காஞ்சீபுரம் - 0488. தலை வலயத்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தலை வலையத்து (காஞ்சீபுரம்)

முருகா!
யாவரும் போற்றும் மேலான பிறவியைத் தந்து,
உனது திருவடியை அடைய அருள்.


தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான


தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
          தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
          சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ......ளம்புகாளப்

புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
     தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
          புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ

பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
     துறவனெ னத்திக் கியம்பு கின்றது
          புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
     யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
          குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
          குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி

கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
     கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
          கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி

கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
     சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


தலை வலையத்துத் தரம் பெறும், பல
     புலவர் மதிக்க, சிகண்டி, குன்றுஎறி
          தரும் அயில், செச்சைப் புயம், கயம் குற .... வஞ்சியோடு,

தமனிய முத்துச் சதங்கை, கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
          சரணமும் வைத்து, பெரும் ப்ரபந்தம் ......விளம்பு காளப்

புலவன் என, தத்துவம் தரம் தெரி
     தலைவன் என, தக்க அறம் செயும் குண
          புருஷன் என, பொன் பதம் தரும் சன ...... னம் பெறாதோ?

பொறையன் என, பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய
     துறவன் என, திக்கு இயம்புகின்றது
          புதுமை அ, சிற்பரம் பொருந்துகை ...... தந்திடாதோ?

குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி,
     உலகு அடையப் பெற்ற உந்தி, அந்தணி,
          குறைவு அற முப்பத்திரண்டு அறம்புரி ...... கின்ற பேதை,

குணதரி, சக்ரப் ப்ரசண்ட சங்கரி,
     கணபண ரத்நப் புயங்க கங்கணி,
          குவடு குனித்துப் புரம் சுடும்,சின ...... வஞ்சி, நீலி,

கலப விசித்ரச் சிகண்டி, சுந்தரி,
     கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி,
          கருணைவிழி, கற்பகம், திகம்பரி, ...... எங்கள் ஆயி,

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை,
     சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி,
          கவுரி, திருக்கொட்டு அமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.


பதவுரை

      குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி --- சிறந்த மலையாகிய இமயத்தில் அவதரித்த பெண் கொடியும்,

      உலகு அடையப் பெற்ற உந்தி --- உலகம் எல்லாவற்றையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவளும்,

     அந்தணி --- அழகிய தட்பத்தை உடையவளும்,

      குறைவு அற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை --- உயிர்களுக்குக் குறைவு இல்லாத வகையில் முப்பத்திரண்டு அறங்களையும் முறையே புரியும் பெண்மணியும்,

      குண தரி --- நற்குணங்களைப் படைத்தவளும்,

     சக்ரப் ப்ரசண்ட சங்கரி ---  மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரியும்,

      கணபண ரத்நப் புயங்க கங்கணி --- கூட்டமான படங்களை உடைய, இரத்தின மணியைக் கொண்ட பாம்புகளைத் திருக்கைகளில் வளையல்களாகத் தரித்தவளும்,

      குவடு குனித்துப் புரம் சுடும் --- மேரு மலையை வில்லாக வில்லாக வளைத்து, திரிபுரத்தை எரித்தவளும்,

     சின வஞ்சி --- கோபம் கொண்ட வஞ்சிக் கொடி போன்றவளும்,

      நீலி ---  நீல நிறத்தினளும்

     கலப விசித்ரச் சிகண்டி --- அழகிய கலாபத்தை உடைய மயிலின் வடிவம் கொண்டவளும்,

      சுந்தரி --- பேரழகியும்,

     கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி --- பொல்லாத நஞ்சினை அடக்கி வைத்த கழுத்தினை உடையவளும், 

      கருணை விழி  --- கருணை பொழியும் விழிகளை உடையவளும்,

     கற்பகம் --- கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு போன்றவளும்,

      திகம்பரி --- திசைகள ஆடையாக உடையவளும்,

     எங்கள் ஆயி --- எங்கள் அன்னையும்,

      கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை --- தன்னையே தியானிக்கின்ற அடியவர்களுக்குக் கருணை புரியும் அம்பிகையும்,

      சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகி --- வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவளும்,

(இத்தனை பெருமைகளை உடைய)

      கவுரி --- காமாட்சியின்

     திருக் கோட்டம் அமர்ந்த --- திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும்

     இந்திரர் தம்பிரானே --- தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!

     தலை வலையத்துத் தரம்பெறும் --- முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்றுள்ள

     பல புலவர் மதிக்கச் சிகண்டி --- பல புலவர்கள் போற்றித் துதிக்கும் தேவரீரது மயிலையும்,

      குன்று எறி தரும் அயில் --- கிரவுஞ்சமலையைப் பிளந்து எறிந்த வேலாயுதத்தையும்,

      செச்சைப் புயம் --- வெட்சி மாலையை அணிந்த திருத்தோள்களையும், 

      கயம் குற வஞ்சியோடு --- கய வஞ்சியாகிய தேவயானையையும், குறவஞ்சியாகிய வள்ளியம்மையையும்,

      தமனிய முத்துச் சதங்கை ---  பொன் சங்கிலி, முத்துச் சலங்கை ஆகியவை  சூழ்ந்துள்ள

     கிண்கிணி தழுவிய -- கிண்கிணியோடு கூடிய  

     செக்கச் சிவந்த பங்கய சரணமும் --- மிகச் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடியையும்

      வைத்து --- பாட்டுக்குப் பொருளாக அமைத்து

     பெரும் ப்ரபந்தம் விளம்பு --- பெரிய பாமாலைகளைப் பாடவல்ல,

      காளப் புலவன் என --- கரி​யமேகம் மழை பொழிவதுபோலப் பாடும் புலவன் இவன் என்று சொல்லும்படியும்,

      தத்துவம் தரம் தெரி தலைவன் என --- உண்மை ஞானம் பெற்ற தலைவன் இவன் எனக் கூறும்படியும்,

      தக்க அறம் செயும் குண புருஷன் என --- தக்க தருங்களைச் செய்யும் நற்குணமுடைய சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியும்,

      பொற் பதந்தரும் சனனம் பெறாதோ --- மேலான பதவியைத் தருகின்றதான பிறப்பை என் ஆன்மா பெறாதோ?

      பொறையன் என --- பொறுமை உடையவன் என்றும்,

     பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என --- இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி இவன் என்றும்,

         திக்கு இயம்புகின்றது புதுமை அல --- எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைச் சொல்வது அதிசயம் இல்லை.

         சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ --- அறிவுக்கும் மேலான பெரு நிலையைச் சேர்ந்து பொருந்தும் பேற்றை உமது திருவருள் தந்து அருளாதோ?

பொழிப்புரை

         சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடியும், உலகம் எல்லாவற்றையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவளும், அழகிய தட்பத்தை உடையவளும், குறைவு இல்லாத வகையில் முப்பத்திரண்டு அறங்களையும் முறையே புரியும் பெண்மணியும், நற்குணங்களைப் படைத்தவளும், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரியும், கூட்டமான படங்களை உடைய, இரத்தின மணியைக் கொண்ட பாம்புகளைத் திருக்கைகளில் வளையல்களாகத் தரித்தவளும், மேரு மலையை வில்லாக வில்லாக வளைத்து, திரிபுரத்தை எரித்தவளும், கோபம் கொண்ட வஞ்சிக் கொடி போன்றவளும், நீல நிறத்தினளும், அழகிய கலாபத்தை உடைய மயிலின் வடிவம் கொண்டவளும், பேரழகியும், பொல்லாத நஞ்சினை அடக்கி வைத்த கழுத்தினை உடையவளும்,  கருணை பொழியும் விழிகளை உடையவளும், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு போன்றவளும், திசைகள ஆடையாக உடையவளும், எங்கள் அன்னையும், தன்னையே தியானிக்கின்ற அடியவர்களுக்குக் கருணை புரியும் அம்பிகையும், வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவளும், இத்தனை பெருமைகளை உடைய காமாட்சியின் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!

         முதல் வகுப்பில் வைக்கத் தக்க தகுதி பெற்றுள்ள பல புலவர்கள் போற்றித் துதிக்கும் தேவரீரது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த வேலாயுதத்தையும், வெட்சி மாலையை அணிந்த திருத்தோள்களையும்,  கய வஞ்சியாகிய தேவயானையையும், குறவஞ்சியாகிய வள்ளியம்மையையும், பொன் சங்கிலி, முத்துச் சலங்கை ஆகியவை  சூழ்ந்துள்ள மிகச் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடியையும் பாட்டுக்குப் பொருளாக அமைத்து, பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரி​ய மேகம் மழை பொழிவது போலப் பாடும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் பெற்ற தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தருமங்களைச் செய்யும் நற்குணமுடைய சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியும், மேலான பதவியைத் தருகின்றதான பிறப்பை என் ஆன்மா பெறாதோ?

     பொறுமை உடையவன் என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி இவன் என்றும்,  எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைச் சொல்வது அதிசயம் இல்லை. அறிவுக்கும் மேலான பெரு நிலையைச் சேர்ந்து பொருந்தும் பேற்றை உமது திருவருள் தந்து அருளாதோ?

விரிவுரை

இத் திருப்புகழ் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மையின் திருக்கோயிலில் உள்ள முருகவேள் மீது பாடி அருளியது.

தலை வலயத்துத் தரம் பெறும் பல புலவர் மதிக்க ---

தலை வலையம் - முதல் எல்லையில் உள்ள புலவர்கள்.   முதல் தரமானவர்கள்.

கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர்...    ---  திருமுருகாற்றுப்படை.

இத்தகைய சிறந்த புலவர்கள் மதிக்கும்படி, "முருகா உன்னைப் பாடும் புலவனாக அடியேன் திகழ வேண்டும்" என்று சுவாமிகள் விண்ணப்பிக்கின்றார்.

சிகண்டி ---

சிகண்டி - மயில்.

நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்றுஇருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே.   ---  கந்தர் அலங்காரம்.

குன்று எறி தரும் அயில் ---

கிரவுஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல்.

அயில் - கூர்மை.  அது ஆகுபெயராக வேலைக் குறிக்கின்றது.

செச்சைப் புயம் ---

செச்சை - வெட்சி மலர்.  சிவந்த இம்மலர் முருகவேளுக்கு உகந்தது.

கயம் குறவஞ்சி ---

கயம் - யானை. இங்கே இந்திரனின் யானையான ஐராவதத்தைக் குறித்தது. கயவஞ்சி - தெய்வயானை.  குறவஞ்சி - வள்ளியம்மை.

சரணமும் வைத்துப் பெரும் ப்ரபந்தம் விளம்பு காளப்புலவன் என ---

மயில், வேல், தோள், தெய்வயானை, வள்ளி, திருவடி.  இந்த ஆறையும் வைத்துப் பாட வேண்டும்.

காளப்புலவன் ---  கரிய மேகம் மழை பொழிவது போல், கவிமழை பொழியும் புலவன்.

மேலே கூறிய மயில் முதலியவற்றை வைத்துச் சுவாமிகள் திருப்புகழ் பாடினார்.  "பக்கரை விசித்ரமணி" என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலைக் காண்க.

தத்துவம் தரம் தெரி தலைவன் என ---

தத் த்வம்.  உண்மைத் தன்மை.  உண்மை ஞானத்தை உணர்ந்த தலைவன் என்று உலகம் புகழும் தன்மை.

தக்க அறம் செய்யும் குண புருஷன் என ---

தக்க அறங்களைச் செய்யும் "உத்தம புருஷன்" என்று உலகோர் உரைக்கும் பெருமை.

பொற்பதம் தரும் சனனம் பெறாதோ ---

மேலான நிலையைத் தருகின்ற பிறப்பை இந்த ஆன்மா பெறமாட்டாதோ.  அடியேன் பெறமாட்டேனோ.

பொறையன் என –--

மிகுந்த பொறுமை உடையவன். 

இன்மையுள் இன்மை விருந்துஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.                  ---  திருக்குறள்.

ஏழ்மைக்குள் கொடிய ஏழ்மையாவது விருந்தினரை விலக்குதலாம்.  வலிமைக்குள் வலிமையாவது அறிவீனர்களைப் பொறுத்து மன்னித்தல் ஆகும்.

பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவி ---

பொய் - நிலைபேறு இல்லாது தோன்றி மறைவது.  உலகம் தோன்றி மறையும் இயல்பு உடையது.  அதனால், இது பொய்யுலகம் என்று தேறித் தெளிந்து, இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சித் துறந்த ஞானி.


திக்கு இயம்புகின்றது புதுமை அல ---

உலகில் உள்ள பெரியவர்கள் என்னைக் கண்டு, "இவன் பொறை உடையவன், சிறந்த துறவி" என்று புகழ்வதில் ஒன்றும் அதிசயம் இல்லை.

சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ ---

சித் - ஞானம்.  ஞானத்துக்கும் அப்பாற்பட்ட மேல் நிலையைப் பொருந்தும் பெரும் பேறு அடியேனுக்கு நீர் தந்து அருளவேண்டும்.

குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி ---

தவம் செய்த குலமலை அரசராம் இமவானிடம் அம்பிகை தாமரை மலரில் தோன்றி, அம் மலையரசனிடம் வளர்ந்தருளினாள்.

உலகு அடையப் பெற்ற உந்தி அந்தணி ---

எல்லா உலகங்களையும் ஈன்ற அன்னை தேவி.

இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
இளமுலை யின்செழும் பால்குடித்து இலங்கும் .... இயல்நிமிர்த் திடுவோனே..
                                                               --- (தமரகுரங்களும்) திருப்புகழ்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
                                                                        ---  அபிராமி அந்தாதி.

அந்தணி – அந்தணன் என்ற சொல்லின் பெண்பால்.  அம் - அழகிய.  தண் - தட்பத்தை உடையவர் அந்தணர்.

அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.         ---  திருக்குறள்.

குறைவு அற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை ---

முப்பத்திரண்ட அறங்களையும் காமாட்சியம்மை கச்சியம்பதியில் புரிந்தாள். புரிந்து கொண்டு இருக்கின்றாள்.

தவமுயன்று அப்பொற் றப்படி கைக்கொண்டு
அறம்இரண்டு எட்டுஎட்டு எட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்யம் உரைக்கும் ...... பெருமாளே.   ---  (கனிதரும்) திருப்பகழ்.

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே.   ---  அபிராமி அந்தாதி.

பச்சை ஒண்கிரி போல் இரு மாதனம்,
     உற்று இதம் பொறி சேர்குழல், வாள்அயில்
          பற்று புண்டரிகாம் என ஏய் கயல் ...... விழி, ஞான

பத்தி வெண் தரளாம் எனும் வாள் நகை,
     வித்ருமம் சிலை போல் நுதலார், தழ்
          பத்ம செண்பகம் ஆம் அநுபூதியின் ...... அழகாள் என்று

இச்சை அந்தரி, பார்வதி, மோகினி,
     தத்தை, பொன்கவின் ஆலிலை போல் வயிறி,
          இல் பசுங்கிளி ஆன மின் நூல் இடை ...... அபிராமி,

எக் குலம் குடிலோடு உலகு யாவையும்,
     இல் பதிந்து, ரு நாழி நெலால் அறம்
          எப்பொதும் பகிர்வாள் குமரா என ...... உருகேனோ?   --- திருப்புகழ்.

மாறுஇ லாதஇப் பூசனை என்றும்
         மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி
ஈறு இலாதஇப் பதியினுள் எல்லா
         அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
         ஒழிய இங்குஉளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப்
         பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள்.

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
         விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்து ஆக
         இகபரத்து இரு நாழிநெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆயும்
         காஞ்சி வாழ்பவர் தாம்செய்தீ வினையும்
தடைப டாதுமெய்ந் நெறி அடைவதற்கு ஆம்
         தவங்கள் ஆகவும் உவந்துஅருள் செய்தார்.      ---  பெரியபுராணம்.

சக்ர ப்ரசண்ட சங்கரி ---

மந்திரம் பொறித்த யந்த்ர பீடத்தில் வீரத்துடன் விளங்குபவள்.

சக்ரதலத்தி த்ரியட்சி சடக்ஷரி        ---  பூதவேதாள வகுப்பு.

புயங்க கங்கணி ---

பல தலைகளை உடைய பாம்பைக் கங்கணமாக தேவி தரிக்கின்றாள்.

அழல்வாய் கான்றி நாகாங்கதை.....   ---  வேல்வாங்கு வகுப்பு.

குவடு குனித்துப் புரம் சுடும் ---

குவடு - மலை.  மேருமலையை வில்லாக வளைத்தது.  வில்லை எடுத்தது சிவபெருமானுடைய இடக்கரம்.  இடக்கரம் அம்பிகைக்கு உரியது.

கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி...    ---  (பரிமளமிகவுள) திருப்புகழ்.

அதிகை வருபுரம் நொடியினில் எரிசெய்த அபிராமி... ---  (முகிலுமிரவியும்) திருப்புகழ்.

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே
வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே
நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார் புரம்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே. --- அப்பர்.

         பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .

கலப விசித்ரச் சிகண்டி ---

இரணகிரண மடமயில் …        ---  தேவேந்திர சங்க வகுப்பு.

அம்பிகை மயில் வடிவம் கொண்டு மயிலாப்பூரிலும், மாயூரத்திலும் சிவபெருமானை வழிபட்டாள்.

கருதிய பத்தர்க்கு இங்கும் அம்பிகை ---

தன் திருவடியைச் சதா தியானிக்கின்ற அன்பர்கட்குக் கருணை புரியும் அருட்பெரும் தெய்வம் அம்பிகை.

கவுரி திருக் கொட்டு அமர்ந்த ---

கவுரி திருக்கோட்டம் - காமக்கோட்டம்.  கோட்டம் - கோயில்.

கோட்டம் என்னும் சொல் அம் ஈறு கெட்டு முதல் குறுகி, கொட்டு என வந்தது.

இந்திரர் ---

அண்டங்கள் தோறும் ஒவ்வொரு இரந்திரன் ஆட்சி புரிவதனால் இந்திரர் எனப் பன்மையில் கூறினார்.

அரிகள் எண்ணிலர், இந்திரர் எண்ணிலர், அல்லாச்
சுரர்கள் எண்ணிலர், அண்டங்கள் தொறும்தொறும் இருந்தார்,
செருவின் ஆற்றலர் வழுத்தியே போயினர் சிவன்கண்
நெருநல் வந்திடு சிறுவனோ என்எதிர் நிற்பான்.
                                                                                 --- கந்தபுராணம்..
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே,
ஏறுகங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறுஇலாதவன் ஈசன் ஒருவனே..              ---  அப்பர்.

கருத்துரை

காமக் கோட்டத்து உறை கந்தவேளே, சிற்பரம் பொருந்த அருள் செய்.

No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...