திரு ஆனைக்கா





                                             திரு ஆனைக்கா

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     திருவானைக்கா திருச்சிமா நகரின் ஒரு பகுதியாக எள்ள திருத்தலம். திருச்சியில் இருந்து நகரப் பேருந்து அடிக்கடி செல்லும்.
   
இறைவர்              : செழுநீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்

இறைவியார்           : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி

தல மரம்                : வெண்நாவல்

தீர்த்தம்                : காவிரி, இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. மழையார் மிடறா,
                                             2. வானைக்காவில் வெண்மதி,
                                             3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்).

                                               2. அப்பர்   -  1. கோனைக் காவிக்,
                                                                        2. எத்தாயர் எத்தந்தை,
                                                                        3. முன்னானைத் தோல்

                                               3. சுந்தரர்  -  மறைகள் ஆயின

         இந்தத் திருத்தல வரலாற்றை திருநாவுக்கரசர் திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருப்பதிகம் - 4வது பாடல்)

"சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே"

என்று பாடி உள்ளார். 

         திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் அப்பு தலம். மூலத்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர்க் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

     திருவானைக்கா ஜம்புகேசுவரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

     அம்மன் அகிலாண்டேசுவரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேசுவரி காட்சி தருகிறாள்.

     மூலவர் ஜம்புகேசுவரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.

         திருவானைக்கா அன்னை அகிலாண்டேசுவரியின் ஆட்சித் தலம். அகிலாண்டேசுவரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

     அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிட்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிட்டை செய்துள்ளனர்.

     அன்னை அகிலாண்டேசுவரியின் அருள் பெற்று கவிமழை பொழிந்த காளமேகப் புலவர், திருஆனைக்கா உலா மற்றும் தனிப்பாடல்கள் பலவும் பாடி உள்ளார்.

         விடியல் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேசுவரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு, யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

     இத்திருத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு, திருநீற்றையே நாளும் கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கு ஏற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை "திருநீறிட்டான் மதில்" என்று அழைக்கிறார்கள். இத் திருமதில், 32 அடி உயரமும், 8000 அடிநீளமும் உடையது.

          நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.

          கோட்செங்கச் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.

                  அவதாரத் தலம்   : திருஆனைக்கா.
                   வழிபாடு          : லிங்க வழிபாடு.
                   முத்தித் தலம்     : தில்லை (சிதம்பரம்).
                   குருபூசை நாள்    : மாசி - சதயம்.

கோச்செங்கண் சோழ நாயனார் வரலாறு

         சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது.  அவ் வனத்தில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது.

         அந்த யானை துதிக்கையால் நீரை முகக்கும்.  சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும்.  இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது.  அதனால், அத் திருப்பதிக்குத் திருவானைக்கா என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.

         அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது.  சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது.  அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்து, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது.  பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டது.  அநுசிதம் என்று அதனை அழித்தது.  சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் வீதனம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது.  அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது.  சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது.  யானை விழுந்தது. தும்பிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்கு அருள் செய்தார்.

         சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர் தம் மனைவியார் கமலவதியார். இருவரும் தில்லை சேர்ந்து, ஆண்டவனை வழிபட்டுக் கொண்டு இருந்தனர்.  கமலவதியார்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.

         கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இப்பொழுது பிறத்தல் கூடாது. இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூன்று லோகத்தையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அவ் உரை கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை பிறந்தது. காலம் தாழ்த்துப் பிறந்தமையால், குழந்தை சிவந்த கண்ணை உடையதாயிருந்தது.  அதைக் கண்ட அன்னையார், "என்னே, கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.

         சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார்.

         கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் கண்ணும் கருத்தும் உடையவராய் இருந்தார்.  தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். அமைச்சர்களைக் கொண்டு சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார்.  அவைகளுக்குக் கட்டளைகளும் முறைப்படி அமைக்கப்பட்டன.

         கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார்.  தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி சேர்ந்தார்.

          மிகப்பெரிய திருக்கோயில். பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.

          சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, இறைவன் ஏற்றார். இந்த வரலாற்றை சுந்தரர் பெருமான், இத் திருத்தலப் பதிகத்தின் ஏழாவது திருப்பாடலில் சிறப்பித்து உள்ளார். "வளவர் பெருமான் திரு ஆரம்" என்னும் பெரியபுராணப் பாடல் இதனைக் குறிக்கின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நால் திசையும் தேனை, காவுள் மலர்கள், தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 344
செம்மணி வாரி அருவி தூங்கும்
         சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரை,
கைம்மலை ஈர்உரி போர்வை சாத்தும்
         கண்ணுத லாரைக் கழல்பணிந்து,
மெய்ம்மகிழ்வு எய்தி, உளம் குளிர,
         விளங்கிய சொல்தமிழ் மாலைவேய்ந்து,
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
         வணங்கும் விருப்பொடு வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : செந்நிறமான மணிகளை வாரிக் கொணரும் அருவிகள் பாய்தற்கு இடனான `திருச்சிராப்பள்ளி\' மலையின் மேல் வீற்றிருக்கும், யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து, கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் `திருவானைக்கா' என்ற பதியை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்து அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 345
விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
         வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை,
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து, எழுந்து,
         நால்கோட்டு நாகம் பணிந்ததுவும்,
அண்ணல்கோச் செங்கண் அரசன்செய்த
         அடிமையும், அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண்உறு செந்தமிழ் மாலைபாடி,
         பரவிநின்று ஏத்தினர், பான்மையினால்.

         பொழிப்புரை : தேவர்கள் வணங்கும் திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள மெய்ப்பொருளான இறைவரை அடைந்து, வணங்கி எழுந்து, நான்கு கொம்புகளையுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும், பெருமையுடைய கோச்செங்கட்சோழ அரசர் செய்த அடிமைத் திறத்தையும், அழகிய சொற்றொடையில் வைத்துப் பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தை அடிமைத் திறம் பிழையாது நின்ற பான்மையினால் போற்றினார்.

         இதுபொழுது அருளியது, `மழையார் மிடறா' (தி.2 ப.23) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகம்.

     இத் திருப் பதிகத்தின் 4ஆவது பாடலில், வெள்ளை யானைக்கு அருள் செய்தமையையும், 5ஆவது பாடலில் கோச்செங்கட் சோழருக்கு அருள் செய்தமையையும் பிள்ளையார் குறித்தருளுகின்றார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.023 திருவானைக்கா                    பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மழைஆர் மிடறா, மழுவாள் உடையாய்,
உழைஆர் கரவா, உமையாள் கணவா,
விழவு ஆரும்வெண்நா வலின்மே வியஎம்
அழகா. எனும்ஆ யிழையாள் அவளே.

         பொழிப்புரை :நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், "மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.


பாடல் எண் : 2
கொலைஆர் கரியின் உரிமூ டியனே,
மலைஆர் சிலையா வளைவித் தவனே,
விலையால் எனைஆ ளும்வெண்நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும்நே ரிழையே.

         பொழிப்புரை :அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், `கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்` எனக் கூறுகின்றாள்.


பாடல் எண் : 3
காலால் உயிர்கா லனைவீ டுசெய்தாய்,
பாலோ டுநெய் ஆடிய பால்வணனே,
வேலா டுகையாய் எம்வெண் நாவல் உளாய்
ஆல்ஆர் நிழலாய் எனும் ஆயிழையே.

         பொழிப்புரை :என் ஆயிழையாள், `காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல்ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே!` என்று பலவாறு கூறுகின்றாள்.
அருள்புரி.


பாடல் எண் : 4
சுறவக் கொடிகொண் டவன்நீறு அதுவாய்
உற, நெற் றிவிழித் தஎம் உத் தமனே,
விறன்மிக்க கரிக்கு அருள்செய் தவனே,
அறம்மிக் கதுஎன் னும்என் ஆயிழையே.

         பொழிப்புரை :என் ஆயிழையாள், `மீன் கொடியை உடைய மன் மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமைமிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது` என்று கூறுவாள்.


பாடல் எண் : 5
செங்கண் பெயர்கொண் டவன்,செம் பியர்கோன்,
அங்கண் கருணை பெரிது ஆயவனே,
வெங்கண் விடையாய், எம்வெண்நா வல்உளாய்,
அங்கத்து அயர்வு ஆயினள்ஆ யிழையே.

         பொழிப்புரை :ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், `செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!` என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.


பாடல் எண் : 6
குன்றே அமர்வாய், கொலைஆர் புலியின்
தன்தோல் உடையாய், சடையாய், பிறையாய்,
வென்றாய் புரமூன் றை,வெண்நா வல்உளாய்
நின்றாய் அருளாய் எனும்நே ரிழையே.

         பொழிப்புரை :தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், \"கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!\" என்று அரற்றுகின்றாள்.
பாடல் எண் : 7
* * * * *

பாடல் எண் : 8
மலைஅன்று எடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரல்ஊன் றிய,தூ மழுவா,
விலையால் எனை ஆளும்வெண்நா வல்உளாய்,
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.

         பொழிப்புரை :ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், `கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்` என்று கூறுகிறாள்.


பாடல் எண் : 9
திருஆர் தருநா ரணன்,நான் முகனும்,
மருவா, வெருவா, அழலாய் நிமிர்ந்தாய்,
விரைஆ ரும்வெண்நா வல்உள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையாள் அவளே.

         பொழிப்புரை :ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், `திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே!` என்று கூறுகின்றாள்.


பாடல் எண் : 10
புத்தர் பலரோடு அமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் உரைசொல் இவைஓ ரகிலார்,
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வல்உளாய்,
அத்தா, அருளாய் எனும் ஆயிழையே.

         பொழிப்புரை :ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் `புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்`! என்று கூறுவாள்.


பாடல் எண் : 11
வெண்நா வல்அமர்ந்து உறைவே தியனைக்
கண்ஆர் கமழ்கா ழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோர் அவர்ஏத் தவிரும் புவரே.

         பொழிப்புரை :வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

                                             திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 346
நாரணன் நான்முகன் காணா உண்மை
           வெண்நாவல், உண்மை மயேந்திரமும்,
சீரணி நீடு திருக்கயிலை,
           செல்வத் திருவாரூர் மேயபண்பும்,
ஆரணத் து உள்பொருள் ஆயினாரை,
            ஆனைக்கா வின்கண் புகழ்ந்துபாடி,
ஏர்அணியும் பொழில் சூழ்ந்தசண்பை
            ஏந்தலார், எல்லை இல் இன்பம் உற்றார்.

         பொழிப்புரை : திருமாலும் நான்முகனும் காணாத உண்மைப் பொருளாயவரும் வெண்ணாவலிலும், உண்மைப் பொருளை அருளிய மயேந்திரத்திலும், சிறப்பும் அழகும் பொருந்திய திருக்கயிலையிலும், செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளியிருக்கும் பண்புடையவருமான மறைகளின் உட்பொருளாய் உள்ள இறைவரைத் திருவானைக்கா என்ற பதியில் பாடி, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் எல்லையற்ற இன்பத்தைப் பெற்றார்.

          இந்நான்கு திருப்பதிகளையும் ஒருங்கு இணைத்துக் கூறிய பதிகம், `மண்ணது வுண்ட' (தி.3 ப.109) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

       மயேந்திரமலை இமயத்தின் ஒரு பகுதி என்பாரும், குமரிக் கடலிலிருந்து நீரில் மூழ்கியதொரு மலை என்பாரும் ஆக இருதிறத்தார் உளர். `ஒலிதரு கயிலை உயர் கிழவோனே' (தி.8 ப.2 வரி.146) என்றும் `மன்னு மாமலை மகேந்திர மதனுள் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்' (தி.8 ப.2 வரி.9) என்றும் திருவாசகத்துட் காணும் திருவாக்குகளால் இவற்றுள் முன்னைய கருத்தே வலியுடைத்தாகலாம். ஆகமம் அருளிச் செய்யப்பட்ட இடம் ஆதலின் `உண்மை மயேந்திரம்' என்றார்.


3. 109 திருக்கயிலாயம் - திருவானைக்கா, திருமயேந்திரம் - திருவாரூர்

பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மண்அது உண்டஅரி, மலரோன்காணா
வெண்நாவல், விரும்பும யேந்திரரும்,
கண்அது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல்  ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளி யிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும்.


பாடல் எண் : 2
வந்துமால் அயன்அவர் காண்புஅரியார்
வெந்தவெண் நீறுஅணி மயேந்திரரும்
கந்தவார் சடைஉடைக் கயிலையாரும்
அந்தண் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.


பாடல் எண் : 3
மால்அயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலை அதுஓங்கும்வெண் நாவலாரும்
ஆலை ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.


பாடல் எண் : 4
கருடனை ஏறுஅரி, அயனோர்காணார்
வெருள்விடை ஏறிய மயேந்திரரும்
கருள்தரு கண்டத்துஎம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.


பாடல் எண் : 5
மதுசூதன் நான்முகன் வணங்கஅரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 6
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலைஅரி தழல்உருவர்
அக்குஅணி யவர்ஆரூர் ஆனைக்காவே.

         பொழிப்புரை : சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.


பாடல் எண் : 7
கண்ணனும் நான்முகன் காண்புஅரியார்
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை,எங்கள்
அண்ணல்  ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.


பாடல் எண் : 8
கடல்வண்ணன் நான்முகன் காண்புஅரியார்
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்
விடம்அது உண்டஎம் மயேந்திரரும்
அடல்விடை ஆரூர்ஆதி ஆனைக்காவே.

         பொழிப்புரை : கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.


பாடல் எண் : 9
ஆதிமால் அயன்அவர் காண்புஅரியார்
வேதங்கள் துதிசெயு மயேந்திரரும்
காதிலொர் குழைஉடைக் கயிலையாரும்
ஆதி ஆரூர்எந்தை ஆனைக்காவே.

         பொழிப்புரை : தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 10
அறிவுஇல் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்துஆரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவுஅரு கயிலையோன் ஆனைக்காவே.

         பொழிப்புரை : இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 11
ஏனம்மால் அயன்அவர் காண்புஅரியார்
கானம்ஆர் கயிலைநன் மயேந்திரரும்
ஆன ஆரூர்ஆதி ஆனைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.

         பொழிப்புரை : பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவ பெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள்.

         பதிகக் குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல். ஒவ்வொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன. நான்கு தலங்களையும் சொன்னபோதிலும், ஒவ்வொரு பாசுரமும் "ஆனைக்காவே" என்று முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர் ஆதி (ஆனைக்கா) என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் "ஆரூர் எந்தை" என்று முடிகின்றது. பத்தாவது பாடல் "கயிலையோன் ஆனைக்கா" என்று முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு தலங்களிலும் எழுந் தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய தமிழ் என்று வருகிறது.
        
                                             திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 347
கைதொழுது ஏத்திப் புறத்து அணைந்து,
         காமர் பதி அதன் கண்சிலநாள்
வைகி, வணங்கி, மகிழ்ந்து அணைவார்,
         மன்னும் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே,
         இன்தமிழ் மாலைகொண்டு ஏத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
         மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.

         பொழிப்புரை : கையால் தொழுது போற்றி வெளியே வந்து, அழகிய அப்பதியில் சிலநாள்கள் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேல் செல்பவராய், நிலை பெற்ற `தவத்துறை\' (இலால்குடி)யில் உள்ள இறைவரின் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, இனிய தமிழ் மாலை பாடிப் போற்றி, மேற்சென்று வைதிக நெறியின் மணிபோன்ற அப்பிள்ளையார், அம் மருங்கில் மற்றும் உள்ள திருப் பதிகளையும் வணங்கிச் செல்வாராய்,

         திருவானைக்காவில், சில நாள் வதிந்த பொழுது அருளிய பதிகம் `வானைக்காவல்' (தி.3 ப.55) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     திருத்தவத்துறையில் அருளிய பதிகம் கிடைத்திலது. மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் என்றது, திருமங்கலம், திருமாந்துறை முதலியினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 053    திருவானைக்கா                    பண் - கௌசிகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்,
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும்ஏதம் இல்லையே.

         பொழிப்புரை :வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி , தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு , திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை .


பாடல் எண் : 2
சேறுபட்ட தண்வயல் சென்றுசென்று சேண்உலா
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்,
நீறுபட்ட மேனியார், நிகர்இல்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார், விண்ணில்எண்ண வல்லரே.

         பொழிப்புரை :சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர். ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள், சிந்தை முதலிய பசுகரணங்கள், பதி கரணங்களாக மாறியவர்களாய், முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர் .


பாடல் எண் : 3
தாரம்ஆய மாதராள் தானொர்பாகம் ஆயினான்,
ஈரம்ஆய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்,
ஆரம்ஆய மார்புஉடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

         பொழிப்புரை :தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க , அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர். திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும்.


பாடல் எண் : 4
விண்ணின்நண்ணு புல்கிய வீரம்ஆய மால்விடை,
சுண்ணவெண்ணீறு ஆடினான், சூலம் ஏந்து கையினான்,
அண்ணல்கண்ணொர் மூன்றினான், ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க்கு ஏதம்ஒன்றும் இல்லையே.

         பொழிப்புரை : வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான் . இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன் . சூலமேந்திய கையினன் . மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை .


பாடல் எண் : 5
வெய்யபாவம் கைவிட வேண்டுவீர்கள், ஆண்டசீர்
மைகொள்கண்டன், வெய்யதீ மாலையாடு காதலான்,
கொய்யவிண்ட நாள்மலர்க் கொன்றைதுன்று சென்னிஎம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

         பொழிப்புரை : கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே ! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும் , வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும் , அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையில் அணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .


பாடல் எண் : 6
நாணும்ஓர்வு சார்வும்,முன் நகையும், உட்கு நன்மையும்,
பேண்உறாத செல்வமும், பேசநின்ற பெற்றியான்,
ஆணும்பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறைகொள் மிடறன் அல்லனே.

         பொழிப்புரை : அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும் , பதியை ஓர்ந்து அறிதலும் , அறிந்தபின் சார்ந்திருத்தலும் , சார்தலினால் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய், எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய , சிவபெருமான் ஆணும், பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ ?


பாடல் எண் : 7
கூருமாலை நண்பகல் கூடிவல்ல தொண்டர்கள்
பேரும்ஊரும் செல்வமும் பேசநின்ற பெற்றியான்,
பாரும்விண்ணும் கைதொழ, பாயும்கங்கை செஞ்சடை
ஆரம்நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்மினே.

         பொழிப்புரை : காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி , இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும் , அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான் . பூவுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .


பாடல் எண் : 8
பொன்னம்மல்கு தாமரைப் போதுதாது வண்டுஇனம்
அன்னம்மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல், துன்னவல்லர் விண்ணையே.

         பொழிப்புரை : இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும் , அன்னப்பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகலை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவுலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .


பாடல் எண் : 9
ஊனொடுஉண்டல் நன்றுஎன, ஊனொடுஉண்டல் தீதுஎன,
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்,
வானொடுஒன்று சூடினான், வாய்மையாக மன்னிநின்று
ஆனொடுஅஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

         பொழிப்புரை : ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின் அன்பிற்கும் , ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும் , பிறைச்சந்திரனைச் சடையில் சூடி , சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள் .


பாடல் எண் : 10
கையில்உண்ணும் கையரும். கடுக்கள்தின் கழுக்களும்,  
மெய்யைப்போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார்,
தையல் பாகம் ஆயினான், தழலது உருவத்தான் எங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

         பொழிப்புரை :கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும் , கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும் , மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள் . எனவே அவர்களைச் சாராது , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள் .


பாடல் எண் : 11
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்று வானொடும்,
ஆழியானும் காண்கிலா,  ஆனைக்காவில் அண்ணலை,
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்துஇவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

         பொழிப்புரை : ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்ற பிரமனும் , திருமாலும் இறைவனின் முடியையும் , அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும் மாய்ந்தழியும் .

                                             திருச்சிற்றம்பலம்


----------------------------------------------------------------------------------------------------------



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 300
தலையின் மயிரைப் பறித்து உண்ணும்
         சாதி அமணர் மறைத்தாலும்,
நிலை இலாதார் நிலைமையினால்
         மறைக்க ஒண்ணுமோ என்னும்,
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
         விளம்பிப் புறம்போந்து அங்கு அமர்ந்தே
இலைகொள் சூலப் படையார் சேர்
         இடங்கள் பிறவும் தொழ அணைவார்.

         பொழிப்புரை : `தம் தலை மயிரைப் பறித்தலும், நின்று உண்ணும் இயல்பும் கொண்ட கூட்டத்தவரான சமணர்கள் மறைத்தாலும், மெய்ம்மையுணராத அவர்கள் தம் சிற்றறிவினால் மறைத்து வைத்திட முடியுமோ!` என்னும் கருத்துக் கொண்ட விலை மதிப்பதற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகையைப் பாடியருளினார். பின்பு அங்கு(பழையாறை வடதளி)த் தங்கியிருந்த நாவரசரும் மூவிலை வடிவான சூலப்படை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் வணங்கச் செல்லலானார்.

         இது பொழுது பாடிய திருப்பதிகம்: திருக்குறுந்தொகை.

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தால்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. -தி5 ப.58 பா.1

என வரும் இப்பதிக முதற் பாடலை இப்பாடல் முகந்து நிற்கின்றது.


பெ. பு. பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித்
         தமிழ் மாலைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 302
சிலந்திக்கு அருளும் கழல்வணங்கி,
         செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு சடையார் எறும்பியூர்
         மலையும் இறைஞ்சிப் பாடியபின்,
மலர்ந்த சோதி திருச்சிராப்
         பள்ளி மலையும் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
         துறையும் தொழுவான் நண்ணினார்.

         பொழிப்புரை : நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.

        
1.    திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்:

(அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை.
(ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம்.
(இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.

2.    திருவெறும்பியூர்: (அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை. (ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.

3.    திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.

4.    திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.

5.    திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

5. 031    திருவானைக்கா              திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கோனைக் காவி, குளிர்ந்த மனத்தராய்,
தேனைக் காவிஉண் ணார்சில தெண்ணர்கள்,
ஆனைக் காவில்அம் மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

         பொழிப்புரை : தெளிவற்ற சிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !


பாடல் எண் : 2
திருகு சிந்தையைத் தீர்த்து,செம் மைசெய்து,
பருகி, ஊறலைப் பற்றி, பதம்அறிந்து,
உருகி நைபவர்க்கு, ஊனம்ஒன்று இன்றியே,
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு , அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன் .


பாடல் எண் : 3
துன்பம் இன்றித் துயர்இன்றி,  என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்,
என்பொன் ஈசன் இறைவன்என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : என் பொன்போல்வான் என்றும் , ஈசன் என்றும் , இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால், துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின் , இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக .


பாடல் எண் : 4
நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்தி உளத்துஅடைத் தார்,வினை
காவாய் என்றுதம் கைதொழு வார்க்குஎலாம்
ஆஆ என்றிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும் , ` வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக ` என்று கைதொழுவார்களுக்கும் , ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன் .


பாடல் எண் : 5
வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்,
வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுஉற,
நைஞ்சு நைஞ்சுநின்று உள்குளிர் வார்க்குஎலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக ; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக ; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் ` அஞ்சேல் ` என்று அருள்பவன் அப் பெருமானேயாவன் .


பாடல் எண் : 6
நடையை மெய்என்று நாத்திகம் பேசாதே,
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்,
தடைஒன்று இன்றியே தன்அடைந் தார்க்குஎலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல் , படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன் .


பாடல் எண் : 7
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம், கழலடி
தொழுது, கைகளால் தூமலர் தூவிநின்று,
அழும் அவர்க்குஅன்பன் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .


பாடல் எண் : 8
உருளும் போதுஅறிவு ஒண்ணா உலகத்தீர்,
தெருளும் சிக்கென,  தீவினை சேராதே,
இருள் அறுத்துநின்று ஈசன்என் பார்க்குஎலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே ! தெளிவடைவீர்களாக ; தீவினையைச் சேராமல் விரைந்து , இருள் அறுத்து நின்று ` ஈசனே ` என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .


பாடல் எண் : 9
நேசம் ஆகி நினைமட நெஞ்சமே
நாசம் ஆய குலநலம் சுற்றங்கள்
பாசம் அற்றுப் பராபர ஆனந்த
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக .


பாடல் எண் : 10
ஓத மாகடல் சூழ்இலங் கைக்குஇறை
கீதம் கின்னரம் பாடக் கெழுவினான்,
பாதம் வாங்கிப் பரிந்துஅருள் செய்துஅங்குஓர்
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

         பொழிப்புரை : ஆனைக்காவின் அண்ணல் , அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர் .


                                             திருச்சிற்றம்பலம்


6. 062    திருவானைக்கா              திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,
         எம்மாடு சும்மாடுஆம், ஏவர் நல்லார்,
செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை,
         சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்துஆய வேடத்தாய், நீடு பொன்னித்
         திருவானைக் காஉடைய செல்வா, என்தன்
அத்தா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்! எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடியதாகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் ஏனைய தேகபந்துக்களை விடுத்து, `என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவை உகந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?` எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது என்றபடி.


பாடல் எண் : 2
ஊன்ஆகி, உயிர்ஆகி, அதன்உள் நின்ற
         உணர்வுஆகி, பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,
நான்ஏதும் அறியாமே என்உள் வந்து
         நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,
தேன்ஆரும் கொன்றையனே, நின்றி யூராய்,
         திருவானைக் காவில்உறை சிவனே, ஞானம்
ஆனாய்,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். யான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய், தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.


பாடல் எண் : 3
ஒப்பாய்இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான்
         ஒன்றுஅலாத் தவத்தாரோடு உடனே நின்று
துப்புஆரும் குறைஅடிசில் துற்றி, நற்றுஉன்
         திறம்மறந்து திரிவேனைக் காத்து, நீவந்து
எப்பாலும் நுன்உணர்வே ஆக்கி, என்னை
         ஆண்டவனே,  எழில்ஆனைக் காவா, வானோர்
அப்பா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :அழகான ஆனைக்காவில் உள்ளவனே! தேவர்கள் தலைவனே! எல்லோருடனும் சமமாய் இவ்வுலக நடையோடு பொருந்தி வாழ்வதனை மேற்கொள்ளாத சமணத்துறவியரோடு பொருந்தி வாழ்ந்து, உண்ணுதற்கேற்ற கஞ்சியுணவை நிரம்ப உண்டு, நன்மை தரும் உன் பண்பு செயல்களை மறந்து திரிந்த அடியேனைப் பாதுகாத்து, அடியேன் உள்ளத்து வந்து, எப்பொருட்கண்ணும் உன்னை உணரும் உணர்வைத் தந்து, என்னை அடிமை கொண்டவனே! உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.


பாடல் எண் : 4
நினைத்தவர்கள் நெஞ்சுஉளாய், வஞ்சக் கள்வா,
         நிறைமதியம் சடைவைத்தாய், அடையாதுஉன்பால்
முனைத்தவர்கள் புரமூன்றும் எரியச் செற்றாய்,
         முன்ஆனைத் தோல்போர்த்த முதல்வா என்றும்
கனைத்துவரும் எருதுஏறும் காள கண்டா,
         கயிலாய மலையா, நின் கழலே சேர்ந்தேன்,
அனைத்துஉலகும் ஆள்வானே, ஆனைக் காவா,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :எல்லா உலகங்களையும் ஆள்கின்ற ஆனைக்காப் பெருமானே! உன்னை அன்போடு நினைப்பவர்களுடைய நெஞ்சிலே மறைந்து உறையும் வஞ்சனையை உடைய கள்வனே! ஒளி நிறைந்த பிறையைச் சடையில் சூடியவனே! உன்னைச் சரணடையாது, உன்னோடு பகைத்தவர்களின் மதில்கள் மூன்றும் தீயில் எரியுமாறு அழித்தவனே! முன் ஒரு காலத்தில் யானை ஒன்றனைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய உலக காரணனே! செருக்கி ஒலித்துக்கொண்டு வரும் காளையை இவர்ந்த நீல கண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் திருவடிகளை அடைந்த அடியேன் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!


பாடல் எண் : 5
இம்மாயப் பிறப்புஎன்னும் கடலாம் துன்பத்து
         இடை, சுழிப்பட்டு இளைப்பேனை, இளையா வண்ணம்
கைம்மான மனத்துஉதவிக் கருணை செய்து,
         காதலருள் அவைவைத்தாய், காண நில்லாய்,
வெம்மான மதகரியின் உரிவை போர்த்த
         வேதியனே, தென்ஆனைக் காவுள் மேய
அம்மான்,நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :கொடிய மதச் செருக்குடைய யானைத் தோலைப் போர்த்த வேதியனே! அழகான ஆனைக்காவை உகந்தருளியிருக்கும் தலைவனே! இந்த நிலையின்மையை உடைய பிறவிக் கடலில் துன்பமாகிய சுழியில் அகப்பட்டு, வருந்தும் என்னைக் கைகொடுத்து நீர்ச் சுழியிலிருந்து காப்பவரைப்போல, மனத்திலிருந்து உதவி செய்து, கருணை காட்டி, என்னிடத்தில் அன்பையும், அருளையும் பொழிந்தும், யான் கண்ணால் காணுமாறு வெளியே நிற்கின்றாய் அல்லை. நின் பொற்பாதத்தை அடியேன் அடைப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!


பாடல் எண் : 6
உரைஆரும் புகழானே, ஒற்றி யூராய்,
         கச்சியே கம்பனே, காரோ ணத்தாய்,
விரைஆரும் மலர்தூவி வணங்கு வார்பால்
         மிக்கானே, அக்குஅரவம் ஆரம் பூண்டாய்,
திரைஆரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
         திருவானைக் காவில்உறை தேனே, வானோர்
அரையா, உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :புகழுவார் புகழும் சொற்களிலெல்லாம் நிறைந்த புகழுடையவனே! ஒற்றியூர், கச்சி ஏகம்பம், குடந்தை நாகைக் காரோணங்கள் இவற்றில் உறைபவனே! நறுமணமுடைய மலர்களைத் தூவி வணங்கும் அடியவர் மனத்தில் மிக்கு விளங்குபவனே! எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டவனே! அலைகள் நிறைந்த நீரை உடைய காவிரியாகிய புண்ணிய தீர்த்தம் நிறைந்த திருவானைக்காவில் உள்ள தேன் போன்ற இனியவனே! தேவர் தலைவனே! உன்பொற்பாதம் அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.


பாடல் எண் : 7
மைஆரும் மணிமிடற்றாய், மாதுஓர் கூறாய்,
         மான்மறியும் மாமழுவும் அனலும் ஏந்தும்
கையானே, காலன்உடல் மாளச் செற்ற
         கங்காளா, முன்கோளும் விளைவும் ஆனாய்,
செய்யானே, திருமேனி அரியாய், தேவர்
         குலக்கொழுந்தே, தென்ஆனைக் காவுள் மேய
ஐயா, உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :நீலகண்டனே! பார்வதிபாகனே! மான்கன்று, பெரிய மழுப்படை, நெருப்பு இவற்றைத் தாங்கும் திருக்கரங்களை உடையவனே! கூற்றுவனுடைய உயிர்போகுமாறு அவனை அழித்த, முழு எலும்புக்கூடு அணிந்தவனே! முற்பிறப்புக்களில் செய்து கொள்ளப்பட்ட வினைகளும் அவற்றின் பயன்களும் ஆனவனே! செம்மேனி அம்மானே! யாவர்க்கும் நேராகக் காண்பதற்கு அரியவனே! தேவர் குலத்துத் தளிர் போன்றவனே! அழகிய ஆனைக்காவுள் உறையும் தலைவனே! உன் பொற்பாதங்களை அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.


பாடல் எண் : 8
இலைஆரும் சூலத்தாய், எண்தோ ளானே,
         எவ்விடத்தும் நீஅல்லாது இல்லை என்று,
தலைாரக் கும்பிடுவார் தன்மை யானே,
         தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே, திருவானைக் காவுள் மேய
         தீயாடீ, சிறுநோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே, நின்அடியே அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :இலைவடிவாக அமைந்த சூலத்தை ஏந்தியவனே! பெருந் தோள்களை உடையவனே! எவ்விடத்தும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை என்று, தலைமேல் கைகுவித்துக் கும்பிடுபவர் செயல்களுக்கு உதவும் பண்பினனே! மேருவாகிய வில்லைக் கையில் கொண்டு, திரிபுரத்தைத் தீக்கு இரை ஆக்கியவனே! திருவானைக்காவுள் உறையும், தீயில் கூத்து நிகழ்த்துபவனே! சிறிய நோய்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளம் வருந்தாது, நின் அடியே அடைதல் கூடுமாயின் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.


பாடல் எண் : 9
விண்ஆரும் புனல்பொதிசெம் சடையாய், வேத
         நெறியானே, எறிகடலின் நஞ்சம் உண்டாய்,
எண்ஆரும் புகழானே, உன்னை எம்மான்
         என்றுஎன்றே நாவினில்எப் பொழுதும் உன்னி,
கண்ஆரக் கண்டுஇருக்க, களித்துஎப் போதும்,
         கடிபொழில்சூழ் தென்ஆனைக் காவுள் மேய
அண்ணா,நின் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :ஆகாய கங்கை தங்கிய செந்நிறச் சடையனே! வேத நெறியை உபதேசித்தவனே! கடலின் விடத்தை உண்டவனே! எண் நிறைந்த புகழ்களுக்கு உரிய பண்புகளையும் செயல்களையும் உடையவனே! உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்துக் கண்கள் மகிழ்ச்சி நிறையுமாறு காணும்படி எப்பொழுதும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய ஆனைக்காவுள் உகந்தருளியிருக்கும் அண்ணால்! நின்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.


பாடல் எண் : 10
கொடிஏயும் வெள்ஏற்றாய், கூளி பாடக்
         குறட்பூதம் கூத்தாட நீயும் ஆடி,
வடிவுஏயும் மங்கைதனை வைத்த மைந்தா,
         மதில்ஆனைக் காஉளாய், மாகா ளத்தாய்,
படிஏயும் கடல்இலங்கைக் கோமான் தன்னைப்
         பருமுடியும் திரள்தோளும் அடர்த்து உகந்த
அடியேவந்து அடைந்து,அடிமை ஆகப் பெற்றால்
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :கொடியில் எழுதப்பட்ட உருவாக அமைந்த காளையை உடையவனே! பேய்கள் பாடக் குட்டையான பூதங்கள் கூத்தாட, நீயும் கூத்து நிகழ்த்தி, அழகிய பார்வதி பாகனாய், மதில்களை உடைய ஆனைக்காவிலும், உஞ்சேனி, இரும்பை, அம்பர் மாகாளங்களிலும் உறைபவனே! நிலம் முழுதும் சூழ்ந்த கடலிடையே உள்ள இலங்கை மன்னனான இராவணனுடைய பருத்த தலைகளையும் வலிய தோள்களையும் நெரித்து, மகிழ்ந்த உன் திருவடிகளைச் சரணாக அடைந்து உனக்கு அடிமையாகப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

                                             திருச்சிற்றம்பலம்



6. 063     திருவானைக்கா         திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முன்ஆனைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை,
         மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்ஆனை யாப்பண்ணி ஏறி னானை,
         சார்தற்கு அரியானை, தாதை தன்னை,
என்ஆனைக் கன்றினை,என் ஈசன் தன்னை,
         ஏறிநீர்த் திரைஉகளும் காவிரிசூழ்
தென்ஆனைக் காவானை, தேனை, பாலை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று, அதன் தோலைப் போர்த்தியவனாய், ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய், அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய், எல்லோருக்கும் தந்தையாய், என் ஆனைக் கன்று போன்று எனக்கு இனியவனாய், என்னை அடக்கி ஆள்பவனாய், அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய், நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன் .



பாடல் எண் : 2
மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை,
         வளர்மதியம் சடையானை, மகிழ்ந்துஎன் உள்ளத்து 
இருந்தானை, இறப்புஇலியை, பிறப்பு இலானை,
         இமையவர்தம் பெருமானை,  உமையாள் அஞ்சக்
கருந்தான மதகளிற்றின் உரிபோர்த் தானை,
         கனமழுவாள் படையானை, பலிகொண்டு ஊர்ஊர்
திரிந்தானை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :அமுதமாக உள்ளவனாய் , தியானிப்பவர் மனத்து இருப்பவனாய் , பிறையை அணிந்த சடையனாய் , மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய் , பிறப்பு இறப்பு இல்லாதவனாய் , தேவர்கள் தலைவனாய் , பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய் , வலிய மழுப்படையை உடையவனாய் , ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள் ` வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன் .


பாடல் எண் : 3
முற்றாத வெண்திங்கள் கண்ணி யானை,
         முந்நீர்நஞ்சு உண்டுஇமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல்உயிர்க்கும் துணை ஆனானை,
         ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின்இறக்கம் செய்வான் தன்னை,
         பிரான்என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை. திருவானைக் கா உளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே.

         பொழிப்புரை :பிறையை முடிமாலையாக அணிந்தவனாய் , கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய் , பல உயிர்களுக்கும் துணையாவானாய் , ஓங்காரத்தின் உட்பொருளாய் , உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப் புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 4
கார்ஆரும் கறைமிடற்றுஎம் பெருமான் தன்னை,
         காதில்வெண் குழையானை, கமழ்பூங் கொன்றைத்
தாரானை, புலிஅதளின் ஆடை யானை,
         தான்அன்றி வேறுஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணிஆர மார்பி னானை,
         பிஞ்ஞகனை, தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானை. திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய் , புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய் , ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய் , படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய் , உலகங்களை அழிப்பவனாய் , தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 5
பொய்ஏதும் இல்லாத மெய்யன் தன்னை,
         புண்ணியனை, நண்ணாதார் புரம்நீறு ஆக
எய்தானை, செய்தவத்தின் மிக்கான் தன்னை,
         ஏறுஅமரும் பெருமானை, இடமான் ஏந்தும்
கையானை, கங்காள வேடத் தானை,
         கட்டங்கக் கொடியானை, கனல்போல் மேனிச்
செய்யானை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய் , புண்ணியனாய் , பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய் , தவத்தில் மேம்பட்டவனாய் , காளை வாகனனாய் , மானை ஏந்தும் இடக்கையனாய் , கங்காள வேடத்தானாய் , கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய் , தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 6
கலையானை, பரசுதர பாணி யானை,
         கனவயிரத் திரளானை, மணிமா ணிக்க
மலையானை, என்தலையின் உச்சி யானை,
         வார்தருபுன் சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரிஅரவு நாணாக் கோத்து
         நினையாதார் புரம்எரிய வளைத்த மேருச்
சிலையானை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :கலையையும், மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய், பெரிய வயிரத்திரளாய், மாணிக்கமலையாய், என் தலையின்மேல் உள்ளானாய், நீண்டசெஞ்சடையனாய், சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய், வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து, தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு, வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய், திருவானைக்காவில், உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 7
ஆதியனை, எறிமணியின் ஓசை யானை,
         அண்டத்தார்க்கு அறிவுஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூமறையின் பொருளான் தன்னை,
         சுரும்புஅமரும் மலர்க்கொன்றை தொல்நூல் பூண்ட
வேதியனை, அறம்உரைத்த பட்டன் தன்னை,
         விளங்குமலர் அயன்சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :எல்லோருக்கும் முற்பட்டவனாய் , மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய் , உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய் , வேதத்தின் விழுமிய பொருளாய் , வண்டுகள் தங்கும் கொன்றை மலர் , எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய் , அறத்தை உபதேசித்த ஆசிரியனாய் , தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 8
மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை,
         மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானை,
         பூதகணப் படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப் பானை,
         ஒண்பவளத் திரளை, என் உள்ளத்து உள்ளே
திகழ்ந்தானை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய் , தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய் , பூதகணமாகிய படையை உடையவனாய் , சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய் , பிச்சை ஏற்றலை ஆசைப் படுபவனாய் , பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய் , திருவானைக்காவுள் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 9
நசையானை, நால்வேதத்து அப்பா லானை,
         நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை,
இசையானை, எண்இறந்த குணத்தான் தன்னை,
         இடைமருதும் ஈங்கோயும் நீங்காது, ஏற்றின்
மிசையானை, விரிகடலும் மண்ணும் விண்ணும்
         மிகுதீயும் புனல்எறிகாற்று ஆகி, எட்டுத்
திசையானை, திருவானைக் காஉ ளானை,
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய் , நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் , வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய் , எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய் , இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய் , காளைவாகனனாய் , விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய் , திருவானைக்காவுள் உறைவானாய் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .


பாடல் எண் : 10
பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழ,
         பண்டுஅயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை, செந்தழல்போல் உருவி னானை,
         தேவர்கள் தம் பெருமானை, திறம்உன்னாதே
ஆர்த்துஓடி மலைஎடுத்த இலங்கை வேந்தன்
         ஆண்மைஎலாம் கெடுத்து,அவன்தன் இடர்அப் போதே
தீர்த்தானை, திருவானைக் காஉ ளானைச்
         செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.

         பொழிப்புரை :மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய் , ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய் , தேவர்கள் தலைவனாய் , தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து , கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுவாமிகள், திருமழபாடி ஈசரைத் தொழுது, பொன்னிக் கரையின் இருமருங்கும் உள்ள தலங்களைச் சென்று வணங்குங்கால், திருவானைக்காவை அணைந்து பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 75)

     இத் திருப்பதிகத்தில், மணி ஆரம் பொன்னியில் வழுவிப் போனதற்கு வருந்திய உறையூர்ச் சோழனது வருத்தம் நீங்க, அம் மணியாரத்தைத் திருமஞ்சனக்குடத்துள் புகச் செய்து பெருமான் அணிந்துகொண்ட திறத்தை வியந்து அருளிச் செய்தது அறியத் தக்கது.

பெரிய புராணப் பாடல் எண் : 75
செய்ய சடையார் திருவானைக்
         காவில் அணைந்து, திருத்தொண்டர்
எய்த முன்வந்து எதிர்கொள்ள
         இறைஞ்சி, கோயில் உள்புகுந்தே,
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
         ஆர்வம் பெருக வீழ்ந்துஎழுந்து,
மெய்யும் முகிழ்ப்ப, கண்பொழிநீர்
         வெள்ளம் பரப்ப, விம்முவார்.

         பொழிப்புரை : சிவந்த சடையையுடைய பெருமான் அமர்ந்தருளும் திருவானைக்காவை அடைய, அங்கு வாழும் அடியவர்கள், இவர் வருகையறிந்து, களிகூர்ந்து, எதிர்கொள்ளத் தாமும் வணங்கி, அவர்களுடன் பெருமானது கோயிலுள் சென்று, சேவடிக் கீழ் ஆர்வம் பெருக வீழ்ந்து எழுந்து, மேனியில் மயிர் முகிழ்த்திட, கண்ணிலிருந்து பொழியும் ஆனந்த வெள்ளம் திருமேனி எங்கும் பரந்து வழியுமாறு திளைப்பவர்,


பெ. பு. பாடல் எண் : 76
"மறைகள் ஆய நான்கும்" என
         மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையும் காதல் உடன்எடுத்து,
         நிலவும் அன்பர் தமைநோக்கி,
இறையும் பணிவார் எம்மையும் ஆள்
         உடையார் என்றுஎன்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணிஆரம்
         சாத்தும் திறத்தை உணர்ந்துஅருளி.

         பொழிப்புரை : `மறைகளாயின நான்கும்' என மலர்ந்து வரும் செஞ்சொல் கொண்ட தமிழ்ப் பதிகத்தை உள்ளம் நிறைகின்ற காதலுடன் பாட எடுத்துத், தம்முடன் நின்று வழிபடும் அன்பர்களை நோக்கி, `எம்பெருமானை நாளும் பணிவார்கள் எம்மையும் அடிமையாக உடையவராவர்' என்று மகிழ்வுடன் போற்றுவார், அத்திருப்பதியில் முன் வழிபாடாற்றிய உறையூர்ச் சோழ அரசனின் முத்து மாலையை இறைவன் அணிந்தருளிய திருவருட்டிறத்தை உணர்ந்தருளி,

         `மறைகளாயின நான்கும்' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.75). `இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே' எனும் கருத்துப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடராக அமைந்துள்ளது.



பெ. பு. பாடல் எண் : 77
வளவர் பெருமான் மணிஆரம்
         சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளரும் திரைநீர் மூழ்குதலும்
         வழுவிப் போகக் கேதம்உற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
         அதுபுக்கு ஆட்ட அணிந்து அருளித்
தளரும் அவனுக்கு அருள்புரிந்த
         தன்மை சிறக்கச் சாற்றினார்.

         பொழிப்புரை : சோழ மன்னன், அழகிய மணிமாலையை அணிந்து கொண்டு, விரைவாக வரும் காவிரியாற்றில் பெருகும் நீரில் மூழ்குதலும், அவர்தம் முத்து மாலை கழுத்தினின்றும் வழுவிப் போகத் துன்பமுற்று, `ஐயனே! அம் முத்து மாலையை ஏற்றருள்க' என வேண்ட, பெருமானாரும் திருமுழுக்காட்டும் நீரொடு குடத்தில் அது சேருமாறு செய்வித்துத் தமக்குத் திருமுழுக்காட்டக் கொணர்ந்த காவிரி நீருடன் அம்மாலையையும் அணிந்தருளித் தளர்ச்சியுற்ற சோழ அரசனுக்கு அருள்புரிந்த தன்மையையும் அப்பதிகத்துள் சிறப்பித்து அருளினார்.

         இப்பொருளமைந்த பாடல், தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரம் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. எனவரும் (தி.7 ப.75 பா.7) திருப்பாடலாகும்.

சுந்தரர் திருப்பதிகம்

7. 075   திருவானைக்கா                பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மறைகள் ஆயின நான்கும்,
         மற்றுஉள பொருள்களும், எல்லாத்
துறையும், தோத்திரத்து இறையும்,
         தொன்மையும் நன்மையும் ஆய,
அறையும் பூம்புனல் ஆனைக்
         காஉடை ஆதியை, நாளும்
இறைவன் என்றுஅடி சேர்வார்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, ` இவனே முதல்வன்` என்று அறிந்து, நாள்தோறும் அடி பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 2
வங்கம் மேவிய வேலை
         நஞ்சுஎழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
         உண்என உண்டுஇருள் கண்டன்,
அங்கம் ஓதிய ஆனைக்
         காஉடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற , தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக்கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சிசெய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று `இந் நஞ்சினை உண்டருளாய்` என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு, அதனால், கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, `இவனே எங்களுக்குத் தலைவன்` என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர், எம்மையும் அடிமை கொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 3
நீல வண்டுஅறை கொன்றை,
         நேர்இழை மங்கை, ஓர்திங்கள்
சால வாள்அர வங்கள்
         தங்கிய செஞ்சடை எந்தை,
ஆல நீழல்உள் ஆனைக்
         காஉடை ஆதியை, நாளும்
ஏலு மாறுவல் லார்கள்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும் , நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும் , பிறை ஒன்றும் , பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும் , ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர், எம்மையும் அடிமை கொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 4
தந்தை தாய்,உல குக்குஓர்
         தத்துவன், மெய்த்தவத் தோர்க்குப்
பந்தம் ஆயின பெருமான்,
         பரிசுஉடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
         காஉடை ஆதியை, நாளும்
எந்தை என்றுஅடி சேர்வார்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும், உண்மையான தவத்தைச் செய்வோர்க்கு உறவான பெருமானும், அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய, அழகிய, குளிர்ந்த பூக்களையுடைய, நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, `இவனே எம் தந்தை` என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 5
கணைசெந் தீஅர வம்நாண்
         கல்வளை யும்சிலை யாகத்
துணைசெ யும்மதில் மூன்றும்
         சுட்டவ னே,உலகு உய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
         காஉடை ஆதியை, நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு , சிவந்த நெருப்பு அம்பாகியும் , பாம்பு நாணியாகியும் , மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க , ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய , எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணி கின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 6
விண்ணின் மாமதி சூடி,
         விலைஇலி கலன்அணி விமலன்,
பண்ணின் நேர்மொழி மங்கை
         பங்கினன், பசுஉகந்து ஏறி,
அண்ணல் ஆகிய ஆனைக்
         காவுடை ஆதியை, நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி , விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும் , பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும் , ஆனேற்றை விரும்பி ஏறுபவனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையர் ஆவர் .


பாடல் எண் : 7
தாரம் ஆகிய பொன்னித்
         தண்துறை ஆடி விழுத்து,
நீரில் நின்றுஅடி போற்றி
         நின்மலா கொள்என ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக்
         காவுடை ஆதியை நாளும்,
ஈரம் உள்ளவர் நாளும்
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : சோழன் ஒருவன் , பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்து வடத்தை வீழ்த்தி, வீழ்த்திய வருத்தத்தால் கரை ஏறாது நீரிற்றானே நின்று, தனது திருவடியைத் துதித்து,
`இறைவனே, எனது முத்து மாலையை ஏற்றுக்கொள்` என்று வேண்ட, அங்ஙனமே அவ் வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட, திரு வானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர், நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .

  
பாடல் எண் : 8
உரவம் உள்ளதொர் உழையின்
         உரிபுலி அதள்உடை யானை,
விரைகொள் கொன்றையி னானை,
         விரிசடை மேல்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
     காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லையும் ஏத்து
         வார்,எம்மை ஆள்உடை யாரே

         பொழிப்புரை : வலிமையுள்ள மானினது தோல் , புலியினது தோல் இவைகளை யுடையவனும் , நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும் , பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள் தோறும், இரவிலும், பகலிலும் துதிப்பவர், எம்மையும் அடிமை கொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 9
வலங்கொள் வார்அவர் தங்கள்
         வல்வினை தீர்க்கு மருந்து,
கலங்கக் காலனைக் காலால்
         காமனைக் கண்சிவப் பானை,
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
         காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்,
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும் , கூற்று வனைக் காலாலும் , காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியுமாறு வெகுண்டவனும் ஆகிய , அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது விளங்குகின்ற , செவ்விய திருவடியில் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 10
ஆழி யாற்குஅருள் ஆனைக்
         காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
         நின்றுஅருள் கூர நினைந்து
வாழவல்லவன் தொண்டன்
         வண்தமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப்பு அற்று
         எம்மையும் ஆள்உடை யாரே

         பொழிப்புரை : சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள் புரிந்த, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன் போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்தொண்டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர், எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று, மேலே சென்று, எம்மையும் அடிமைகொண்டு ஆளுதல் உடையவர் ஆவர்.

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...