047. தெரிந்து செயல்வகை --- 02. தெரிந்த இனத்தொடு

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இத் பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தாம் ஆராய்ந்து இணக்கம் கொண்ட இனத்தினரோடு ஆராய்ந்து தெளிந்து செயல்களைச் செய்பவர்க்குபெறுதற்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் எத்துணை அறிவு உடையவனாய் இருந்தாலும்தான் எண்ணிய செயலைச் செய்யத் தொடங்கும் முன்னர்தன்னினும் அறிவு உடையவரிடத்துசெய்யும் செயலால் வரும் தகுதியையும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு,

அரும்பொருள் யாது ஒன்றும் இல்.          

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு--- தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு

 

     அரும் பொருள் யாதொன்றும் இல்--- எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

 

            (ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்குஎன்றதனால், 'வினைஎன்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின்அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும்அது செய்யுமாறும் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

வீடணன் வன்மம் விளம்ப,இலங்கைநகர்

ஈடுஅழிந்தது அன்றோ?இரங்கேசா! - கூடத்

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வவார்க்கு

அரும்பொருள் யாதுஒன்றும் இல்.                

 

இதன் பொருள்---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வீடணன் --- விபீஷணாழ்வான்வன்மம் விளம்ப --- எதிரியின் பகைமை நிலைமையையும் மற்றுமுள்ள உளவுகளையும் இராமபிராற்குத் தெரிவித்ததனால்இலங்கை நகர் --- இலங்காபுரியில் இருந்த இராவணன் முதலோருடையஈடு --- பெருமைஅழிந்தது அன்றோ --- கெட்டதல்லவா,  (ஆகையால்இது) கூட --- கூடியிருக்கதெரிந்த இனத்தொடு --- தெரிந்து ஏற்றுக் கொண்ட கூட்டாளியோடுதேர்ந்து --- ஆராய்ந்துஎண்ணி --- பிறகு நன்றாய் ஆலோசித்துசெய்வார்க்கு --- காரியத்தைச் செய்யும் ஒருவருக்குஅரும் பொருள் --- செய்து முடித்தற்கரிய பொருள்யாது ஒன்றும் இல் --- எதுவும் இல்லை (என்பதை விளக்குகின்றது).

 

      கருத்துரை --- உளவு அறிந்து காரியம் செய்தால் வெற்றி உண்டாகும்.

 

      விளக்கவுரை--- இராமச்சந்திரன்விபீஷணனை நல்லவன் எனக் கண்டுசத்துருவின் தம்பியென்று கைவிடாமல்அவனுக்கு அபயதானம் அளித்துகூட்டாளியாகக் கொண்டதனால்அவன் எதிரியாகிய இராவணனுடைய பகைத் திறத்தையும்அவனுக்குள்ள படைவலி முதலிய உள்ளளவுகளையும்மற்றும் உள்ள இந்திரசித்தன்கும்பகன்னன் முதலிய அர்க்கர் பலாபலத்தையும் உள்ளபடி உணர்த்தினான். அவைகளை முந்தி உணர்ந்துகொண்டதனால்இராமபிரான் முதலியோர் அவைகளுக்குத் தக்கபடி சூழ்ந்து காரியம் செய்துஇராவணன் முதலியோரைக் கொன்று வெற்றி பெற்றார்கள். ஆகையால்,

 

"தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வவார்க்கு

அரும்பொருள் யாதுஒன்றும் இல்"

 

என்றார்.  

 

     வன்மம் --- பகைமையின் உள்ளளவு. மர்மம் எனினுமாம். மர்மம் --- இரகசியம். ஈடு --- எடுப்பு. அரும் பொருள் ---எண்பதற்குப் பெறுதற்கரிய பொருள் எனினுமாம். 

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது காண்க. 

                                                                        

வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.     --- முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பொருள் ---

 

     வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன் தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.

 

     நல்வாழ்க்கைக்கு அவசியமானது காரியசித்தி. ஆகவே,எடுத்த காரியம் நன்கு முடிதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒருதலை.

 


 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...