ஆபத்துக்கு உதவாப் பிள்ளை




பயனற்றவை

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்,

தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்,

கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்,

பாபத்தைத் தீராத் தீர்த்தம், பயனில்லை ஏழும்தானே. 1.


     மிகுந்த துன்பங்கள் நேர்ந்த காலத்தில், அத் துன்பங்களை நீக்கி உதவாத பிள்ளையும், பொறுக்க முடியாத பசி வந்த போது, அப் பசியைப் போக்கிக் கொள்ள பயன்படாத சோறும், தாகத்தைத் தணிப்பதற்குப் பயன்படாத குளிர்ந்த நீரும், கணவனின் வறுமை நிலையை அறியாத மனைவியும், கோபத்தை அடக்காத அரசனும், ஆசாரியரின் அருள் உரைகளை மனத்தில் ஏற்றுக் கொள்ளாத மாணவனும், செய்த தீவினைகளை அகற்றாத புண்ணிய நீரும், ஆகிய இந்த ஏழும் உலகத்தில் இருந்தும் பயன் இல்லாதவைகள் ஆகும். 


     மகன் என்று ஒருவன் இருந்தால், அவன் தனது தந்தையின் சம்பத்துக்கு மட்டும் உரியவன் அல்ல. தந்தைக்கு வரும் ஆபத்துக்கும் உதவ வேண்டியவன்.  துன்பம் நேர்ந்த காலத்தில் உதவாத பிள்ளை இருந்தும் இல்லாதவனாகவே கருதப்பட வேண்டியவன். அப்படித் தான் இருப்பான். ஆனாலும், தந்தை இல்லை என்று ஆகிவிட்டால், தானாகவே ஓடி வந்து அவரது சம்பத்துக்கு உரிமை கோருவான்.

     சோறு என்பது பசிக்கு உதவுவதாக இருக்கவேண்டும். பசி நேரத்தில் கிடைக்காத சோறு பயனற்றது ஆகிவிடும். பசி உணர்வு அடங்கிப் போன பிறகு உண்பதால் பயனில்லை. 

     பசி நேரத்துக்கு உணவை ஆக்கிக் கொடுக்க வேண்டியது மனைவி. அன்புள்ள மனைவியாக இருந்தால் அது நடக்கும். இல்லையென்றால் சமைத்துத் தானே வைக்கவேண்டும் என்று, அவளுக்கு எப்போது தோன்றுகின்றதோ அப்போது சமைப்பாள். அவளுக்கு அன்பு தான் இல்லையென்றால், அறிவும் கூட இல்லை. பகலிலே பசிக்கு உண்ணவேண்டும் என்றால், முற்பகலிலே சமைக்க வேண்டும். அதுதான் அறிவுடைய செயல். பிற்பகலிலே சமைத்தால், அது பேதைத் தனம். பிற்பகலிலே சமைத்தால், எப்படிக் கணவனுடைய அன்பைப் பெறமுடியாதோ, அதுபோல, காலம் உள்ளபோதே இறைவனை வணங்கிடாமல்,  சாவு வரும்போது சங்கரா, சங்கரா என்றால் இறையருளைப் பெறமுடியாது. "பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம் அன்பனாய் வாழமாட்டேன்" என்றார் அப்பர் பெருமான். மனைவி என்பவள் கணவனின் வருவாயை அறிந்து அதற்கேற்ப இல்லறத்தை நடத்தத் துணை புரிய வேண்டும்.  இல்லையென்றால் பயனில்லை.

        தண்ணீர் என்று இருந்தால், அது தாகத்தைத் தணிப்பதற்குப் பயன்படவேண்டும்.
  
        அரசன் கோபத்தை அடக்கி, அறிவைக் கொள்ள வேண்டும். பதறிய காரியம் சிதறிப் போகும். தீராக் கோபம் போராய் முடியும்.

       சீடன் என்பவன் குருவின் வாரத்தைகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

     தீர்த்தம் என்று இருந்தால், ஆடுகின்றவருடைய பாவத்தைப் போக்கவேண்டும். "ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி ஓடும் மா காவிரி" என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...