சுவாமி மலை - 0226. பரவ அரிதாகிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரவ அரிதாகிய (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மாதர் மயல் அறத் திருவருள் புரிவாய்

தனதன தானன, தனதன தானன
     தனதன தானன ...... தனதான


பரவரி தாகிய வரையென நீடிய
     பணைமுலை மீதினி ...... லுருவான

பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
     பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே

நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
     நிரைதரு மூரலி ...... னகைமீது

நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
     நிலையெழ வேயலை ...... வதுவாமோ

அரவணை யார்குழை பரசிவ ஆரண
     அரனிட பாகம ...... துறைசோதி

அமையுமை டாகினி திரிபுரை நாரணி
     அழகிய மாதருள் ...... புதல்வோனே

குரவணி பூஷண சரவண தேசிக
     குககரு ணாநிதி ...... அமரேசா

குறமக ளானைமின் மருவிய பூரண
     குருகிரி மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பரவ அரிது ஆகிய வரை என நீடிய
     பணைமுலை மீதினில் ...... உருவான

பணிகள் உலாவிட, இழைஇடை சாய்தரு
     பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே,

நிர அரியோடு இயல் குழல்களில் நாள்மலர்
     நிரைதரு மூரலின் .....  நகைமீது

நிலநவு இயல் சேர் முகம் அதில் உயர் மாமயல்
     நிலை எழவே அலை- ...... வது ஆமோ?

அரவு அணையார் குழை பரசிவ ஆரண,
     அரன் இடபாகம் ...... அது உறைசோதி,

அமை, உமை, டாகினி, திரிபுரை, நாரணி,
     அழகிய மாது அருள் ...... புதல்வோனே!

குரவுஅணி பூஷண! சரவண! தேசிக!
     குக! கருணாநிதி! ...... அமரஈசா!

குறமகள் ஆனை மின் மருவிய பூரண
     குருகிரி மேவிய ...... பெருமாளே.

பதவுரை

      அரவு அணையார் --- பாம்பை அணையாகக் கொண்ட நாராயணர்

     குழை --- உள்ளம் உருகி அன்பு செய்யும்

     பரசிவ ஆரண அரன் --- மேலான சிவமூர்த்தியும், வேதங்கள் போற்றுகின்றவரும், அரனாருடைய

     இடபாகம் அது உறை சோதி --- இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ள ஒளிமயமானவரும்,

     அமை --- உலகங்கட்கு எல்லாம் அம்மையும்,

     உமை --- உமாதேவியும்,

     டாகினி --- டாகினி என்ற நாமத்தையுடையவரும்,

     திரிபுரை --- மூன்று புரங்கட்கும் முதல்வியும்,

     நாரணி --- குளிர்ந்த உருவமுடையவரும்,

     அழகிய மாது --- அழகியவரும் ஆகிய பார்வதி தேவி

     அருள் புதல்வோனே --- அருளிய பாலகரே!

         குரவு அணி பூஷண --- குராமலரை அணிகின்ற அலங்காரமானவரே!

         சரவண --- சரவணத்தில் வந்தவரே!

         குக --- இதய குகையில் வசிப்பவரே!

         கருணாநிதி --- கருணையே ஒரு நிதியாக உடையவரே!

         அமர ஈசா --- தேவர்கட்குத் தலைவரே!

         குறமகள் ஆனைமின் மருவிய பூரண --- வள்ளிநாயகியும்,  தேவயானையம்மையும் தழுவிய முழு முதலே!

     குருகிரி மேவிய பெருமாளே - சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         பரவு அரிது ஆகிய வரை என நீடிய --- புகழ்வதற்கு அரிது ஆகிய மலைபோல் பருத்துள்ள,

     பணைமுலை மீதினில் உருவான பணிகள் உலாவிட --- பெரிய தனங்களில் அலங்காரமான,  ஆபரணங்கள் அசைய,

     இழை இடை சாய் தரு பயிலிகள் --- நூல் போன்ற இடைச் சாயும்படி ஒழுகுகின்ற மாதரது,

     வாள் விழி அயிலாலே --- ஒளிபெற்ற கண் என்ற வேலின் மீதும்,

     நிர அரியோடு இயல் குழல் நாண் மலர் --- பரந்து வண்டுகளோடு கூடிய கூந்தலின் புதிய மலர் மீதும்,

     நிரைதரு மூரலின் நகை மீதும் --- வரிசையாய் விளங்கிப் புன்சிரிப்புச் செய்யும் பற்களின் மீதும்,

     நிலவு இயல் சேர் முகம் அதில் --- சந்திரனைப் போன்ற முகத்திலும்,

     உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ --- எழுகின்ற அதிக மோகம் நிலைபெற்று என் மனத்தில் தோன்றுவதால், அடியேன் அலையலாமோ?


பொழிப்புரை

         பாம்பை அணையாகக் கொண்ட நாராயணர் மனங்குழைந்து அன்பு செய்யப்பட்ட பரமசிவமும் வேதகாரணரும் ஆன அரனாருடைய இடப்புறத்தில் உறைகின்ற ஒளிமயமானவரும், அம்மையும், உமையும், டாகினியும், முப்புரமுதல்வியும், நாரணியும், அழகியவரும் ஆகிய அம்பிகை அருளிய புதல்வரே!

         குரா மலரை ணிந்த அலங்காரமானவரே!

         சரவணரே!

         குருநாதரே!

         குகமூர்த்தியே!

         கருணாநிதியே!

         தேவர்கள் தலைவரே!

         வள்ளியம்மையும், தெய்வயானையம்மையும் தழுவிய பூரணரே!

         சுவாமி மலையில் வாழும் பெருமிதம் உடையவரே!

         புகழ்வதற்கு அரிதாகிய மலைபோன்ற பெரிய தனங்களில் அழகாக ஆபரணங்கள் அசைய, இழை போன்ற மெல்லிய இடை சரிய ஒழுகுகின்ற பொதுமாதருடைய ஒளி பெற்ற கண் என்ற வேலின் மீதும், பறந்து வண்டுகளுடன் கூடிய கூந்தலின் புதுமலர்கள் மீதும், வரிசையாக விளங்கிப் புன்னகை புரியும் பற்களின்மீதும், சந்திரனைப் போன்ற முகத்திலும், எழுகின்ற அதிக மோகமானது நிலைபெற்று அடியேனுடைய மனதில் தோன்றுவதால் நான் அலைச்சல் படலாமோ?


விரிவுரை

இழை இடை சாய்தரு பயிலிகள் ---

மாதர்களின் இடை, நூல்போன்று மென்மையானது. தனபாரங்களையும், அதன்மீதுள்ள அணிகலன்களையும் தாங்கமாட்டாது மெல்லிய இடை துவண்டு சாய்கின்றது; இடைசாய நடைபயில்கின்றவர் அம்மாதர்.

அரவணையார் குழை பரசிவன் ---

பாம்பணையில் துயிலும் திருமால் சிவபக்தர். சதா இதயத்தில் சிவமூர்த்தியை நிறுவி சிவயோகம் புரிபவர். அவர் சிவபெருமானுக்குச் சக்தியாகவும், மத்தளம் வாசிப்பவராகவும், பாணமாகவும், அர்ச்சகராகவும், இடபமாகித் தாங்குபவராகவும் விளங்குபவர். அதனால் சிவ மகிமையை உன்னி உன்னி உள்ளங் குழைகின்றார்.

டாகினி ---

அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று.

திரிபுரை ---

மூன்று உலகங்களுக்கும் முதல்வி

குரவு அணி பூஷண ---

குராமலர் முருகவேளுக்கு உகந்த மலர். திருவிடைக்கழி என்ற திருத்தலத்தில் முருகன் குரா நிழலில் எழுந்தருளியிருக்கின்றார்.

கருத்துரை

சுவாமிமலைக் குமரா! தையலார் மையல் அற, திருவருள் புரிவாய்.


1 comment:

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...