திருக் கயிலை - 0244. முகத்தைப் பிலுக்கி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகத்தைப் பிலுக்கி (கயிலைமலை)

திருக் கயிலை முருகா! 
மாதர் மயக்கம் அற அருள்


தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
     தனத்தத் தனத்த தத்த ...... தனதான

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
     முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே

முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
     மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
     நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால்

நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
     நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
     திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும்

செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
     ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே

மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
     மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய

மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
     மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகத்தைப் பிலுக்கி, மெத்த மினுக்கித் தொடைத்து, ரத்ந
     முலைக் கச்சு அவிழ்த்து அசைத்து, ...... முசியாதே

முழுக்கக் கழப்பி எத்தி, மழுப்பி, பொருள் பறித்து,
     மொழிக்கு உட்படுத்து, அழைத்து, ...... அமளி மீதே

நகைத்திட்டு அழுத்தி, முத்தம் அளித்துக் களித்து, மெத்த
     நயத்தில் கழுத்து இறுக்கி, ...... அணைவார்பால்

நடுக்கு உற்றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து,
     நயத்துத் தியக்கி நித்தம் ...... அழிவேனோ?

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
     திமித்தித் திமித்தி தித்தி ......  எனஆடும்

செகத்துக்கு ஒருத்தர் புத்ர! நினைத்துத் துதித்த பத்த
     ஜெனத்துக்கு இனித்த சித்தி ...... அருள்வோனே!

மிசைத்து, திடத்தொடு உற்று, அசைத்துப் பொறுத்து, அரக்கன்
     மிகுத்துப் பெயர்த்து எடுத்த ...... கயிலாய

மிசைக்கு உற்று, அடுத்து மற்ற பொருப்பைப் பொடித்து இடித்து
     மிதித்து, துகைத்து விட்ட ...... பெருமாளே.


பதவுரை

      செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என --- செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற வண்ணம் ஒலி உண்டாகுமாறு,

     ஆடும் --- திருநடனம் புரிகின்ற,

     செகத்துக்கு ஒருத்தர் புத்ர --- உலகில் ஒப்பற்றவராய் விளங்கும் சிவபெருமானுடைய திருக்குமாரரே!

      நினைத்து துதித்த --- ஒருமைப்பட்ட உள்ளத்துடன் நினைத்துத் துதி செய்கின்ற,

     பத்த ஜெனத்துக்கு --- அன்பர்களின் திருக்கூட்டத்துக்கு,

     இனித்த சித்தி அருள்வோனே --- இனிய திருவருட்பேற்றை அருள்புரிபவரே!

      மிசைத்து --- மேற்சென்று,

     திடத்தொடு உற்று --- உறுதியுடன் நெருங்கி,

     அசைத்து பொறுத்து --- அசைத்து பாரத்தைத் தாங்கி,

     அரக்கன் --- இராவனன்,

     மிகுந்து பெயர்த்து எடுத்த --- நான் என்ற அகந்தை அதிகரித்து பேர்த்து எடுத்த,

     கயிலாயமிசைக்கு உற்று --- திருக்கயிலாய மலைமீது எழுந்தருளியிருந்து,

     அடுத்து மற்ற பொருப்பை --- அதன் அருகில் இருந்த கிரவுஞ்சம் என்ற மலையை,

     பொடித்து இடித்து --- பொடியாகும்படி இடித்து,

     மிதித்து துகைத்து விட்ட --- அடக்கித் துவையல் செய்துவிட்ட,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      முகத்தை பிலுக்கி --- முகத்தை நன்கு ஒழுங்கு செய்து,

     மெத்த மினுக்கி தொடைத்து --- மிகவும் மினுக்கித் தொடைத்து,

      ரத்ன முலை கச்சு அவிழ்த்து அசைத்து --- மணிமயமான தனத்தின் மீதுள்ள ரவிக்கையை அவிழ்த்து அசையச் செய்து,

     முசியாதே --- சற்றும் இளைக்காமல்,

     முழுக்க கழப்பி --- காலம் முழுவதும் போக்கியும்,

     எத்தி --- வஞ்சித்தும்,

     மழுப்பி --- தாமதப்படுத்தியும்,

     பொருள் பறித்து --- வந்தவர்களிடம் பணத்தைப் பறித்து,

     மொழிக்கு உட்படுத்து --- அவர்களை இனிய மொழிகளால் மயக்கி வசமாக்கி,

     அழைத்து --- அழைத்துக் கொண்டு போய்

     அமளி மீதே --- படுக்கையின் மேல்,

     நகைத்து இட்டு அழுத்தி --- புன்னகை புரிந்து தழுவி,

     முத்தம் அளித்து களித்து --- முத்தந் தந்து மகிழ்ந்து,

     மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் --- மிகவும் நயமாகக் கழுத்தை இறுக்கி அணைத்திடும் பொது மாதர்களுக்கு,

     நடுக்கு உற்று --- அஞ்சி நடுங்கி,

     அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து --- மிகவும் அவர்கள்பால் மனதை ஆசை பெருகுமாறு வைத்து,

     நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ --- அம்மகளிரிடம் நயந்து வேண்டியும் அதனால் கலக்க மடைந்தும் தினந்தோறும் அடியேன் அழியக் கடவேனோ?

பொழிப்புரை

         செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற ஒலியுடன் திருநடம் புரிகின்றவரும், உலகத்தின் ஒப்பற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     ஒருமைப்பட்ட உள்ளத்துடன் துதி செய்கின்ற அன்பர்களின் திருக்கூட்டத்துக்கு இனிய திருவருட் பேற்றினை அருள் புரிகின்றவரே!

         உறுதியுடன் மேற்சென்று அசைத்து பாரத்தைப் பொறுத்து இராவணன் அகந்தை மிகுந்து பேர்த்து எடுத்த திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியிருந்து, அதனை அடுத்துள்ள கிரவுஞ்ச மலையை இடித்துப் பொடி செய்து, அடக்கித் துவையலாக்கிவிட்ட பெருமிதம் உடையவரே!

         முகத்தை நன்கு கழுவி மினுக்கித் துடைத்து அலங்கரித்து இரத்ன மணி மயமான தனத்தின் ரவிக்கையை அவிழ்த்து அசைத்து, சற்றும் இளைக்காமல், காலம் முழுவதும் போக்கியும், வஞ்சித்தும், தாமதப்படுத்தியும், பொருள் பறித்து இனிய மொழிகளால் வந்தவர்களை வசமாக்கி அழைத்துக்கொண்டு போய்ப் படுக்கையின் மீது, புன்னகை செய்து தழுவி, முத்தமிட்டு மகிழ்ந்து, மிகவும் நயமாகக் கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், அவர்கள்பால் மனதை வைத்து ஆசை பெருகி, அவர்களை நயந்து வேண்டியும், அவர்களால் கலக்கமுற்றும் தினந்தோறும் அடியேன் அழியலாமோ?

விரிவுரை

இத்திருப்புகழில் முன்னுள்ள நான்கு அடிகளிலும் இருமனப் பெண்டிரின் மாயச் செயல்களைக் கூறி அம் மயக்கம் அறவேண்டும் என்று, இறைவன்பால் அடிகளார் வேண்டுகின்றனர்.

ஆடும் செகத்துக்கு ஒருத்தர் ---

கண்ணாடியில் காணும் நிழல் அசையும் பொருட்டுத் தான் அசைவது போல், அகில உலகங்களும் ஆடுதல் பொருட்டு இறைவன் இடையறாது ஆடுகின்றார். அனவரத ஆனந்தத் தாண்டவம் எனப்படும். சிவலிங்கம் அகர உகரமாகும்.

எட்டு இரண்டும் இதுவாம் இலிங்கம் என
   எட்டுஇரண்டும் வெளியா மொழிந்த குரு     முருகோனே”
                                                                        ---  (கட்டிமுண்ட) திருப்புகழ்.

இந்த சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்ட ஐந்தெழுத்தே நடராஜ உருவம்.

எட்டும் இரண்டும் உருவான இலிங்கத்தே
நட்டம், புதல்வா! நவிலக்கேள், --- சிட்டன்
சிவாயநம என்னும் திருவெழுத்தஞ் சாலே
அவாயம்அற நின்று ஆடுவான்         ---  உண்மை விளக்கம்

புளியைக் கண்டவர்க்கு நாவில் நீர் ஊறுமாப் போல், அம்பலவாணருடைய அருட்கூத்தைக் கண்டார்க்குக் கண்ணீர் பெருகும்; ஆணவ இருள் விலகும். ஆனந்த அமுதம் ஊற்றெடுக்கும்.

புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுதூறும் உள்ளத்தே.   --- திருமந்திரம்

அப்பரமபதியே அகில உலகங்கட்கும் தலைவர். பசுபதி; அவரே ஒருவர்; ஒப்பற்றவர்.

உலகுயிர்க்கெல்லாம் பசுபதி ஒரு முதல்” என்று அரிச்சந்திர காவியம் பேசுகின்றது.

நினைத்துத் துதித்த பத்தர் ---

இறைவனை அநேகர் நினைக்கின்றார்கள். ஆனால் பொன்னையும் பொருளையும் நிலபுலங்களையும் பிறவற்றையும் நினைத்த வண்ணம் இறைவனையும் நினைக்கின்றார்கள். வேறு எந்த நினைப்பும் இன்றி ஒருமைப்பட்ட உள்ளத்துடன் நினைக்க வேண்டும். அவ்வண்ணம் நினைத்து, அத் தியானத்தில் ஊற்றெடுத்த பேரின்ப வெள்ளம் பொங்கி வழியும்போது துதிகள் வெளிப்படும்.

பத்த ஜெனத்துக்மு இனித்த சித்தி அருள்வோனே ---

அடியார் குழாங்கட்கு இனிமையான இஷ்ட சித்திகள் அனைத்தும் முருகவேள் பன்னிரு கரங்களாலும் வழங்குவார்.


மிசைத்துத் திடத்தொடுற்று அசைத்துப் பொறுத்து அரக்கன் மிகுத்துப் பெயர்த்து எடுத்த கயிலாய ---

இராவணன் சாபம் பெற்றது

பிரமதேவருடைய புதல்வர் புலத்தியர். புலத்தியருடைய புதல்வர் விச்சிரவசு.விச்சிரவசு என்பவருடைய மகன் குபேரன்.

விச்சிரவசு என்ற அந்தண முனிவரிடம் கேகசி என்ற அரக்க மகள் நெடுநாள் பணிவிடை புரிந்தாள்.

மாலி, சுமாலி, மாலியவான் என்ற மூன்று அசுர வேந்தர்களில் நடுப்பிறந்த சுமாலியின் மகள் கேகசி.

இவள் புரிந்த பணிவிடையை மெச்சி என்ன வரம் வேண்டும் என்றார் விச்சிரவசு. அவள் புத்திர வரம் கேட்டாள்.

அந்த அரக்கியின்பால் விச்சிரவசு என்ற முனிவருக்குப் பிறந்தவர்கள் தசக்கிரீவன், கும்பகர்ணன், வீடணன், சூர்ப்பணகை என்ற நால்வரும்.

தசக்கிரீவன் தன் தமையனாகிய குபேரனுடன் போர் புரிந்து அவனுடைய புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டான்

அவ்விமானம் ஊர்ந்து விண்மிசை சென்றான். திருக்கயிலாய மலைக்குமேல் விமானம் செல்லாமல் தடைப்பட்டது. “செல்” “செல்” என்று செலுத்தினான்

திருக்கயிலாயமலைத் திருவாயிலைப் பொற்பிரம்பு தாங்கிக் காவல் புரிகின்ற திருநந்திதேவர் நகைத்து, “தசக்கிரீவா! இது சிவமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கயிலாயமலை. இது தேவர்களும் மூவர்களும் கதிர் மதியாதிகோள்களும் விண்மீன்களும் வலம் வரத்தக்க பெருமையுடையது; நீ வலமாகப் போ” என்று கூறி அருளினார். தசக்கிரீவன் அகந்தையால் சினந்து, “குரங்குபோல் முகம் உடைய நீ எனக்குப் புத்தி புகட்டுகின்றனையா?” என்றான்.

திருநந்திதேவர் சிறிது சீற்றங்கொண்டு, “மூடனே என்னைக் குரங்குபோல் என்று பழித்தபடியால் உனது நாடு நகரங்களும் தானைகளும் குரங்கினால் அழியக் கடவது” என்று சாபமிட்டனர். இதைக் கேட்டுந் திருந்தாத அக்கொடிய அரக்கன் விமானத்தை விட்டு இறங்கி, வெள்ளி மலையைப் பேர்த்து அசைத்தான். உமாதேவியார் “பெருமானே! மலையசைகின்றதே” என்று வினவியருளினார். சிவமூர்த்தி “தேவி! ஒரு மூட அரக்கன் நம் மலையைப் பேர்த்து அசைக்கின்றான்” என்று கூறி, ஊன்றிய இடச் சேவடியின் பெருவிரல் நகத்தால் ஊன்றி யருளினார்.

அவன் அப்படியே மலையின் கீழ் அகப்பட்டுக்கொண்டு என்பு முறிந்து உடல் நெரிந்து “ஓ” என்று கதறி அழுதான்

சிவமூர்த்தி நகம் ஒன்றால் அடர்க்க அகப்பட்டு அழுத இராவணனை, ஸ்ரீராமர் எழுபது வெள்ளம் வானரங்கள் புடைசூழப் பத்து நாள் போரிட்டு அழித்தார்.

"ஓ" என்று கதறி அழுததனால் இராவணன் என்ற பேர் உண்டாயிற்று.

கருத்துரை

கயிலைமலை மேவு கந்தவேளே! மாதர் மயக்கற அருள் புரிவாய்.


No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...