047. தெரிந்து செயல்வகை --- 08. ஆற்றின் வருந்தா

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "செய்யத் தக்க நன்முறையில் முயலாத முயற்சிபலர் துணையாக நின்று காத்தாலும் குறைபடும்" என்கின்றார் நாயனார்.

 

     நன்முறை என்பது முந்திய திருக்குறளில் சொன்ன உபாயங்கள். உபாயத்தால் முயலுதல் என்பதுகொடுத்தலைப் பொருளாசை உடையவன் இடத்திலும்இன்சொல் சொல்லுதலை நடுவுநிலையாளன்சோம்பல் உள்ளவன்முன்னர் நொந்து போனவன் ஆகியவர்களிடத்தும்,வேறுபடுத்தலைத் துணையாளன் இடத்தும்தன்னோடு பொருந்தாதவன் இடத்தும்ஒறுத்தலைமுன்சொன்ன மூன்று உபாயங்களின் வழி வாராதவர் இடத்தும்நம்பத் தகாத கீழ்மக்களிடத்தும் செய்தல்.

 

     குற்றப்படுதலாவதுஎண்ணிய நன்மையைத் தராதுஎண்ணாத தீமையைத் தந்துசெயலும் முடியாது ஒழிதல்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

ஆற்றின் வருந்தா வருத்தம்பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்.      

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஆற்றின் வருந்தா வருத்தம்--- முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி

 

     பலர் நின்று போற்றினும் பொத்துப்படும்--- துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.

 

     (முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும்இன்சொல்லைச் செப்பம் உடையான்மடியாளன்முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும்வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும்ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும்தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும்செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.)

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால்,--- ஆங்கு

முடியும் திறத்தால் முயல்க,தாம் கூர் அம்பு

அடி இழுப்பின் இல்லை யரண்.   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     வீங்கு தோள் செம்பியன் சீற்றம் --- பருத்த தோளை உடைய சோழனது சினம்விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் --- மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால்முடியும் திறத்தால் முயல்க --- எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் --- கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால்.

 

      நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றில்லையாம்.

 

      செம்பியன் ஆகாயத்தில் இருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டு அழித்தான். இதுபற்றியே இவன் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான். அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்து போதல் போலமுடிந்த அளவு முயற்சி செய்தால் பயன் அடையலாம் என்பது. 

 

 

சிறைஇல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறைசேர்பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறையின்றி ஆளும் அரசு இன்னா;இன்னா

மறை இன்றிச் செய்யும் வினை.      --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா --- வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம்உறைசேர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா --- மழைத்துளி ஒழுகுதலை உடைய பழைய கூரையை உடைய மனையில்பொருந்தி வாழ்தல் துன்பமாம்முறை இன்றி ஆளும் அரசு இன்னா --- நீதி இல்லாமல் ஆளுகின்றஅரசரது ஆட்சி துன்பமாம்மறை இன்றிச் செய்யும் வினை இன்னா --- சூழ்தல் இல்லாமல்செய்யுங் கருமம் துன்பந் தருவதாகும். 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...