சுவாமி மலை - 0227. பல காதல் பெற்றிடவும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பலகாதல் பெற்றிடவும் (சுவாமிமலை)

சுவாமிநாதா! மாதர் பொய் இன்பம் ஆகாது.  
திருவடி இன்பத்தை அருள்

தனதான தத்ததன தனதான தத்த
     தனதான தத்ததன ...... தனதான


பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
     பலனேபெ றப்பரவு ...... கயவாலே

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
     பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
     வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
     விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
     வடமேரெ னத்தரையில் ...... விழவேதான்

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
     மருகாக டப்பமல ...... ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
     செவியார வைத்தருளு ...... முருகோனே

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
     திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பலகாதல் பெற்றிடவும், ஒரு நாழிகைக்குள் ஒரு
     பலனே பெறப் பரவு ...... கயவாலே,

பலபேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி, உடல்
     பதறாமல், வெட்கம் அறு ...... வகைகூறி,

விலகாத லச்சைதணி மலையாம் முலைச்சியர்கள்,
     வினையே மிகுத்தவர்கள், ...... தொழிலாலே

விடமே கொடுத்து, வெகு பொருளே பறித்து அருளும்
     விலைமாதர் பொய்க் கலவி ...... இனிதுஆமோ?

மலையே எடுத்து அருளும் ஒருவாள் அரக்கன் உடல்
     வடமேரு எனத் தரையில் ...... விழவேதான்,

வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு
     மருகா! கடப்ப மலர் ...... அணிமார்பா!

சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ்
     செவி ஆர வைத்து அருளும் ...... முருகோனே!

சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள்
     திரு ஏரகத்தில் வரு ...... பெருமாளே.

பதவுரை

      மலையே எடுத்து அருளும் --- கயிலாயமலையைப் பேர்த்து எடுத்த

     ஒரு வாள் அரக்கன் உடல் --- ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனாகிய இராவணனுடைய உடல்

     வடமேரு என தரையில் விழவேதான் --- வடக்கேயுள்ள மேருமலை யெனும்படி தரையில் விழும்படியாக,

     வகையா விடுத்த கணை உடையான் --- தக்கவகையாக விடுத்த கணையை உடையவராகிய இராமாவதாரம் எடுத்த திருமால்

     மகிழ்ச்சி பெறு மருகா --- மன மகிழ்கின்ற திருமருகரே!

         கடப்பமலர் அணி மார்பா --- கடப்பமலர் மாலை தரித்த திருமார்புடையவரே!

         சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் ---  சில காவியங்களை மட்டும் படித்து உணர்ந்த புலவர்கள் பாடிய தமிழ்க் கவிகளை

     செவி ஆர வைத்து அருளும் முருகோனே --- செவியாரக் கேட்டு அருள்புரிகின்ற முருகக்கடவுளே!

         சிவனார் தமக்கு உரிய --- சிவபெருமானுக்கு உரியதாகிய

     உபதேச வித்தை அருள் --- "ஓம்" என்ற உபதேசப்பெருளை அருளிய,  

     திரு ஏரகத்தில் வரு பெருமாளே --- திருவேரகம் என்ற திருப்பதியில் எழுந்தருளியிருக்கும்  பெருமையில் மிகுந்தவரே!

         பல காதல் பெற்றிடவும் --- பல பேர்களுடைய காதலைப் பெற்றிருந்தும்,

ஒரு நாழிகைக்குள் --- ஒரு நாழிகைப் பொழுதுக்குள்,

     ஒரு பலனே பெற --- ஒரு பலனைப்பெறும் பொருட்டு,

     பரவு கயவாலே --- அதற்கான சூழ்ச்சி செய்யுங் களவுச் செயலால்,

     பலபேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி --- பலபேர்களை மெச்சிப் புகழ்ந்து செய்கின்ற தொழிலையே செய்து

     உடல் பதறாமல் --- உடல் பதறுதல் இல்லாமல்

     வெட்கம் அறுவகை கூறி --- நாணம் அற்ற வகையில் பேசி,

     விலகாத லச்சை தணி --- இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த

     மலையா முலைச்சியர்கள் --- மலைபோன்ற தனங்களையுடைய பொது மாதர்கள்,  

     வினையே மிகுந்தவர்கள் --- தீவினையே மிகவும் புரிபவர்கள்,

     தொழிலாலே --- தங்கள் மாயத் தொழிலால்

     விடமே கொடுத்து --- நஞ்சினை நல்கி,

     வெகு பொருளே பறித்து அருளும் --- மிகுந்த பொருளைக் கவர்கின்ற

     விலைமாதர் பொய் கலவி இனிது ஆமோ ---  விலைமாதர்களுடைய பொய்ம்மையான கலிவி இன்பம் இனிது ஆகுமோ? ஆகாது.

பொழிப்புரை

         கயிலாய மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை யேந்தினவனுமான இராவணனுடைய உடல் வட மேருமலை போல் மண்ணில் விழும்படி, தக்க வகையில் விடுத்த கணையையுடைய ஸ்ரீராமர் உள்ளம் மகிழும் திருமருகரே!

         கடப்ப மலர் மாலை புனைந்த திருமார்பினரே!

         சில நூல்களே கற்றுணர்ந்த புலவர்கள் பாடிய பாடலைச் செவியாரக் கேட்டு அருள்புரியும் முருகக்கடவுளே!

         சிவபெருமானுக்கு உரியதான உபதேசப் பொருளாம் பிரணவ மந்திரத்தையருளிய திருவேரகத்தில் வீற்றிருக்கும்பெருமிதம் உடையவரே!

         பலபேர்களுடைய காதலைப் பெற்றிருந்தும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெறும் பொருட்டுச் செய்யும் களவுச் செயலால், பலபேரையும் மெச்சிப் புகழ்ந்து பேசுகின்ற தொழிலையே நடத்தி, உடம்பு பதறாமல் வெட்கமில்லாதபடி பேசி, இயற்கையில் விலகாத நாணமானது தணிதலுற்ற மலை போன்ற கொங்கைகளை உடையவர்களாம், தீவினைத் தொழிலையே பெரிதும் புரிகின்ற, சூழ்ச்சியாக விடத்தைத் தந்து மிக்க பொருளைக் கவர்கின்ற விலைமகளிரது பொய்யான கலவி இன்பம் இனிமையாகுமோ? (ஆகாது.)


விரிவுரை

பலகாதல் பெற்றிடவும் ---

பரத்தையர், பலரையும் விரும்பி அவர்பால் உள்ள செல்வப்பொருளைக் கவர்வார்கள்:அவ் ஆடவர்கள் பலர், இன்பத்தை ஒருத்தியிடம் நுகர்வார்கள்.

ஒரு மலரில் உள்ள தேனை வண்டுகள் பல வந்து நுகர்வது போலும்‘ என்று ஐங்குறுநூறு என்ற சங்க நூல் கூறுகின்றது.

                        விரிமலர்த்
தாது உண் வண்டினும் பலரே
ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே”

பொய்க் கலவி இனிதாமோ ---

துன்பத்தை இன்பமாக மாறி உணர்கின்றது பொய்மையாகும். கானல் நீரை, நீர் எனக் கருதி மான்கூட்டம் ஏமாந்து இடருறும். அதுபோல் ஆடவர்கள், இன்பம் போல் காட்டித் துன்பத்தையே செய்யும் பரத்தையர் கலவி இன்பத்தைப் பெரிதும் விரும்பி,
பொருளை எல்லாம் தந்து, நோயும் பெற்று, பழியும் பாவமும் எய்திக் கலங்கி நிற்பார்கள்.

ஆதலால் அக் கலவி இனிதாக மாட்டாது” என்று இத்திருப்புகழில் அடிகளார் உலகிற்கு உணர்த்தியருளினார்.

மலையே எடுத்தருளும் ஒரு வாள் அரக்கன் ---

தசக்ரீவன் என்ற அரக்கன் புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றான். திருக்கயிலாய மலைக்கு நேரே விமானம் தடைபட்டு நின்றது. தசக்ரீவன் விமானத்தைப் பலமுறை செலுத்தினான். அது அசையவில்லை.

கயிலைமலைக் காவல் பூண்டுள்ள திரு நந்திதேவர், “அடே தசக்ரீவா! இது கண்ணுதற்பெருமான் எழுந்தருளியுள்ள கயிலாயமலை. இதனை நவகோள்களும் வலம் வருகின்றன. இதற்குமேல் செல்வது பாவம். ஆகவே நீ வலமாகப் போ” என்று கூறினார்.

இளமைச் செருக்குடைய அந்த அரக்கன், “குரங்கு போல் முகமுடைய மாடே! நீ எனக்குப் புத்தி புகல்கின்றனையா? உன்னையும் இம்மலையையும் பேர்த்து எறிவேன்” என்று கூறினான்.

திருநந்திதேவர், “மூடனே, உனக்கு அறிவுரை கூறினால் என்னைக் குரங்கு முகம் என்று இகழ்கின்றனை, குரங்கினால் உன் நாடு  நகரம் அழியக் கடவது” என்று சாபம் இட்டனர்.

இதனைக் கேட்ட தசக்ரீவன் வெகுண்டு, விமானத்தைவிட்டு இறங்கி, கைலாய மலையைப் பேர்த்துத் தோள் மிசை வைத்துக் குலுக்கினான்.

அது சமயம் மலைக்குமேல் அமர்ந்துள்ள சுவாமியை அம்பிகை,
சுவாமி! அகில உலகங்களும் சக்தியால் தானே நடைபெறுகின்றது?” என்று கேட்டார்கள். சுவாமி, “ஆம்” என்றார். அம்பிகை, “எம்பெருமானே! எல்லாம் சிவமயம் என்று வேதம் புகல்கின்றதே; நீர் இப்படி என்னை உயர்த்திக் கூறுகின்றீர்” என்று சிறிது பிணங்கினார்கள். பெண்கள் கணவனுடன் பிணங்குவதற்கு ஊடல் என்று பேர்.

இவ்வாறு உமாதேவியார் ஊடல் கொண்டிருக்கும் அதே சமயம் மலை குலுங்கியது. ஊடலால் சற்று விலகியிருந்த தேவி மலை குலுங்குவதால் மனம் கலங்கி இறைவனைத் தழுவிக்கொண்டார். இராவணன் மலையெடுத்த செயல் இறைவனுக்கு உமையவள் ஊடல் தீர்த்து நன்மை செய்தது.

தேவி! அஞ்சற்க” என்று கூறி இறைவர் ஊன்றிய திருவடியின் பெருவிரலின் நக நுனியை ஊன்றிச் சிறிது அழுத்தினார். கதவிடுக்கில் அகப்பட்டு உடம்பு நெரிந்து, தோள் முறிந்து, “ஓ” என்று கதறினான். ஆயிரம் ஆண்டுகள் கதறியழுதான். அதனால் இராவணன் என்ற பெயர் உண்டாயிற்று. இராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் புரிந்தவன் என்று பொருள்.

பின்னர் இராவணன் இறைவனை இன்னிசையால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து வாளும் வாழ்நாளும் வழங்கியனுப்பினார்.


வள்ளல் இருந்த மலை அதனை வலம்
         செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து, அன்று
         எடுத்தோன் உரம் நெரிய,
மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார்
         மேவும் இடம்போலும்,
துள்ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த
         தோணி புரந்தானே.                  --- திருஞானசம்பந்தர்.


தூசுஉடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்
     தொலையாத காலத்து,ஓர் சொற்பாடாய் வந்து
தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்து,
     திப்பியகீ தம்பாட, தேரோடுவாள் கொடுத்தீர்.
நேசமுடைய அடியவர்கள் வருந்தாமை அருந்த
     நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,
     கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.    --- சுந்தரர்


சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்தருளும் முருகோனே ---

முருகன் பரம கருணாமூர்த்தி. நிறைய கற்றவர்க்கே மட்டும் அருள்புரிவான் அல்லன். கொஞ்சம் படித்தவர்க்கும் அருள் புரிகின்றான். சில காவியங்களைப் படித்த இளம் வித்வான்கள் கவி பாடினால், அக் கவிகளையும் எம்பெருமான் காது குளிரக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறான். என்னே எம்பிரானது கருணை! இளம் புலவர்கள் முன்னேற்றமடைய முருகன் அருள் புரிந்து வழிவகுக்கின்றான் என்று உணர்க!


கருத்துரை

திருமால் மருகா! திருவேரகத்துறை தேவா! மாதர் மயக்கற அருள் புரிவாய்.



No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...