041. கல்லாமை --- 04. கல்லாதான் ஒட்பம்

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார். இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "கற்க வேண்டிய நூல்களைக் கால்லாதவனது அறிவு,ஒரோவழி மிக நன்றாய் இருந்தாலும்கல்வி அறிவு உடையார்,அதனை அறிவுடைமையாகக் கொள்ளமாட்டார்" என்கின்றார் நாயனார்.

 

     கல்லாதவனது அறிவுடைமை நன்றாகாது. நன்றாக இருப்பினும்அது ஏரல் எழுத்துப் போல்வது ஒரு தன்மையை உடையதாகையால்நிலைபெற்ற நூலறிவினை உடையவர்,அந்த அறிவுடைமையை மதியார் என்றார்.

 

     ஏரல் --- நத்தை. நத்தையானது மணலில் ஊர்ந்து செல்லும்போதுதற்செயலாக அது எழுத்துப் போல் தோன்றுதலாம். 

 

திருக்குறளைக் காண்போம்...

 

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்,

கொள்ளார் அறிவு உடையார்.               

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்--- கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்

     

     அறிவுடையார் கொள்ளார்--- அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.

 

     (ஒண்மை: அறிவுடைமைஅது நன்றாகாதுஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின்நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் ஒரு பாடல் உள்ளது. அது பின்வருமாறு...

 

ஒருவர் சிறிது   …............................... உமையாற்கு

அருள்வதன்முன் ப....தறிந்து ---  குருமுகத்தால்

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்

கொள்ளார் அறிவு உடையார்.

 

            குருமுகத்தால் கல்லாதவன் ஒட்பம் கழிய நன்று ஆயினும் கொள்ளார் அறிவு உடையார் என்றார். 

 

     பாடல் சிதைந்து உள்ளதால்,முதல் இரண்டு அடிகள் விளங்கவில்லை.

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாபின்வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காணலாம்...

                                                                        

கல்லாதான் கண்ட கழிநுட்பம்,கற்றார்முன்

சொல்லுங்கால் சோர்வு படுதலால்,- நல்லாய்!

வினாமுந்து உறாத உரையில்லை,இல்லை

கனாமுந்து உறாத வினை.        --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நல்லாய் --- நற்குணம் உடைய பெண்ணே!கல்லாதான் கண்ட கழிநுட்பம் --- நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள்கற்றார் முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால் --- நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால்வினா முந்துறாத உரையில்லை --- வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை;கனா முந்துறா வினை இல்லை --- கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை.)

 

     கல்லாதான் கண்ட நுண்பொருள் விளங்குதல் இல்லை.

 

கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்ட அரிதால்,

நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தல் என்?

சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுகிற்பார்க்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     கல்லாதான் கண்ட கழிநுட்பம் --- நூல்களைக் கல்லாதவன் தான் நுட்பமாக அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளைகாட்ட அரிதால் --- பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆன பின்)ஒருவன் --- கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன்நல்லேம் யாம் என்று நன்கு மதித்தல் என் --- நல்ல பொருள் விளக்கம் உடையவன் நான் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி?,சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் --- தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச் செய்துபணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும்சொல்லாக்கால் --- தாம் கருதியதை எடுத்துச் சொல்ல முடியாதபோதுசொல்லுவது இல் --- தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இல்லாமல் போகும்.

 

     அறிவு வேறு. கல்வி வேறு. அறிவைக் கல்வியால் செம்மைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் நுண்ணறிவு விளங்கும்.

            

போக்குஅறு கல்வி புலம் மிக்கார் பால்அன்றி

மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா,- தாக்குஅணங்கும்

ஆணவாம் பெண்மை உடைத்துஎனினும்,பெண்நலம்

பேடு கொளப்படுவது இல்.         --- நீநிநெறி விளக்கம். 

 

 

இதன் பொருள் ---

 

     தாக்கு அணங்கும் --- தாக்கி வருத்துகின்ற பெண் தெய்வமும்ஆண் அவாம் பெண்மை --- ஆண்மக்கள் ஆசைப்படக் கூடிய பெண்மைத் தன்மையைஉடைத்து எனினும் --- உடையது என்றாலும்பெண் நலம் --- அப் பெண்ணின் இன்பம்பேடு கொளப்படுவது இல் --- பேடுகளால் கொள்ளப்படுவதில்லை. (அதுபோல)போக்கு அறு கல்வி --- குற்றமற்ற கல்விபுலம் மிக்கவர்பால் அன்றி --- அறிவு மிக்கவரிடத்தில் அல்லாமல்மீக்கொள் நகையினார்வாய் --- விளையாட்டுத் தன்மையே மிகுதியும் மேற்கொண்டு இருப்பவர்களிடத்தில்சேரா --- சேர மாட்டாவாம்.

 

            ஆன்ற அறிவும் அருளும் உடைய பெரியோரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து காட்டிய கல்விப்பொருளை அவரைப் போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்ந்த கருத்தும் உடையராய் யாண்டும் நெஞ்சம் செல்லுதல் இன்றிப் பெருந்தன்மை பொருந்திக் கற்பாராதலினால்அப்பெருந்தன்மை வாயாது விளையாட்டில் பொழுது கழிக்கும் வீணர்களிடம் அக்கல்விப் பொருள்கள் சேரா என்றார். 

 

     பேடு - இங்கு ஆண் தன்மை இழந்தது. ஆண் தன்மையை இழந்த ஆண்பால் பெண்பாலாகக் கொள்ளப்படும். ஆதலால்பெண்பால் எனக் கொள்ளப்படுவது பெண்ணின்பத்தை நுகர ஏலாதது காண்க.

 

கல்லாதான் தான்காணும் நுட்பமும்காதுஇரண்டும்

இல்லாதாள் எக்கழுத்தம் செய்தலும் - இல்லாதான்

ஒல்லாப் பொருள்இல்லார்க்கு ஈத்துஅளியான்என்றலும்

நல்லார்கள் கேட்பின் நகை.            --- சிறுபஞ்சமூலம். 

 

இதன் பொருள் ---

 

     கல்லாதான் தான் காணும் நுட்பமும் - (ஆசிரியனிடத்து கற்கவேண்டிய முறைப்படியே) கல்லாதவனாகிய ஒருவன்தானே ஆராய்ந்து காண்கின்ற நுண்பொருளும்;காது இரண்டும் இல்லாதாள் எக்கழுத்தம் செய்தலும் --- இரண்டு காதுகளும்,இல்லாதவளாகிய ஒருத்திதான் மிக்க அழகுடையவள் என்று) இறுமாப்புக் கொள்ளுதலும்இல்லாதான் இல்லார்க்கு ஒல்லாப் பொருள் ஈந்து அளியான் என்றலும் --- கையில் பொருள் இல்லாதவன்,தன்னைப்போல் பொருளற்ற வறியவர்கட்குஅவர்களின் விருப்பந் தணிவதற்கு பொருந்தாத பொருளைக் கொடுத்துதான் வறியவரிடத்து மிகவும் அருளுடையவன்என்று தற்பெருமை சொல்லுதலும்நல்லார்கள் கேட்பின் நகை --- அறிவு உடையவர்கள் ஆகிய நல்லவர்கள்கேட்டால்அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்.

 

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம், --- மற்றதனை

நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லி,தன்

புல்லறிவு காட்டி விடும்.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கற்றதும் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றது ஆம் ஓர் சூத்திரம் அதனை --- தாம் ஆழ்ந்து பயின்றதும் இல்லாமல்,தக்க கேள்வியும் இன்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினைநல்லாரிடைப் புக்கு நாணாது சொல்லிப் பேதை தன் புல்லறிவு காட்டிவிடும் --- நற்புலவர் கூடியுள்ள அவையில் சென்று நாணம் இன்றி விரித்துரைத்து,அறிவில்லாதவன் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான்.

 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி,

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி.                 --- மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     கல்லாதான் --- கற்கவேண்டியவற்றை (முறைப் படக்) கல்லாதவன்கற்ற கவி --- (கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல்கானம் மயில் ஆட --- காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட,கண்டு இருந்த வான் கோழி --- அதைப் பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானதுதானும் அதுவாகப் பாவித்து --- தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டு,தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் --- தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும்.

 

            கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவன் ஆகான்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...