044. குற்றம் கடிதல் --- 06. தன்குற்றம் நீக்கி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழவிப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. "கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது.அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவன் தன்னிடத்தே உள்ள குற்றத்தைக் கண்டுஅதனை ஒழித்துஅதன்பின்னர் பிறரது குற்றத்தைக் காணவல்லவன் ஆனால்அத் தலைவனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தன்பால் உண்டான குற்றத்தை,இது என்று முதலில் அறிந்துஅதை ஒழித்துபிறகு மற்றவரிடத்தில் குற்றத்தைக் காண்பானாயின்அவனுக்குக் குற்றம் உண்டாவதில்லை. தனது குற்றத்தைத் தொலைத்த அளவேபிறரது குற்றத்தைக் கண்டு முறை செய்தல் வேண்டும். அப்படிப்பட்டவனே தலைமைக்குத் தகுதியானவன்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்,

என் குற்றம் ஆகும் இறைக்கு.    

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்--- முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்துபின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்

 

     இறைக்கு ஆகும் குற்றம் என்--- அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?

 

      (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம்அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார்என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

தன்மகன்ஆன் கன்றினுக்கும்,தான் மந்திரிக்கும் என்றான்

சென்மம் அன்றோ சென்மம்,சிவசிவா! - உன்னுங்கால்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

 

     மனுநீதிகண்ட சோழன் இறந்த பசுவின் கன்றின் பொருட்டுத் தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் இட்டான். அவனது பிறப்பு அன்றோ பிறப்பு என்று சொல்லப்படுவது.

                                                                                    

மனுநீதிச் சோழன் வரலாறு

 

     சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும்வண்மையிலும்வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில்பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூர் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும்உயிரும் போன்றவர். ஊனமில் வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

 

     அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறிசேனைகளும்மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்துதேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப் பசு அங்கே ஓடி வந்துஅந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும்துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன்உடல் பதறவாய் குழறநாக்கு வறளத் தாய்ப் பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோஅறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின்எனது தந்தை அறியாமுன்னம்அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணிஅந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

 

     வாயில்லாப் பசு மனம் கலங்கமுகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருகமன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.

 

தன்உயிர்க் கன்று வீயத்

            தளர்ந்தஆத் தரியாது ஆகி

முன்நெருப்பு உயிர்த்து விம்மி

            முகத்தினில் கண்ணீர் வார

மன்உயிர் காக்கும் செங்கோல்

            மனுவின்பொன் கோயில் வாயில்

பொன்அணி மணியைச் சென்று

            கோட்டினால் புடைத்தது அன்றே. --- பெரியபுராணம்.

 

     அம் மணி ஓசையானது மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும்,அவர் திடுக்கிட்டுஅரியாசனத்தில் இருந்து குதித்துவாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்றுநன்று" என்று இரங்கினார்.

 

அவ்வுரை கேட்ட வேந்தன்

            ஆஉறு துயரம் எய்தி

வெவ்விடம் தலைக்கொண் டால்போல்

            வேதனை அகத்து மிக்குஇங்கு

இவ்வினை விளைந்த வாறுஎன்று

            இடர்உறும் இரங்கும் ஏங்கும்

செவ்விதுஎன் செங்கோல் என்னும்

            தெருமரும் தெளியும் தேறான்.    --- பெரியபுராணம்.

 

மன்உயிர் புரந்து வையம்

            பொதுக்கடிந்து அறத்தில் நீடும்

என்நெறி நன்றால் என்னும்

            என்செய்தால் தீரும் என்னும்

தன்இளம் கன்று காணாத்

            தாய்முகம் கண்டு சோரும்

அந்நிலை அரசன் உற்ற

            துயரம்ஓர் அளவிற்று அன்றால்.   --- பெரியபுராணம்.

 

     இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள். 

 

மந்திரிகள் அதுகண்டு

            மன்னவனை அடிவணங்கிச்

சிந்தை தளர்ந்து அருளுவது

            மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்

கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்

            கோவதை செய்தார்க்கு மறை

அந்தணர்கள் விதித்த முறை

            வழிநிறுத்தல் அறம்என்றார்.   --- பெரியபுராணம்.

 

     அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். நீங்கள் கூறும் கழுவாய்,கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோஎனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால்அறக்கடவுள் சலிப்பு உறாதோ?உயிர்களுக்குத் தன்னாலாவது,பரிசனங்களாலாவதுகள்வர்களாலாவதுபிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து,அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்துநாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால்அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்ததுஎன்னும் பழிமொழி உலகில் நிலையாதோநீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார். 

 

வழக்குஎன்று நீர்மொழிந்தால்

            மற்றுஅதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்துஅலறுங்

            கோஉறுநோய் மருந்துஆமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்று

            எல்லீரும் சொல்லியஇச்

சழக்குஇன்று நான்இயைந்தால்

            தருமம் தான் சலியாதோ.   --- பெரியபுராணம்.

 

மாநிலம்கா வலன்ஆவான்

            மன்உயிர்காக் கும்காலைத்

தான்அதனுக்கு இடையூறு

            தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால்

            கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும் தீர்த்து

            அறம் காப்பான் அல்லனோ.   --- பெரியபுராணம்.

 

என்மகன்செய் பாதகத்துக்கு

            இருந்தவங்கள் செயஇசைந்தே

அன்னியன்ஓர் உயிர்கொன்றால்

            அவனைக்கொல் வேன்ஆனால்

தொன்மனுநூல் தொடைமனுவால்

            துடைப்புஉண்டது எனும்வார்த்தை

மன்உலகில் பெறமொழிந்தீர்

            மந்திரிகள் வழக்கு என்றான்.   --- பெரியபுராணம்.

 

     மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள்அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்ததுஎங்கே,எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது?ஆகவேபசு உற்ற துயரைநானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறிஅவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.

 

அவ்வுரையில் வருநெறிகள்

            அவைநிற்க அறநெறியின்

செவ்விய உண்மைத்திறம் நீர்

            சிந்தை செயாது உரைக்கின்றீர்

எவ் உலகில் எப் பெற்றம்

            இப்பெற்றித்து ஆம் இடரால்

வெவ் வுயிர்த்துக் கதறிமணி

            எறிந்து விழுந்தது விளம்பீர்.  --- பெரியபுராணம்.

 

போற்றி இசைத்துப் புரந்தரன்மால்

            அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச

வீற்றுஇருந்த பெருமானார்

            மேவிஉறை திருவாரூர்த்

தோற்றம்உடை உயிர்கொன்றான்

            ஆதலினால் துணிபொருள்தான்

ஆற்றவும் மற்று அவற்கொல்லும்

            அதுவே ஆம் எனநினைமின்.  --- பெரியபுராணம்.

 

     அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்துஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்திதேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர்அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான்தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்றுதாம் எண்ணியவாறு முடித்தார்.

 

ஒருமைந்தன் தன்குலத்துக்கு

            உள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை

            கடன்என்று தன்மைந்தன்

மருமம் தன் தேர்ஆழி

            உற ஊர்ந்தான் மனுவேந்தன்

அருமந்த அரசாட்சி

            அரிதோ மற்று எளிதோதான்.  --- பெரியபுராணம்.

 

     கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளிசோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில்பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.

 

தண்அளிவெண் குடைவேந்தன்

            செயல்கண்டு தரியாது

மண்ணவர்கண் மழைபொழிந்தார்

            வானவர்பூ மழைசொரிந்தார்

அண்ணல்அவன் கண்எதிரே

            அணிவீதி மழவிடைமேல்

விண்ணவர்கள் தொழநின்றான்

            வீதிவிடங் கப்பெருமான்.    --- பெரியபுராணம்.

 

சடைமருங்கில் இளம்பிறையும்

            தனிவிழிக்கும் திருநுதலும்

இடம் மருங்கில் உமையாளும்

            எம்மருங்கும் பூதகணம்

புடைநெருங்கும் பெருமையும்முன்

            கண்டுஅரசன் போற்றிஇசைப்ப

விடைமருவும் பெருமானும்

            விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான். --- பெரியபுராணம்.

 

அந்நிலையே உயிர்பிரிந்த

            ஆன்கன்றும் அவ்அரசன்

மன்உரிமைத் தனிக்கன்றும்

            மந்திரியும் உடன்எழலும்

இன்னபரிசு ஆனான் என்று

            அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்

முன்னவனே முன்நின்றால்

            முடியாத பொருள்உளதோ.   --- பெரியபுராணம்.

 

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்....

 

தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்

வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்.               --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தம் குற்றம் நீக்கிலர் ஆகி --- (அறிவில்லாதார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகிபிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப்புகுதல் --- பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல்வியன் உலகில் எங்கும் --- அகன்ற உலகின்கண் எவ்விடத்தும்வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் --- வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத் தீர்த்து விடுதலோ டொக்கும்.

 

            ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களைய முற்படுதல் வேண்டும்.

 

 

பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு

மருந்தாகி நிற்பதாம் மாட்சி,- மருந்தின்

தணியாது விட்டக்கால்,தண்கடல் சேர்ப்ப!

பிணியீடு அழித்து விடும்.         ---  பழமொழி நானூறு.

 

இதற்குப் பரிமேலகர் உரை ---

 

     தண் கடல் சேர்ப்ப --- குளிர்ந்த கடல் நாடனே!மருந்தின் தணியாது விட்டக்கால் --- (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால்பிணி ஈடு அழித்துவிடும் --- அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்)பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு --- பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்குமருந்தாகி நிற்பதாம் மாட்சி --- அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாம்; (அது கொண்டு நீக்குதல் வேண்டும்.)

 

            ஒருவன் தான் கொண்ட பழியை ஒழுக்கத்தாலன்றி நீக்க முடியாது.

            

'நன்னன் மருகன் அன்றியும் நீயும்

முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்

பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை

அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்

மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே'

 

எனப் பெருந்தலைச் சாத்தனார் இளவிச்சிக்கோவைப் புல்லாததற்குக் கூறிய சான்றுகளாலும் இது அறியத் தக்கது. ஒழுக்கம் தன்னை உடையானை மாட்சிமைப் படுத்தலின்,மாட்சி என்பது ஒழுக்கம் எனப்பட்டது.

 

            நோயை மருந்துகொண்டே நீக்காவிடின்,அந்நோய் கொண்டானது வலிமையைக் கெடுப்பது போன்றுபழிப் பிணியை ஒழுக்கம் என்னும் மருந்துகொண்டு நீக்காவிடின் கொண்டானுக்கு இழிவை எய்துவிக்கும்.

 

எனக்குத் தகவு அன்றால் என்பதே நோக்கித்

தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை

நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்

எனச்செய்யார் மாணா வினை.         --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தென்னவனும் --- பாண்டியனும்எனக்கு தகவு அன்று என்பதே நோக்கி --- எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்துதனக்கு கரியாவான் தானாய் --- தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்றுதவற்றை நினைத்து --- கதவை இடித்த குற்றத்தை நினைத்து,தன் கை குறைத்தான் --- தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) காணார் என செய்யார் மாணா வினை --- அறிவுடையோர் பிறர் காணவில்லை என்பது கருதி,மாட்சிமைப்படாத செயலைச் செய்யார்.

 

            அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

 

            

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்,

கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்,

நட்பின் நயநீர்மை நீங்கல்,இவைமூன்றும்

குற்றந் தரூஉம் பகை.                  ---  திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     அன்பு பெருந்தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் --- அன்பினாலாகிய பெருந்தளையினதுகட்டு தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல் --- கல்வியாகியபெரிய தெப்பத்தைபொருள் முதலியவற்றின் விருப்பினால்முற்றும் விட்டுவிடுதலும்நட்பின் நய நீர்மை நீங்கல் --- ஒருவரிடத்தில் வைத்த நட்பினால்நீதித் தன்மையினின்று நீங்குதலும்இவை மூன்றும் குற்றம் தரும் பகை --- ஆகிய இவை மூன்றும்ஒருவனுக்குக் குற்றங்களை விளைக்கின்ற பகைகளாம்.

 

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி

புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்,

அரைச வேலி அல்லது யாவதும்

புரைநீர் வேலி இல் என மொழிந்து,

மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி,

இன்று அவ் வேலி காவாதோ எனச்

செவிச்சூட்டு ஆணியிற் புகை அழல் பொத்தி

நெஞ்சம் சுடுதலின்,அஞ்சி நடுக்குற்று,

வச்சிரத் தடக்கை அமரர் கோமான்

உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை

குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து

இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை   --- சிலப்பதிகாரம்கட்டுரை காதை.

 

இதன் பொருள் ---

 

       உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் ---- ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக, அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கு ஒண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவிஅரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி --- நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லையென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர்இன்று அவ் வேலி காவாதோ என --- இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த ;

 

     செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் --- அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானேஅஞ்சி நடுக்குற்று --- அச்சமும் நடுக்கமும் அடைந்துவச்சிரத் தடக்கை அமரர் கோமான் --- வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடையஉச்சிப் பொன்முடி ஒளி வளை உடைIத்த கை குறைத்த செங்கோல் --- தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும்குறையாக் கொற்றத்து --- அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய,இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை --- அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும் ;

 

      மிடி வாழ்க்கையையுடைய கீரந்தை என்னும் பார்ப்பனன் 'அரசனது காவல் உளதாகலின் நீ அஞ்சாதேஎன்று கூறித் தன் மனைவியைத் தனியே இல்லின்கண் இருக்கச் செய்து யாத்திரை சென்றிருந்த காலைஇரவில் நகரி சோதனைக்கு வந்த பாண்டியன் அவ் இல்லின் கதவைத் தட்டஅவ்வொலி கேட்ட பார்ப்பனி இங்ஙனம் கூறினாள் என்க. பார்ப்பனன் மீண்டு வந்து இரவில் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது அரசன் கதவைத் தட்டினான் என்றும்பிறவாறும் உரைப்பாருமுளர்.

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...