காஞ்சீபுரம் - 0486. தசைதுறும் தொக்கு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தசைதுறும் தொக்கு (காஞ்சீபுரம்)

முருகா!
உனது பாதமலரைத் தந்து அருள்


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
     சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
          தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் .....த்ரியமாறித்

தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
     தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
          தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ......கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
     ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
          கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற்

றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
     கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
          டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
     டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
          குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக்

குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
     டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
          குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
     சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
          டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச்

சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
     றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
          சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...பெருமாளே.


பதம் பிரித்தல்


தசை துறும் தொக்குக் கட்டளை சட்டம்
     சரிய, வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து, அம்
          தலை உடம்பு எய்த்து, ற்புத் தளை நெக்கு, ந் .....த்ரியம் மாறித்

தடிகொடும் திக்குத் தப்ப நடக்கும்,
     தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன்,
          தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் ......கழலாநின்று,

அசலரும் செ செ செ செ என, சந்-
     ததிகளும் சிச்சி, சிச்சி என, தங்கு
          அரிவையும் து து து து என, கண்டு ...... உமியா, மற்-

றவரும் நிந்திக்கத் தக்க, பிறப்பு இங்கு
     அலம்அலம், செச்சைச் சித்ர மணித்தண்-
          டை, அரவிந்தத்தில் புக்கு அடைதற்குஎன்று ...... அருள்வாயே.

குசைமுடிந்து, க்கப் பக்கரை இட்டு, ண்
     திசையினும் தத்து, அப் புத்தியை நத்தும்,
          குரகதங் கட்டி, கிட்டி நடத்தும், ...... கதிர், நேமி,

குலரதம் புக்கு, ஒற்றைக் கணை இட்டு, ண்
     திரிபுரம் சுட்டு, கொட்டை பரப்பும்
          குரிசில் வந்திக்க, கச்சியில் நிற்கும் ...... கதிர்வேலா!

திசைமுகன் தட்டுப் பட்டு எழ, வற்கும்
     சிகரியும் குத்துப் பட்டு விழ, தெண்
          திரை அலங்கத்துப் புக்கு, லவிச்சென்று, ...... எதிர்ஏறி,

சிரம் அதுங்க, பொன் கண் திகை இட்டு, ன்று
     அவுணர் நெஞ்சில் குத்தி, கறை கட்கம்
          சிதறி நின்று, ட்டிப் பொட்டு எழ வெட்டும் .....பெருமாளே.


பதவுரை

      குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு --- கடிவாளத்தை இட்டு,  சமமாக அங்கவடி சேர்த்து,

     எண்திசையினும் தத்து --- எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும்,

     அ புத்தியை நத்தும் --- அந்த அறிவை விரும்புவதுமாகிய

     குரகதம் கட்டி --- வேதங்களாகிய நான்கு குதிரைகளைப் பூட்டி,

     கிட்டி நடத்தும் --- நெருங்கி நடத்தும்,

     கதிர் நேமி --- சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் கொண்ட

     குல ரதம் புக்கு --- சிறந்த தேரில் ஏறி,

      ஒற்றைக் கணை இட்டு --- ஒரே அம்பை எய்து,

     எண் திரிபுரம் சுட்டு --- மதிக்கத்தக்கத் திரிபுரங்களை எரித்து,

     கொட்டைப் பரப்பும் --- தமது வெற்றியைப் பரப்பிய

     குரிசில் வந்திக்க --- சிவபெருமான் வணங்க

     கச்சியில் நிற்கும் கதிர்வேலா --- காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஒளிமிகுந்த வேலாயுதரே!

      திசைமுகன் தட்டுப் பட்டு எழ --- பிரமதேவனும் தடைபட்டு நிற்கும்படி,

     வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ --- வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலையும் வேலினால் குத்துப்பட்டு அழிந்து விழ,

      தெண்திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று --- தெள்ளிய அலைகள் வீசும் கடலையும், கொத்தளத்தையும் அடைந்து, அங்கு உலாவிச் சென்று,

     எதிர் ஏறிச் சிரம் அதுங்க --- பகைவர்களை எதிர்த்து வென்று, அசுரர்களுடைய தலைகள் அமுங்கி நாசம் அடைய,

      பொன் கண் திகை இட்டு --- அழகிய கண்கள் திகைப்புக் கொள்ள,

     அன்று அவுணர் நெஞ்சில் குத்தி --- அன்று அசுரர்களுடைய நெஞ்சில் குத்தி,

     கறை கட்கம் சிதறி நின்று --- அவர்கள் கையில் இருந்த உதிரக் கறைபட்ட வாளாயுதங்கள் துணிபட்டுப் போய்

     எட்டிப் பொட்டு எழ வெட்டும் --- தூரத்தில் பொடிபட்டு விழும்படி அவர்களை வெட்டி வீழ்த்திய

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே !

      தசை துறும் தொக்கு --- தசை நெருங்கிய தோலும்

    கட்டு அளை சட்டம் சரிய --- அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக,

     வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து --- தலைமயிர் வெண்மையான கொக்கு போல நரைத்து,

      அம் தலை உடம்பு எய்த்து --- அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்துப் போய்,

     எற்புத் தளை நெக்கு --- எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சி உற்று,

     இந்த்ரியம் மாறி --- ஐம்பொறிகளும் மாற்றம் அடைந்து,

      தடி கொடும் --- தடியை ஊன்றி

     திக்குத் தப்ப நடக்கும் --- திசை தடுமாறி நடக்கும்படியாக

     தளர்வு உறும் --- தளர்ச்சி அடையும்

     சுத்தப் பித்த விருத்தன் --- சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய்,

      தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று --- அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய்,

      அசலரும் செ செ செ செ என --- அயலாரும் சே சே சே சே என்று இகழ,

     சந்ததிகளும் சி சி சி சி என --- பிள்ளைகளும் சீ சீ சீ சீ என்று பரிகசிக்க,

      தங்கு அரிவையும் து து து து என --- உடன் இருந்த மனைவியும் தூ தூ தூ தூ என்று  அவமதித்து துப்ப,

     மற்றவரும் கண்டு உமியா நிந்திக்கத் தக்க பிறப்பு --- பிறர்களும் பார்த்த உடன் எச்சிலைத் துப்பி நிந்திக்கத் தக்கதான இந்தப் பிறப்பு,

     இங்கு அலம் அலம் --- இங்கு போதும் போதும்.

      செச்சை --- வெட்சி மலர் அணிந்த,

     சித்ர மணித் தண்டை --- அழகிய இரத்தின மணியால் ஆகிய தண்டை அணிந்த,

     அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே --- தாமரை போன்ற உமது திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எந்நாள் அருள் புரிவீர்?

பொழிப்புரை

         கடிவாளத்தை இட்டு,  சமமாக அங்கவடி சேர்த்து, எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும், அந்த அறிவை விரும்புவதுமாகிய வேதங்களாகிய நான்கு குதிரைகளைப் பூட்டி, நெருங்கி நடத்தும், சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் கொண்ட சிறந்த தேரில் ஏறி, ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்கத் திரிபுரங்களை எரித்து, தமது வெற்றியைப் பரப்பிய சிவபெருமான் வணங்க காஞ்சீபுரத்தில் எழுந்தருளிய ஒளிமிகுந்த வேலாயுதரே!

         பிரமதேவனும் தடைபட்டு நிற்கும்படி, வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலையும் வேலினால் குத்துப்பட்டு அழிந்து விழ, தெள்ளிய அலைகள் வீசும் கடலையும், கொத்தளத்தையும் அடைந்து, அங்கு உலாவிச் சென்று, பகைவர்களை எதிர்த்து வென்று, அசுரர்களுடைய தலைகள் அமுங்கி நாசம் அடைய, அழகிய கண்கள் திகைப்புக் கொள்ள, அன்று அசுரர்களுடைய நெஞ்சில் குத்தி, அவர்கள் கையில் இருந்த உதிரக் கறைபட்ட வாளாயுதங்கள் துணிபட்டுப் போய் தூரத்தில் பொடிபட்டு விழும்படி அவர்களை வெட்டி வீழ்த்திய பெருமையின் மிகுந்தவரே !

         தசை நெருங்கிய தோலும் அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக, தலைமயிர் வெண்மையான கொக்கு போல நரைத்து, அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்துப் போய், எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சி உற்று, ஐம்பொறிகளும் மாற்றம் அடைந்து, தடியை ஊன்றி திசை தடுமாறி நடக்கும்படியாக தளர்ச்சி அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய், அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய்,அயலாரும் சே சே சே சே என்று இகழ, பிள்ளைகளும் சீ சீ சீ சீ என்று பரிகசிக்க, உடன் இருந்த மனைவியும் தூ தூ தூ தூ என்று அவமதித்துத் துப்ப, பிறர்களும் பார்த்த உடன் எச்சிலைத் துப்பி நிந்திக்கத் தக்கதான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்த, அழகிய இரத்தின மணியால் ஆகிய தண்டை அணிந்த, தாமரை போன்ற உமது திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எந்நாள் அருள் புரிவீர்?
                 

விரிவுரை

தசைதுறும் தொக்குக் கட்டளை சட்டம் சரிய ---

வயது முதிர முதிர உடம்பு சரியும் இயல் உடையது.  அதனால் சரீரம் எனப் பேர் பெற்றது.

தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை
     தந்தம் அசைய,முதுகே வளைய,இதழ்
          தொங்க ஒருகை தடிமேல் வர,மகளிர் ...... நகையாடி,

தொண்டு கிழவன்இவன் ஆர்என,இருமல்
     கிண்கிண் என,முன்உரையே குழற,விழி
          துஞ்சு குருடு படவே, செவிடுபடு ...... செவியாகி,

வந்த பிணியும், அதிலே மிடையும்ஒரு
     பண்டி தனுமெய் உறுவே தனையும்,இள
          மைந்தர் உடைமை கடன் ஏது? எனமுடுக, ......  துயர்மேவி

மங்கை அழுது விழவே, யமபடர்கள்
     நின்று சருவ, மலமே ஒழுக, உயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்.     ---  திருப்புகழ்.

தொக்கு - தோல்.  தசையுடன் கூடிய அளந்து கட்டிய கட்டடம் போன்றது இந்த உடம்பு.

வெண்கொக்குக்கு ஒக்க நரைத்து ---

தலைமயிர் வெண்மையான கொக்கின் நிறத்துக்கு ஒக்க நரைத்து விடும்.  நரை மனிதனுக்கு ஒரு குறையைத் தரும்.

தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து,
     கலகல எனப்பல் கட்டுஅது விட்டு,
          தளர்நடை பட்டு, தத்து அடி இட்டுத் ...... தடுமாறி,

தடிகொடு தத்தி, கக்கல் பெருத்திட்டு,
     அசனமும் விக்கி, சத்தி எடுத்து,
          சளியும் மிகுத்து, பித்தமும் முற்றி, ...... பலகாலும்

தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க,
     திரிபலை சுக்குத் திப்பிலி இட்டுத்
          தெளிய வடித்து,உற்று உய்த்து உடல் செத்திட்டு, ......உயிர்போமுன்

திகழ்புகழ் கற்று, சொற்கள் பயிற்றி,
     திருவடியைப் பற்றித் தொழுது உற்றுச்
          செனனம் அறுக்கைக்குப் பரமுத்திக்கு .....அருள்தாராய்.    ---  திருப்புகழ்.
 
இந்த்ரிய மாறி ---

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளும் தத்தம் செயல்களின் தன்மை மாறி நிலை குலையும்.

வயது முதிர்ச்சியினால், கண்க காணாது, காது கேளாது.

அசலரும் செச்செச் செச்செ எனச் சந்ததிகளும் சிச்சிச் சிச்சி எனத் தங்கு அரிவையும் துத்துத் துத்து என ---

வயது முதிர்ந்து, நோய் சூழ்ந்து, கிழமாய்க் கிடக்கின்ற போது, ஊரவரும், மனைவியும், மக்களும், சீசீ என்றும், சே சே என்றும் தூ தூ என்றும் கூறி இகழ்வார்கள்.

மறுக மனைஉறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில்
மாதர் சீ எனா, வாலர் சீ எனா...      ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

குசை ---

குசை - குதிரைக்கு இடும் கடிவாளம்.

குசை நெகிழா வெற்றி வேலோன்...       ---  கந்தர் அலங்காரம்.

பக்கரை ---

குதிரைக்கு இடும் அங்கவடி.

பக்கரை விசித்ரமணி                    ---  திருப்புகழ்.

புத்தியை நத்தும் குரகதம் ---

சிவபெருமான் திரிபுரம் எரிக்கத் தொடங்கியபோது, அவருடைய திருத்தேரில் வேதங்களைக் குதிரைகளாக அமைத்தார்கள்.

வேதம் அறிவுநூல் ஆதலால், புத்தியை நத்தும் என்றார்.

கதிர் நேமி ---

நேமி - சக்கரம்.  சிவபிரானுடைய திருத்தேரில் சூரிய சந்திரர்களை இரு சக்கரங்களாக இட்டார்கள்.

ஒற்றைக் கணை இட்டு ---

ஓர்அம்பே முப்புரம் உந்தீபற..                 ---  திருவாசகம்.

திரிபுரம் சுட்டுக் கொட்டை பரப்பும் ---

பகைவர்களுடைய ஊரைக் கொளுத்தி, ஆமணக்குக் கொட்டையை இட்டுப் பயிராக்குவார்கள்.   கொட்டை பரப்பினான் என்பது உலக வழக்கு.

அலங்கத்து ---

அலங்கம் - கோட்டையின் கொத்தளம்.

கருத்துரை

கச்சிக் குமரா, பிறப்பு அற உன் பாதமலர் தந்தருள்.

No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...