திருக் கயிலை - 0243. புமி அதனில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புமி அதனில் (கயிலைமலை)

திருக் கயிலை முருகா! 
அடியேனுக்கு அமுதமயமான பாடல்களை உம் மீது பாடும் அருளைப் புரி.


தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான

புமியதனிற் ......ப்ரபுவான
     புகலியில்வித் ...... தகர்போல

அமிர்தகவித் ...... தொடைபாட
     அடிமைதனக் ...... கருள்வாயே

சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
     தனியயில்விட் ...... டருள்வோனே

நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புமி அதனில் ......      ப்ரபு ஆன
     புகலியில் வித் ......   தகர்போல

அமிர்த கவித் ......          தொடை பாட
     அடிமை தனக்கு ......    அருள்வாயே

சமரில் எதிர்த்த ......           சுர் மாளத்
     தனி அயில் விட்டு ...... அருள்னே

நமசிவயப் ......                 பொருளானே
     ரசதகிரிப் ......            பெருமாளே.

பதவுரை

         சமரில் எதிர்த்த சூர் மாள --- போர்க்களத்தில் எதிர்த்து வந்த சூரபன்மன் மாண்டொழிய,

     தனி அயில் விட்டு அருள்வோனே --- ஒப்பற்ற வேற்படையை ஏவி அருளியவரே!

         நமசிவய பொருளோனே --- ”நமசிவய” என்ற தூல ஐந்தெழுத்தின் மெய்ப்பொருளாக விளங்குபவரே!

         ரசத கிரிப் பெருமாளே --- வெள்ளி மலையாகிய திருக்கயிலை மலையில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

         புமி அதனில் ப்ரபு ஆன --- இப் பூமண்டலத்தில் தனிப் பெருந்தலைவராக விளங்குபவரும்,

     புகலியில் வித்தகர் போல --- சீர்காழிப் பகுதியில் திருவவதாரஞ் செய்தவருமாகிய திருஞானசம்பந்தப் பெருமானைப் போல்,

     அமிர்த கவி தொடை பாட --- இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வினை வழங்கும் தேவாரப் பாடலைப் போல் அடியேனும் பாடுமாறு,

     அடிமை தனக்கு --- தேவரீருடைய அடிமையாகிய நாயேனுக்கு,

     அருள்வாயே --- திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

         போர்த்தலத்தில் எதிர்த்து வந்த சூரபன்மன் மாயுமாறு இணையில்லாத ஞானசக்தியை விடுத்தருளிய விமலரே!

         நமசிவய” என்ற பஞ்சாக்கரத்தின் உட்பொருளாக விளங்குபவரே!

         வெள்ளியங்கிரியில் எம்மை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         பூமண்டலத்தின் தனிப் பெருந்தலைவராம், உலகிலுள்ள உயிர்கட்கெல்லாம் புகலிடமாகிய சீகாழிப் பதியில் திருவவதாரம் செய்த திருஞான சம்பந்தமூர்த்தியைப்போல் இறப்பை நீக்கும் அமிர்தம் போன்ற தேவார அருட்பாக்களைப் பாடுமாறு அடிமையேனுக்குத் திருவருள் புரிவீர்.

விரிவுரை

புமியதனிற் பிரபு ---

பூமி என்பது புமி எனக் குறுகி நின்றது.

பூவுலகிற்கு திருஞானசம்பந்த சுவாமிகளே தலைவர். அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை. பெருந்தலைவர் என்பதற்கு அடையாளம் சிவிகை, சின்னம், விருது இவைகள் இருத்தல் வேண்டும். ஏனைய தலைவர்கள் இவைகளைத் தாமே தயார் செய்து கொள்வார்கள். நம் சம்பந்தத் தலைவருக்குச் சிவபெருமானே சிவிகை, சின்னம், முதலியவைகளைத் தந்தருளினார். அவ் வரலாறு கீழ் வருமாறு:

திருஞான சம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துச் சிவிகை அருளியது

         பாலறாவாயராகிய நம் திருஞானசம்பந்த நாயனார் திருப்பெண்ணாகடத் திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது திருத்தாதையரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.

     வெம்பந்தம் நீக்கும் நம் சம்பந்தப் பிள்ளையார் அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை ஓதித் தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய், ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறி ஊதக் குலவு பொற்சின்னங்களும் அமைத்துக் கொடுக்கத் திருவுளம் கொண்டு, அவ்வூர் வாழும் மேலோர் கனவில் தோன்றி, “ஞானசம்பந்தன் நம்பால் வருகின்றான்; அவனுக்குத் தருமாறு முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று பணித்தருளினார்.

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்,
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆள சின்னம் நம்பால் கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து கொடும் என.   --- பெரியபுராணம்.

அவர்கள் ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞானசம்பந்தருடைய பெருமையையும் உன்னி உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவம் திறந்து பார்க்க, அவைகள் அவ்வாறிருக்கக் கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு சென்றனர்.

     சிவபெருமான் திருஞானசம்பந்தர் கனவிலும் சென்று, “குழந்தாய்! முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம். அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை இட்டருளினார். திருஞானசம்பந்த அடிகள் கண் துயிலுணர்ந்து, எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னி, உள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார்.

     அவ்வூர் வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை விண்ணப்பித்தனர். திருஞானசம்பந்த மூர்த்தி அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதி முத்தின் சிவிகையை வலம் வந்து நிலமுறப் பணிந்து, அச் சிவிகையின் ஒளி வெண்ணீறு போன்று விளங்கலால் அதனையும் துதித்து, அச் சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தை ஓதி எல்லா உலகமும் ஈடேற அதன் மீது எழுந்தருளினார். முத்துச் சின்னங்கள் முழங்கின; அடியவர் அரகர முழக்கஞ் செய்தனர். முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின; புங்கவர் பூமழை பொழிந்தனர்.

பல்குவெண் கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றுஒளி யுடன்பொலி புகலி காவலனார்
அல்கு வெள்வளை அலைத்து எழு மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார்.     --- பெரியபுராணம்.

இதுவேயுமன்றி, அரசன் எதையும் தனது ஆணையால் நடாத்துவான் “இது என் ஆணை” என்று கட்டளையிடுவான்; அதேபோல் நம் அருட்பெருந்தலைவரும் “ஆணை நமதே” என்று கூறுமாறு காண்க.

நடுஇருள்ஆடும் எந்தை நனி பள்ளிஉள்க
   வினை கெடுதல் ஆணை நமதே”     --- (திருநனிபள்ளி) தேவாரம்.

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
   அரசாள்வர் ஆணை நமதே”            --- (கோளாறுபதிகம்) தேவாரம்.

புகலி ---

புகலி என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பேர்களில் ஒன்று. ஊழி பெயரினும், உலகம் அழியினும் அழியாத அத்தோணிபுரமே தங்கட்குத் தஞ்சமாகத் தேவரும் மற்று யாவரும் புகுவதால் அப்பதிக்குப் புகலி என்ற திருப்பெயருண்டாயிற்று.

வித்தகர் ---

வித்தகம்-ஞானம். ஞானமுடையோர் வித்தகர்.

அமிர்த கவி ---

திருஞான சம்பந்தருடைய தேவாரம் அமிர்தகவி. அமிர்தம் இறப்பை நீக்கும்; சம்பந்த மூர்த்தியின் தேவாரமும் இறப்பை நீக்கும். சான்று பின்வறுமாறு காண்க.

திருஞானசம்பந்தர் விடம் தீர்த்தது

         நமது திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திருச்செங்காட்டங் குடியினின்றும் திருமருகலை அடைந்து இறைவனை வணங்கி அங்கிருக்கும் நாளில், ஒரு வணிகன் வழிப் போக்கனாய், ஒரு கன்னிகையை அழைத்துக் கொண்டு வந்து, கோயிலின் பக்கலில் ஒரு மடத்திலே இரவில் கண் துயிலும்போது, பாம்பு தீண்டி இறந்தான். அக்கன்னி, அவனைப் பாம்பு தீண்டியும் தான் தீண்டாமல் இருந்து வருந்தி அழுது புரண்டு அரற்றினாள். பற்பல முயற்சிகள் செய்தும் விடம் தீர்ந்து அவன் பிழைத்தானில்லை.

     அதனைக் கண்ட அப்பெண் பெரிதும் வருந்தி விடியற்காலையில், "அன்னையையும் அத்தனையும் விட்டுப் பிரிந்து, உன்னைத் துணைப் பற்றித் தொடர்ந்து வந்தேன். நீ பாம்பின் வாய்ப்பட்டு மாண்டனை; என்னைத் தனி ஆளாக்கிச் சென்றனை. என் துன்பத்தை அகற்றி என்னைக் காக்க வல்லார் யாவர்? என் துன்பத் தீயை அணைக்கும் கருணை மேகத்தை எங்கு சென்று தேடுவேன்? வணிககுல மணியே! யானும் இறந்து உன்னுடன் வருவேன்” என்று வாய்விட்டு புலம்பி, திருக்கோயில் திருவாயில் திசையை நோக்கி “அடியவர்களான அமரர் உய்ய ஆலமுண்ட நீலகண்ட நின்மலனே! மாலயன் காணாத மணிவிளக்கே! வெந்து சாம்பரான மதனனை இரதிதேவி வேண்ட உய்வித்து உதவிய கருணைக் குன்றமே! பாலனுக்காகக் காலனை உதைத்த பரம்பரனே! அருட்கொண்டலே! இந்த விடக் கொடுமை நீங்குமாறும், ஏழையேன் உய்யுமாறும் இன்னருள் புரிவாய்! மருகல் பெருமானே! மாசிலாமணியே!” என்று, இறைவனைக் கூவி முறையிட்டாள்.

     இத் துதியுடன் கூடிய அழுகுரல், காலையில் கண்ணுதலை வணங்க வருகின்ற கவுணியர்கோன் (திருசானசம்பந்தர்) திருச்செவியில் வீழ்ந்தது. அக் கருணைக் கடலின் உள்ளம் உருகியது. ஓடினார்; கண்டார்; கழிப்பெருங் கருணை வள்ளலாகிய அவர் உள்ளத்தில் பெருகிய அருள் வெள்ளத்தினால் அம்மங்கையைக் குளிர்வித்தார், “அம்மா! அஞ்சாதே; நினக்கு உற்ற துயர் யாது? கூறுக” என்றார்.

     அம் மடவரல் கண்ணருவி பாய, அப் பரம குருமூர்த்தியின் பாத பங்கயத்தில் பணிந்து கை குவித்து நின்று “அண்ணலே! அடியேன் வைப்பூரில் வாழும் தாமன் என்னும் வணிகனுடைய மகள். இங்கு இறந்த இவர் என் பிதாவினுடைய மருகர். என்னுடன் தோன்றிய என் மூத்தோர் ஆறு பெண்களையும் இவருக்குத் தருவதாகச் சொல்லிச் சொல்லி, இவரை ஏமாற்றி வேறிடத்தில் பொருள் நிரம்பப் பெற்றுக் கொடுத்துவிட்டனர். என்னையும் இவருக்கென்று சொல்லி வைத்திருந்து, பிறகு ஒரு தனவந்தனுக்குத் தர முயன்றார். அதனால் இவர் தளர்ந்து உள்ளம் உடைந்து போனார். இவருடைய ஆறாத துயரைக் கண்டு இவருடன் யான் பெற்றோரை விட்டுப் போந்தேன் இவர் ஈண்டு அரவம் தீண்டி மாண்டார். கவிழும் கலத்துள் நின்றார்ப் போல் மயங்கி அழும் இப்பாவியைக் காக்கும் கடவுளாகத் தேவரீர் வந்தருளினீர்” என்று தன் துன்பத்தையும் வரலாற்றையும் சொன்னாள். அதனைக் கேட்ட ஆளுடைய பிள்ளையார் அருள் சுரந்து,

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே”     ---- திருஞானசம்பந்தர் தேவாரம்.

என்ற “அமிர்த கவித்தொடை”யைப் பாடி விடந்தீர்த்தருளினார். உடனே வணிகன் உயிர் பெற்றெழுந்தான் எழுந்து திருஞானசம்பந்தப் பெருமான் சரணமலரில் வீழ்ந்தான் அம்மடமங்கையும் வீழ்ந்தாள். இன்பக்கடலில் ஆழ்ந்தாள். அவ்விருவருக்கும் மணம் புரிவித்து இல்வாழ்வு செய்யும் நல்வாழ்வு தந்தருளினார்.

சடையானை, எவ்வுயிர்க்கும் தாய் ஆனானை,
     சங்கரனை, சசி கண்ட மவுலி யானை,
விடையானை, வேதியனை, வெண்ணீற் றானை,
     விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானை, பங்கயத்து மேவி னானும்
     பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை, "உடையானே! தகுமோ இந்த
     ஒள்ளிழையாள் உள்மெலிவு?" என்று எடுத்துப் பாட.

பொங்குவிடந் தீர்ந்து எழுந்து நின்றான், சூழ்ந்த
     பொரு இல் திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப,
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டுஅங்கு
     அருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள் தனை, நயந்த நம்பி யோடும்
     நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்,
மங்குல்தவழ் சோலைமலி புகலி வேந்தர்
     மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.       ---  பெரியபுராணம்.

புகலியில் வித்தகர் போலே அமிர்தகவித் தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே” என்றதன் குறிப்பு, திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகம் பாடி அருளினார். அதுபோல் பதினாறாயிரம் திருப்புகழ் பாட அருள் புரிவீர் என்பது, தேவாரம் அமிர்தகவியானாற்போல திருப்புகழும் அமிர்தகவியாயிற்று.

எம் அருணகிரிநாதன் ஓதும்
பதினாராயிரந் திருப்புகழ் அமுதமே”            --- வரகவி மார்க்க சகாய தேவர்

சமரில் எதிர்த்த அசுர்மாள ---

சமரில் எதிர்த்த சுர் மால எனப் பதம் பிரிக்க. சூர் என்றது சுர் எனக் குறுகி நின்றது. சூர்-சூரபன்மன்.

சூர்மா மடியத் தொடுவே லவனே”         --- கந்தர் அநுபூதி

நமசிவய ---
பஞ்சாக்கர விளக்கம்

         இது தூல பஞ்சாக்கரம். இறுதியில் வந்த "ய"கரம் தமிழில் நான்காம் வேற்றுமையாம். நம-நமஸ்காரம்; சிவய-சிவனுக்கு, எனப் பொருள்படும்.

     ந- என்னும் எழுத்து மும்மலங்களையும் தத்தம் தொழில்களில் ஏவிப் பாகம் வருவித்தற் பொருட்டு அவற்றோடு உடனாய் நின்று உயிரை மரைத்தலால் திரோத சக்தி என்றும் திரோதமலம் என்றும் கூறப்படும் சிவ சக்தியையும்,

ம - என்னும் எழுத்து உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும்,

சி - என்னும் எழுத்து செம்பொருட் கடவுளையும்,

வ - என்னும் எழுத்து அம் முழுமுதற் கடவுளோடு நெருப்பிற் சூடுபோல் உடனாய் நிற்கும் திருவருளையும்,

ய - என்னும் எழுத்து உயிரையும் உணர்த்தும்.

உயிரைத் திரோத சக்தியால் மலத்தைக் கெடுத்து அருளைக் கெடுத்து சிவம் தன்னோடு அத்துவிதமாக்கிக் கொள்ளும் என்பது அம்மந்திரத்தின் திரண்ட கருத்து. இன்னும் இதன் விரிவை நல்லாசிரியரை யடுத்துக் கேட்டுத் தெளிந்து ஜபித்து உய்வுபெறுக.


ரசத கிரி ---

ரசதம்-வெள்ளி, ரசதகிரி-வெள்ளிமலை.

கருத்துரை

சூரையட்ட வேலாயுதரே! நமசிவயப் பொருளாயுள்ளவரே! திருக்கயிலை மலையில் எழுந்தருளியவரே! திருஞானசம்பந்தரைப் போல் அமிர்தகவியைப் பாட அருள்புரிவீர்.

        

                 

1 comment:

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...