இறையருளே வான்மழை

 


வான்சிறப்பு --- இறையருள் என்னும் மழை

-----

 

     திருக்குறள் என்னும் அரியதொரு நூலை வழங்கின அருளாளர் திருவள்ளுவர். அவர் வழங்கி அருளிய நூலின் சிறப்புக் கருதிஅவரை இந்த உலகமானது பலவகையிலும் போற்றி வருகின்றது. கண்டோரால் விரும்பப்படும் தன்மையும்வள்ளல் தன்மையும் பொருந்தி உள்ளதால், "திருவள்ளுவர்" எனவும்இல்லறம் துறவறம் இரண்டையும் விளக்கிக் காட்டுவதால், "நாயனார்" என்றும்தெய்வத் தன்மை உடையவர் என்பதால் "தேவர்" என்றும்,பாவலர்கள் அனைவரிலும் சிறந்தவர் என்பதால், "முதற்பாவலர்" என்றும்வினையின் நீங்கி விளங்கிய அறிவினை உடையவர் என்பதால், "தெய்வப் புலவர்" என்றும்நான்முகன் என்னும் பிரமன் ஓதிய வேதம் போலச் சிறப்பினை உடைய திருக்குறள் என்னும் அற்புத நூலை வழங்கினார் என்பதால், "நான்முகனார்" என்றும்சங்கப் புலவர் கருவத்தை ஒழித்ததால், "மாதானுபங்கி" என்றும்பிறர் நாவிற்கும்இவரது நாவிற்கும் வேற்றுமை தோன்றஇவரது நாவைச் சிறப்பித்து, "செந்நாப் போதார்" என்றும்நாவலர் என்று தம்மைத் தாமே புகழ்ந்து பேசுகின்றவர்கள் போல் இல்லாமல்உண்மையாகவே நாவலர் ஆக விளங்கியதால், "பெருநாவலர்" என்றும்மற்ற புலவர்கள் தாம் தாம் கருதியது பற்றியே நூலைச் செய்தனர். எல்லாச் சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளும்படியானதொரு நூலை உலகிற்கு உபகாரமாக அளித்தார் என்பதால், "பொய்யில் புலவர்" என்றும் இந் நூலாசிரியிரை உலகம் போற்றும்.

 

     மக்கள் எல்லாரும் இடையூறு இல்லாமல்,இனிது வாழ்தற்குமுதற்படியாக வேண்டிய உபாயங்கள் நான்கு எனத் திருவள்ளுவர் கண்டார். அவற்றைப் பாயிரமாக வகுத்து வைத்தார். அவர் கண்ட நான்குகடவுள்வழிபாடுவான்சிறப்புநீத்தார் பெருமை,அறன்வலியுறுத்தல் என்பன ஆகும்.

 

     பாயிரம் என்பது ஒரு நூலுக்கு அவசியம் என்பது குறித்து நன்னூல் கூறுகின்றது,

 

"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடுஅமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்து உரையா வைத்தார் பெரிது."

 

இதன் பொருள் ---

 

     மாளிகைக்குச் சித்திரமும்பெரிய நகரத்திற்கு நுழைவாயிலாக கோபுரமும்நடிக்கின்றமூங்கில் போலும் தோள்களையுடைய மங்கையருக்கு ஆபரணமும் போல நினைத்துஅழகிய பொருளைச் சொல்லுகின்ற பாயிரத்தை உரைத்துஎவ் வகைப்பட்ட பெரிய நூலுக்கும் முதலிலே பெரும்பாலும் சேர்த்து வைத்தார் ஆசிரியர்.

 

     இந்தப் பாயிரானது யானையைச் செலுத்துவதற்கு ஒரு பாகனைப் போன்றும்வானத்தை விளக்குவதற்கு சூரியனும்சந்திரனும் போன்று விளங்குவது.

 

"பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு

நுண்பொருட்டு ஆகிய நூல் இனிது விளங்கும்"

 

     பாயிரத்தை ஓதி உணர்ந்தவர்க்குநூலின் பொருளானது நன்கு விளங்கும் என்பார்கள். எனவேநூலின் பொருளை நன்கு உணர்ந்து கொள்வதற்குப் பாயிரம் பெரிதும் துணை புரியும் என்பது அறிக.

 

     திருக்குறளுக்குப் பாயிரம் என்னும் பகுதியில்கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார்பெருமைமற்றும் அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு ஆதிகாரங்களை வைத்தார் திருவள்ளுவ நாயனார்.  கடவுளை வழிபடுவோர்அவனது திருவருளைப் பெறுவார்கள்திருவருளைப் பெற்றவர்களின் பெருமை நீத்தார் பெருமையால் விளங்கும். பெருமைக்கு உரிய நீத்தார் வலியுறுத்துவது அறமே ஆகும். அந்த அறமானது இல்லறம்,துறுவறம் என இருவகைப்படும்.

 

     வான்சிறப்பு என்னும் அதிகாரத்திற்கு உரை வகுத்த பரிமேலழகர், "கடவுளது ஆணையான் உலகமும்அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல்"என்றார். கடவுளை வழிபட்டவர் அவனது அருளைப் பெறுவர் என்பதால், "கடவுள் வாழ்த்து" என்னும் முதல் அதிகாரத்தின் பின்னர், "வான்சிறப்பு" என்னும் அதிகாரத்தை வைத்ததால்அதிகார வைப்பு முறை விளங்கும் என்றார். 

 

     வான்சிறப்பு என்பது இறைவன் அருட்கருணை ஆகிய மழையையே குறிக்கும். அருட்பெருஞ்சோதி அகவலில்வள்ளற்பெருமான் இறைவனது அருட்கருணையை மழையாகவே உவமித்துப் பின்வருமாறு பாடி உள்ளார். 

 

"உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட

வயங்கிய கருணை மழைபொழி மழையே!  

 

என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப

மன்னிய கருணை மழைபொழி மழையே!


உளங்கொளும் எனக்கே உவகைமேல் பொங்கி

வளங்கொளக் கருணை மழைபொழி மழையே!


 நலந்தர உடல்உயிர் நல்அறிவு எனக்கே

 மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே!


 தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கிநல்

 வாய்மையால் கருணை மழைபொழி மழையே!"

 

     அதாவதுகடவுளின் ஏவலால் உலகமும்அதற்கு உறுதியைத் தரும் அறம்,பொருள்இன்பம் ஆகியவை நடப்பதற்கு துணைக் காரணமாக விளங்கும் மழையின் சிறப்பைச் சொல்லுதல் பொருட்டு இந்த அதிகாரம் எழுந்தது.

 

     இறைவன் கருணையே மழையாகப் பொழிகின்றது என்பதற்கு,மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவையில் வரும் ஒரு பாடலே சான்றாக விளங்கும்.

 

"முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து,உடையாள்

என்னத் திகழ்ந்து,எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்துஎம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பிதிருப்புருவம்

என்னச் சிலைகுலவி,நம்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவுஇலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழை! ஏலோர் எம்பாவாய்.

 

     உயிர்கள் இன்புற்று வாழ்வதற்குத் துணை புரிவது இறைவன் திருவருளே. அத் திருவருளானது உலக உயிர்களுக்குக் கிட்டும் நிலையை மழை என்று விளக்கப்பட்டது. மழை மேகத்தை விளித்துபாவை நோன்பு இருக்கும் கன்னிப் பெண்கள் பாடியதாக அமைந்த பாடல் இது ஆகும்.

 

இதன் பொருள் ---

 

     மழை --- மழையைப் பொழிகின்ற மேகமே!  முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து --- நீ முன்னதாக இந்தக் கடல் நீரை முகந்து கொண்டு எழுந்துஉடையாள் என்னத் திகழ்ந்து --- எங்களை உடையவள் ஆகிய அம்பிகையினது திருமேயைப் போல் கருநிறம் கொண்டு விளங்கி,எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னிப் பொலிந்து --- எம்மை அடிமையாக உடைய அந்த அம்பிகையின் சிற்றிடையைப் போல மின்னி விளங்கிஎம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பி --- எம்பிராட்டி தனது திருவடி மேல் அணிந்துள்ள பொன்னால் ஆன சிலம்பு ஒலிப்பது போஒலி (இடி) முழக்கம் செய்துதிருப் புருவம் என்னச் சிலை குலவி --- அவளது அழகிய புருவத்தைப் போல வானவில்லை இட்டு, (சிலை --- வில்) நம் தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவு இல்லா எம் கோமான் --- நம்மை அடிமையாக உடைய அம்பிகையைப் பிரியாது உடன் உறையும் எங்கள் தலைவனாகிய சிவபரம்பொருள்அன்பர்க்கு முன்னி --- அவன்பால் அன்பு உடையவர்களாகிய எங்களுக்கும்பிற அடியார்களுக்கும் திருவருள் புரியத் திருவுள்ளம் பற்றிஅவள் நமக்கு உம்ன் சுரக்கும் இன் அருளே என்ன --- அந்த அம்பிகை நமக்குச் சுரக்கின்ற இனிய அருளைப் போலபொழியாய் --- பொழிவாயாக.

 

     அம்மையினது திருமேனி நீல நிறமாகும். கடலில் புகுந்து நீரை முகந்து மேகமாக எழுகின்ற போதுஅம்மையின் திருமேனியைப் போலக் கருநிறம் கொண்டு இருக்கவேண்டும். பெண்களது இடைக்கு மின்னலை உவமையாகக் கூறுவது மரபு.  எனவேஅம்மையின் இடையைப் போல மின்னிட வேண்டும். மின்னலோடு கூட இடியோசையும் உண்டாகும்அந்த ஓசையானதுஉயிர்களின் காதில் நாராசமாக ஒலிக்கக் கூடாது. அம்மையின் திருவடியில் உள்ள சிலம்பின் ஓசையைப் போன்று இருக்கவேண்டும். அம்மையின் திருப்புருவத்தைப் போன்று வானவில்லானது இருக்கவேண்டும். அம்மையானவள்அப்பன் ஆகிய சிவபரம்பொருளைப் பிரியாது அவருடைய திருமேனியில் இடப்பாகத்தில் விளங்குபவள். அன்பர்களுக்கும்உலக உயிர்களுக்கும் அவள் தனது இன்னருளை எப்போதும் வாரி வழங்கிக் கொண்டே இருப்பாள். அவளது கருணையாகிய மழையைப் போன்று பொழிதல் வேண்டும்.

 

     இறைவன்அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருள் புரிவான். எனவேஅவள் நமக்குச் சுரக்கின்ற வான்த ஆதலின்இன்னருளைப் போல மழை அமையவேண்டும் எனபட்டது. எனவேஇறையருள் தான் மழையாகப் பொழிகின்றது. மழை இல்லையேல்உலக வாழ்வு இல்லை. தானம் தவம் இரண்டும் சிறக்காது.

 

     இறைவன் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடிமார்கழி  நீராடுகின்ற கன்னிப் பெண்கள்நீர்நிலையில் தாம் நீராடுகின்ற  நீரைப் பார்த்து, "ஆர்த்த பிறவித் துயர் கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்" இவன்தானே என்று கருதிஅவனது அருளே மழையாகப் பொழிந்தது என்று எண்ணிஇறைவன் அம்மை வாயிலாகத் திருவருள் சுரப்பது போல்இனிவரும் காலங்களிலும் மழை பொழிந்து உலகம் சிறக்கவேண்டும் என்று வேண்டினார்கள்.

 

     இறைவன் இறைவியோடு என்றும் பிரியாமல் உறைகின்றான் என்பதை, "உண்ணாமுலை உடையாளொடும் உடன் ஆகிய ஒருவன்" என்றும், "வண்டார் குழல் அரிவையொடும் பிரியாவகை,பாகம் பெண்தான் மிக ஆனான்" என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளதால் அறியலாம். திருவெம்பாவையை அருளிச் செய்த மணிவாசகரும், "உடையாள் உன்தன் நடு இருக்கும்உடையாள் நடுவுள் நீ இருத்தி" என்றே அருளிச் செய்தார். எனவே,"நம் தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இல்லா எம் கோமான்" என்று பாடினார்.

 

     இத் திருப்பாட்டில்இறைவி ஐந்து சத்திகளாக அமைந்து,உயிர்களின் நலம் குறித்து அருள் மழை பொழிவதைப் போலஉலக நலம் குறித்து மழையைப் பொழிய வேண்டும் என்று வேண்டினார்கள்.

 

     திருவிளையாடல் புராணத்திலும்மழையை இறைவன் திருவருளாகவே கொண்டு பாடப்பட்டு உள்ளது காணலாம்.

 

தெய்வநாயகன் நீறு அணி மேனிபோல் சென்று

பௌவம் மேய்ந்துமை மேனிபோல் பசந்துபல்லுயிர்க்கும்

எவ்வம் மாற்றுவான் சுரந்திடும் இன்னருள் என்னக்

கௌவை நீர்சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.

 

இதன் பொருள் ---

 

     கனைகுரல் மேகம் --- ஒலிக்கின்ற குரலையுடைய மேகங்கள்தெய்வநாயகன் --- தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானின்நீறு அணி மேனி போல் சென்று --- திருநீறு அணிந்த திருமேனி போலும் (வெண்ணிறத்தோடு) சென்றுபௌவம் மேய்ந்து --- கடல் நீரைப் பருகிஉமை மேனிபோல் பசந்து --- உமாதேவியாரின் திருமேனி போலும் பசிய நிறம் கொண்டு,பல் உயிர்க்கும் --- பலவகைப் பட்ட உயிர்களுக்கும்எவ்வம் மாற்றுவான் --- பிறவித் துன்பத்தை நீக்குதற் பொருட்டுசுரந்திடும் இன்அருள் என்ன --- இனிய திருவருளைச் சுரந்திடுதல் போலகௌவை நீர் சுரந்து எழுந்தன --- ஒலிக்கின்ற நீரைச் சுரந்து மேல் எழுந்தன.

 

     இறைவன் கருணையே உலக உயிர்கள் நலம் பொருட்டுதிருவாசக மழையாய்ப் பொழிகின்றது. அந்தக் கருணை மழையானது எப்படிப் பாய்ந்து உயிர்களுக்கு நலம் விளைக்கின்றது என்பதைதிருவாசகத்தை ஓதி உணர்ந்து தெளிந்த அருளாளர் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், "நால்வர் நான்மணி மாலை" என்னும் நூலில் அனுபவித்து உள்ளதைக் காணலாம்...

 

வலமழு உயரிய நலமலி கங்கை

நதிதலை சேர்ந்த நல்கருணைக் கடல்

முகந்துஉலகு உவப்ப உகந்த மாணிக்க

வாசகன் எனும் ஒரு மாமழை பொழிந்த

திருவாசகம் எனும் பெருநீர் ஒழுகி,

ஓதுவார் மனம் எனும் ஒண்குளம் புகுந்து,

நாஎனும் மதகில் நடந்துகேட்போர்

செவி எனும் மடையில் செவ்விதில் செல்லா,

உளம் எனும் நிலம் புகஊன்றிய அன்பாம்

வித்தில்சிவம் எனும்  மென்முளை தோன்றி,

வளர்ந்துகருணை மலர்ந்து,

விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.

 

இதன் பொருள் ---

 

     வலம் மழு உயரிய --- வலப்பக்கத்திலே மழுவை உயர்த்திய, நலம் மலி கங்கை நதி தலை சேர்ந்த --- புனிதம் நிரம்பிய கங்கைநதியைத் தலையில் தாங்கி உள்ளநல் கருணைக் கடல் முகந்து --- செவ்விய சிவம் என்னும்அருட்கடலை திருப்பெருந்துறையில் புகுந்து முகந்து உகந்த மாணிக்கவாசகன் எனும் ஒரு மாமழை --- ஓங்கிய மாணிக்கவாசகன் எனப்படும் மேன்மை வாய்ந்த ஒரு மழை மேகமானதுஉலகு உவப்ப பொழிந்த திருவாசகம் எனும் பெருநீர் ஒழுகி --- உலக உயிர்கள் மகிழச் சொரிந்த திருவாசகம் என்னும் பெருவெள்ளம் சென்றுஓதுவார் மனம் எனும் ஒண் குளம் புகுந்து --- ஓதுபவர்களுடைய உள்ளம் என்னும் எழில் மிகுந்த ஏரியின் உள்ளே நிரம்பி, நா எனும் மதகில் நடந்து --- வாய் எனும் மதகின் வழி வெளிப்பட்டுகேட்போர் செவி எனும் மடையில் செவ்விதில் செல்லா --- கேட்போர் செவிகள் என்னும் மடைகளில் வழுவுதல் இன்றிச் சென்று,  உளம் எனும் நிலம் புக ---  அவர்களுடைய நெஞ்சம் என்னும் நிலத்தில் பாயஊன்றிய அன்பாம் வித்தில் ---  அங்கே பதிக்கப்பட்டு உள்ள அன்பு என்னும் வித்திலே,  சிவம் எனும் மெல் முளை தோன்றி --- சிவம் என்னும் சிறு முளை விட்டுவளர்ந்து கருணை மலர்ந்து --- அன்பு மேன்மேலும் குறையாமல் வளர்ச்சி உற்றுகருணை மலர்ந்துவிளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே --- ஒளிர்கின்ற முத்தி என்னும் உண்மைப் பயனை உதவும்.

 

     இறைவன் கருணை என்னும் மழையானதுஉலக உயிர்கள் எல்லாவற்றிற்கும் பயன் தருமாறு செய்தல் வேண்டும். ஏரிகள்,குளங்கள்,  இறைவன் கருணையாகிய மழையைத் தேக்கி வைக்கின்ற இடங்கள். வாய்க்கால்கள் இறைவன் கருணைமழை பாய்கின்ற வழிகள். அவை செம்மையாக இருந்தால்தான்வயல்கள் சிறக்கும். வயல்கள் சிறந்தால் வளம் சிறக்கும். வளம் சிறந்தால் உயிர்கள் சிறக்கும்.

 

     நிலத்தின் தன்மைக்கு ஏற்மழை நீர் சிறுதுளி பெருவெள்ளமாகப் பாய்கின்றது. அதன் போக்கை அறிந்துஆங்காங்கே ஏரிகளையும்குளங்களையும் வாய்க்கால்களையும் நமது முன்னோர் அமைத்தனர். புதிதாக ஏரி குளத்தை உருவாக்க நம்மால் முடியாது. இருப்பவற்றையாவது உரிய முறையில் பராமரிப்பது நமது கடமை. ஏரிகளையும்குளங்களையும்வாய்க்கால்களையும் பாழடையாமல் காக்கவேண்டும். கழிவுகளைக் கொட்டிநீரை மாசு படுத்துதல் கூடாது.

 

     

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...