பழநி - 0200. வேய் இசைந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வேய் இசைந்து (பழநி)

பழநியப்பா! மாதர் மயக்கு அ,
திருவடிகளில் மலர் இட்டு வழிபட அருள்.

தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான


வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையி லேமு யங்கிட
          வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்

வீறு கொண்டுட னேவ ருந்தியு
     மேயு லைந்தவ மேதி ரிந்துள
          மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்

போய லைந்துழ லாகி நொந்துபின்
     வாடி நைந்தென தாவி வெம்பியெ
          பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்

போது கங்கையி னீர்சொ ரிந்திரு
     பாத பங்கய மேவ ணங்கியெ
          பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
     ராவ ணன்சிர மேய ரிந்தவர்
          சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
  
தேச மெங்கணு மேபு ரந்திடு
     சூர்ம டிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்

ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
     போத கந்தனை யேயு கந்தருள்
          ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய,
     மாதர் கொங்கையிலே முயங்கிட,
          வீணிலும் சில பாதகம் செய, ...... அவமேதான்

வீறு கொண்டு உடனே வருந்தியு-
     மே, லைந்து அவமே திரிந்து, ளமே
          கவன்று, றிவே கலங்கிட, ...... வெகுதூரம்

போய் அலைந்து உழலாகி நொந்து, பின்
     வாடி நைந்து, னது ஆவி வெம்பியெ,
          பூதலம் தனிலே மயங்கிய, ...... மதிபோகப்

போது கங்கையின் நீர் சொரிந்து, ரு
     பாத பங்கயமே வணங்கியெ,
          பூசையும் சிலவே புரிந்திட ...... அருள்வாயே.

தீ இசைந்து எழவே இலங்கையில்
     ராவணன் சிரமே அரிந்து, வர்
          சேனையும் செல மாள வென்றவன் ...... மருகோனே!

தேசம் எங்கணுமே புரந்திடு
     சூர் மடிந்திட வேலின் வென்றவ!
          தேவர் தம் பதி ஆள அன்பு செய்- ...... திடுவோனே!

ஆயி, சுந்தரி, நீலி, பிங்கலை,
     போக அந்தரி, சூலி, குண்டலி,
          ஆதி, அம்பிகை, வேத தந்திரி ...... இடம் ஆகும்,

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஒர்
     போதகம்  தனையே உகந்து அருள்
          ஆவினன்குடி மீது இலங்கிய ...... பெருமாளே.


பதவுரை


      தீ இசைந்து எழவே --- நெருப்புப் பற்றி எழுமாறு,

     இலங்கையில் --- இலங்காபுரியில்

     ராவணன் சிரம் அரிந்து --- இராவணனுடைய தலைகளைத் துணித்து,

     அவர் சேனையும் செல மாள வென்றவன் --- அந்த இராவணாதி அசுரர்களுடைய சேனைகள் தொலைந்து அழியும்படி வென்ற நாராயணருடைய,

     மருகோனே --- திருமருகரே;

      தேசம் எங்கணுமே புரந்திடு --- அண்டங்கள் எல்லாவற்றையும் ஆண்டு வந்த,

     சூர் மடிந்திட --- சூரபன்மன் மாளும் படி,

     வேலின் வென்றவ --- வேலாயுதத்தால் வென்றவரே!

      தேவர் தம்பதி ஆள அன்பு செய்திடுவோனே --- தேவர்கள் தமது நகரை ஆளுமாறு அருள் புரிந்தவரே!

      ஆயி --- தாய்,

     சுந்தரி --- அழகி,

     நீலி --- நீலநிறமுடையவர்,

     பிங்கலை --- பொன்வண்ணமுடையவர், 

     போக அந்தரி --- உயிர்களுக்குப் போகத்தையூட்டும் ஞான ஆகாச வடிவினர்,

     சூலி --- திரிசூலத்தை ஏந்தியவர்.

     குண்டலி --- சுத்த மாயையானவர்,

     ஆதி அம்பிகை --- ஆதிபராசக்தியானவர்,

     வேத தந்திரி --- வேதாகமங்களின் பொருளானவராகிய உமாதேவியார்,

     இடம் ஆகும் --- இடப் பாகத்தில் உடைய,

     ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச --- நஞ்சினையுண்ட சிவபெருமான் வணங்க,

     ஓர் போதகந்தனை --- ஒப்பற்ற ஞானப் பொருளை,

     உகந்து அருள் --- மகிழ்ந்து உபதேசித்த,

     ஆவினன்குடி மீது இலங்கிய --- திருவாவினன்குடி என்ற திருத்தலத்தில் விளங்குகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் --- மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களையுடைய பெண்களின்,

     கொங்கையிலே முயங்கிட --- தனங்களில் தழுவ வேண்டி,

      வீணிலும் சில பாதகம் செய --- வீணாகச் சில பாதகங்களைச் செய்ய

     அவமேதான் --- பயன் ஒன்றும் இல்லாமல்,

     வீறு கொண்டுடனே வருந்தியும் --- செருக்கு அடைந்து வருந்தி,

     உலைந்து --- வாட்டம் அடைந்து,

     அவமே திரிந்து --- வீணாகத் திரிந்து,

     உளமே கவன்று --- உள்ளம் கவலையுற்று,

     அறிவே கலங்கிட --- அறிவு கலக்கமடைந்து,

     வெகு தூரம் போய் அலைந்து --- நெடுந்தூரம் சென்று அலைந்து,

     உழலாகி --- திரிந்து,

     நொந்து பின்வாடி --- மனம் நொந்து பின்பு வாட்டமடைந்து,

     நைந்து எனது ஆவி வெம்பியே --- மெலிவுற்று அடியேனுடைய உயிர் கொதிப்படைந்து,

     பூதலந்தனிலே மயங்கிய --- இப்பூமியின்கண் ஆசை மயக்கங் கொண்ட,

     மதிபோக --- புத்தி விலகிப்போய்,

     போது --- மலரையும்,

     கங்கையின் நீர் --- கங்கா ஜலத்தையும் கொண்டு,

     சொரிந்து --- நிரம்பவும் சொரிந்து,

     இரு பாத பங்கயமே வணங்கியே --- தேவரீருடைய இரண்டு திருவடிகளை வணங்கி,

     பூசையும் சிலவே புரிந்திட --- வழிபாடு சிலவற்றையும் புரியும்படி,

     அருள்வாயே --- திருவருள் புரிவீர்.

பொழிப்புரை


         இலங்கையில் நெருப்புப் பற்றி எழவும் இராவணனுடைய தலைகள் அற்று விழவும் அவனுடைய சேனைகள் அழியவும் வென்ற நாராயணருடைய திருமருகரே!

         அண்டங்கள் யாவும் அரசுபுரிந்த சூரபன்மன் மாளுமாறு வேலாயுதத்தைக் கொண்டு வென்றவரே!

         தேவர்கள் தமது நகரை யாளும்படி அருள் புரிந்தவரே!

         அன்னையும், அழகியும், நீலநிறமுடையவரும், பொன்வண்ணம் படைத்தவரும், உயிர்கட்குப் போகத்தை யூட்டுகின்ற ஞானாகாச வடிவினரும், திரிசூலத்தை ஏந்தியவரும், சுத்தமாயா சொரூபிணியும், ஆதி பராசக்தியும், வேதாகம சொரூபிணியும், ஆகிய உமாதேவியாரை இடப்பாகத்தில் உடையவரும், நஞ்சினை யுண்டவரும் ஆகிய சிவபெருமான் வணங்கிக் கேட்க, ஒப்பற்ற ஞானத்தை உபதேசித்த, திருவாவினன்குடியில் விளங்கிய பெருமிதம் உடையவரே!

         மூங்கிலை யொத்த தோள்களையுடைய பெண்களின் தனங்களைத் தழுவும் படி, வீணாண சில பாவங்களைச் செய்ய, பயனின்றிச் செருக்கு அடைந்து வருந்தி, நிலைகுலைந்து, வீணாகத் திரிந்து, மனங் கவலை கொண்டு, அறிவு கலங்கி, நெடுந்தூரம் போய் அலைந்து, உழன்று, உள்ளம் நொந்து, பின் வாட்டமடைந்து, மெலிந்து, எனது உயிர் கொதிப்புற்று, இம்மண்ணுலகில் ஆசையால் மயங்கிய புத்தி விலகும்படி, பூவும் கங்கை நீரும் கொண்டு சொரிந்து, உமது இரு சரணங்களில் வணங்கி, வழிபாடு செய்து உய்யுமாறு அருள்புரிவீர்.

விரிவுரை

வேய் இசைந்து எழு தோள்கள் ---

பெண்களுடைய தோள்களுக்கு மூங்கிலை உவமையாகக் கூறுவர். திரண்டு உருண்டு இருப்பதுபோல் அவர்களின் தோள்கள் அழகாக இருக்கும்.

 வீணிலுஞ் சில பாதகஞ் செய ---

பொய் களவு கொலை முதலிய பாவங்களைக் காமங் கொண்டார் புரிவர்.

பூ மாந்தும் வண்டுஎன நின்பொன் அருளைப் புண்ணியர்கள்
தாம் மாந்தி நின் அடிக்கீழ் சார்ந்து நின்றார், ஐயோ நான்
காமாந்த காரம் எனும் கள்உண்டு கண்மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.         ---  திருஅருட்பா

காமக் கள்ளை உண்டவர் சகல பாவங்களையும் புரிந்து, இகபர நலன்களை யிழப்பர். உடல் மெலிந்து, உள்ளம் நலிந்து, அறிவு கலைந்து, உருவங் குலைந்து, வெம்பி யுழல்வர். இந்த அவல நிலை மாற ஒரு வழியுண்டு; அதனை அடிகளார் உபதேசிக்கின்றார்.

போது கங்கையின் நீர் சொரிந்து ---

இறைவனுடைய திருவடியில் பூவும் நீரும் கொண்டு ஒருமுகமாக இருந்து பூசை செய்தால் ஆசைப் பகையறும். ஆகவே ஆசைநோய் அகல வேண்டுமாயின் பூசை புரிய வேண்டும்.

பூ-பூர்த்தி, ஜா-உண்டாகுதல், வினைகள் பூர்த்தி யடைந்து, சிவஞானத்தை உண்டாகச் செய்யும் செயலுக்குப் பூஜா என்று பேர். அகங் குழைந்து அன்புடன் ஆண்டவனை ஆசாரமாகப் பூசிக்கவேண்டும்.

    புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அதுகண்டு அருள் புரியாநிற்கும்
    எண்இலி பாவிகள் எம்பிறை ஈசனை
    நண்ணஅறியாமல் நழுவுகின்றாரே.     ---  திருமந்திரம்

ஆகவே பூவும் நீரும் கொண்டு இறைவனை உள்ளன்புடன் பூசிக்கவேண்டும்! பூசிப்பவரை நேசிக்க வேண்டும்.

         ஒரு தனவந்தர் வீட்டிலே விருந்து. மிகப் பெரிய மனிதர்கள் மட்டுந்தான் அங்கே செல்லமுடியும். அழைப்பின்றி யாரும் நுழைய முடியாது. வறியவன் ஒருவன் வற்றிய உடம்பும் ஒட்டிய வயிறும் குழிந்த கண்ணும் உடையவன். அவனுக்கு அந்த விருந்தில் கலந்து உண்ணவேண்டும் என்று அடங்காத ஆசை. எவ்வாறு நுழைய முடியும்! ஒரு தந்திரம் புரிந்தான். தக்கார் ஒருவர் செல்லும்போது அவரை ஒட்டி உள்ளே சென்று விட்டான். அந்தப் பெரியாருடைய ஏவலன் இவன் என்று கருதி யாரும் தடுக்கவில்லை. ஏழை உள்ளே சென்று இலையில் அமர்ந்து, உள்ளம் குளிர, உடம்பு குளிர, உயிர் குளிர உண்டுவிட்டு வெளியே சென்றான்.

         அதுபோல் அடியவர்கள் பூவும் நீரும் சுமந்து ஐயனிடம் போகின்றார்கள். தகுதியற்ற ஏழையாகிய அடியேனும், பூவும் நீரும் சுமந்து செல்லும் அடியவர் பின்னே சென்று சிவானந்த சிவபோகத்தை உண்டேன். எம்பெருமானைக் கண்டேன். காணாத காட்சிகளை எல்லாம் கண்டேன் என்கிறார் அப்பர்.

போதொடுநீர் சுமந்து ஏத்திப் புகுவார், அவர் பின் புகுவேன்,
 காதல் மடிப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
 கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன்”

நீரும் பூவுங் கொண்டு இறைவனைப் பூசிப்பதன் பெருமையை இதனால் அறிக.

  உன்புகழே பாடி நான்இனி
    அன்புடன் ஆசார பூசைசெய்து
    உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே”      ---  (கொம்பனையார்) திருப்புகழ்

தீ இசைந்து எழ ---

இலங்கையில் அநுமனைக் கொண்டு இராமர் எரியூட்டினார். இராவணன் உள்ளத்திலும் காமத் தீ பிடித்து அதனால் நாடு நகரம் சுற்றம் சேனை மக்கள் எல்லோருடனும் இராவணன் அழிந்தே போனான். ஆதலால் மக்கள் காமக் கனலை அவித்து, பக்திக் கனலை மூட்டி, வினைகளாகிய விதைகளை வறுத்துவிட வேண்டும். அதன் பின் வினைகளாகிய விதைகள் விளையமாட்டா.

தேசம் எங்கணுமே புரந்திடு சூரன் ---

சூரபன்மன் 1008 அண்டங்களையும் தன் ஒரு குடைக்கீழ் அடங்குமாறு செய்து அரசு புரிந்தான். அவனை அடக்கி இறைவன் இன்னருள் புரிந்தான்.


கருத்துரை

         திருமால் திருமருக! சூரசங்காரா! சிவகுருவே! திருவாவினன்குடியில் எழுந்தருளிய பெருமாளே! மாதர் மயக்கற, மலரிட்டு உம்மை வழிபடுமாறு அருள் புரிவீர்.





No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...