041. கல்லாமை --- 10. விலங்கொடு மக்கள்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.

 

     பசிதாகம்இனப்பெருக்கம்பயம்போன்ற உணர்வுகள் உயிர்களுக்கு எல்லாம் பொது. ஆனால் மனிதன் தனக்கு இருக்கவேண்டிய ஆறாம் அறிவால் விலங்கில் இருந்து வேறுபடுகிறான். 

 

     அந்த ஆறாம் அறிவு எனப்படுவது, "நல்லதன் நன்மையும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து ஒழுகுதல்" எனப்படும். அறிவை முறையாக நெறிப்படுத்துவது நூல்கள். எனவே,அறிவு நூல்களைக் கற்றவன்விலங்கு நிலை மாறி,மனிதனாக மாறுகிறான். விலங்குகள் காற்றை உட்கொண்டு இரையை உண்டு இனத்தைப் பெருக்கி வாழ்ந்து மடிகின்றன. விலங்குகளுக்கு உலகம் புரியாது. கலைகளைச் சுவைக்கத் தெரியாது. வாழ்க்கை பற்றிய அறிவு கிடையாது. புதிய பொருட்களை அவற்றால் படைக்க முடியாது. விலங்குகள் வெறும் புலன் நுகர்வில் கட்டுப்பட்டவை. விலங்குகளிடமிருந்து மேம்பட்டவன் மனிதன். இதைத் தெளிந்து கொள்வதற்கும்,மேலும் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் கல்வியறிவு தேவை. கல்லாத மனிதனோ அல்லது சமுதாயமோ முன்னேற்றம் காணமுடியாது. கல்விதான் மனிதனை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. 

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவரோடுகல்லாதவரை ஒப்பிட்டு நோக்கஅவர் நன்மை உடைய மனிதர்,இவர் தீமையை உடைய விலங்கு போல்பவர்" என்கின்றார் நாயனார்.

 

     மனிதர் யாவரும் உருவத்தால் ஒத்து இருக்கின்றனர்.  நன்மை உடையவர் நூல்களைக் கற்று வல்லவர் கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும்தீமை தரும் விலங்கு மனத்தை உடையவர்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

விலங்கொடு மக்கள் அனையர்இலங்கு நூல்

கற்றாரோடு ஏனை அவர்.         

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     விலங்கொடு மக்கள் அனையர் --- விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்

 

     இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் --- விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.

 

     (இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின்,கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)

 

     திருநாவுக்கரசு நாயனார்,  "நடுவே நின்றவிலங்கு அல்லேன்விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்இலம் பொல்லேன்,இரப்பதே,ஈய மாட்டேன்என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே" என்று இரங்குகின்றார்.

 

     பாவச் செயல்களையே பழகுகின்ற மக்களுக்கும்,அஃது இல்லாத பிற உயிர்கட்கும் இடை நிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்மன உணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கு அல்லாது ஒழிந்தேனும் அல்லேன்வெறுக்கத் தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசுவதில் வல்லவன்.. பிறப்பால் நற்குடியினன். ஆயினும் எனது செயலால் அதுவும் பொல்லாதவனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு,என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்" என்று தமது இழிநிலையை எடுத்துக் கூறுகின்றார்.


     புழு என்பது மிகவும் தாழ்ந்த பிறவி. எலும்பு இல்லாத உடம்பைப் பெற்றது. எளிதில் அழியக் கூடியது. மலத்தில் பிறந்துமலத்திலே உழலக் கூடியது. எனவே, "கடையான பிறப்பு ஆகிய புழுவாய்ப் பிறக்க நேர்ந்தாலும்இறைவா! உனது திருவடி எனது மனத்தில் வழுவாமல் இருக்கவேண்டும்" என்று வேண்டி, "புழுவாய்ப் பிறக்கினும்புண்ணியா! உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்" என்று அப்பர் பெருமான் பாடினார். "மலத்திடையே புழுத்த சிறு புழுக்களினும் கடையேன்" என்று அருளினார் வள்ளல் பெருமான்.

 

     மண்ணில் வாழும் புழுக்களுக்குஉணவின் பொருட்டு முயலுதல்உண்டல்உறங்கல்இன்ப துன்பநுகர்ச்சி ஆகிய நான்கு குணங்கள் மட்டுமே புழுவுக்குப் பொருந்தி உள்ளன. வேறு நல்ல குணங்கள் ஏதும் அதனிடத்தே இல்லை. மனிதனுக்கும் அந்த நான்கு குணங்கள் உண்டு. ஆனால்மனிதனிடத்திலே பொருந்தி உள்ளதாகிய பொல்லாங்குகள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. பிறர் உழைப்பில் வாழ எண்ணுதல்பிறருடைய ஆக்கம் கண்டு மனம் பொறுத்துக் கொள்ள முடியாமைபிறரை வஞ்சித்தல்பிறரைத் துன்புறுத்தல்பொய் சொல்லுதல்புறம் பேசுதல்பயன் இல்லாத சொற்களைப் பேசுதல் போன்ற இழிகுணங்கள் மனிதனிடத்தில் பொருந்தி உள்ளன. ஆனால்இத்தகைய தீய குணங்கள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. எனவேமனிதன் புழுவினை விடவும் தாழ்ந்தவன் ஆகின்றான். மனிதனாகப் பிறந்துமனிதனாக வாழ்ந்துமனிதரில் மேம்பட்ட புனிதர்களாக வாழுபவர்களும் இந்த உலகில் உண்டு. அந்தப் புனிதர்களோடு கூடி இருப்பதற்குபுழுவினும் கடையவன் ஆகிய சாதாரண மனிதனுக்குத் தகுதி இல்லை.

 

"புழுவுக்கும் குணம் நான்குஎனக்கும் அதே,

புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை,

புழுவினும் கடையேன்புனிதன் தமர்

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே".

 

இது அப்பர் பெருமான் அருளியதோர் தேவாரப் பாடல். இதன் பொருள் ---

 

     புழுவுக்கும் குணம் நான்கு. எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவேபுழுவினும் கடையவன் ஆகிய அடியேன்புனிதனாகிய பரம்பொருளைச் சார்ந்து இருக்கும் அடியார் குழுவினைச் சென்று கூடி இருக்கஎவ்விதத் தகுதியை உடையவன் ஆவேன்?

 

     புனிதனாகிய பரம்பொருளை ஒருவன் அடையவேண்டுமானால்அவனிடத்தில் புனிதமான குணங்கள் பொருந்தி இருக்கவேண்டும். புனிதமான குணங்கள் பொருந்தி உள்ள புனிதர்களைச் சார்ந்து இருந்தால்,புழுவினிடத்தில் கூடக் காணப்படாத பொல்லாங்குகள் எல்லாம் நீங்கிஒருவன் புனிதனாக முடியும் என்பது கருத்து.

 

     இத் திருக்குறளுக்குப் பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஐவாய வேட்கை அவாஅடக்கல் முன்இனிதே;

கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வினிதே;

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்

புல்லா விடுதல் இனிது.      --- இனியவை நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     ஐவாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே --- ஐந்து புலன்களின் வழியால் வருகின்ற ஆசையையும்அதனை ஒருகால் விடினும் பழைய பயிற்சி வயத்தான் அதன்கட் செல்லும் நினைவையும் ஒழித்தல் இனிதுகைவாய்ப் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே --- கையினிடத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும்கல்லாதவரை விடுதல் இனிதுநில்லாத காட்சி நிறை இல் மனிதரைப் புல்லா விடுதல் இனிது --- நிலையில்லாத அறிவினையுடையநெஞ்சை நிறுத்துல் இல்லாதமனிதரைச் சேராது நீங்குதல இனிது.

 

ஐந்து வழியாவன : மெய்வாய்கண் மூக்கு,செவி என்பன.

 

"மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்

கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும்"              

 

என்று நாலடியார் விளக்குவது காண்க.

 

       கற்று வைத்தும் அறிவு மயங்குதலும்மனம் சென்றவழி எல்லாம் செல்லுதலும் ஆகிய தீயொழுக்கம் உடையார்சேர்க்கை கேடு பயத்தலின்,  ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லாவிடுதல் இனிது என்றார். 

 

திருகு நெஞ்சின் வஞ்சராகி இளைஞர் தீமைசெய்தக்கால்

உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?

மிருகம் அன்று,பறவை அன்றுரக்கம் இன்றி மேவும்நின்

அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே.

                                                                                        --- வில்லிபாரதம்சூதுபோர்ச் சருக்கம்.

 

இதன் பொருள் ---

 

     உனது மைந்தர்கள்மாறுபாடு கொண்ட மனத்திலே வஞ்சனைக் கருத்தை உடையவர்களாய்பாண்டவர்கட்குப் பொல்லாங்கு செய்த பொழுதில்அப்பாண்டவரிடத்து உண்மை அன்புக்கு உருகுபவன் போலப் பாவனை காட்டுகிற பெரிய தந்தையாகிய நீஅப் பொல்லாங்குக்குச் சம்மதித்திருப்பது தகுதியோநீ மிருகமும் அல்லைபறவையும் அல்லை;  மனிதனாய் இருந்தும்இரக்கம் இல்லாமல் இருக்கிற உனது சமீபத்தில் நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக்காரணம்எங்களது புத்தியில்லாமையே ஆகும். உன்மீது குற்றஞ் சொல்வதில் பயனில்லை என்றபடி.

 

    நீ இருதிறத்துப் புதல்வரிடத்திலும் பட்சபாதமில்லாமல் ஒரு நிகராக இருந்து நியாயப்படி செல்ல வேண்டியிருக்கஅவ்வாறு  நடவாமல் பகுத்தறிவில்லாத  மிருகபட்சிகள் போலச் சிறிதும் விவேகமின்றி இரக்கங் கொள்ளாதிருப்பதனால்நாங்கள் உன்னைச் சேர்ந்திருப்பது எங்களது அறிவீனமே ஆகும் என்று தம்மைப் பழித்துக் கூறும் முகத்தால் விதுரன் திருதராட்டிரனைப் பழித்தான்.  

 

     இவ்வாறு இரக்கம் கொள்ளாமலிருப்பது மிருகங்களின் இயற்கையும் அன்றுபட்சிகளின் இயற்கையும் அன்று. அவைகளுமே இரக்கம் கொள்ளுகின்றன.

 

"நன்றுதீதுஎன்று இயல் தெரி நல் அறிவு

இன்றி வாழ்வது அன்றோவிலங்கின் இயல்?

நின்ற நல் நெறிநீ அறியா நெறி

ஒன்றும் இன்மைஉன்வாய்மை உணர்த்துமால்".  --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

     தன்பால் குற்றம் இல்லை என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்துஅவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்.

 

இதன் பொருள் ---

 

     விலங்கின் இயல் --- விலங்குகளின் இயல்பாவதுநன்று தீது என்று ---நல்லது இதுதீயது இது என்றுஇயல் தெரி --- அதனதன் இயல்புகளைஉள்ளபடி உணர்கின்றநல் அறிவு இன்றி --- நல்ல அறிவில்லாமல்வாழ்வதுஅன்றோ --- (மனம் போனவாறு) வாழ்வது அல்லவாநின்ற நல் நெறி ---நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்நீ அறியா நெறி --- நீ ஆராய்ந்து உணராதஅறவழிஒன்றும் இன்மை --- ஒன்றும் இல்லை என்பதைஉன் வாய்மைஉணர்த்தும் --- இப்பொழுது நீ பேசிய உன் வாய்மொழியே உணர்த்தும்.

 

     எல்லா நன்னெறிகளையும் அறிந்தும்,அறநெறிக்கு மாறாக நடந்துகொண்டது வாலியின் குற்றம் என உணர்த்தப்பட்டது.  ஏனெனில்,அவன்வாய்ச் சொற்களே அவன் அறநெறி எது என்பதை நன்கு அறிந்தவன்என்பதைப் புலப்படுத்தி விட்டது.                                 

 

'தக்க இன்னதகாதன இன்னஎன்று

ஒக்க உன்னலர் ஆயின்உயர்ந்துள

மக்களும் விலங்கேமனுவின் நெறி

புக்கவேல்அவ் விலங்கும் புத்தேளிரே.    --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

     தன்பால் குற்றம் இல்லை என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்துஅவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்.

 

இதன் பொருள் ---

 

     தக்க இன்ன --- ஏற்கத் தகுதியானவை இவைதகாதன இன்ன --- ஏற்கத் தகுதியில்லாதவை இவைஎன்று --- என்று தெளிந்துஒக்க --- நீதி நூல் முறைமைக்கு ஏற்பஉன்னலர் ஆயின் --- எண்ணாதவர்களானால்உயர்ந்துள மக்களும் ---உருவாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும்விலங்கே -- விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்மனுவின் நெறி புக்கவேல் ---மனுதர்மம் வகுத்த  நன்னெறியில் நடக்குமாயின்அவ்விலங்கும் --- அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும்புத்தேளிரே --- தேவர்களுக்கு ஒப்பானவையே.

 

     ஐம்பொறி உணர்வும்உணவு உறக்கம் போன்ற செயல்களும்மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவைதீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும்மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால்மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் எண்ணப்படுவர்.  

 

     "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்று ஒரு கூற்று உண்டு. மனித வடிவில் இருந்தும்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கற்றுகற்றாரோடு கூடி இருந்துநற்பண்புகளை வளர்த்துக் கொள்ளாமல்,விலங்குத் தன்மையிலேயே உள்ள மனிதன் ஒருவனைக் காட்டிப் பாடப்பட்ட பாடல் ஒன்றினைக் காண்போம். மனதின் எந்த நிலையில் குரங்காக மதிக்கப்படுகின்றான் என்பதை விளக்கும் பாடல் இது.

 

"வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டுகள்ளுண்டு

     வெங்காஞ் சொறிப்பு தலிலே

  வீழ்ந்துதேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்

     மேவுமோமேவா துபோல்,

 

குறைகின்ற புத்தியாய்அதில் அற்ப சாதியாய்க்,

     கூடவே இளமை உண்டாய்க்,

  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க

     குவலயந் தனில்அ வர்க்கு,

 

நிறைகின்ற பத்தியும்,சீலமும்,மேன்மையும்,

     நிதானமும்,பெரியோர்கள் மேல்

  நேசமும்,ஈகையும்,இவையெலாம் கனவிலும்

     நினைவிலும் வராது கண்டாய்;

 

அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!

     அண்ணலே ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"  --- அறப்பளீசுர சதகம்.

 

இதன் பொருள் ---

 

     அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே --- புகழ்ந்து கூறப்படுகின்ற வேதங்களின் உட்பொருளாக உள்ளவள்ளல் தன்மை வாழ்ந்தவனே!  அண்ணலே--- தலைவனே! 

அருமை மதவேள்--- அருமை மதவேள் என்பான்அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     வெறி கொண்ட மற்கடம்--- வெறி பிடித்த ஒரு குரங்கானது,  பேய் கொண்டு--- பேயால் பிடிக்கப்பட்டுகள் உண்டு--- அதற்கு மேல் கள்ளையும் குடித்து,  வெம் காஞ்சொறிப் புதரில் வீழ்ந்து---  அதற்கும் மேலும் கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து,  தேள் கொட்டிட--- அதற்கு மேலா,ஒரு தேளாலும் கொட்டப் பெற்றால்எள்ளளவும்சன்மார்க்கம் மேவுமோ--- கொஞ்சமாவது அந்தக் குரங்குக்கு நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோ?  மேவாது போல்--- அந்த நிலையில் குரங்குக்கு நன்னெறியானது ஒன்றும் தோன்றாதது போல்

குறைகின்ற புத்தியாய்--- சிற்றறிவு மிகுந்து இருந்துஅதில் அற்ப சாதியாய்--- மேலும் இழிசெயல் செய்யும் குலத்தில் பிறந்தவனாய்கூடவே இளமை உண்டாய்--- அத்தோடு இளமைப் பருவமும் உடையவனாய் இருந்து, அவர்க்கு --- அத் தகையவனுக்கு,  கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் --- சிறிது அதிகாரம் செய்கின்ற தலைமைப் பொறுப்பு கிடைத்தாலும்,  குவலயம் தனில்--- உலகத்தில்,  (அப்படிப்பட்டவனுக்கு)நிறைகின்ற பத்தியும்--- நிறைந்த கடவுள் அன்பும்,  சீலமும்--- ஒழுக்கமும்,  மேன்மையும்--- பெருந்தன்மையும்,  நிதானமும்--- அமைதியும்,  பெரியோர்கள் மேல்நேசமும்--- பெரியவர்கள் இடத்திலே அன்பும்,  ஈகையும்--- கொடைப்பண்பும்இவை எலாம் நினைவிலும் கனவிலும் வராது --- ஆகிய இந்தபு பண்புகள் யாவும் நினைவிலே மட்டும் அன்றிக் கனவிலும் உண்டாகாது.

 

     "அற்பசாதி" என்றது பிறருக்குப் பயன்படாமலும்தீமை செய்துகொண்டும்மற்றவரைத் துன்புறுத்தியும் உயர்ந்த பண்பு பதியப் பெறாத குலம்.

 

     குரங்கு ஆனது இயல்பாகவே குறும்பு செய்யும் தன்மை உடையது. அது வெறிகொண்டு பேய் பிடித்துக்கள்ளைக் குடித்துத் தினவு எடுத்துத் தேள் கொட்டுதலையும் பெற்றால்அது செய்யும் குறும்புகள் மேலும் பெருகும். அது போலவேஇயல்பாகவே சிற்றறிவுடைய பரம்பரையிலே பிறந்தவர்க்குஇளமையும் தலைமைப் பதவியும் கிடைத்தால் தவறுகள் செய்வார்களே அன்றிநன்மை தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். 

 

     மனிதர்கள் வடிவில் எல்லோரும் ஒரு தன்மையராக இருந்தாலும், சிலர், அவரது செயல்களால் விலங்குகளாகவே உள்ளனர் என்பதைக் காட்டும் ஒரு பாடல்.

 

"தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி

     தள்ளிச்செய் வோர்குரங்கு;

சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்

     தாம்பயன் இலாதமரமாம்;

 

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு

     வெறியர்குரை ஞமலியாவர்;

மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்

     மேன்மையில் லாதகழுதை;

 

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்

     தூங்கலே சண்டிக்கடா;

சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்

     துட்டனே கொட்டுதேளாம்;

 

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை

     வலமாக வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"     ---  குமரேச சதகம்.

 

இதன் பொருள் ---

 

     மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா--- முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே!மயில் ஏறி விளையாடு குகனே--- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு--- தான் கொண்டதுதான் கொள்கை எனக் கொண்டுபெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர் மனிதர்களில் குரங்கு போன்றவர்.  சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம்--- பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில்குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர்.  வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர்--- வேண்டுமென்றே செல்வாக்கு அற்றவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள் மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள்.  மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மையில்லாத கழுதை --- தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள் மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்சோம்பலோடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா --- சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்குமூஞ்சியே மனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான். சூதுடன் அடுத்தோர்க்குஇடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம்--- மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டுதன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்பவன் கீழ்மகன் தான், மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.

 

     மனிதர்களில் அறிவு மிக்கவர்அறிவில் குறைந்தவர்அறிவே இல்லாதவர் என்று உண்டு. நன்மை தீமைகளை அறிந்தவர் அறிவு மிக்கவர். நன்மை தீமைகளைப் பகுத்து உணர மாட்டாதர் அறிவில் குறைந்தவர். தீமையையே பயிலுபவர்கள் அறிவே இல்லாதவர்கள். அறிவில் சிறந்தவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கொள்ளவேண்டும். தீமைகளைத் தள்ள வேண்டும். பெரியோர் சொல்லும் அறவுரைகளைப் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததையே செய்பவன் குரங்கைப் போன்றவன் என்றார். மழையில் நனைந்த ஒரு குரங்குக்குமரத்தில் கூடு கட்டி வாழ்ந்த தூக்கணாங்குருவி சொன்ன அறிவுரை நன்மையைத் தரவில்லை என்ற கதை யாவரும் அறிந்ததே. 

 

     அவையிலே குறிப்பு அறியும் திறம் இருக்கவேண்டும். குறிப்பறிதல் என்பது கருத்து அறிந்து நடந்து கொள்ளுதல் ஆகும்.  குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையே பாடி வைத்தார் திருவள்ளுவ நாயனார். குறிப்பறிய மாட்டாதவன் உணர்ச்சியற்ற மரத்தைப் போன்றவன் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

கவையாகிக்கொம்பாகிக்காட்டகத்தேநிற்கும்

அவை அல்லநல்லமரங்கள்,--- சவைநடுவே

நீட்டு ஓலைவாசியாநின்றான்,குறிப்பு அறிய

மாட்டாதவன் நல்மரம்.

 

     நாய் யாரைப் பார்த்தாரும் குரைக்கும். நல்லது கெட்டது அறியாது. போகவிட்டுப் பின்னால் குரைக்கும். கல் எடுத்தால் அடங்கும். வேண்டுமென்றே தற்புகழ்ச்சிக்காகத் தன்னை விடவும் எளியவர்களை எதிர்த்து நிற்பவர்கள் நாயைப் போன்றவர்கள்.

 

     மிக உயரமான பாறைகளிலும் மலைப் பாதைகளிலும் பொருள்களை சுமந்து கொண்டு கழுதைகள் நடப்பதை பார்த்தவர்கள் நிச்சயம் அதை குறை சொல்ல மாட்டார்கள்.

கழுதை ஒரு நாளில் முப்பது நிமிடங்கள் தான் உறங்கும். ஓய்வெடுத்து கொள்ளும். எதைத் தன்மீது வைத்தாலும் சுமந்து செல்லும். ஓய்வு ஒழிவு இல்லாமல்எந்த வழியிலாவது பொருளைத் தேடியாருக்கும் உதவாத உலுத்தர்கள் கழுதையைப் போன்றவர்கள்.

 

     பெரியோர்கள் கூடி இருக்கும் சபையானது தூங்கி வழிவதற்கு உரியது அல்ல. விழிப்புணர்வுடன் இருந்து நல்லறிவைத் தேக்கிக் கொள்வதற்கு உரிய இடம். அங்கே தூங்குபவனைச் சண்டிமாடு என்றார்.

 

தேள்அதுதீயில்வீழ்ந்தால்செத்திடாதுஎடுத்தபேரை

மீளவேகொடுக்கினாலேமெய்யுறக்கொட்டும்பல்லோர்

ஏளனம்பேசித்தீங்குற்றுஇருப்பதைஎதிர்கண்டாலும்

கோளினர்தமக்குநன்மைசெய்வதுகுற்றமாமே.

 

எனவரும் விவேக சிந்தாமணிப் பாடலின் கருத்தை அதற்குரிய இடுகையில் காணலாம்.நன்மை செய்தாருக்கும் தீங்கையே செய்பவன் கொட்டுகின்ற தேளைப் போன்றவன் என்பது இதனால் விளங்கும்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...