திருக் குருகாவூர்


திருக் குருகாவூர் வெள்ளடை
(திருக்கடாவூர்)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சீகாழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ.- ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மீ. சென்றால் இத்  திருத்தலத்தை அடையலாம். ஊர்க் கோடியில் திருக்கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

இறைவர்         : சுவேதரிஷபேசுவரர், வெள்ளடையீசுவரர் வெள்ளடைநாதர்.

இறைவியார்      : நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி.

தீர்த்தம்           : பால் கிணறு.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - சுண்ணவெண் ணீறணி.                                                                2. சுந்தரர்   - இத்தனை யாமாற்றை.

         ஊரின் பெயர் குருகாவூர். திருக்கோயிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது.

     ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்ளடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி காவியங்கண்ணி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

     விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன.

     கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

     திருமுறைக்கு மாறாக ஒரு செவிவழிக் கதை ஒன்று வழக்கம்போல வழங்கப்படுகின்றது.  அதாவது, சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். இது மிகவும் அபத்தமானது. திருஞானசம்பந்தர் பாவம் செய்ததாக மனத்தால் எண்ணுவதே பாவம். அன்பர்கள் இதைக் கருத்தில் கொள்வார்களாக.

     இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

     சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப் போக்கிய கட்டமுது தந்த விழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பார் காட்டு உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் குருகாவூர் வெள்ளடை எம் கோவே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் காவலர் அருகில் குடி இருப்பதால், அவரை விசாரித்து தொடர்பு கொண்டால் எந்நேரமும் தரிசிக்கலாம்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 126
மெய்ப்பொருள் ஆயி னாரை, வெண்காடு மேவி னாரை,
செப்புஅரும் பதிக மாலை, "கண்காட்டு நுதல்" முன் சேர்த்தி,
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி,
ஒப்புஅரும் ஞானம் உண்டார் உளமகிழந்து ஏத்தி வாழ்ந்தார்.

         பொழிப்புரை : மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப்பதிகமான `கண்காட்டு நுதலானும்\' (தி.2 ப.48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங்களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப்பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 127
அருமையால் புறம்பு போந்து வணங்கி, அங்கு அமரும் நாளில்,
திருமுல்லை வாயில் எய்திச் செழுந்தமிழ் மாலை சாத்தி,
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார், மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம் பந்தர் சார்ந்தார்.

         பொழிப்புரை : அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந்தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 128
தோணி வீற்றிருந்தார் தம்மைத் தொழுதுமுன் நின்று, தூய
ஆணியாம் பதிகம் பாடி, அருட்பெரு வாழ்வு கூர,
சேண்உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில், செய்ய
வேணியார் தம்மை, நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.

         பொழிப்புரை : திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர்

பெ. பு. பாடல் எண் : 129
வைகும்அந் நாளில் கீழ்பால் மயேந்திரப் பள்ளி, வாசம்
செய்பொழில் குருகாவூரும், திருமுல்லை வாயில் உள்ளிட்டு,
எய்திய பதிகள் எல்லாம் இன்புஉற இறைஞ்சி ஏத்தி,
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

         பொழிப்புரை : இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த்திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லைவாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றையும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

         குறிப்புரை : திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு' - பண் : கொல்லி (தி.3 ப.31).

         திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124).

         திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத்திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத்தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

         திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105).

         திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்:
`உண்டாய் நஞ்சை' - பண்: காந்தாரம் (தி.2 ப.61).
`மந்திர மறையவை' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15).

         கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).


3. 124   திருக்குருகாவூர் வெள்ளடை   பண் - அந்தாளிக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சுண்ணவெண் நீறுஅணி மார்பில் தோல்புனைந்து
எண்அரும் பல்கணம் ஏத்தநின்று ஆடுவர்,
விண்அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்அமர் மேனிஎம் பிஞ்ஞக னாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார் . அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர் .

  
பாடல் எண் : 2
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுஉடந் ஆடுதிர், மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாள்அரவு ஆட்டுஉகந் தீரே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே ! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர் . அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர் .


பாடல் எண் : 3
அடையலர் தொல்நகர் மூன்றுஎரித்து, அன்ன
நடைமட மங்கையொர் பாகம் நயந்து,
விடைஉகந்து ஏறுதிர், வெள்ளடை மேவிய
சடைஅமர் வெண்பிறைச் சங்கர னீரே.

         பொழிப்புரை : திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர். அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர் .

  
பாடல் எண் : 4
வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடுஅரங் காக,
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை எம்பெரு மானே.

         பொழிப்புரை : குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம் பெருமானே ! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர்.


பாடல் எண் : 5
சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டுஇடை ஆடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.

         பொழிப்புரை : விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பு , மழு , வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே ! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும் , உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு , வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில் , உலகுமீள உளதாக , ஆடுகின்றீர் .

  
பாடல் எண் : 6-11
காவிஅம் கண்மட வாளொடும் காட்டுஇடைத்
தீயகல் ஏந்திநின்று ஆடுதிர், தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண்டு ஆட்டுஉகந் தீரே.

         பொழிப்புரை : தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே ! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ அகல் ஏந்தி நின்று ஆடுகின்றீர் .

         குறிப்புரை : தீயகல் ஏந்தி நின்று ஆடுதிர் என்பது ` கரதலத்தில் தமருகமும் எரியகலும் பிடித்து ஆடி ` எனச் சுந்தரமூர்த்திகள் திரு வாக்கில் வருவதும் காண்க .
        
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

         சுந்தரர், திருக்கோலக்காவைத் தொழுது சீகாழியை வலங்கொண்டு, திருக்குருகாவூர் செல்லும்பொழுது பசியினாலும் நீர் வேட்கையினாலும் மிகவும் வருந்தினார். அதனை உணர்ந்த பெருமான் நம்பியாரூரர் வரும் வழியில் தண்ணீரும் பொதி சோறும் கொண்டு, குளிர் பந்தர் அமைத்து, வேதியர் வடிவுடன் எழுந்தருளியிருந்தார். அடியவர் திருக்ககூட்டத்துடன் நம்பியாரூரர் வந்ததும் மறையவர், 'நீர் இப்போது பசியால் இளைத்து இருக்கின்றீர் போலும்; என்னிடத்தில் பொதிசோறு இருக்கிறது. அதனை உண்டு தண்ணீர் அருந்தும், இளைப்பாறும்' என்று கூறியளித்த பொதிசோற்றை அடியவர்களுடன் உண்டனர். அது எல்லாருக்கும் பயன்படும் முறையில் வளர்ந்தது. நீர் அருந்தினார். நம்பியாரூர் வேதியருடன் பேசிக்கொண்டே உறங்கினார். மற்றவர்களும் உறங்கினர். நம்பியாரூரர் உறங்கிப் பின் விழித்துப் பார்த்த போது வேதியரும், தண்ணீர்ப்பந்தரும்  இல்லாததைக் கண்டு பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன் புரா. 155-163)

பெரிய புராணப் பாடல் எண் : 155
மூவாத முழுமுதலார் முதற்கோலக்கா அகன்று,
தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு, தாழ்ந்து,இறைஞ்சி,
நாஆர்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார்.

         பொழிப்புரை : எக்காலத்தும் மூப்படையாத முழுமுதல்வராய சிவபெருமான் அமர்ந்த முதன்மையான அத்திருக்கோலக்காவை நீங்கிக் குறைவிலாத புகழுடைய சீகாழி நகரையும் வலங்கொண்டு, விழுந்து வணங்கி, அங்குத் தோன்றிய நாவார்ந்த முத்தமிழில் வல்லுனரான திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அப்பால் சென்று, பகைவர்களாகிய முப்புரத்தவரை எரித்த பெருமானது திருக்குருகாவூரை அணைவார்,


பெ. பு. பாடல் எண் : 156
உண்ணீரின் வேட்கையுடன், உறுபசியால் மிகவருந்தி,
பண்நீர்மை மொழிப்பரவையார் கொழுநர் வரும்பாங்கர்,
கண்நீடு திருநுதலார், காதல்அவர் கருத்துஅறிந்து,
தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவழிச் சார்கின்றார்.

         பொழிப்புரை : உண்ணும் வேட்கையோடு தமக்குற்ற பசியாலும் மிகவும் வருந்திப் பண்ணிசை போல இனிமையாகப் பேசும் பரவையாரின் கணவரான நம்பியாரூரர் வரும் அமையத்தில், நீண்ட கண்ணை நெற்றியில் கொண்ட சிவபெருமான், தம் அன்பர்பால் உற்ற அன்பு சிறந்திட. அவர்தம் வேட்கையை அறிந்து, தண்ணீரும் பொதிசோறும் திருக்கையில் கொண்டு அவர் வரும் வழியாகத் தாமும் சேர்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 157
வேனில்உறு வெயில்வெம்மை தணிப்பதற்கு, விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும் பந்தர்ஒரு பால்அமைத்தே,
ஆனமறை வேதியராய் அருள்வேடம் கொண்டு இருந்தார்,
மான்அமரும் திருக்கரத்தார் வன்தொண்டர் தமைப்பார்த்து.

         பொழிப்புரை : வேனிற்காலத்து வெயிலின் வெப்பத்தை நீக்குதற்காக, நறுமணம் மிக்க குளிர்ந்த மெல்லிய பாலின் சுவையையுடைய செங்கழுநீர் மலர்கள் நிறைந்த குளம்போலும் குளிர்ந்த தண்ணீர்ப் பந்தரை ஒருமருங்கு அமைத்து, மான் ஏந்திய கையுடன் விளங்கும் இறைவர், தாம் ஒரு மறைபயின்ற அந்தணராய் அருள் வேடங் கொண்டு, நம்பியாரூரர் வரும் வழியைப் பார்த்திருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 158
குருகாவூர் அமர்ந்துஅருளும் குழகர்வழி பார்த்துஇருப்ப,
திருவாரூர்த் தம்பிரான் தோழர்திருத் தொண்டருடன்
வருவார்,அப் பந்தர்இடைப் புகுந்து, திரு மறையவர்பால்
பெருகுஆர்வம் செலஇருந்தார் "சிவாயநம" எனப்பேசி.

         பொழிப்புரை : திருக்குருகாவூர் அமர்ந்தருளும் மிக இளையவராகிய பெருமான், அவர் வரும் வழியைப் பார்த்திருப்ப, திருவாரூரில் இருக்கும் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர், அடியவர்களுடன் அவ்வழி வருவார், அத்தண்ணீர்ப் பந்தரிடை வந்து, அங்கிருந்த அழகுடைய அந்தணர் பெருமான்பால் தம் கருத்துச் செல்லும்படி நோக்கிச் `சிவாயநம\' எனக் கூறி அமர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 159
ஆலநிழல் கீழ்இருந்தார், அவர்தம்மை எதிர்நோக்கி,
"சாலமிகப் பசித்தீர், இப் பொதிசோறு தருகின்றேன்,
காலம்இனித் தாழாமே கைக்கொண்டு,இங்கு இனிதுஅருந்தி,
ஏலநறும் குளிர்தண்ணீர் குடித்து, இளைப்புத் தீர"என.

         பொழிப்புரை : அதுபொழுது கல்லால மரத்தின் கீழிருந்தருளும் இறைவர் அவரைப் பார்த்து, `நீர் மிகவும் பசித்திருக்கின்றீர்' என்னிடமுள்ள இப்பொதி சோற்றினைத் தருகின்றேன், காலந் தாழ்த்தலின்றி இதனை இனிதுண்டு, மணம்மிக்க குளிர்ந்த தண்ணீரும் பருகி, இளைப்புத் தீரும்\' என்னலும்,


பெ. பு. பாடல் எண் : 160
வன்தொண்டர் அதுகேட்டு, மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக்கு எதிர்விலக்கல் ஆகாது என்று இசைந்து, அருளிப்
பொன் தயங்கு நூல்மார்பர் தரும் பொதிசோறு அதுவாங்கிச்
சென்று, திருத் தொண்டருடன் திருஅமுது செய்துஅருளி.

         பொழிப்புரை : அதுகேட்ட வன்தொண்டர்,`இம்மறை முனிவர் தரும் பொதிசோற்றை மறுத்தல் தகாது\' என்று எண்ணி, அதற்கு இசைந்து பொன்னனைய நூல் அணிந்த மார்பையுடைய அவ்வந்தணர் கொடுக்கும் பொதிசோற்றினை வாங்கிச் சென்று, அடியவர்களு டன் திருவமுது செய்தருள,


பெ. பு. பாடல் எண் : 161
எண்இறந்த பரிசனங்கள் எல்லாரும் இனிதுஅருந்தப்
பண்ணியபின், அம்மருங்கு பசித்துஅணைந்தார்களும்அருந்த
உள்நிறைந்த ஆர்அமுதாய், ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம்அளித்த பொதிசோறு பொலிந்ததால்.

         பொழிப்புரை : தம்முடன் வந்த எண்ணற்ற ஏவலர் முதலிய அனைவரையும் இனிது உண்ணச் செய்து, பின் அதன் அயலே பசித்து அணைந்தார்களும் அருந்திட, உள்ளத்து நிறைந்த அரிய அமுதாகி, ஒரு காலமும் குறைவிலாது, புண்ணியப் பொருளாகும் அந்தணனார் கொடுத்த அப்பொதிசோறு பொலிந்தது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.


பெ. பு. பாடல் எண் : 162
சங்கரனார் திருவருள்போல் தண்ணீரின் சுவைஆர்ந்து,
பொங்கிவரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்துஏத்தி,
அங்குஅயர்வால் பள்ளி அமர்ந்து, அருகு அணைந்தார்களும் துயில,
கங்கைசடைக் கரந்தார், அப் பந்தரொடும் தாம் கரந்தார்.

         பொழிப்புரை : எண்ணற்ற உயிர்கட்கெல்லாம் இன்பம் தந்தருளும் இறைவனாரின் இன்னருள் என விளங்கும் தண்ணீரினையும் குடித்துத் திளைத்து, உள்ளத்துப் பொங்கி வரும் மீதூர்ந்த அன்பால் பெரு மானின் திருப்பெயராய திருவைந்தெழுத்தைப் புகழ்ந்து போற்றி, அவ்விடத்து அமுதுண்ட களைப்பால் துயில்கொள்ள, அவருடன் அருகில் இருந்தவர் தாமும் உறங்கிட, கங்கையாற்றைச் சடைமீது மறைத்திருக்கும் சிவபெருமான் தாமும் தம் தோற்றத்தைத் தண்ணீர்ப் பந்தருடன் மறைந்து அருளினார்.


பெ. பு. பாடல் எண் : 163
சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினில்பள்ளி உணர்ந்து, அவரைக் காணாமை,
"இத்தனை ஆமாற்றை அறிந்திலேன்" எனஎடுத்து,
மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றுஅடைந்தார்.

         பொழிப்புரை : சிவபெருமானிடத்து வைத்த சித்தநிலை மாறாத திருநாவலூரின் அருள் அரசரான சுந்தரர், அவ்வளவில் விழித்துத் தமக்குப் பொதிசோறு கொடுத்து அருளிய அந்தணர் பெருமானைக் காணாது, அது இறைவன் செயலாக இருந்தமையுணர்ந்து, `இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்\' எனப் பாட எடுத்து மெய்ம்மை விளங்கிய அத்திருப்பதிகத்தைப் பாடியவாறே திருக்குருகாவூரினைச் சென்று அடைந்தார்.

         குறிப்புரை : `இத்தனை யாமாற்றை' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.29) `ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்' `பாடுவார் பசி தீர்ப்பாய்' என இப்பதிகத்து வரும் தொடர்கள், இவ்வரலாற்றுக்கு அரணாகின்றன.


பெ. பு. பாடல் எண் : 164
குருகாவூர் அமர்ந்துஅருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகுஆர்பொன் கோபுரத்தை அணைந்து,இறைஞ்சி, உள்புக்கு,
வருகாதல் கூரவலம் கொண்டு,திரு முன்வணங்கி,
பருகாஇன் அமுதத்தைக் கண்களால் பருகினார்.

         பொழிப்புரை : திருக்குருகாவூரில் அமர்ந்தருளும் பெருமானின் திருக்கோயிலுக்கு அருகே சென்று பொற்கோபுரத்தை வணங்கி, உட்புகுந்து உள்ளத்தெழுகின்ற காதல் பெருக, வலங்கொண்டு, திருமுன்பு வணங்கி, பருகத் தெவிட்டாத இன்னமுதான பெருமானைத் தம் கண்களால் கண்டு மகிழ்ந்தார்.


7. 029   திருக்குருகாவூர் வெள்ளடை      பண் - நட்டராகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
இத்தனை ஆம்ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான்,
பித்தனே என்றுஉன்னைப் பேசுவார் பிறர்எல்லாம்,
முத்தினை, மணிதன்னை, மாணிக்கம் முளைத்துஎழுந்த
வித்தனே, குருகாவூர் வெள்ளடை நீஅன்றே.

         பொழிப்புரை : எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன்; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை,`பித்தன்` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ!


பாடல் எண் : 2
ஆவியைப் போகாமே தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்,
வாவியில் கயல்பாயக் குளத்துஇடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீஅன்றே.

         பொழிப்புரை : வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் !


பாடல் எண் : 3
பாடுவார் பசிதீர்ப்பாய், பரவுவார் பிணிகளைவாய்,
ஓடுநன் கலனாக உண்பலிக்கு உழல்வானே,
காடுநல் இடமாகக் கடுஇருள் நடம்ஆடும்
வேடனே, குருகாவூர் வெள்ளடை நீஅன்றே.

         பொழிப்புரை : தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ!


பாடல் எண் : 4
வெப்பொடு பிணிஎல்லாம் தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்
ஒப்புஉடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீஅன்றே.

         பொழிப்புரை : ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் !


பாடல் எண் : 5
வரும்பழி வாராமே தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்,
சுரும்புஉடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றானே,
அரும்புஉடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

         பொழிப்புரை : வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் !


பாடல் எண் : 6
பண்இடைத் தமிழ்ஒப்பாய், பழத்தினிற் சுவைஒப்பாய்,
கண்இடை மணிஒப்பாய், கடுஇருள் சுடர்ஒப்பாய்,
மண்இடை அடியார்கள் மனத்துஇடர் வாராமே
விண்இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

         பொழிப்புரை : திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ !


பாடல் எண் : 7
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்துஎன்னை
நோந்தனை செய்தாலும் நுன்அலது அறியேன்நான்,
சாந்தனை வருமேலும் தவிர்த்துஎன்னை ஆட்கொண்ட
வேந்தனே, குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

         பொழிப்புரை : இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் .


பாடல் எண் : 8
மலக்குஇல்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்,
சலச்சல மிடுக்குஉடைய தருமனார் தமர்என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந்துயர் வாராமே
விலக்குவாய், குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

         பொழிப்புரை : அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !


பாடல் எண் : 9
படுவிப்பாய் உனக்கேஆள், பலரையும் பணியாமே
தொடுவிப்பாய், துகிலொடுபொன் தோல்உடுத்து உழல்வானே,
கெடுவிப்பாய் அல்லாதார், கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.

         பொழிப்புரை : திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ !


பாடல் எண் : 10
வளங்கனி பொழில்மல்கு வயல்அணிந்து அழகாய
விளங்குஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவள்அப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட்கு உரைஆமே.

         பொழிப்புரை : வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...