044. குற்றம் கடிதல் --- 05. வருமுன்னர்க் காவாதான்

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழவிப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. "கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது.அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "குற்றம் வரும் முன்னரேஅக்குற்றத்தை நேராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கையானதுதீயின் முன்னர் வைக்கோல் போர் போலக் கெடும்" என்கின்றார் நாயனார்.

 

     சிறியதோர் குற்றத்தால் பெரியதோர் செல்வமானது அழிந்து போகும் என்பதற்குசிறிய நெருப்பு ஆயினும்அது பெரியதோர் வைக்கோல் போரினை அழிக்கும் என்று உவமை காட்டினார். 

 

     குற்றத்தை வராமல் காத்துக் கொள்பவனுடைய வாழ்க்கையானது வளர்ந்து மேன்மை அடையும் என்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கைஎரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.                 

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை--- குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை

 

     எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் --- அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும்.

 

       ('குற்றம்என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப் பொருள் விகுதி, 'வரும்என்னும் பெயரெச்சம் 'முன்னர்என்னும் காலப்பெயர் கொண்டதுஅதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும்அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்

சூரந் தொலைந்தானே,சோமேசா! - ஓரின்

வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

 

இதன் பொருள்---

 

       சோமேசா! ஓரின் --- ஆராயின்வரு முன்னர் காவாதான் வாழ்க்கை --- குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாதவன் வாழ்க்கைஎரி முன்னர் வை தூறு போல கெடும் --- அது வந்தால் எரி முகத்து நின்ற வைக் குவை போல அழிந்து விடும்,

 

       ஈர் ஐந்து தலையான் --- பத்துத் தலைகளை உடைய இராவணன்அணுகிய பின் --- குற்றம் வந்து தன்னை அடைந்தபின்,ஏகல் உற்று --- சீராமனுடன் போருக்குச் சென்றுசூரம் தொலைந்தான் --- தன் ஆண்மை ஒழிந்து மாண்டான் ஆகலான் என்றவாறு.

 

       கம்பராமாயணம் உயுத்த காண்டம்மந்திரப படலம்கும்பகர்ணன் தன் மனநிலை கூறுதல் சிந்தனைக்குரியது.

 

நீஅயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்

தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்

ஏயின உறத் தகைய இத்துணைய வேயோ.

 

ஓவியம் அமைந்த நகர் தீஉண உளைந்தாய்

கோவியல் அழிந்தது என வேருஒரு குலத்தோன்

தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ

பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ

 

நல்நகர் அழிந்தது என நாணினை நயத்தால்

உன்உயிர் எனத் தகைய தேவியர்கள் உன்மேல்

இன்நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்

பொன்னடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்.

 

என்று ஒருவன் இல்உறை தவத்தியை இரங்காய்

வன்தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய்

அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா

புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ

 

ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம்

மாசில் புகழ் கூதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை நன்று நம கொற்றம்.

 

சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்

மட்டவிழ் மலர்க்குழலி னாளை இனி மன்னா

விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்லப்

ப்ட்டிடுதுமேல் அதுவும் நன்று பழி அன்றால்.

 

கும்பகர்ணன் வதைப்படலம் - கும்பகர்ணன் இராவணனுக்கு அறிவுரை கூறல்.

 

ஆனதோ வெஞ்சமம்அலகில் கற்புடை

சானகி துயர்இனம் தவிர்ந்தது இல்லையோ,

வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்

போனதோபுகுந்ததோ பொன்று காலமே.

 

கிட்டிய தோசெருகிளர்பொன் சீதையை

சுட்டியதோமுனம் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம்அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ இது விதியின் வன்மையே.

 

கல்லலாம் உலகினைவரம்பு கட்டவும்

சொல்லலாம்பெருவலி இராமன் தோள்களை

வெல்லலாம் என்பது சீதை மேனியைப்

புல்லலாம் என்பது போலுமால் ஐயா.

 

புலத்தியன் வழிமுதல் வந்த பொய் ஆறு

குலத்து இயல்பு அழிந்ததுகொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு எதுமைஅறு

நிலத்து இயல்நீர் இயல் என்னும் நீரதால்.

 

கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்

கெடுத்தனை நின்பெரும் கிளையும்நின்னையும்

படுத்தனைபலவகை அமரர் தங்களை

விடுத்தனை வேறுஇனி வீடும் இல்லையால்.

 

அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்அதன்

திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்

நிறம் உனக்கு அளித்ததுஇங்கு அதனை நீக்கி நீ

இறலின் இங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்.

 

ஈரைந் தலையான் சூரம் தொலைந்தமை----

 

முக்கோடி வாழ்நாலும் முயன்றுடைய

            பெருந் தவமும் முதல்வன் முன்னாள்

எக்கோடி யாராலும் வெலப்ப டாய்எனக்

            கொடுத்த வரமும் ஏனைத்

திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த

            புயவலியும் தின்று மார்பில்

புக்குஓடி உயிர்பருகி புறம்போயிற்று

            இராகவன்தன் புனித வாளி.

                                    --- கம்பராமாயணம்இராவணன் வதைப்படலம்.

 

            இரகுகுல உத்தமனான இராமன் தனது சிற்றன்னையாகிய கைகேசி சூழ்வினையால் நாடிழந்துகாடு அடைந்து நின்ற நிலையில்இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை என்னும் அரக்கிசீதையை இராமனில் பிரிக்க எண்ணிதன் தமையனாகிய இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்கஅவ் வருணனை கேட்ட இராவணன் சீதைபால் மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து,தனது மாமனாகிய மாரீசனைப் பொன்மானாகப் போக்கிஇராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்துஇலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்கஇராமன் சுக்கிரீவன் நட்புப் பெற்று அனுமானை நாடவிட்டுச் சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்துவானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்துமுடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு இலக்காக்கினான்.

                                                

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது காண்க...

மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்.    ---  முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பொருள் ---

 

     மேல் --- இனிவரவு --- வரத்தக்கதைஅறியாதோன் --- அறியாதவன்தற்காத்தல் --- தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளுதல்பொய் --- பொய்யாம்.

 

     நல்ல காரியத்துக்கு நால் இடையூறும் வரும். அவைகளை முன்னாக அறிந்து பரிகாரம் தேடாதவன் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்வது இல்லை.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...