காஞ்சீபுரம் - 0487. தத்தித் தத்தி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தத்தித் தத்தி (காஞ்சீபுரம்)

முருகா!
உன் மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணுக்கு
உனது வெட்சிமலர் மாலையைத் தந்து அருள்


தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான


தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
     சத்தப் படுமைக் ...... கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
     சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
     கொச்சைக் குறவிக் ...... கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
     துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

இந்தப் பாடலின் சிறப்பு யாதெனில், ஒவ்வோர் அடியிலும் இறுதியில் உள்ள வரிகளைச் சேர்த்தால், பிறிதொரு திருப்புகழாக அமையும்.

சத்தப் படுமைக் ......             கடலாலே
         தட்டுப் படுமப் ......      பிறையாலே

சித்ரக் கொடியுற் ......            றழியாதே
         செச்சைத் தொடையைத் ......தரவேணும்

குத்திக் கிரியைப் ......            பொரும்வேலா
         கொச்சைக் குறவிக் ......     கினியோனே

துக்கத் தையொழித் ......         திடும்வீரா
         சொக்கப் பதியிற் ......        பெருமாளே.


பதம் பிரித்தல்


தத்தித் தத்தி, சட்டப் பட்டு,
     சத்தப் படு மைக் ...... கடலாலே,

சர்ப்பத் தத்தில் பட்டு, கெட்டு,
     தட்டுப் படும் அப் ...... பிறையாலே,

சித்தத்துக்குப் பித்து உற்று உச்ச,
     சித்ரக் கொடி உற்று ...... அழியாதே,

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும்.

கொத்துத் திக்குப் பத்து உள் புக்கு,
     குத்தி, கிரியைப் ...... பொரும்வேலா!

கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக்
     கொச்சைக் குறவிக்கு ...... இனியோனே!

சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்தத்
     துக்கத்தை ஒழித் ...... திடும் வீரா!

சொர்க்கத்துக்கு ஒப்புற்ற, கச்சிச்
     சொக்கப் பதியில் ...... பெருமாளே.

இந்தப் பாடலின் சிறப்பு யாதெனில், ஒவ்வோர் அடியிலும் இறுதியில் உள்ள வரிகளைச் சேர்த்தால், பிறிதொரு திருப்புகழாக அமையும்.

சத்தப்படு மைக் ......             கடலாலே
         தட்டுப் படும் அப் ......   பிறையாலே

சித்ரக் கொடி உற்று ......         அழியாதே,
         செச்சைத் தொடையைத் ......தரவேணும்,

குத்திக் கிரியைப் ......            பொரும்வேலா!
         கொச்சைக் குறவிக்கு ......   இனியோனே!

துக்கத்தை ஒழித் ......       திடும் வீரா!
         சொக்கப் பதியில் ......   பெருமாளே.

                 
பதவுரை

         கொத்து பத்து திக்கு உள் புக்கு --- நிறைந்துள்ள கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேல், கீழ் என்ற பத்துத் திக்குகளிலும் சென்று,

     கிரியை குத்தி பொரும் வேலா --- கிரவுஞ்ச மலையை வேலினால் குத்திப் போர் செய்த வேலாயுதக் கடவுளே!

      கொச்சை --- திருந்தாத மொழிகளை உடையவரும்,

     பொச்சை --- காடுகளில் வாழ்பவரும்,

     பச்சை பொற்பில் --- பச்சை நிறத்தின் அழகு உடையவரும்,

     கொச்சைக் குறவிக்கு இனியோனே ---  இழிகுலமாம் வேடர் குலத்தில் வளர்ந்தவரும் ஆகிய வள்ளி பிராட்டியாருக்கு இனியவரே!

      சுத்தப் பத்த அத்தர்க்கு ---  தூய அன்பில் உயர்ந்தோர்களுடைய

     சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா --- மனக் கவலையை நீக்குகின்ற வீரமூர்த்தியே!

      சொர்க்கத்துக்கு ஒப்பு உற்ற --- தேவர் உலகுக்கு நிகரான

     கச்சிச் சொக்கப் பதியில் பெருமாளே --- காஞ்சிபுரம் என்னும் அழகிய திருநகரில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      தத்தித் தத்தி --- அலைகள் தாவித் தாவிச் சென்று,

     சட்டப்பட்டு --- ஓர் ஒழுங்கு முறையில் தொழிற்பட்டு,

     சத்தப்படு மைக் கடலாலே --- ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும்,

      சர்ப்பதது அத்தில் பட்டு --- ராகு கேது எனப்படும் பாம்பால் பிடிபடுதல் என்னும் ஆபத்தில் பட்டு,

     கெட்டுத் தட்டுப்படும் --- கெடுதல் உற்று தடை படுகின்ற

     அப் பிறையாலே --- அந்தச் சந்திரனாலும்,

      சித்தத்துக்கு பித்து உற்று --- மனதிலே ஆசை மயக்கம் கொண்டு,

     உச்சச் சித்ரக் கொடி உற்று அழியாதே --- அதன் உச்ச நிலையை அழகிய கொடி போன்ற இப் பெண் அடைந்து அழிவு படாமல்,

      செப்ப --- உமது செவ்வையானதும்,

     கொற்றம் --- வீரத்துக்கு அறிகுறியானதும்,

     சிற்பம் --- தொழில் திறம் காட்டுவதும்,

     பத்தி ---  வரிசையாக அமைந்துள்ளதுமான

     செச்சைத் தொடையைத் தர வேணும் --- வெட்சி மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

பொழிப்புரை

         நிறைந்துள்ள கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேல், கீழ் என்ற பத்துத் திக்குகளிலும் சென்று, கிரவுஞ்ச மலையை வேலினால் குத்திப் போர் செய்த வேலாயுதக் கடவுளே!

         திருந்தாத மொழிகளை உடையவரும்,  காடுகளில் வாழ்பவரும், பச்சை நிறத்தின் அழகு உடையவரும், இழிகுலமாம் வேடர் குலத்தில் வளர்ந்தவரும் ஆகிய வள்ளி பிராட்டியாருக்கு இனியவரே!

         தூய அன்பில் உயர்ந்தோர்களுடைய மனக் கவலையை நீக்குகின்ற வீரமூர்த்தியே!

         தேவர் உலகுக்கு நிகரான காஞ்சிபுரம் என்னும்  அழகிய திருநகரில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         அலைகள் தாவித் தாவிச் சென்று, ஓர் ஒழுங்கு முறையில் தொழிற்பட்டு, ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், ராகு கேது எனப்படும் பாம்பால் பிடிபடுதல் என்னும் ஆபத்தில் பட்டு, கெடுதல் உற்று தடைபடுகின்ற அந்தச் சந்திரனாலும், மனதிலே ஆசை மயக்கம் கொண்டு, அதன் உச்ச நிலையை அழகிய கொடி போன்ற இப் பெண் அடைந்து அழிவு படாமல், உமது செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

விரிவுரை

         இப்பாடல் அகப் பொருள் துறையில் அமைந்தது. தலைவிக்காக நல்தாய் இறைவனிடம் மலர்மாலையை வேண்டுவதாக அமைந்த பாடல்.

தத்தித் தத்திச் சட்டப்பட்டுச் சத்தப்படு மைக் கடலாலே ---

நாயகனை விரும்பும் தலைவிக்குக் கடல் ஒலி மோக தாகத்தை மிகுதிப்படுத்தும்.

அலைகள் தாவித் தாவிச் செல்லும்.  ஓர் ஒழுங்குக்கு உட்பட்டு ஒலிக்கும்.  மிகுந்த ஆழத்தால் கடல் கருமையாகக் காட்சி தரும்.

தொல்லை நெடு நீலக் கடலாலே...    --- (துள்ளுமத) திருப்புகழ்.

சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத் தட்டுப்படும் அப்பிறையாலே ---

சந்திரனை ராகு கேதுக்கள் பற்றும்.  அதனைக் கிரகணம் என்பர்.  சந்திரன் ஒளியை மறைக்கும்.  அதனால் இடர்ப்படுகின்ற சந்திரன்.

வாரிமீ தேஎழு ......     திங்களாலே
மாரவேள் ஏவிய ......   அம்பினாலே
பார்எலாம்ஏசிய ......    பண்பினாலே
பாவியேன் ஆவி  ....மயங்கலாமோ.      ---  திருப்புகழ்.

சித்தத்துக்குப் பித்துற்று உச்ச ---

தலைவி மனதில் காம மயக்கம் அடைந்து, அந்த மயக்க நிலையின் உச்சத்தை அடைந்திருக்கின்றாள்.

சித்ரக் கொடி உற்று அழியாதே ---

சித்ரம் - அழகு.  கொடி - கொடி போன்ற பெண்.  இது உவம ஆகுபெயர்.  இறைவனே, இப்பெண் உன்மீது மயல் கொண்டு அழியாமல் காத்து அருள்.

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச் செச்சைத் தொடையைத் தர வேணும் ---

செச்சை - வெட்சி.  முருகப் பெருமானுடைய திருமார்பில் உள்ள வெட்சி மாலை செவ்வையானது. அது கொற்றத்துக்கு, வீரத்துக்கு அடையாளமானது. சிற்பக் கலையுடன் தொடுக்கப்பட்டது.  பத்தி - வரிசையாக அமைந்தது.  இத்தகைய மலர்மாலையைத் தந்து அருளுவீராக.

கொத்துத் திக்குப் பத்துள் புக்கு குத்திக் கிரியைப் பொரும் வேலா ---

திசைகள் பத்து.  கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, அக்கினி, நிருதி, வாயு, ஈசானம், மேல், கீழ் என்ற பத்துத் திசைகளிலும் சென்று கிரவுஞ்ச மலையை வேலினால் குத்தி முருகப் பெருமான் போர் புரிந்து அழித்து அருளினார்.

கிரவுஞ்சம் - வினைத் தொகுதி.  ஞானமாகிய வேலினால் வினைத் தொகுதி அழிந்தது.

கொச்சை ---

திருந்தாத மொழி.  வள்ளியம்மை மழலைமொழி பேசுபவர்.
  
பொச்சை ---

மலையும் காடும் சேர்ந்த இடம்.  மலைக்காட்டில் வாழ்ந்தவர் வள்ளியம்மை.

பொற்பில் பச்சை ---

வள்ளியம்மை பச்சை நிறம் படைத்த அழகுடையவர்.

கொச்சைக் குறவிக்கு இனியோனே ---

குறவன் என்ற ஆண்பால் பெயர், குறவி எனப் பெண் பாலில் வந்தது.  முருகன் இச்சாசத்திக்கு இனியவர்.

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கு இனிய பிரான்...     ---  கந்தர் அலங்காரம்.

சுத்த பத்தத்து அத்தர்க்கு ---

அத்தர் - உயர்ந்தவர்.  தூய்மையான பத்தியில் உயர்ந்துள்ள அடியார்கள்.

சித்தத் துக்கத்தை ஒழித்திடும் வீரா ---

மேலே கூறிய தூய அன்புள்ள அடியார்களின் மனக் கவலைகளை நீக்கும் வீரமூர்த்தி முருகவேள்.

சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி ---

காஞ்சிபுரம் தேவர் உலகுக்கு சமமான அழகு உடையது. நகரேஷு காஞ்சி.  "தரையிடங்களில் சிறந்தது கச்சியம் தலமே" என்று கந்தபுராணம் புகழ்கின்றது.

கருத்துரை

காஞ்சிக் கந்தவேளே, உம்மை விரும்பி வெதும்புகின்ற இம் மங்கைக்கு உமது வெட்சி மலர் மாலையைத் தந்தருளும்.








   



                 



1 comment:

  1. Simple explanation available in this link.
    https://youtu.be/dgOcpAVo2MI

    ReplyDelete

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...