்.

 

பொருள் --- அந்தணனாக வந்த கண்ணன் மகிழ்ந்து, வளப்பத்தை உடைய அழகிய மாலையைச் சூடிய கர்ணனைப் பார்த்து, "நீ விரும்பிய வரங்களைச் சொல்வாயாக. உனக்குத் தருவோம்" என்றான். சிறந்த கதிரவன் மகனான கர்ணன், அதற்கு விடையாக,"பிறவித் துன்பங்களுக்குக் காரணமான தீவினையால் இன்னமும் பிறவி உண்டாயின், எழுமை உடைய ஏழுவகைப் பிறவிகளுள்ளும், வறுமையால் இல்லை என வந்து இரப்பவர்க்கு, வைத்துக் கொண்டே, 'நீ கேட்கும் பொருள் என்னிடம் இல்லை' என்று சொல்லாத உள்ளத்தை நீ எனக்குக் கொடுப்பாயாக" என்று கூறினான்.

 

மைத்துனன் உரைத்த வார்த்தை கேட்டுஐயன்

            மனமலர் உகந்துஉகந்து,அவனைக்

கைத்தல மலரால் மார்புறத் தழுவி,

            கண்மலர்க் கருணைநீர் ஆட்டி,

"எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள்

            ஈகையும் செல்வமும் எய்தி

முத்தியும் பெறுதி முடிவில்" என்று உரைத்தான்

            மூவரும் ஒருவனாம் மூர்த்தி.

 

பொருள் --- மும்மூர்த்திகளும் ஓர் உருவாய் வந்துள்ள மூர்த்தியாகிய கண்ணன், (குந்திதேவி தனது அத்தை என்னும் முறையால், அவளுக்கு மகன் என்னும் முறையில், தனக்கு) மைத்துனன் ஆன கர்ணன் சொன்னதைக் கேட்டு, உள்ளத் தாமரை மலர மகிழ்ந்து, தனது திருக்கைகள் ஆகிய தாமரை மலர்களால், கர்ணனை மார்போடு பொருந்தத் தழுவி, தனது செந்தாமரை போன்ற கண்களில் இருந்து வழியும் அளவற்ற கருணை என்னும் வெள்ளத்தால் ஆட்டி, கர்ணனைப் பார்த்து, "நீ எத்தனைப் பிறவி எடுத்தாலும், கொடைப் பண்பும், அதற்குரிய செல்வத்தையும் அடைந்து, முடிவில் மோட்சத்தை அடைவாய்" என்று உரைத்தான்.

 

     (கண்ணன் அழவில்லை. கருணை மழையைப் பொழிந்தான் என்பதை அறிக)

 

"போற்றிய கன்னன் கண்டுகண் களிப்ப

            புணரிமொண்டு எழுந்த கார் முகிலை

மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும்

            வயங்கு கைத்தலங்களும் ஆகி

கூற்றுஉரழ் கராவின் வாயின்நின்று அழைத்த

            குஞ்சர ராசன்முன் அன்று

தோற்றியபடியே தோற்றினான் முடிவும்

            தோற்றமும் இலாத பைந்துளவோன்".

 

பொருள் --- இறப்பும் பிறப்பும் இல்லாத நித்தியப் பொருளானவனும், பசிய துளசி மாலையை அணிந்தவனும் ஆகிய கண்ணன், தன்னைத் துதித்த கர்ணன் சேவித்துக் களிக்குமாறு, கடல் நீரை வயிறு நிறைய மொண்டு வானில் எழுந்த கார்கால மேகமும் தனக்கு நிகராகாது என்று விளங்கிய கரிய மேனியும், ஐம்படைக் கலங்களும் விளங்கும் திருக்கைகளும் ஆகி, மிகக் கொடிய எமனைப் போன்ற முதலையில் வாயில் சிக்கிக் கொண்டு, "ஆதிமூலமே!" என்று அழைத்த கஜேந்திரன் முன்புஅக்காலத்தில் தோன்றியபடியே அருட்காட்சி கொடுத்தான்.

 

"அமரர் ஆனவரும் அமர யோனிகளும்

            அமரருக்கு அதிபன் ஆனவனும்

கமலநான் முகனும் முனிவரும் கண்டு

            கனகநாள் மலர்கொடு பணிந்தார்

"சமரமா முனையில் தனஞ்சயன் கணையால்

            சாய்ந்து உயிர்விடவும்செங்கண்

அமலநா ரணனைக் காணவும் பெற்றேன்"

            என்றுதன் அகம்மிக மகிழ்ந்தான்".

 

பொருள் --- வானவர்களும்,மற்றத் தேவர்களும், இந்திரனும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவனும், முனிவர்களும், அந்த அருட்காட்சியைக் கண்டு, பொன்மயமான கற்பக மலர்களைக் கொண்டு வணங்கி அருச்சித்தனர். அந்த அற்புதமான காட்சியைக் கண்டு, "பெரிய போர்க்களத்தில் பெருவீரனான அருச்சுனனின் அம்பால் உடல் விழுந்து, உயிர் நீங்கும் நிலையில், சிவந்த கண்களை உடைய குற்றம் இல்லாத நாயாரணமூர்த்தியைக் கண்டு தரிசிக்கவும் பெற்றேன்" என்று தனது உள்ளத்தில் நினைந்து மிகவும் மகிழ்ந்தான்.

 

"அருந்தழல்மா மகம்புரிந்தும் கடவுள்கங்கை

            ஆதியாம் புனல்படிந்தும் அனிலயோகத்து

இருந்தும்அணி மலர்தூவிப் பூசைநேர்ந்தும்

            எங்கும்ஆ கியஉன்னை இதயத்துள்ளே

திருந்தநிலை பெறக்கண்டும் போகம்எல்லாம்

            சிறுக்கிஅனைத்து உயிருக்கும் செய்யஒண்ணாப்

பெருந்தவங்கள் மிகப்பயின்றும் பெறுதற்கு எட்டாப்

            பெரும்பயன்நின் திருவருளால் பெறப்பெற் றேனே".

 

பொருள் --- அரிய தீயினைக் கொண்டு சிறந்த வேள்விகளைச் செய்தும், தெய்வத் தன்மை கொண்ட கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடியும், பஞ்சாக்கினி மத்தியில் நின்று அட்டாங்க யோகம் புரிந்தும், எல்லா இடங்களிலும் வியாபித்து உள்ள உன்னைத் தமது மனத்தின் உள்ளே நிலைபெறத் தியானித்தும், இன்பங்கள் எல்லாம் குறுகி, எல்லா உயிர்களும் செய்தற்கு அரிய தவங்களை மிகுதியாகச் செய்தும் அடைவதற்கு முடியாத பெரும்பயனை, உனது மேலான அருளால் நான் இன்று அடையப் பெற்றேன்".

 

"நீலநெடுங் கிரியும்மழை முகிலும் பவ்வ

            நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக்

கோலமும்வெங் கதைவாள்அம் சங்குநேமி

            கோதண்டம் எனும்படையும் குழையும் காதும்

மாலைநறுந் துழாய்மார்பும் திரண்ட தோளும்

            மணிக்க ழுத்தும் செவ்விதழும் வாரிசாதக்

காலைமலர் எனமலர்ந்த முகமும் சோதிக்

            கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே".

 

பொருள் --- "நீலமணி மயமான பெரிய மாலையையும், மழை பொழியும் கரிய மேகத்தையும், கடலின் மிக்க நீரையும், காயாம் பூவையும் ஒக்கும் உனது திருமேனியினையும், கொடிய தண்டும், வாளும், சங்கும், சக்கரமும், வில்லும் ஏன்ற ஐம்படைகளையும், தளிர்த்த மணம் உடைய திருத்துளசி மாலையைச் சூடிய திருமார்பையும், திரண்ட திருத்தோள்களையும், அழகிய திருக்கழுத்தையும், சிவந்த திருவாய் இதழ்களையும், தக்க காலத்தில் மலர்ந்த தாமரை மலரைப் போன்ற திருமுகமண்டலத்தையும், மிக்க ஒளி பொருந்திய திருமுடியையும் இப் பிறவியில் கண்கூடாகக் காணப் பெற்றேன்".

 

     (கர்ணன் செய்த புண்ணியத்தின் பயனாஅவனுக்குத் திருமாலின் அருட்காட்சி கிடைத்தது)

 

"தருமன்மகன் முதலான அரிய காதல்
     தம்பியரோடு எதிர்மலைந்து தறுகண் ஆண்மைச்

செருவில்எனது உயிர் அனைய தோழற்காகச்

            செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்தேவர்கோவுக்கு

உரைபெறுநல் கவசமும்குண் டலமும் ஈந்தேன்,

            உற்றபெரு நல்வினைப் பேறுஉனக்கே தந்தேன்,

மருதுஇடைமுன் தவழ்ந்துஅருளும் செங்கண்மாலே!

            மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்தவாறே".

 

பொருள் --- "இளமையில் இரண்டு மருதமரங்களின் இடையில் தவழ்ந்த, சிவந்த திருக்கண்களை உடைய திருமாலே! அஞ்சாமையுடன் கூடிய வீரத்துக்கு இடமான இந்தப் போர்க்களத்தில், என் உயிர் போன்ற நண்பன் துரியோதனன் பொருட்டாக,தருமன் முதலான அரிய அன்பினை உடைய தம்பிமார்களுடன் போரிட்டு, அவன் எனக்கு அளித்து வந்த சோற்றுக்குக் கைம்மாறான கடனைச் செய்துவிட்டேன். இந்திரனுக்கு, புகழ் பெற்ற நல்ல கவசத்தையும், குண்டலங்களையும் தந்தேன். எனக்குப் பொருந்திய பெரிய புண்ணியமான பயனை உனக்குத் தந்தேன். உன்னை அன்றி வேறு துணையும் கதியும் அற்ற நான், முற்பிறவியில் செய்த தவப் பயனால், இத்தகைய பெருவாழ்வைப் பெற்றவிதம் வியக்கத் தக்கதே"

 

"வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்

            மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்

தேன்பெற்ற துழாய்அலங்கல் களப மார்பும்

            திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்

ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்

            உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்

யான்பெற்ற பெருந்தவப்பே றுஎன்னை அன்றி

            இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே"

 

பொருள் --- "வானத்தில் பொருந்திய கங்கை நதி தோன்றிய உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன். சந்திரனை உண்டாக்கிய மேன்மையான உனது திருவுள்ளத்தால் மதிக்கப் பெற்றேன். தேன் பொருந்திய திருத் துளசியால் ஆன மாலையையும், கலவைச் சாந்தினையும் அணிந்த உனது திருமார்பும் திருத்தோள்களும் தடவித் தீண்டப் பெற்றேன். பகைவரின் ஊன் பொருந்தப் பெற்ற அருச்சுனனின் அம்பால் வலி அழிந்து, கீழே விழுந்த பின்பும், நல்ல உணர்வுடன் உனது சிறந்த திருநாமங்களைச் சொல்லப் பெற்றேன். நான் பெற்ற பெருந்தவத்தால்,பெறுவதற்கு உரிய பேற்றினை, என்னை அன்றி இந்தப் பெரிய உலகத்தினில் வேறு எவர் பெற்றார்?"

 

     இவ்வாறு துதித்துப் போற்றிய கர்ணன் வேண்டிய வரங்களை அளித்து, மீண்டும் விசயனின் தேரைச் செலுத்தலானான் கண்ணன் என்பதைப் பின்வரும் பாடல்களால், வில்லிப்புத்தூரார் காட்டுகின்றார்.

 

என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன்

     இன்புற,வண்புறவினில் ஆனிரையின் பின்போய்,

கன்றுகொடு விளவு எறிந்த கண்ணன்தானும்,

     கர்ணனுக்குக் கட்டுரைப்பான் கடவுள் நாதன்,

"அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க

     அழைத்தேனும், குந்தியைக் கொண்டு அரவ வாளி

ஒன்று ஒழியத் தொடாத வரம் கொள்வித்தேனும்,

     உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும்,

 

பொருள் --- என்று கூறிப் புகழ்ந்து, மகிழ்ச்சி பொருந்த வணங்கும் கதிரவன் மைந்தன் ஆன கர்ணன் கமகிழ்ச்சி அடைய,வளமுடைய முல்லை நிலத்தில் பசுக் கூட்டத்தை மேய்த்த வண்ணம், அதன்பின் சென்று, ஆவின் கன்றால் விளா மரத்தை வீழ்த்திய கண்ணன், கர்ணனுக்கு உண்மையைக் கூறுபவனாய், "இந்திரன் அந்தக் காலத்தில் உனது கவசத்தையும், குண்டலங்களையும் தானாமாய்ப் பெறுமாறு, அவனை உன்னிடம் வரவிடுத்தவனும், நாகாத்திரத்தை ஒருமுறை தவிர,மறுமுறை அருச்சுனன் மேல் செலுத்த ஒட்டாத வரத்தைக் குந்திதேவியால் பெறச் செய்தவனும், உனது பிறப்பின் உண்மையை உனக்கு அறிவித்தவனும்"

 

"தக்கன் மகவு ஆன உரக வாளி

     தனஞ்சயனைச் சதியாமல் சாய்வித்தேனும்,

மெய்க்கருணை நின் பொருட்டால் யானே" என்று

     மீண்டும் போய்த் தேர் வலவன் விசயற்கு ஆனான்,

எக் கடலும், எக் கிரியும் எல்லா மண்ணும்,

     இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி,

மைக்கண் இளம் கோவியர் நுண்துகிலும் நாணும்,

     வரிவளையும் மடநெஞ்சும் வாங்கும் மாலே.

 

பொருள் --- "தக்கனின் மகனான நாகாத்திரம் அருச்சுனனை அழிக்காத வண்ணம், அவனது தேரை நிலத்தில் ஆழ்த்தியவனும், உன் பொருட்டாக உண்மையான அருள் உடைய நானேதான்" என்று சொல்லிவிட்டுப் போய் மீண்டும் அருச்சுனனுக்குத் தேர்ப்பாகன் ஆனான். எவன்?என்றால், எல்லாக் கடல்களும், எல்லா மலைகளும், எல்லா உலகங்களும், தேவர்களும், மனிதர்களும், மற்ற எல்லா வடிவங்களும் ஆகி, மை பூசப்பெற்ற கண்களை உடைய இளம்பருவம் உடைய ஆயர் மகளிரின் மென்மையான ஆடைகளையும், அவர்களது நாணத்தையும், வளைகளையும், இளமையான மனத்தையும் கவர்ந்த திருமால்.

 

     வில்லிபுத்தூரார் அருளிய இந்த அருள் நிகழ்வைப் பொருள் உணர்ந்து, மனம் ஒன்றிப் படிப்பதே ஒரு சிறந்த வழிபாடு ஆகும். புண்ணியமும் ஆகும்.

 

     ஆக,பரம்பொருளான கண்ணன், துக்க வயப்பட்டு அழுது கண்ணீர் வடிக்கவில்லை. அவன் மாயைக்கு உட்பட்ட மனிதப் பிறவி இல்லை. மனிதனுக்குத் தான்இன்பதுன்பம்சுகதுக்கம்இழவுபேறு எனப்படும் இருமைகள் (துவந்துவங்கள்) உண்டு. கண்ணன் மாயைக்கு அப்பாற்பட்ட மாயவன். எல்லாவற்றையும் அவன் அறிவான். உயிர்களுக்குக் கருணை புரிவது அவனது எளிவந்த தன்மை (சௌலப்பியம்). அவனுக்கே உரிய பெருங்கருணை காரணாமாகத் தனது கண்களில் இருந்து துளிர்த்த கருணை என்னும் வெள்ளப் பெருக்கோடு, கர்ணனனைத் தழுவிக் கொண்டான் என்பதை அறிக.

 

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...