திருக் கயிலை - 0242. பனியின் விந்துளி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பனியின் விந்துளி (கயிலைமலை)

திருக் கயிலை முருகா! 
முன் வினையால் உன்னை மறந்தேன். திருவடி அருள்


தனன தந்தன தானனா தனதனன
     தனன தந்தன தானனா தனதனன
          தனன தந்தன தானனா தனதனன ...... தனதான


பனியின் விந்துளி போலவே கருவினுறு
     மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
          பனைதெ னங்கனி போலவே பலகனியின் .....வயிறாகிப்

பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
     மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
          பதுமை யின்செயல் போலவே வளிகயிறி .....னுடனாடி

மனவி தந்தெரி யாமலே மலசலமொ
     டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
          மயம யின்றொரு பாலனா யிகமுடைய .....செயல்மேவி

வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
     அறம றந்தக மீதுபோய் தினதினமு
          மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய்

தனன தந்தன தானனா தனதனன
     தினன திந்தன தீததோ திகுததிகு
          தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி

தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
     யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
          சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு..... மவுணோர்கள்

சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்
     குருதி யெண்டிசை மூடவே அலகைநரி
          சிறையி னங்களி கூரவே நகையருளி ......விடும்வேலா

சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி
     மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
          திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் .....பெருமாளே.


பதம் பிரித்தல்


பனியின் விந்துளி போலவே, கருவின்உறும்
     அளவில், அங்கு ஒரு சூசமாய், மிளகு, துவர்,
          பனை, தெனங்கனி போலவே, பலகனியின் ....வயிறு ஆகிப்

பருவமும் தலை கீழ்அதாய் நழுவி,நிலம்
     மருவி, ஒன்பது வாசல் சேர் உருவம்உள
          பதுமையின் செயல் போலவே, வளி கயிறின் .....உடன்ஆடி

மன விதம் தெரியாமலே, மல சலமொடு
     உடல் நகர்ந்து, அழுது ஆறியே, அனை முலையின்
          மயம் அயின்று, ஒரு பாலன்ஆய், இகம்உடைய .....செயல்மேவி

வடிவ முன்செய்த தீமையால் எயும் உனையும்
     அற மறந்து, அக மீது போய் தினதினமும்
          மனம் அழிந்து, உடல் நாறினேன், இனிஉனது ......கழல்தாராய்

தனன தந்தன தானனா தனதனன
     தினன திந்தன தீததோ திகுததிகு
          தகுத குந்ததி தாகுதோ என, முழவு ...... வளை, பேரி

தவில், கணம்பறை, காளமோடு, இமிலை தொனி
     இனம் முழங்கு, எழு வேலை போல் அதிர,பொரு
          சமர் முகங்களின் மேவியே, விருது சொலும்.....அவுணோர்கள்

சினம் அழிந்திட, தேர்கள் தோல் அரி பரிகள்
     குருதி எண்திசை மூடவே, அலகை நரி
          சிறை இனம் களி கூரவே, நகைஅருளி ......விடும்வேலா!

சிவன் மகிழ்ந்து அருள் ஆனை மாமுகன் மருவி
     மனம் மகிழ்ந்து அருள் கூர, ஓர் கயிலைமகிழ்
          திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் .....பெருமாளே.

    
பதவுரை

      தனன தந்தன தானனா தன தனன தினன திந்தின தீததோ திகு ததிகு தகுத குந்ததி தாகுதோ என --- தனன தந்தன தானனா தன தனன தினன திந்தின தீததோ திகு ததிகு தகுத குந்ததி தாகுதோ என்ற ஒலிக் குறிப்புடன்,

     முழவு --- முரசு வாத்தியமும்,

     வளை --- சங்கும்

     பேரி --- பேரி வாத்தியமும்,

     தவில் --- தவிலும்,

     கணம்பறை --- கூட்டமான பறைகளும்,

    களமோடு --- எக்காளம் என்ற வாத்தியமும்,

     இமிலை தொனி இனம் முழங்கு --- இவைகள் ஒலிக்கும் ஒலிவகைகள் முழக்கஞ் செய்து,

     எழு வேலை போல் அதிர --- ஏழு கடல்களைப் போல் பெரிய ஓசையை உண்டாக்க,

     பொரு சமர் முகங்களில் மேவியே --- போர்க்களங்களில் நின்று,

     விருது சொலும் அவுணோர்கள் --- தம் பெருமைகளைக் கூறிக் கொள்கின்ற அசுரர்களின,

     சினம் அழிந்திட --- கோபமானது அழியவும்,

     தேர்கள் --- தேர்கள்,

     தோல் --- யானை,

     அரி பரிகள் --- வலிமையுடைய குதிரைகளின்,

     குருதி எண்திசை மூடவே --- உதிரமானது எட்டுத்திசைகளிலும் பெருகி மறைக்கவும்,

     அலகை --- பேய்கள்,

     நரி --- நரிகள்,

     சிறை இனம் --- பறவைகள்,

     களி கூரவே --- மகிழ்ச்சியடையவும்,

     நகை அருளி விடும் வேலோ --- புன்னகை பூத்து வேலாயுதத்தை விடுவித்தவரே!

      சிவன் மகிழ்ந்து அருள் --- சிவபெருமான் மகிழ்ந்து அருளிய,

     ஆனை மாமுகன் மருவி --- பெருமையுடைய யானைமுகம் கொண்ட விநாயகர் உடனிருந்து,

     மனம் மகிழ்ந்து அருள்கூர --- திருவுள்ளம் மகிழ்ந்து அருள் பாலிக்க,

     ஒரு கயிலை மகிழ் --- ஒப்பற்ற திருக்கயிலாய மலையில் மகிழ்கின்றவரே!

      திகழ் குறிஞ்சியின் --- சிறந்த மலை நிலத்தில்,

     மாது மால் மருவு புகழ் --- வள்ளிநாயகி அன்பு கொள்கின்ற புகழ் மிகுந்த,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      பனியின் விந்துளி போலவே --- பனிபோலச் சுக்கிலம் துளி அளவு,

     கருவின் உறும் அளவில் --- கருவில் சேர்ந்த அளவில்,

     அங்கு ஒரு சூசம் ஆய் --- அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய்,

     மிளகு --- மிளகின் அளவாகவும்,

     துவர் --- பிறகு பாக்கின் அளவாகவும்,

     பனை --- பனம் பழம் அளவாகவும்,

     தென்னங்கனி போலவே --- தேங்காய் போலவும் வளர்ந்து,

     பலகனியின் வயிறு ஆகி --- பலாப்பழம் போல் வயிறு பெருத்து,

     பருவமும் தலை கீழதாய் நழுவி --- பிறக்க வேண்டிய காலம் வந்தவுடன் தலைகீழாக நழுவி,

     நிலமருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள --- பூமியில் பிறந்து ஒன்பது வழிகள் கொண்ட உருவமுள்ள,

     பதுமையின் செயல் போலவே --- ஒரு பொம்மையைப் போல் கிடந்து,

     வளி கயிறின் உடன் ஆடி --- பிராணவாயு என்ற கயிற்றின் உதவியால் ஆடி,

     மன --- (மன்ன) இப்பூமியில் பொருந்தியிருக்க,

     விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து --- விதம் இது என்று தெரியாமலே மலம் சலம் ஆகியவற்றோடு உடம்புடன் தவழ்ந்து,

     அழுது ஆறியே --- அழுதும் அழுகை ஓய்ந்தும்,

     அனை முலையின் மயம் அயின்று --- தாயின் முலை மயமாகிய பாலைப்பருகி,

     ஒரு பாலனாய் --- ஒரு பாலகனாய்,

     இகமுடைய செயல் மேவி --- இப்பிறப்பிற் செய்ய வேண்டிய செயல்களச் செய்து,

     வடிவம் முன் செய்த தீமையால் எயும் --- இந்த உருவம் முற்பிறப்பில் செய்த தீமை காரணமாகப் பொருந்தும்,

     உனையும் அற மறந்து --- தேவரீரையும் அறவே மறந்து,

     அக மீது போய் --- பாவம் மேலும் மேலும் வளர,

     தின தினமும் மனம் அழிந்து --- நாள்தோறும் மனம் உடைந்து அழிபட்டு,

      உடல் நாறினேன் --- உடம்பு நிலை குலைந்து கெடுகின்றேன்,

     இனி உனது கழல் தாராய் --- இனியாவது உமது திருவடியைத் தந்தருள்வீராக.


பொழிப்புரை


         தனன தந்தன தானனா தனதனன தினன திந்தின தீததோ திகுத திகு தகுத குந்ததி தாகுதோ என்ற ஒலிகளை உண்டாக்கி, முரசு, சங்கு, பேரி, தவில், பறைகள், எக்காளம், திமிலை முதலிய வாத்தியங்கள் ஏழு கடல்களைப்போல் ஒலிக்க, போர்க் களத்தில் வந்து தற்பெருமை கூறிய அசுரர்களின் கோபம் அழியவும், யானை வலிய குதிரைகளின் உதிரமானது எண் திசைகளையும் மூடவும், பேய்கள் நரிகள் பறவைகள் களிப்பு உறவும், புன்னகை புரிந்து வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

         சிவபிரான் மகிழ்கின்ற, விநாயகப் பெருமான் உடன் இருந்து மகிழ்ந்து அருள்பாலிக்க, ஒப்பற்ற கயிலைமலையில் மகிழும் பெருமிதமுடையவரே!

         அழகிய குறிஞ்சி நிலத்தில் வாழும் வள்ளியம்மையின் மீது காதல் கொள்ளும் புகழ் வாய்ந்த பெருமிதம் உடையவரே!

     பனியின் துளிபோன்ற விந்துவானது கருவில் உற்று, பாக்கு, பனம்பழம், தேங்காய் போல் சிறிது சிறிதாக வளர்ந்து, அதனால் தாயின் வயிறு பலாப்பழம் போல் ஆக, கரு முற்றியபின் தலகீழாய் அழுவிப் பூமியில் பிறந்து ஒன்பது ஓட்டைகளை உடைய ஒரு பதுமைபோல் பிராணவாயு என்ற கயிற்றினால் ஆடி இப்பூமியில் பொருந்தி, மலசலத்துடன் தவழ்ந்து, அழுதும் அழுகை ஓய்ந்தும், தாய் முலைப்பால் குடித்து ஒரு குழந்தையாய் இப்பிறப்பிற் செய்யும்படி விதித்த செயல்களைச் செய்து, முற்பிறப்பிற் செய்த தீமை காரணமாக உருவம் பொருந்தும்; தேவரீரை அறவே மறந்து பாவம் மென்மேல் வளர, நாள்தோறும் மனம் உடைந்து அழிபட்டு உடல் உருக்குலைந்து நிற்கும் அடியேனுக்கு உமது திருவடித் தாமரையைத் தந்தருள்வீர்.

விரிவுரை

பனியின் விந்துளி போலவே ---

உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைப் பயன்களாகிய புண்ணிய பாவங்களை ஒளி உலகிலும் இருள் உலகிலும் அனுபவிக்கின்றன. உயிர்கள்- சிற்றறிவுடையன; வினை-சடம்; ஆதலால் வினைகளை அந்தந்த உயிர்களுக்குப் பேரறிவும் பேராற்றலும் படைத்த ஒரு பரம்பொருள் ஊட்டுகின்றது.

எனவே செய்வான், செய்வினை, வினைப்பயன், அதனை ஊட்டுவான், என்ற நான்கினையும் நன்கு உரைப்பது சைவ நூல் ஒன்றேயாகும்.

செய்வினையும், செய்வானும், அதன் பயனும், கொடுப்பானும்,
மெய்வகையால் நான்குஆகும், விதித்த பொருள் எனக் கொண்டே,
இவ் இயல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை என,
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
                                                                                           --- பெரியபுராணம்.

இவ்வண்ணம் வினைப்பயன் நுகர்ந்தபின், கலப்பான வினைப்பயனை நுகர்தற் பொருட்டு இறையாணையால் அவ்வுயிர்கள் மழை வழியாக இப்பூதலத்தைச் சேர்கின்றன. காய் கனி மலர் நீர் தானியம் இவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து, அறுபது நாள் கருவுற்றிருந்து, பெண்ணிடம் சேர்கின்றன. அப்படி அக்கரு ஆணிடம் இருந்து பெண்ணிடம் சேர்கின்றபோது அது புல்லின் மீதுள்ள பனித் துளிபோன்ற சிறிய அளவுடையதாக இருக்கின்றது என்பதை “அறுகு நுனி பனியனைய சிறிய துளி” என்கின்றார் அடிகளார் திருவிடைமருதூர்த் திருப்புகழில்.

பனித்துளி போன்ற விந்து எனக்கொண்டு கூட்டிப் பொருள் செய்க.

கருவில் உறும் அளவில் அங்கு ஒரு சூசமாய் ---

உயிர் விந்தின் மூலம் கருவில் உற்றபின் அக் கருப்பைக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

சூசம்-சூசகம், அறிகுறி. கருவின் அறிகுறியாய்த் தாயின் உடம்பில் பச்சை நரம்பு தோன்றுதல். தனத்தின் கண் கருமையுறுதல் முதலியன உண்டாகும்.

மிளகு துவர் பனை தெனங்கனி போலவே ---

கருவானது மிளகின் அளவாகவும், பாக்கின் அளவாகவும், பனம்பழத்தின் அளவாகவும், தேங்காயின் அளவாகவும் வளர்ச்சி யுற்றுப் பருத்து நிற்கும்.

பலகனியின் வயிறாகி ---

தாயின் கருவுற்ற வயிறு பலாப்பழம்போல் காட்சியளிக்கும்.

பருவமும் தலை கீழதாய் நழுவி ---

தாயின் உதரத்தில் இருந்த குழவி ப்ரசூத வாயு பிடர் பிடித்து உந்த, தலைகீழாய் திரும்பி வந்து பிறக்கும்.

நிலம் மறுவி ---

பூமியில் வந்து சேரும். அப்போது அளவற்ற வேதனையுற்ற அக்குழவி அழுது துன்புறும்.

ஒன்பது வாசல்சேர் உருவம்உள பதுமையின் செயல்போல் ---

ஒரு பதுமைக்கு ஒன்பது துவாரம் அமைத்தது போன்ற உருவம் பெற்று அக்குழவி காட்சியளிக்கும்.

வளி கயிறினுடன் ஆடி மன ---

கயிறுகளைக் கட்டி ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது மனித வாழ்வு. மரப் பொம்மைக்கு நிரம்பக் கயிறுகளைக் கட்டி அசைத்து ஆட்டுமாப் போல், இந்த மாமிசப் பொம்மைக்கும் பிராணவாயு என்ற கயிற்றைக் கட்டி வைத்துள்ளது. அதனால் ஆட்டம் அடைந்து நிலவுலகில் பொருந்தி வாழ்கின்றது.

மன்ன என்ற சொல் மன என்று வந்தது.

விதந்தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து ---

இன்ன படி போகின்றது என்ற விவரம் தெரியாமலேயே மலமும் சலமும் வெளிப்பட, அவற்றுடன் மெல்ல நகர்ந்து அக் குழவி தவழ்ந்து செல்லும்.

அழுது ஆறியே ---

அக்குழவி குவா குவா என்று அழுது மீண்டு ஆறுதல் அடையும்.

அனை முலையின் மயம் அயின்று ---

குழவி கருவுற்றபோதே அதன் நலத்துக்கு என இறைவன் அமைத்த தனங்களில் பால் சுரக்கும். அது பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் சுரந்தும் நிற்கும். குழவி அத் தாய்ப் பாலைக் குடித்து வளரும்.

ஒரு பாலனாய் இகமுடைய செயல்மேவி ---

ஒரு பாலகனாய் வளர்ந்து இப்பிறப்பில் செய்யும்படி விதித்த செயல்களைச் செய்து உலாவும்.

வடிவ முன்செய்த தீமையால் எயும் ---

எயும்-ஏயும்; பொருந்தும். இந்த வடிவமானது முற்பிறப்பில் செய்த தீமை காரணமாக வந்து பொருந்தும்.

ஆன்மாக்களின் கன்மங்கள் பல திறப்பட்டனவாதலின், உருவங்களும் பல திறப்பட்டிருக்கின்றன.

உனையும் அற மறந்து ---

இந்த உடம்பையும், உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு முதலிய உறுப்புக்களையும் உணவுப் பொருள்களையும் ஒளிப் பொருள்கைளையும் அமைத்துக் கருணையால் வழங்கிய இறைவனை நினைப்பதுவே புண்ணியங்கட்கெல்லாம் மேலான தலையாய புண்ணியமாகும்.

இங்ஙனம் நினைப்பது நன்றியுணர்வின்பாற் பட்டதென உணர்க. எல்லையற்ற உதவிகளைப் புரிந்துள்ள இறைவனது திருவருளை மறப்பதுவே கழுவாயில்லாத பாவமாகும் நன்றி மறப்பதாகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.                --- திருக்குறள்,

எனவே “இறைவனை அறவே மறந்து” என்கிறார்,

அகமீதுபோய் ---

அகம்-பாவம். பாவமானது மேல் மேல் வளரத் தீமைகளைப் புரிந்து.

தினதினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் ---

நாளும் நாளும் உள்ளம் உலைந்து உடம்பு உருக்குலைந்து விட்டேன்.

இனி உனது கழல் தாராய் ---

சேய் பிழையைத் தாய் பொறுப்பது போல், இறைவனே! சிறியேன் பிழையைப் பொறுத்து, இனி அடிமையேன் உய்யும் பொருட்டு உமது திருவடிகளைத் தந்தருளுவீ்ர்” என்று அருணகிரிநாதர் உள்ளங்குழைந்து உருகி வேண்டுதல் புரிகின்றார்.

தனன... விருதுசொலும் அவுணோர்கள் ---

பல வகையான வாத்தியங்கள் ஏழு கடல்போல் ஒலிக்க, தங்கள் வீரத்தின் பெருமையைக் கூறி வீரமுழக்கம் புரிகின்ற அசுரர்கள்.

தோல்-யானை. அரி-வலிமை. யானைகளும். வலிமையுள்ள குதிரைகளும் மாண்டழிந்தன.


குருதி எண்டிசை மூடவே ---

உதிர வெள்ளம் ஆறுபோல் எட்டுத் திசைகளிலும் பெருகிப் பூமியை மறைத்தது.

சிறை இனம் களிகூரவே ---

சிறை-இறக்கை. சிறகுடன் பறக்கும் காக்கை, கழுகு, பருந்து முதலிய பறவைகள், அசுரர்களின் பிணங்களின் நிணங்களை யுண்ணலாம் என்று எண்ணி மகிழ்ந்தன.

சிறை-சிறைச்சாலை. சூரபன்மனால் சிறையில் கிடந்த தேவர்கள், சித்தர்கள், அரம்பையர்கள் முதலியோர்கள், அசுரர்கள் மாண்டதால், நமக்குச் சிறைவாசம் ஒழிந்தது என்று கருதி உவகை உற்றார்கள் என்றும் கொள்ளலாம்.

சிவன் மகிழ்ந்தருள் ஆனை மாமுகன் ---

மூத்த மகனிடம் பிதாவுக்கும் இளைய மகனிடம் தாய்க்கும் அதிக விருப்பம் அமைவது உலகியல் ஆதலின் சிவபெருமான் மகிழ்கின்ற விநாயகர் என்றனர்.

மருவி மனமகிழ்ந்து அருள் கூர ---

விநாயகர் முருகரிடம் அமர்ந்து மிக்க அன்புடன் தழுவி மகிழ்கின்றார். முருகவேள் அருள் புரிகின்றார்.

கருத்துரை

திருக்கயிலை மேவும் சிவகுமரா, உன் திருவடி தருவாய்.



No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...