042. கேள்வி --- செல்வத்துள் செல்வம்

                                                                          திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "செவியால் கேட்டு அனுபவிக்கப்படும் செல்வமானது  சிறப்புடையதுஅதுவே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது" என்று நாயனார் அறிவுறுத்துகின்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்,அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.     

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்--- ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்

 

     அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை--- அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.

 

      (செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும்துன்ப விளைவின ஆகலானும்இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா"திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

அத்தனை செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்-

வத்துள் எல்லாம் தலை என்று உரைத்தார் புல்லை  வாழ் மலர்ப்பெண்
சித்தமன நின சீர்த்தியைக் கேட்குஞ் செவிக்கு நிகர்
ஒத்திடல் மற்று இலதால் செவிச்செல்வம் உயர்வனவே.

 

இதன் பொருள் ---

 

     மிகுதியான செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் செவிச் செல்வமே சிறப்புடையது என்றும்அதுவே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது என்று திருவள்ளுவ நாயனார் சொன்னார். திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் வாழும் மலர்மங்கையின் மனம் ஒத்த பெருமாளுடைய பெருமையைக் கேட்கும் செவிக்கு நிகர் ஏதும் இல்லை. எனவேசெவிச் செல்வம் உயர்வானதுதான்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....

 

மற உரையும்,காமத்து உரையும்,மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடையாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.        --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     மற உரையும் --- பாவத்தினை வளர்க்கும் நூல்களும்காமத்து உரையும் --- ஆசையினை வளர்க்கும் நூல்களும்பிற உரையும் --- பிறவற்றினை வளர்க்கும் நூல்களும்,மயங்கி --- கலந்துமல்கிய --- நிறைந்தஞாலத்து --- உலகில்அறவுரை --- அறத்தினை வளர்க்கும் நூல்களைகேட்கும் --- கேட்கின்றதிரு உடையாரே --- நற் பேற்றினை உடையவர்களேபிறவியை --- பிறப்பினைநீக்கும் --- நீக்குதற்கு ஏற்றதிரு உடையார் --- வீட்டுலகினை உடையவராவர்.

 

பண் அமை யாழ்குழல் கீதம் என்று இன்னவை

நண்ணி நயப்ப செவி அல்ல-- திண்ணிதின்

வெட்டெனச் சொல் நீக்கி,விண்இன்பம் வீட்டொடு

கட்டுரை கேட்ப செவி.                  --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை நண்ணி நயப்ப செவியல்ல --- இசையொடு பொருந்திய யாழ் குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை அடைந்து விரும்பிக் கேட்பன செவிகள் ஆகாதிண்ணிதின் --- உறுதியொடுவெட்டெனச் சொல் நீக்கி --- பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாதுவிண்ணின்பம் வீட்டொடு கட்டுரை கேட்ப செவி --- சுவர்க்க இன்பத்தினையும் வீடுபேற்றையும் பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.

 

     இயற்கையில் செவிக்கு இன்பம் செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால் மகிழ்வுறும் செவி செவியல்ல. 

 

     கைகேயியின் வாக்குப்படிகாட்டுக்கு இராமன் சென்றதை அறிந்த பரதன் துயருறுகின்றான். தந்தையின் வாக்குபடிஅரச பாரத்தை ஏற்குமாறுவசிட்டர் பரதனுக்குக் கூறுகின்றார். அதைக் கேட்ட பரதன்வருத்தமுற்றுஅரச பாரத்தை ஏற்க மறுத்து, "காட்டுக்குச் சென்று இராமபிரானை அழைத்து வந்து அவருக்கு மணிமுடி சூட்டுவேன். அவர் வர மறுத்தால்அவருடனேயே காட்டில் வாழ்வேன். எனது சொல்லை நீங்கள் மறுத்தால்நான் இப்போதே உயிரை விடுவேன்" என்கின்றான்.  இராமனைக் காட்டில் இருந்து அழைத்து வருதல் குறித்து முரசு அறைந்து நாட்டு மக்களுக்குத் தெரிவிக்குமாறு பரதன் தனது தம்பியாகிய சத்துருக்கனனிடம் கூறுகின்றான். சத்துருக்கனனது அறிவிப்பைக் கேட்ட அயோத்தி மக்கள் அளவிறந்த மிகழ்ச்சி கொள்ளுகின்றார்கள். உயிர் நீங்கிய உடம்பினைப் போல வாழுகின்ற அயோத்தி மக்களுக்கு அச்சொல் அமிர்தமாக வந்து பாய்ந்துஅவர்களது உயிரைத் துளிர்க்கச் செய்தது என்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.

 

"நல்லவன் உரைசெயநம்பி கூறலும்

அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்

ஒல்லென இரைத்தலால் - உயிர் இல் யாக்கை அச்

சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே".  --- கம்பராமாயணம்ஆறுசெல் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நற்குணத்தால் சிறந்தவன் ஆகிய பரதன் பணிக்கஇராமனை அழைத்து வரும் செய்தியைச் சத்துருக்கனன்அறிவிக்கவும்துன்பத்தால் அழுந்தி இருந்த,  இராமன்பால் அயரா அன்பினை உடைய அயோத்தி மாநகர மக்கள்உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம் அந்தச் சொல் என்னும் அமுதத்தால் மீண்டும் உயிர் பெற்றுத் துளிர் விட்டது என்று சொல்லும்படி பேராலி உண்டாகுமாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

"அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள

புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி

கவிக்கும்என்று உரைக்கவேகளித்ததால்அது

செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?"  --- கம்பராமாயணம்ஆறுசெல் படலம்.

 

இதன் பொருள் ---

 

     ஐம்புலன்களைஅவித்து ஒழுகியவர்களாகிய முனிவர்கள் முதலாகஉலகத்தில்  உள்ள உயிர்கள் எல்லாம்இராமன் பொன்மயமான மகுடம் சூடப் போகிறான்என்று முரசொலி மூலம் சத்துருக்கனன் சொல்லக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தன.அந்தச் சொல்லானதுசெவி என்னும்பொறிகேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்றதெய்வத் தன்மை வய்ந்த தேனோ?

 

     "செந்தமிழ் நாடு என்னும் போதினிலேஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்று அமரகவி பாடினது போல்கேள்வியால் பெறும் இன்பமானது தேனை நிகர்த்ததாக இருந்தது.

 

     இனிசித்தாந்தம் கூறும் "கேட்டல்" என்பதுஞானபாதங்கள் நான்கில் முதற்பாதம் ஆகும்.

 

ஞானநூல் தனை ஓதல்,ஓதுவித்தல்,

            நல்பொருளைக் கேட்பித்தல்,தான்கேட்டல்,நன்றா

ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல்,ஐந்தும்

            இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை;

ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்

            ஒன்றுக்கு ஒன்று உயரும்இவை ஊட்டுவது போகம்;

ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை

            அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்.      --- சிவஞானசித்தியார்.

 

            சிவஞானப் பொருளை விளக்குகின்ற நூல்களைத் தான் ஓதுதலும்,பிறர்க்கு ஓதுவித்தலும்நலம் தரும் அந்நூற் பொருள்களை நன்கு உணர்ந்து பிறர்க்கு உரைத்தலும்தான் அதனை ஆசிரியர்பால் கேட்டலும்,குறைவிலாத அப்பொருளைத் சிந்தித்தலும் ஆகிய இவை ஐந்தும் சிவபெருமான் திருவடியை அடைவிக்கும் அழகிய ஞானவேள்வி என்று போற்றப்படும். குறைவில்லாத கன்மவேள்விதவவேள்விசிவவேள்விதியான வேள்விஎன்ற நான்கும் நூல்களால் கூறப்படுவனவாகும். இவை ஒன்றுக்கொன்று உயர்ந்ததாகக் கூறப்படும். ஆயினும் இவை நான்கானும் பெறுகின்ற பயன் இன்ப நுகர்வே ஆகும். எனவே வீடுபேற்றை அடைய விரும்பும் பெரியோரெல்லாம் மேம்பட்ட ஞான வேள்வியினாலே சிவபெருமானை வழிபடுவர்.

 

கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை

            கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்;

வீட்டை அடைந் திடுவர் நிட்டை மேவினோர்கள்;

            மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு

ஈட்டிய புண்ணிய நாதராகிஇன்பம்

            இனிது நுகர்ந்து,அரன் அருளால் இந்தப் பார்மேல்

நாட்டியநல் குலத்தினில் வந்து அவதரித்து,குருவால்

            ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே.      --- சிவஞானசித்தியார்.

 

       ஞானவேள்வியில் நான்கு வகைகள் கூறப்பட்டன. அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது கேட்டல்கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச் சிந்தித்தலும் சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும் அதன் பின்னர் நிட்டை கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும். நிட்டை கை கூடியவர்கள் மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர். நிட்டை கைகூடாது முதல் மூன்று படிகளில் நின்று தாம் தாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான உலகங்களுக்குச் சென்று அங்குள்ள இன்பத்தை இனிது நுகர்ந்து மீண்டும் சிவபெருமான் அருளால் இந்த உலகில் நல்ல குடியில் வந்து பிறப்பார்கள். அதன் பின்னர் அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி இறைவன் திருவடியை அடைவார்கள்.

 

     குருவின் அருளிச் செயல்களை மன ஒருமையோடு கேட்டல்கேட்டவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தல்சிந்தித்தவற்றை முன் பின் மலைவு அற்றுப் போகுமாறு தெளிதல்தெளிந்த பின் ஞான வடிவினனாகிய இறைவனின் பேரருளில் திளைத்து நிட்டை கூடுதல் ஆகிய நான்கும் முத்தி நிலை அடைவதற்குரிய வழிகளாகும்.

 

முந்திய ஒருமை யாலே

            மொழிந்தவை கேட்டல்,கேட்டல்

சிந்தனை செய்தல் உண்மை

            தெளிந்திடல் அது தானாக

வந்தவாறு எய்தல் நிட்டை

            மருவுதல் என்று நான்காம்

இந்தவாறு அடைந்தோர்

            முத்தி எய்திய இயல்பினோரே    --- சிவப்பிரகாசம்.

 

      முன் பிறவிகள் பலவற்றிலும் ஈட்டப் பெற்று வந்த நல்வினையின் பயனாக ஒருவனது மனம் ஒருமையிலே நிற்கின்ற பக்குவத்தைப் பெறும். அப்போது ஞான ஆசிரியன் தோன்றி முப்பொருள் இயல்பும் உண்மையும் உணர்த்துவான். அவ்வாறு ஆசிரியன் மொழிகின்ற மெய்ப்பொருளைக் கேட்டல் ஒன்றுகேட்டவற்றைச் சிந்தித்தல் ஒன்றுசிந்தித்தவற்றின் உண்மையைத் தெளிதல் ஒன்றுபரம்பொருளோடு ஒத்து நிற்கும் நிட்டை கூடுதல் ஒன்று ஆக நான்காகும்முத்திப் பேறு அடையும் வழிகள். இவற்றைப் பொருந்தினோர் முத்தியினைப் பெறுவார்.

 

      தவம் என்பது பல்வேறு மதங்களில் பல்வேறு வகையாகக் கூறப்படும். தன்னை ஒறுத்தல்பட்டினி கிடந்து உடலை வாட்டுதல் சுடுபாறையில் கிடத்தல்குளிர்நாளில் நீர் நிலையில் நிற்றல் போன்றவையெல்லாம் தவமாகா என்பது சைவசித்தாந்தம் கூறும் உண்மை. படி நிலைக்கு ஏற்றவாறு சைவசித்தாந்தம் கூறும் நால்வகை நெறிகள் சீலம்நோன்புசெறிவுஅறிவு எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவாம். இந்த உண்மை நிலைகளை முந்திய பிறவிகளில் செய்து பக்குவம் அடையப் பெற்ற உயிர்களுக்கு இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து தன்மைமுன்னிலைபடர்க்கை என்னும் மூவிடத்தும் நின்று உபதேசம் செய்வான்.

 

       சிவஞான சித்தியாரில், "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம்" என்று கூறப்படுவதும் இம்முறைமை பற்றியே. 

 

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள். 

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்,

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்,

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்,

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் 

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே". 

 

என்பது அப்பர் பெருமான் திருவாக்கு.  கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடுதல் என்ற நான்கு நெறிகளை உள்ளுறையாக உணர்த்தப்பட்டு உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

 

       கேட்ட போது உண்டாகும் இன்பம் சிறப்பானது என்பதை, "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் திருக்குறள் வழி அறியலாம்.

 

 

     

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...