சுவாமி மலை - 0225. நிறைமதி முகம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிறைமதி முகமெனும் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
பொதுமாதர் உறவு ஆகாது. திருவடி சேர அருள்.

தனதன தனதன ...... தனதான
     தனதன தனதன ...... தனதான


நிறைமதி முகமெனு ......        மொளியாலே
     நெறிவிழி கணையெனு ...... நிகராலே

உறவுகொள் மடவர்க ......        ளுறவாமோ
     உனதிரு வடிவியினி ......   யருள்வாயே

மறைபயி லரிதிரு ......           மருகோனே
     மருவல ரசுரர்கள் ......      குலகாலா

குறமகள் தனைமண ......         மருள்வோனே
     குருமலை மருவிய ......    பெருமாளே.


பதம் பிரித்தல்


நிறைமதி முகம் எனும் ......      ஒளியாலே
     நெறிவிழி கணை எனும் ......    நிகராலே

உறவுகொள் மடவர்கள் ......           உறவுஆமோ?
     உன திருவடி இனி ......          அருள்வாயே.

மறைபயில் அரி திரு- ......            மருகோனே!
     மருவலர் அசுரர்கள் ......         குலகாலா!

குறமகள் தனை மணம் ......      அருள்வோனே!
     குருமலை மருவிய ......         பெருமாளே!


பதவுரை

         மறை பயில் அரி திரு மருகோனே --- வேதங்களில் புகழ்ந்து கூறப்பட்ட திருமாலின் மருகரே!

         மருவலர் அசுரர்கள் குல காலா --- பகைவராகிய அசுரர்களது குலத்துக்கு முடிவு செய்தவரே!

         குறமகள் தனை மணம் அருள்வோனே --- வள்ளியம்மையைத் திருமணம் புரிந்து கொண்டவரே!

         குருமலை மருவிய பெருமாளே --- சுவாமி மலையில் வாழும் பெருமையில் மிகுந்தவரே!

         நிறைமதி முகம் எனும் ஒளியாலே --- முழுமதியைப் போன்ற முகத்தில் ஒளியினாலும்,

     நெறி விழி கணை எனும் நிகராலே --- வழிகாட்டியுள்ள கண் அம்பு புரியும் போரினாலும்,

     உறவுகொள் மடவர்கள் உறவு ஆமோ --- உறவு பூண்கின்ற பொது மாதரின் உறவு ஆகுமோ? ஆகாது.

     உன திருவடி இனி அருள்வாய் --- உமது திருவடியை அடியேனுக்கு இனித் தந்தருளுவீர்.

பொழிப்புரை

         வேதங்களால் துதிசெய்யப் பெற்ற திருமாலின் திருமருகரே!

         பகைவராகிய அசுரர்களின் குலத்துக்கு முடிவு செய்தவரே!

         வள்ளிநாயகியைத் திருமணஞ் செய்தவரே!

         சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         பூரண சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியினாலும், வழிகாட்டும் கண் என்ற அம்பு செய்யும் போரினாலும், உறவு பூண்கின்ற பொதுமாதரின் உறவு ஆகுமோ? ஆகாது. ஆதலால் தேவரீருடைய திருவடிமலரைத் தந்து இனி அருள்புரிவீர்.


விரிவுரை

நிறைமதி முகமெனும் ஒளியாலே ---

பொதுமாதர் தங்கள் முகத்தை நன்றாக விளக்கி முழுமதியைப் போல் ஒளிபெறச் செய்து ஆடவரை மயக்குவர்.

நெறிவிழி கணை எனு நிகராலே ---

நெறி - வழி. நிகர் - போர்.

கண் வழிகாட்டுங் கருவி, கண்கள் புரியும் போரினாலும் மயக்குவர்.
  
உறவுகொள் மடவர்கள் உறவாமோ ---

உறவுகொண்டு ஆடவரது பொருளையும், உணர்வையும், உயிரையும் பறிக்கும் அம்மாதரது உறவு ஆகாது.

உன திருவடி இனி அருள்வாயே ---

திருவடித் தாமரையைத் தந்து அடியேனை ஆட்கொண்டருள்வீராக.

கருத்துரை

சுவாமிமலைக் கடவுளே! மாதர் உறவு அற மலரடியைத் தந்தருள்வாய்.


No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...