சீர்காழி - 1


சீர்காழி

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில் சீர்காழி நிலையத்திலிருந்து 1.5-கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்து பாதையில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி வெகுவாக உள்ளன. 

இறைவர்      : பிரமபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்

இறைவி      : பெரிய நாயகி, திருநிலைநாயகி

தல மரம்       : பாரிஜாதம்

தீர்த்தம்        : பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூலதீர்த்தம், ஆனந்த தீர்த்தம்வைணவ தீர்த்தம்,                                   இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம்,                                    அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம்,                       சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம்அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி,                         கழுமல நதி, விநாயக நதி முதலிய   22 தீர்த்தங்கள்.


தேவாரப் பாடல்கள்  : திருஞானசம்பந்தர்: -
                                                                        பிரமபுரம்
                                                                        1. தோடுடைய செவியன்,
                                                                        2. எம்பிரான் எனக்கமுத,
                                                                        3. கறையணி வேலிலர்,
                                                                        4. கரமுனம் மலராற்,
                                                                        5. இறையவன் ஈசன்

                                                                        திருவேணுபுரம்
                                                                        1. வண்டார்குழலரிவை,
                                                                        2. நிலவும் புனலும்,
                                                                        3. பூதத்தின் படையீனீர்

                                                                        திருப்புகலி
                                                                        1. விதியாய் விளைவாய்,
                                                                        2. ஆடல் அரவசைத்தான்,
                                                                        3. உகலி யாழ்கட,
                                                                        4. முன்னிய கலைப்பொருளும்,
                                                                        5. உருவார்ந்த மெல்லியாலோர்,
                                                                        6. விடையதேறி வெறி,
                                                                        7. இயலிசையெனும்,
                                                                        8. கண்ணுதலானும்வெண்,
                                                                        9. மைம்மருபூங்குழல்

                                                                        திருவெங்குரு
                                                                        1. காலைநன் மாமலர்,
                                                                        2. விண்ணவர் தொழுதெழு

                                                                        திருத் தோணிபுரம்
                                                                        1. வண்டரங்கப் புனற்கமல,
                                                                        2. சங்கமரு முன்கைமட,
                                                                        3. கரும்பமர் வில்லியைக்

                                                           
                                                            திருப்பூந்தராய்
                                                                        1. செந்நெலங்கழனி,
                                                                        2. பந்துசேர்விரலாள்,
                                                                        3. தக்கன் வேள்வி,
                                                                        4. மின்னன எயிறுடை

                                                                        திருச்சிரபுரம்
                                                                        1. பல்லடைந்த வெண்டலை,
                                                                        2. வாருறு வனமுலை,
                                                                        3. அன்னமென்னடை அரிவை

                                                                        திருப்புறவம்
                                                                        1. நறவ நிறைவண்டறைதார்,
                                                                        2. எய்யாவென்றித் தானவ,
                                                                        3. பெண்ணியலுருவினர்

                                                                        திருச்சண்பைநகர்
                                                                        1. பங்கமேறு மதிசேர்,
                                                                        2. எந்தமது சிந்தைபிரியாத

                                                                       
                                                            சீர்காழி
                                                                        1. பூவார் கொன்றைப்,
                                                                        2. அடலேறமருங்,
                                                                        3. உரவார் கலையின்,
                                                                        4. நல்லார் தீமேவுந்,
                                                                        5. நல்லானை நான்மறை,
                                                                        6. பண்ணின்நேர்மொழி,
                                                                        7. நலங்கொள் முத்தும்,
                                                                        8. விண்ணியங்குமதிக்,
                                                                        9. பொங்குவெண்புரி,
                                                                        10. நம்பொருள்நம் மக்கள்,
                                                                        11. பொடியிலங்குந் திருமேனி,
                                                                        12. சந்தமார் முலையாள்,
                                                                        13. யாமாமாநீ யாமாமா

                                                                        திருக்கொச்சைவயம்
                                                                        1. நீலநன்மாமிடற்றன்,
                                                                        2. அறையும் பூம்புனலோடும்,
                                                                        3. திருந்துமா களிற்றிள

                                                                        திருக்கழுமலம்
                                                                        1. பிறையணி படர்சடை,
                                                                        2. அயிலுறு படையினர்,
                                                                        3. பந்தத்தால் வந்தெப்பால்,
                                                                        4. சேவுயருந் திண்கொடியான்,
                                                                        5. மண்ணில் நல்லவண்ணம்,
                                                                        6. மடல்மலிகொன்றை

                                                                        பல்பெயர்ப்பத்து
                                                                        1. எரியார்மழுவொன்றேந்தி,,
                                                                        2. அரனை உள்குவீர்,
                                                                        3. காடதணிகலங்கார,
                                                                        4. பிரமபுரத்துறை பெம்மா,
                                                                        5. ஒருருவாயினை,
                                                                        6. பிரமனூர் வேணுபுரம்,
                                                                        7. விளங்கியசீர்ப் பிரமனூர்,
                                                                        8. பூமகனூர்புத்தேளுக்,
                                                                        9. சுரருலகு நரர்கள்,
                                                                        10. வரமதேகொளா,
                                                                        11. உற்றுமை சேர்வது
                                                                        12. ஆரூர்தில்லை
                                                                        13. கல்லால் நீழல்
                                   
                                                அப்பர் :-   1. மாதியன்று மனைக்கிரு,
                                                                        2. பார்கொண்டு மூடிக்,
                                                                        3. படையார் மழுவொன்று

                                                சுந்தரர் :   சாதலும் பிறத்தலும்

தல வரலாறு

            திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த திருப்பதி. தோணியப்பர் அம்பிகையிடம் கூற, அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க,  அருந்தி ஆளுடைய பிள்ளையார் ஆன பதி.

            அவதாரத் தலம்      : சீர்காழி
            வழிபாடு                : இலிங்க வழிபாடு.
            முத்தித் தலம்         : நல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
            குருபூசை நாள்      : வைகாசி - மூலம்

            திருஞானசம்பந்தர் அவதரித்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது.

            பிரம தீர்த்தக் கரையில்தான் சம்பந்தர் பெருமான் ஞானப்பாலையுண்டார்.

            இக்கோயில் வளாகத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனித் திருக்கோயில் உள்ளது.

            இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு; அவை -

            பிரமபுரம் - பிரமன் வழிபட்டதால் இப்பெயர்.

            வேணுபுரம் - இறைவன் மூங்கில் வடிவில் (வேணு = மூங்கில்) தோன்றினான்.

            புகலி - சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.

            வெங்குரு - குரு பகவான் வழிபட்டது.

            தோணிபுரம் - பிரளயகாலத்தில் இப்பதி தோணியாய் மிதந்ததால் இப்பெயர். பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததாலும் இப்பெயர்.

            பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.

            சிரபுரம் - சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.

            புறவம் - புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.

            சண்பை - சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.

            சீகாளி (ஸ்ரீகாளி) - காளிதேவி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது.

            கொச்சைவயம் - மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது.

            கழுமலம் - மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.

            குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

            சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.

சிறப்புக்கள்

             "திருமுலைப்பால் உற்சவம்" இன்றும் சித்திரைப் பெருவிழாவில், இரண்டாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

            திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி.

            சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.

            திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.

            கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

            அவதாரத் தலம்      : சீர்காழி.
            வழிபாடு                : குரு வழிபாடு.
            முத்தித் தலம்         : சீர்காழி.
            குருபூசை நாள்       : பங்குனி - திருவாதிரை.

            ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார். அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப் பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப் பணி செய்வோர், மலர் பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கு அமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்று இவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத் தொண்டில் தேர்ந்த சரியையாளர்களையும் உருவாக்கினார்.

            இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் தொண்டு செய்தார். ஞானசம்பந்தப் பெருமானை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

            பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன.

            மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்து அடிகள் - (திருக்கழுமல மும்மணிக்கோவை), நம்பியாண்டார் நம்பிகள் - (ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை), அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் முதலியோர் சீர்காழியின் சிறப்பையும், திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் பாடிப் புகழ்ந்துள்ளனர்.

            சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார்.

            இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது.

            இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "அருகாத கார் காழ் இல் நெஞ்சக் கவுணியர்க்குப் போதம் அருள் சீர்காழி ஞானத் திரவியமே" என்று போற்றி உள்ளார்.


-----------------------------------------------------------------------------------------------------------

     தவமுதல்வராகிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்து, மீன்று வயது ஆகிய போது இறைவன் அருளால் ஞானப் பாலை உண்டது இந்த உலம் உய்யவே. அந்த அருள் மிகு வரலாற்றை, தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்காலேயே சிந்தித்து வழிபட்டு மகிழ்வோம்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 54
நாஆண்ட பலகலையும் நாமகளும் நலஞ்சிறப்ப,
பூஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவுஎய்த,
சேஆண்ட கொடியவர்தம் சிரபுரத்துச் சிறுவருக்கு,
மூஆண்டில் உலகு உய்ய, நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.

            குறிப்புரை :  நாவினால் ஓதிப் பயிலும் வேத முதலிய பல கலைகளும், நாவின் கிழத்தியாகிய கலைமகளும் சிறந்த நன்மை பெற்றோங்கவும்; பூவில் இருக்கும் திருமகளும் சிவ புண்ணியமும் பொலிவு பொருந்தவும்; இடபத்தைக் கொடியாகவுடைய சிவபெருமான் எழுந்தருளிய சிரபுரத்தில் அவதரித்த சிறுவராகிய பிள்ளையாருக்கு மூன்றாண்டுப் பருவத்தில் உலகமுய்ய நிகழ்ந்த அருட் செய்கையின் இனி மொழியப் புகுகின்றேன்.


பெ. பு. பாடல் எண் : 55
பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்துஅருளத்
தொண்டின்நிலை தரவருவார், தொடர்ந்தபிரிவு உணர்வுஒருகால்
கொண்டுஎழலும், வெருக்கொண்டால் போல்அழுவார் குறிப்புஅயலாய்.

            பொழிப்புரை : முன்னைய நிலையில் திருவடியை மறவாத பாங்கு உடையவரை, மிகுதவத்தோராய சிவபாத இருதயருக்கு இறைவன் தந்தருளினாராக, அதன்வழி வாய்த்த திருத்தொண்டின் நிலையை உலகத்துக்கு அருள்வதற்கெனத் தோன்றிய அப்பிள்ளையார், சிவபெருமானையே தொடர்ந்து நின்ற நிலை நீங்காது இருந்தமையின், பிரிந்து போந்த பிரிவுணர்வு ஓரொருகால் எழ, அதனால் அச்சம் கொண்டவரைப் போல் அயலான ஒரு குறிப்புடன் அழுவார்.


பெ. பு. பாடல் எண் : 56
மேதகைய இந்நாளில், வேறுஒருநாள், வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி முடிப்பதற்கு நீர்ஆட,
தாதையார் போம்பொழுது, தம்பெருமான் அருள்கூட,
சோதிமணி மனைமுன்றில் தொடர்ந்து அழுது பின்சென்றார்.

            பொழிப்புரை : மேதக்க நிலையில் வளர்ந்து வரும் இந்நாள்களில் ஒருநாள், மறைவழிப்பட்ட நெறியில் செயத்தகும் காலை வழிபாடுகளை முடிப்பதற்காக முதலில் நீராடும் பொருட்டுத் தந்தையார் புறப்படும் பொழுது, தம் பெருமானின் அருள்கூடப் பெறுதலால், திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில், பிள்ளையார் தாமும் தந்தையாரைத் தொடர்ந்து அழுதவாறு பின்சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 57
பின்சென்ற பிள்ளையார் தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனை ஒழிந்து, முனிவார்போல் விலக்குதலும்,
மின்செய்பொலம் கிண்கிணிக்கால் கொட்டி அவர் மீளாமை,
"உன்செய்கை இது ஆகில் போது"என்றுஅங்கு உடன்சென்றார்.

            பொழிப்புரை : தம் பின் தொடர்ந்து வந்த பிள்ளையாரைத் தந்தையாரான சிவபாத இருதயர் பார்த்து, தாம் மேற்செல்வதை நிறுத்திச் சினம் கொண்டவர் போல் காட்டி, தம் பின் வருவதை விலக்கவும், ஒளி மிக்க பொன்னால் ஆய சிறு கிண்கிணிகள் அணிந்த திருவடிகளை நிலத்தில் கொட்டி, மீளாது நிற்க, `உன் செயல் இதுவானால், வருக' எனக் கூறித் தம்முடனே அழைத்துச் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 58
கடையுகத்தில் தனிவெள்ளம் பலவிரிக்கும் கருப்பம்போல்
இடைஅறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்புஇடமாய்,
விடைஉயர்த்தார் திருத்தோணிப் பற்றுவிடா மேன்மையதாம்
தடம்அதனில், துறைஅணைந்தார் தருமத்தின் தலைநின்றார்.

            பொழிப்புரை : அறநெறியில் சிறந்த சிவபாத இருதயர், ஊழி முடிவில் தோன்றும் பெருவெள்ளங்கள் பலவற்றையும் தன்னிடத்தில் இருந்து விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்பம் போல், இடையறாது நிற்கும் பெரிய புனித நீர் நிலைகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாய், ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தோணிபுரத்தின் தொடர்ச்சியை நீங்காத மேலான நீர்நிலையின் துறையை அடைந்தார்.

  
பெ. பு. பாடல் எண் : 59
பிள்ளையார் தமைக்கரையில் வைத்து, தாம் பிரிவுஅஞ்சி,
தெள்ளுநீர்ப் புகமாட்டார், தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி, மணிவாவி
உள்இழிந்து புனல்புக்கார், உலகுஉய்ய மகப்பெற்றார்.

            பொழிப்புரை : உலகுய்ய மகப்பெற்ற சிவபாத இருதயர் பிள்ளையாரை அப்புனித நீர்க்கரையில் இருக்கச்செய்து, தாம் பிரிவதற்கு அஞ்சி, தெளியும் நீரில் நீராடமாட்டாதவராகிப் பின் திருநிலைநாயகி உடனாய திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் வள்ளலாரை முன் நின்று வணங்கிப் பின்பு அக்குளத்தில் இறங்கி நீராடச் சென்றார்.

  
பெ. பு. பாடல் எண் : 60
நீர்ஆடித் தருப்பித்து, நியமங்கள் பலசெய்வார்,
சீர்ஆடும் திருமகனார் காண்பதன்முன் செய்ததன்பின்,
ஆராத விருப்பினால் அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார், பெருங்காவல் பெற்றாராய்.

            பொழிப்புரை : நீரில் ஆடித் தருப்பணம் செய்து, பின் மறைவழிச் செயத்தகும் செயல்கள் பலவற்றையும் செய்பவரான சிவபாத இருதயர், பலரும் பாராட்டவுள்ள மகனார் தம்மைத் தேடிக் காண்பதற்கு முன்னம் அச்செயல்களை யெல்லாம் செய்து முடித்துப் பின், தம் மகனாருக்குத் தம்மை விடப் பெரிய காவல் பெற்றாராகி, அடங்காத விருப்பத்தால் அதன்பின் அகமருட ஸ்நாநம் செய்யும் பொருட்டுத் தாம் நின்ற இடத்தினின்றும் அடிபெயராது நீருள் மூழ்கினார்.


பெ. பு. பாடல் எண் : 61
மறைமுனிவர் மூழ்குதலும், மற்றுஅவர்தம் மைக்காணாது
இறைதறியார் எனும்நிலைமை தலைக்குஈடா, ஈசர்கழல்
முறைபுரிந்த முன்உணர்வு மூளஅழத் தொடங்கினார்,
நிறைபுனல் வாவிக் கரையில் நின்றுஅருளும் பிள்ளையார்.

            பொழிப்புரை : மறை முனிவராய சிவபாத இருதயர் நீருள் முழுகவும், அவரைக் கண்ணால் காணாமையால் சிறிது பொழுதும் தரித்திருக்க மாட்டார் என்ற காரணத்தைக் காட்டி, சிவபெருமானின் திருவடிகளை முறையாக இடைவிடாமல் எண்ணியிருந்த முன் நினைவு எழுந்ததால், நிறைந்த நீரையுடைய பொய்கைக் கரையில் நின்றிருந்த பிள்ளையார் அழத் தொடங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 62
கண்மலர்கள் நீர்ததும்ப, கைம்மலர்க ளால்பிசைந்து,
வண்ணமலர்ச் செங்கனிவாய் மணிஅதரம் புடைதுடிப்ப,
எண்ணில்மறை ஒலிபெருக, எவ்வுயிரும் குதூகலிப்ப,
புண்ணியக்கன்று அனையவர்தாம் பொருமி அழுது அருளினார்.

            பொழிப்புரை : கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயில் அழகிய உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லா உயிர்களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார்.


பெ. பு. பாடல் எண் : 63
மெய்ம்மேல்கண் துளிபனிப்ப, வேறுஎங்கும் பார்த்து அழுவார்,
தம்மேலைச் சார்புஉணர்ந்தோ? சாரும் பிள்ளைமை தானோ?
செம்மேனி வெண்நீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்து,
"அம்மே அப்பா" என்று என்று அழைத்துஅருளி அழுது அருள.

            பொழிப்புரை : தம் திருமேனியின் மீது கண்ணீர்த் துளிகள் வீழ, தம்மைச் சூழவுள்ள இடங்களையெல்லாம் பார்த்து அழும் பிள்ளையார், தம் முன்னைச் சார்பை உணர்ந்தமையாலோ அல்லது அது பொழுது இருந்த பிள்ளைமைச் சார்பாலோ, அறியோம். செம்மேனியில் வெண்ணீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தோணிபுரத்தின் சிகரத்தைப் பார்த்து `அம்மே! அப்பா!' என்று அழுதருளியவாறே அழைத்தருளினாராக,


பெ. பு. பாடல் எண் : 64
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்நோக்கால்,
முன்நிலைமைத் திருத்தொண்டு முன்னிஅவர்க்கு அருள்புரிவான்,
பொன்மலைவல் லியும்தாமும் பொருவிடைமேல் எழுந்தருளி,
சென்னிஇளம் பிறைதிகழச் செழும்பொய்கை மருங்குஅணைந்தார்.

            பொழிப்புரை : அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் நோக்கம் செய்தலால், முன்னை நிலையை நினைந்த அவருக்கு அருள்செய்யும் பொருட்டாக, பொன்மலை வல்லியான திருநிலைநாயகி அம்மையாரும் தாமும், பொருந்துதற்குரிய விடையின் மேல் இவர்ந்தருளி, தலையில் சூடிய இளம்பிறை விளங்கித் தோன்ற, செழுமையான அப்பொய்கையின் அருகில் அடைந்தருளினார்.

  
பெ. பு. பாடல் எண் : 65
திருமறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோ,தான் தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானம் கொடுப்பதனுக்கு, உடன்இருந்த
அருமறைஆள் உடையவளை அளித்து அருள, அருள்செய்வார்.

            பொழிப்புரை : நான்மறைகளில் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும் அவருடைய மனைவியாரான பகவதியாருக்கும், தாம் முன் வழங்கியருளிய பெருவரத்தை நிறைவு செய்ய எண்ணியதனால் போலும், தம் பெருமையுடைய திருவடிகளையே போற்றுகின்ற ஒருமையான நெறியில் நிற்க வரும் சிவஞானத்தைக் கொடுப்பதற்காகத் தம்முடன் இருந்த, அரிய மறைகளையே தம் வடிவமாகக் கொண்டு உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற ஞானமுதல்வியாரான திருநிலைநாயகி அம்மையாரை அளித்தருளுமாறு அருள் செய்வாராகி,


பெ. பு. பாடல் எண் : 66
அழுகின்ற பிள்ளையார் தமைநோக்கி, அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்தாம், எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்துஅருளி, "துணைமுலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன்வள்ளத்து ஊட்டு" என்ன.

            பொழிப்புரை : அழுகின்ற பிள்ளையாரைப் பார்த்து, திருவருட் கருணை பொழியும் உள்ளம் கொண்டவராய சிவபெருமான், எவ்வுலகும் தொழநிற்கும் கொடிபோன்ற திருநிலைநாயகி அம்மையாரைப் பார்த்தருளி, `இரு மார்பகங்களிலிருந்தும் பொழியும் பாலைப் பொற்கிண்ணத்தில் ஏற்று இப் பிள்ளைக்கு ஊட்டுக!' என்று அருளிச் செய்ய,


பெ. பு. பாடல் எண் : 67
ஆரணமும் உலகுஏழும் ஈன்றுஅருளி, அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு கருணைதிரு வடிவான
சீர்அணங்கு, சிவபெருமான் அருளுதலும் சென்று, அணைந்து,
வார்இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்துஅருளி.

            பொழிப்புரை : மேற் சொன்னவாறு பெருமான் கூறியருளவும், மறைகளையும் ஏழுலகங்களையும் பெற்றருளி எப்பொருளுக்கும் மூலகாரணமாய் நிற்பவரும், வளம் பெருகும் கருணையே தம் வடிவமாய்க் கொண்டவருமான சிறப்புடைய திருநிலைநாயகி அம்மையார், பிள்ளையார் அருகில் சென்று, கச்சணிந்த தம் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளி,

            குறிப்புரை : அம்மையார் உண்ணாமுலையார் ஆதலின், `பாலடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன' இறைவனும் அருள் செய்தார்; அம்மையாரும் அவ்வாறே செய்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 68
எண்அரிய சிவஞானத்து இன்அமுதம் குழைத்து அருளி
"உண்அடிசில்" என ஊட்ட, உமை அம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்துஅருளி, கையிற்பொன் கிண்ணம் அளித்து ,
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

            பொழிப்புரை : திருநிலைநாயகி அம்மையார், நினைத்தற்கு அரிய சிவஞானமாய இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளி, தம்மை நோக்கி நிற்கும் பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளி, `பாலமுதத்தை உண்பாயாக!\' என்று உண்ணச் செய்ய, பெருமையுடைய பிள்ளையாரை அங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 69
யாவருக்கும் தந்தைதாய் எனும்இவர்இப் படிஅளித்தார்
ஆவதனால், ஆளுடைய பிள்ளையாராய், அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருள்ஆகும்
தாஇல்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்.

            பொழிப்புரை : எவ்வுயிர்க்கும் தந்தையும் தாயுமாக விளங்கும் அம்மையப்பர் வெளிப்பட்டுத் தாமே இவ்வாறு அளித்தமையின், `ஆளுடைய பிள்ளையார்\' என்னும் திருப்பெயரை உடையவராகி தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் தெளிந்து அறிய இயலாத, மெய்ப்பொருளாகிய, எக்காலத்தும் கெடுதல் இல்லாத, ஒப்பில்லாத சிவத்தை உணரும் நிலையாய சிவஞானத்தை உணர்ந்து வாழும் அருள் பெற்றவராய நிலையில், சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயரை உடையவராயினார்.


பெ. பு. பாடல் எண் : 70
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவம்அதனை அறமாற்றும்  பாங்கினில்ஓங் கியஞானம்,
உவமைஇலாக் கலைஞானம், உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்.

            பொழிப்புரை : சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து நிற்குமாற்றான் சிவமாந்தன்மை பெருகச் செய்யும் ஒப்பில்லாத கலை ஞானத்தையும், பிறவிக்குக் காரணமாய மலக்குற்றத்தை வாராமல் தடுக்கும் மேலாய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் தவ முதல்வரான சிவஞானசம்பந்தர் அந்நிலையில் உணர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 71
'எப்பொருளும் ஆக்குவான் ஈசனே' எனும்உணர்வும்
'அப்பொருள்தான் ஆள்உடையார் அடியார்கள்' எனும் அறிவும்
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவு இல்லார் துணிவு துகள்ஆகச் சூழந்து எழுந்தார்.

            பொழிப்புரை : எப்பொருள்களையும் இயக்குபவன் ஈசனே என்னும் உணர்வும், அப்பொருளாவது ஆளுடையாரும் அவருடைய அடியார்களும் ஆவர் என்ற அறிவும் இன்றித் தத்தம் அறிவிற்கு ஏற்றவாறு எண்ணி இயல்கின்ற தூய்மையில்லாதவரின் துணிவுகளை எல்லாம் தூளாகுமாறு எண்ணி எழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 72
சீர்மறையோர் சிவபாத இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவி, தாம்செய்யும் நியமங்கள் முடித்துஏறி,
பேர்உணர்வில் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி,
"யார்அளித்த பால்அடிசில் உண்டதுநீ" எனவெகுளா.

            பொழிப்புரை : சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் நீராடித் தாம் செய்யும் கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, கரையில் ஏறிப் பேருணர்வில் விளங்கும் தம் மகனாரைப் பார்த்து `நீ யார் தந்த பாலை உண்டாய்\' எனச் சினக்க,


பெ. பு. பாடல் எண் : 73
"எச்சில்மயங் கிடஉனக்கு ஈதுஇட்டாரைக் காட்டு"என்று
கைச்சிறியது ஒருமாறு கொண்டுஓச்ச, கால் எடுத்தே
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளிபெய்து,
உச்சியின் மேல் எடுத்துஅருளும் ஒருதிருக்கை விரல்சுட்டி.

            பொழிப்புரை : `எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்தவரை எனக்குக் காட்டு' எனச் சிவபாத இருதயர் உரைத்துச் சிறிய ஒரு கோலைக் கையில் எடுத்து அடிப்பவரைப் போல் ஓச்சிட, அச்சிறிய பெருந்தகையாரான பிள்ளையாரும், ஒருகாலை எடுத்து நின்று கண்களினின்றும் இன்பவெள்ளம் பொழிய உச்சிமேல் தூக்கிய திருக்கையில் ஒருவிரலால் சுட்டிக் காட்டி,


பெ. பு. பாடல் எண் : 74
விண்நிறைந்த பெருகொளியால் விளங்குமழ விடைமேலே
பண்நிறைந்த அருமறைகள் பணிந்துஏத்தப் பாவையுடன்
எண்நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர்காட்டி,
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர்ஞானத் திருமொழியால்.

            பொழிப்புரை : விண்ணில் நிறைந்து பெருகும் ஞானஒளி கொண்டு, ஆனேற்றின்மீது, பண்சுமந்த அரிய மறைகள் வணங்கிப் போற்ற, உமையம்மையாருடன் எண்ணிறந்த கருணைப் பெருக்கால் எழுந்தருளி நிற்கும் திருத்தோணிபுரத்து இறைவரை எதிரே காட்டி, உள் நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக்கினால்,


பெ. பு. பாடல் எண் : 75
எல்லைஇலா மறைமுதல் மெய் உடன் எடுத்த எழுதுமறை
மல்லல்நெடும் தமிழால்இம் மாநிலத்தோர்க்கு உரைசிறப்பப்
பல்உயிரும் களிகூரத் தம்பாடல் பரமர்பால்
செல்லும்முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து.

            பொழிப்புரை : எண்ணிறந்த மறைகளின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் மறையை, வளம் வாய்ந்த நெடுந் தமிழால் இப்பேருலகில் உள்ளவர்க்கு உரை சிறந்து பயனளிக்க, பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய்த் திருச்செவியைச் சிறப்பித்து,


பெ. பு. பாடல் எண் : 76
செம்மைபெற எடுத்த திருத் "தோடுஉடைய செவியன்" எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை, அடையாளங்கள் உடன் சாற்றி, தாதையார்க்கு,
"எம்மை இது செய்தபிரான் இவன் அன்றே" எனஇசைத்தார்.

            பொழிப்புரை : செம்மை பொருந்தும்படி தொடங்கிய, `தோடுடைய செவியன்' என்ற மெய்ம்மொழியான திருப்பதிகத்தில், திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அடையாளங்களுடன் சொல்லி `எம்மை இது செய்தவன் இப்பெருமான் அன்றே' (தி.1 ப.1) என்று தந்தையாருக்குக் கூறியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 77
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்துஅடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணம்இலா வல்அரக்கன் எடுத்துமுறிந்து இசைபாட
அண்ணல்அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார்.

            பொழிப்புரை : இம்மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் பிழையைச் செய்தாலும், அவை தம்மை வந்து அடையின் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தம் பெருங்கருணையினால் அவற்றை மன்னித்தருளிக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்டவே, நல்லுணர்வு இல்லாதவன் ஆன வன்கண்மையுடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுக்க, உடல் முறிவுபட்டுப் பின் இசையைப் பாடப் பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள்செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார்.

            குறிப்புரை : பதிகந்தொறும் வரும் எட்டாவது பாடலில் இறைவன் இராவணனுக்குச் செய்த அருளிப்பாட்டைக் குறிப்பிடுவர் பிள்ளையார். இதற்குக் காரணம் தவறு செய்த உயிர்கள் உண்மையிலேயே அத்தவறை உணர்ந்து, தவறு செய்தமைக்குப் பொறுத்தற்கும், இனித் தவறு செய்யாமைக்கு உறுதிப்பாடும் கொண்டு இறைவனை உள்ளன்போடு வேண்டின், இறைவன் மன்னித்தருளுவன் என்பதை நன்குணர்வாம். எனவே பாவமன்னிப்பு என்பது நம்நெறிக்கு இன்று நேற்றன்று தோற்றமில் காலத்தேயே உண்டு எனினும், பிறபிற மதம் போல அத்துணை எளிமையுடையதன்று. `எற்றென்று இரங்குவ செய்யற்க, செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று\' (குறள், 655) என்பதே நம் அறமாம்.


பெ. பு. பாடல் எண் : 78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுஆன மனத்தாலே மால்ஆய மால் அயனும்
இழிவுஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படிவிரித்தார்.

            பொழிப்புரை : தம்மை வணங்குபவருக்கே அருளுவர் இறைவர் என்பதைத் தெரிந்து கொண்டும் தொழாதவராகி, தவறான மனத்தால் மயக்கம் கொண்ட மாலும் அயனும், இழிந்த பன்றியும் அன்னப் பறவையுமாய்க் கீழும் மேலும் போய்க் காணமாட்டாமல் விழுவார்களாய்ப் பின்னர் திருவைந்தெழுத்தைப் போற்றி உய்தி பெற்றமையை மேலே விரிவாய் எடுத்து உரைத்தார்.

            குறிப்புரை : இது பதிகந்தொறும் வரும் ஒன்பதாவது பாடலின் கருத்தாகும். வழுவான மனம் - யான் காண்பேன் என முனைப்புடன் சென்ற மனம். உயிர்கள் இவ் அநுபவத்தைக் கருதி, யான் எனது என்னும் செருக்கற வேண்டும் என்பதே இப்பாடற் கருத்தாகும்.

யான்செய்தேன், பிறர்செய்தார், ன்னத், யான் என்னும்
     இக்கோணை ஞான எரியால் வெதுப்பி, நிமிர்த்துத்
தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
            தனை அளித்து முன்னிற்கும் வினை ஒழித்திட்டோடும்
நான்செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி
            நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்
            ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே.

-சித்தி. பத்தாம் சூத்.2 எனவரும் சித்தியார் கூற்றும் காண்க.


பெ. பு. பாடல் எண் : 79
வேதகா ரணர்ஆய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம்கொள்ளும்
போதம்இலாச் சமண்கையர் புத்தர்வழி பழிஆக்கும்
ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்.

            பொழிப்புரை : மறைகளை அருளிய முன்னவரான பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் நெறியை, அறிந்து அடைந்து உய்தி பெறாதவரான புறச் சமயத்தாருள், நன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் ஆன இவர்களின் நெறிகள் பழியை விளைக்கும் கேடுகளே ஆம் என எம்பெருமானாகிய ஞானசம்பந்தர் மொழிந்தருளினார்.

            குறிப்புரை : இது பதிகந்தொறும் வரும் பத்தாம் பாடற்கருத்தாகும். `பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே' (சிவஞா. சித்தி. சூ.3 பா.90) எனவரும் ஞானநூற் பொருளைத் தெரிந்து தெளிந்து கடைப்பிடித்தல் கடனாம்.


பெ. பு. பாடல் எண் : 80
திருப்பதிகம் நிறைவித்து, திருக்கடைக்காப் புச்சாத்தி,
இருக்குமொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள,
அருட்கருணைத் திருவாள னார்அருள்கண்டு, அமரர் எலாம்
பெருக்கவிசும் பினில் ஆர்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.

            பொழிப்புரை : திருப்பதிகத்தை நிறைவாகப் பாடித் திருக்கடைக் காப்பையும் அருளிய மறைமொழியையுடைய பிள்ளையார் இறைவனைத் தொழுது நின்றாராக, அருட் கருணையுடைய சிவபெருமானின் நிறைந்த அருளைக் கண்டு, தேவர்கள் விரிந்த விண்ணில் மகிழ்வொலி எழுப்பித் தேனைச் சொரியும் தெய்வ மலர்களை மழையாய்ப் பொழிந்தனர்.

            குறிப்புரை : இறைவன் அருளியது திருமறையாதல் போலப் பிள்ளையார் அருளியதும் மறைமொழியேயாம். பதிகம் நிறைவு பெற்றதும், அதனை முடித்துக் காட்டும் வகையில், தமது பெயர், பதிகப் பயன் முதலியவற்றைத் தம் இலச்சினையாகக் கூறியருளும் பாடல் திருக்கடைக்காப்பாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.001 திருப்பிரமபுரம்                                பண் - நட்டபாடை
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தோடுஉடையசெவி யன்,விடைஏறி,ஓர் தூவெண்மதிசூடிக்
காடுஉடையசுட லைப்பொடிபூசி,என் உள்ளம்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந்து ஏத்த,அருள்செய்த
பீடுஉடையபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை : தோடு அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 2
முற்றல்ஆமை,இள நாகமோடு, ஏன  முளைக்கொம்புஅவைபூண்டு
வற்றல்ஓடுகல னாப்பலிதேர்ந்து,எனது உள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டல்உடை யார்பெரியார்கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரமேவிய பெம்மான் இவன்அன்றே.

            பொழிப்புரை :வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!


பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேல்ஓர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோர,என் உள்ளம்கவர்கள்வன்
ஊர்பரந்தஉல கின்முதல்ஆகிய ஓர்ஊர்இதுஎன்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை :கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!


பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி, விளங்குதலைஓட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்துஎனது உள்ளம்கவர்கள்வன்,
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே..

            பொழிப்புரை :வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 5
ஒருமைபெண்மைஉடை யன், சடையன், விடை ஊரும்இவன்என்ன
அருமையாகஉரை செய்யஅமர்ந்து,எனது உள்ளம்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததுஓர் காலம்இதுஎன்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே..

            பொழிப்புரை :ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.


பாடல் எண் : 6
மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர் ஆகி,மழுஏந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோர,என்    உள்ளம்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுஉயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே

            பொழிப்புரை :ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
  

பாடல் எண் : 7
சடைமுயங்குபுனலன், அனலன், எரி வீசிச்சதிர்வுஎய்த
உடைமுயங்கும்அர வோடுஉழிதந்து, எனது உள்ளம்கவர்கள்வன்,
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ் சிறகுஅன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை :சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 8
வியர்இலங்குவரை உந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயர்இலங்கைஅரை யன்வலிசெற்று, எனதுஉள்ளம்கவர் கள்வன்,
துயர்இலங்கும் உலகில் பலஊழிகள் தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்இலங்குபிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை :கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 9
தாள்நுதல்செய்துஇறை காணியமாலொடு தண்தாமரையானும்
நீணுதல்செய்துஒழி யந்நிமிர்ந்தான், எனது உள்ளம்கவர் கள்வன்,
வாள்நுதல்செய்மக ளீர்முதல்ஆகிய வையத்தவர்ஏத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை :திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 10
புத்தரோடுபொறி இல்சமணும்புறம் கூற,நெறிநில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்துஎனது உள்ளம்தகவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததுஓர் மாயம்இதுஎன்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மான்இவன்அன்றே.

            பொழிப்புரை :புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மான், இவன்தன்னை
ஒருநெறியமனம் வைத்துஉணர்ஞானசம் பந்தன்உரைசெய்த,
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

            பொழிப்புரை :அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                           
                                                            திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 81
வந்துஎழும்மங் கலமான வானதுந் துபிமுழக்கும்,
கந்தருவர் கின்னரர்கள் கானவொலிக் கடல்முழக்கும்,
இந்திரனே முதல்தேவர் எடுத்துஏத்தும் இசைமுழக்கும்,
அந்தம்இல்பல் கணநாதர் அரஎனும் ஓசையின்அடங்க.

            பொழிப்புரை : அழிவற்ற சிவகணநாதர்கள் பலர் முழக்கும் `அரகர' என்ற ஓசையுள் அடங்குமாறு, மங்கலமான தேவமுழக்கும், கந்தருவர், கின்னரர் முதலான தேவ இனத்தாரின் கடல் போன்று முழங்கும் ஒலியும், இந்திரன் முதலிய தேவர்கள் எடுத்துப் போற்றும் இசைகளின் ஒலியும் ஆகிய இத்தகைய ஒலிகளின் தொகுதி இது பொழுது ஒலிப்பதாயின.


பெ. பு. பாடல் எண் : 82
மறைகள் கிளர்ந்துஒலி வளர முழங்கிட, வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி சிந்திட, நீள்வானத்து
உறைஎன வந்துஉலகு அடைய நிறைந்திட, ஓவாமெய்ப்
பொறை பெருகும் தவ முனிவர் எனுங்கடல் புடைசூழ.

            பொழிப்புரை : மறைகள் எழுந்து ஒலிபெருக முழங்கவும், தேவர் களின் நிறைந்த தலையணிகள் (கிரீடங்கள்) ஒன்றுடன் ஒன்று நெருக் குண்டு நிரல்பட அமைந்த மணிகள் சிதற, அவை நீண்ட வானத்தினின் றும் விழும் பனிநீர்த் துளிகள் போல் வந்து உலகெங்கும் நிறையவும், இடையறாது மெய்ம்மைக்கண் நிற்றலும் அமைதி பெருகவும் வாழும் தவமுனிவர்களின் கூட்டமாகிய கடல் இருமருங்கும் சூழவும்,

  
பெ. பு. பாடல் எண் : 83
அணைவுற வந்துஎழும் அறிவு தொடங்கின அடியார்பால்,
இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட, இருதாளின்
புணைஅருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர்பாகத்
துணையொடு அணைந்தனர், சுருதி தொடர்ந்த பெருந்தோணி.

            பொழிப்புரை : தம்மை வந்து அடையும் பக்குவமும் பத்திமையும் உடைய அடியவரிடத்தினின்றும் ஒப்பில்லாத வலிமையுடைய பிறவியாகிய பெருங்கடல்கள் நீங்குமாறு தம் இரு திருவடிகளான இனிய புணையை அருளும் கருணையுடைய திருத்தோணியப்பர், போர் செய்தற்குரிய வலிமையுற்ற ஆனேற்றின் மேல் தம்முடன் அமர்ந்தருளும் துணைவியாருடனே, மறைகள் தொடர்ந்து முழங்கும் திருத்தோணிச் சிகரத்திற்கு எழுந்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 84
அண்ணல் அணைந்தமை கண்டு, தொடர்ந்துஎழும் அன்பாலே,
மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து விடாது கலந்துஏக,
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புக்கார்.

            பொழிப்புரை : சிவபெருமான் திருக்கோயிலில் எழுந்தருளப் பெற்றதைப் பார்த்து, அப்பெருமானைத் தொடர்ந்து எழும் அன்பி னால், கண்களின் வழியே சென்ற கருத்துவிடாது கலந்ததால், பொய் கைக் கரையில் நின்றருளிய மறைச் சிறுவரான யானைக்கன்று போன்ற பிள்ளையாரும், புண்ணிய மூர்த்தியாய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அழகிய திருத்தோணித் திருக்கோயிலுக்குள் சென்று சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 85
ஈறுஇல் பெருந்தவம் முன்செய்து தாதை எனப்பெற்றார்,
மாறு விழுந்த மலர்க்கை குவித்து, மகிழ்ந்துஆடி,
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அருந் தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.

            பொழிப்புரை : அளவற்ற தவத்தைச் செய்து இவருடைய தந்தை என அழைத்தற்குரிய சிவபாத இருதயர், பிள்ளையாரை அடிக்க ஓச்சிய சிறுகோலும் நெகிழ, அம்மலர்க் கைகளைக் கூப்பியவாறு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக விளைந்தனவாய வெருட்சி, வியப்பு, விருப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை எண்ணு வாராகி,


பெ. பு. பாடல் எண் : 86
தாணு வினைத்தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும், நிகழ்ந்தன கண்டுஉள்ளார்,
தோணி புரத்துஇறை தன்அருள் ஆதல் துணிந்து, ஆர்வம்
பேணு மனத்தொடு முன்புகு காதலர் பின்சென்றார்.

            பொழிப்புரை : சிவபெருமானைத் தாமே தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான பிள்ளையாரைப் போல், தாம் அவ் இறைவரைக் காணாராயினும், நிகழ்ந்தனவான அடையாளக் குறிக ளையும் திருப்பதிகத் தமிழ்பாடிச் சுட்டிக் காட்டியதையும் கண்டவராத லால், இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்து, மீதூர்ந்த அன்பு பொருந்திய மனத்துடன் தம்முன்பு சென்று கொண்டிருக்கும் திருமகனாரைத் தொடர்ந்து சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 87
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர், அல்லாதார்,
முப்புரி நூன்மறை யோர்கள் உரோம முகிழ்ப்புஎய்தி,
"இப்படி ஒப்பதொர் அற்புதம் எங்குஉளது" என்றுஎன்றே
துப்புஉறழ் வேணியர் கோயிலின் வாயில் புறஞ்சூழ.

            பொழிப்புரை : அதுபொழுது அங்கு நிகழ்ந்தனவற்றைக் கண்டவர்களும், காணாதநிலையில் கேட்டவர்களும், முப்புரிநூல் அணிந்த மறையவர்களும் `இவ்வாறாய அற்புத நிகழ்ச்சி வேறு யாண்டு நிகழ்ந்துள்ளது?\' எனக் கூறியவாறு, பவளம் போன்ற சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தோணிக் கோயிலின் திருவாயில் புறத்தில் வந்து சூழ்ந்தனராக,


பெ. பு. பாடல் எண் : 88
பொங்குஒளி மால்விடை மீது புகுந்து,அணி பொன்தோணி
தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே,
"இங்குஎனை ஆள்உடை யான்உமை யோடும் இருந்தான்"என்று
அங்குஎதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுதுஉண்டார்.

            பொழிப்புரை : ஞான அமுதை உண்ட பிள்ளையார் தாமும், பொங்கும் ஒளியையுடைய ஆனேற்று ஊர்தியில் இவர்ந்து அழகிய பொலிவுமிக்க திருத்தோணியுள் எழுந்தருளியிருக்கும் பெருந்திரு வாழ்வைச் சென்று கூடி, `என்னை ஆளுடைய பெருமான் உமையம் மையாருடன் இங்கு எழுந்தருளியிருந்தான்\' என்னும் கருத்துடைய திருப்பதிகத்தை இறைவன் திருமுன்னிலையில் நின்று போற்றி வணங்கினார்.

            குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்த `நறவம் நிறை வண்டு\' (தி.1 ப.74) எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம் முழுதும் `உமையோடு இருந்தானே\' என நிறைவு பெறுவதைத் திரு உளம் பற்றியே, ஆசிரியர் இத்தொடரை எடுத்து இயம்புவார் ஆயினர்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.074   திருப்புறவம்                                  பண் - தக்கேசி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நறவம்நிறைவண்டு அறைதார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம்உறைவண் பதியா,மதியார் புரமூன்று எரிசெய்த
இறைவன்,அறவன் இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச்சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்பநலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும்பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித்துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 2
உரவன்புலியின் உரிதோல்ஆடை, உடைமேல் படநாகம்
விரவிவிரிபூங் கச்சாஅசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறஉரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலும் இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :மிக்க வலிமையை உடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.


பாடல் எண் : 3
பந்தம்உடைய பூதம்பாட, பாதம் சிலம்புஆர்க்க,
கந்தமல்கு குழலிகாண, கரிகாட்டு எரிஆடி,
அந்தண்கடல்சூழ்ந்த அழகார்புறவம் பதியா அமர்வுஎய்தி,
எந்தம்பெருமான் இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 4
நினைவார்நினைய இனியான்,பனிஆர் மலர்தூய் நித்தலும்
கனைஆர்விடைஒன்று உடையான்,கங்கை திங்கள்   கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்,கடல்சூழ் புறவம் பதியாக,
எனையாள்உடையான், இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப்பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 5
செங்கண்அரவும் நகுவெண்தலையும் முகிழ்வெண் திங்களும்
தங்குசடையன், விடையன்,உடையன் சரிகோ வணஆடை,
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தஅழகார் புறவம் பதியாக
எங்கும்பரவி இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளையவெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கிஎழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.


பாடல் எண் : 6
பின்னுசடைகள் தாழ,கேழல் எயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தஅழகார் புறவம் பதியாக
என்னைஉடையான் இமையோர்ஏத்தஉமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப்பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.


பாடல் எண் : 7
உண்ணற்குஅரிய நஞ்சைஉண்டு, ஒருதோழம்தேவர்
விண்ணில்பொலிய அமுதம்அளித்த விடைசேர் கொடிஅண்ணல்,
பண்ணில்சிறைவண்டு அறைபூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணில்சிறந்த இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 8
விண்தான்அதிர, வியனார்கயிலை வேரோடு எடுத்தான்தன்
திண்தோள்உடலும் முடியும்நெரிய, சிறிதே ஊன்றிய
புண்தான்ஒழிய அருள்செய்பெருமான், புறவம் பதியாக,
எண்தோள்உடையான், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலைமலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத்தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 9
நெடியான்,நீள்தா மரைமேல்அயனும் நேடிக் காண்கில்லாப்
படியாமேனி உடையான்பவள வரைபோல் திருமார்பில்
பொடிஆர்கோலம் உடையான்கடல்சூழ் புறவம் பதியாக
இடியார்முழவுஆர் இமையோர்ஏத்த உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் தேடிக்காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.


பாடல் எண் : 10
ஆலும்மயிலின் பீலிஅமணர்ஸ அறிவுஇல் சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழிய,குழுவும் தழலும் எழில்வானும்
போலும்வடிவும் உடையான், கடல்சூழ் புறவம் பதியாக,
ஏலும்வகையால் இமையோர்ஏத்த, உமையோடு இருந்தானே.

            பொழிப்புரை :ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடையசிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.


பாடல் எண் : 11
பொன்ஆர்மாடம் நீடும்செல்வப் புறவம் பதியாக
மின்ஆர்இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன்ஆர்வம்செய் தமிழின்விரகன் உரைத்த தமிழ்மாலை,
பல்நாள்பாடி ஆடப்பிரியார் பரலோ கம்தானே.

            பொழிப்புரை :அழகு பொருந்திய உயர்ந்த மாடவீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப்பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர்.
           
                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 100
காதல்உடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
            கலந்துவீற்று இருந்த தங்கள்
தாதையா ரையும்,வெளியே தாங்க அரிய
            மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதமுலை சுரந்து அளித்த புண்ணியத்தா
            யாரையும், முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்று, திருக்கோலக்கா
            இறைஞ்ச விருப்பில் சென்றார்.

            பொழிப்புரை : பெருகிய அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் எனும் அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தம் தந்தையாரையும், தம்மிடம் வெளிப்பட்டு வந்து யாவராலும் காண்டற்கரிய மெய்ஞ்ஞானத்ததைத் திருமுலைசுரந்து வரும் பாலுடன் கலந்து தமக்கு ஊட்டிய புண்ணிய வடிவான திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி, மேன்மையான அருளைப் பெற்றுத் `திருக்கோலக்கா\' என்ற திருப்பதியை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார்.

            குறிப்புரை : வணங்கிப் போற்றிய திருப்பதிகம், `எம்பிரான்\' (தி.2 ப.40) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.040   திருப்பிரமபுரம்                      பண் - சீகாமரம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
எம்பிரான் எனக்குஅமுதம் ஆவானும், தன்அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல்ஏந்து கையானும்,
கம்பமா கரிஉரித்த காபாலி, கறைக்கண்டன்,
வம்புஉலாம் பொழிற்பிரம புரத்துஉறையும் வானவனே.

            பொழிப்புரை :எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனேயாவான்.


பாடல் எண் : 2
தாம்என்றும் மனம்தளராத் தகுதியராய், உலகத்துக்கு
ஆம்என்று சரண்புகுந்தார் தமைக்காக்கும் கருணையினான்,
ஓம்என்று மறைபயில்வார், பிரமபுரத் துஉறைகின்ற
காமன்தன் உடல்எரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

            பொழிப்புரை :உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச்செய்த கண்ணுதலோனே யாவான்.


பாடல் எண் : 3
நல்நெஞ்சே உனைஇரந்தேன், நம்பெருமான் திருவடியே
உன்னம்செய்து இருகண்டாய், உய்வதனை வேண்டுதியேல்,
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்
பன்அம்சீர் வாய்அதுவே, பார்கண்ணே பரிந்திடவே.

            பொழிப்புரை :நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம்மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார்.


பாடல் எண் : 4
சாநாள்இன் றிம்மனமே, சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோன்ஆளும் திருவடிக்கே கொழுமலர்தூவு எத்தனையும்,
தேன்ஆளும் பொழில்பிரம புரத்துஉறையும் தீவணனை
நாள்நாளும் நல்நியமம் செய்து,அவன்சீர் நவின்றுஏத்தே.

            பொழிப்புரை :மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவிவருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக.


பாடல் எண் : 5
கண்ணுதலான், வெண்நீற்றான், கமழ்சடையான், விடைஏறி,
பெண்இதமாம் உருவத்தான், பிஞ்ஞகன்,பேர் பலஉடையான்,
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரம் தொழவிரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.

            பொழிப்புரை :நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர்பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம்.


பாடல் எண் : 6
எங்கேனும் யாதுஆகிப் பிறந்திடினும், தன்அடியார்க்கு
இங்கேஎன் றுஅருள்புரியும் எம்பெருமான், எருதுஏறிக்
கொங்குஏயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துஉறையும்
சங்கேஒத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.

            பொழிப்புரை :தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.


பாடல் எண் : 7
சிலையதுவெம் சிலையாகத் திரிபுரமூன்று எரிசெய்த
இலைநுனைவேல் தடக்கையன், ஏந்துஇழையாள் ஒருகூறன்,
அலைபுனல்சூழ் பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால்,
நிலைஉடைய பெருஞ்செல்வம் நீடுஉலகில் பெறலாமே.

            பொழிப்புரை :மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல்வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்.


பாடல் எண் : 8
எரித்தமயிர் வாள்அரக்கன் வெற்புஎடுக்க, தோளொடுதாள்
நெரித்துஅருளும் சிவமூர்த்தி, நீறுஅணிந்த மேனியினான்,
உரித்தவரித் தோல்உடையான், உறைபிரம புரம்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.

            பொழிப்புரை :எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.


பாடல் எண் : 9
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல்உருவாய்
அரியான்ஆம் பரமேட்டி, அரவம்சேர் அகலத்தான்,
தெரியாதான் இருந்துஉறையும் திகழ்பிரம புரம்சேர
உரியார்தாம் ஏழ்உலகும் உடன்ஆள உரியாரே.

            பொழிப்புரை :திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர்.


பாடல் எண் : 10
உடைஇலார், சீவரத்தார் தன்பெருமை உணர்வுஅரியான்,
முடையில்ஆர் வெண்தலைக்கை மூர்த்தியாம் திருவுருவன்,
பெடையில்ஆர் வண்டுஆடும் பொழில்பிரம புரத்துஉறையும்
சடையில்ஆர் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

            பொழிப்புரை :உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர்.


பாடல் எண் : 11
தன்அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன்அடைந்த மதில்பிரம புரத்துஉறையும் காவலனை
முன்அடைந்தான், சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்,
பொன்அடைந்தார் போகங்கள், பலஅடைந்தார் புண்ணியரே.

            பொழிப்புரை :தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்.

                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 106
செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
            துடன்நடந்து செல்லும் போது,
தங்கள்குலத் தாதையார் தரியாது
            தோளின்மேல் தரித்துக் கொள்ள,
அங்குஅவர்தம் தோளின்மிசை எழுந்துஅருளி
            அணைந்தார், சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள்அணி மணிமாடத் திருத்தோணி
            புரத்தோணிச் சிகரக் கோயில்.

            பொழிப்புரை : செந்தாமரை மலர்போன்ற திருக்கைகளில் பொன்னாலாய தாளத்தைக் கொண்டு நடந்து செல்லும் அமையத்தில், தம் குலத் தந்தையார், அவர் நடந்து வருதலைப் பொறாதவராய், அவரைத் தம் தோள்மீது அமர்த்தியபடி, சுற்றிச் சூழ்ந்து தேவர்கள் போற்றுகின்ற, திங்கள் தங்கும் அழகிய மாடங்களையுடைய திருத்தோணிபுரக் கோயிலை வந்து அடைந்தார்.



பெ. பு. பாடல் எண் : 107
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலம்
            கொண்டு அருளி, திருமுன் நின்றே,
அருட்பெருகு திருப்பதிகம் எட்டுஒருகட்
            டளை ஆக்கி, அவற்றுள் ஒன்று
விருப்பு உறுபொன் திருத்தோணி வீற்றுஇருந்தார்
            தமைப்பாட, மேவுகாதல்
பொருத்தம்உற, அருள்பெற்றுப் போற்றி எடுத்து
            அருளினார் "பூவார் கொன்றை".

            பொழிப்புரை : திருத் தகவிற்றாகிய பெருங்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்நின்று, அருள் பெருகும் திருப்பதிகத்தைத் தக்கராகப் பண்ணிலமைந்ததாய்ப் பிற்காலத்தார் வகுத்தவாறு, எட்டுக் கட்டளைகளுள் ஒன்றில், தோணியப்பரைப் பாடவேண்டும் என்ற விருப்பம் மீதூர, அப்பெருமானின் அருள் பெற்றுப் `பூவார் கொன்றை\' (தி.1 ப.24) எனத் தொடங்கிப் பாடினார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.024   சீகாழி                                  பண் – தக்கராகம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
"பூவார் கொன்றைப் புரிபுன் சடைஈசா,
காவாய்" எனநின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரமூன்று அட்டார் அவர்போலாம்
பாஆர் இன்சொல் பயிலும் பரமரே.

            பொழிப்புரை :பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள்,  "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப்பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.


பாடல் எண் : 2
எந்தை என்றுஅங்கு இமையோர் புகுந்துஈண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்,
வெந்த நீற்றர் விமலர் அவர்போலாம்,
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

            பொழிப்புரை :அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட்புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

  
பாடல் எண் : 3
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கான மான்கைக் கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

            பொழிப்புரை :முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப்பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.


பாடல் எண் : 4
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண்ஆர் வாளி தொட்டார் அவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

            பொழிப்புரை :தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப் புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப்பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.

  
பாடல் எண் : 5
மாடே ஓதம் எறிய வயல்செந்நெல்
காடுஏ றிச்சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போலாம்
ஏடுஆர் புரமூன்று எரித்த இறைவரே.

            பொழிப்புரை :குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடாமலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.


பாடல் எண் : 6
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்,
அங்கண்அரவம் ஆட்டும் அவர்போலாம்,
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

            பொழிப்புரை :சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரி புரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி,கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.


பாடல் எண் : 7
கொல்லை விடைமுன் பூதம் குனித்துஆடும்
கல்ல வடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்து நடந்தார் அவர்போலாம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

            பொழிப்புரை :எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூதகணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.


பாடல் எண் : 8
எடுத்த அரக்கன் நெரிய விரல்ஊன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்,
எடுத்த பாடற்கு இரங்கும் அவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

            பொழிப்புரை :பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால்விரலை ஊன்றிச்சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.


பாடல் எண் : 9
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறுஅங்கு ஏறும் அவர்போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

            பொழிப்புரை :வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர் கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலாவந்து அருள்பவராவார்.


பாடல் எண் : 10
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

            பொழிப்புரை :தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப்பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.


பாடல் எண் : 11
கார்ஆர் வயல்சூழ் காழிக் கோன்தனைச்
சீர்ஆர் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர்ஆர் வானத்து இனிதா இருப்பரே.

            பொழிப்புரை :நீர்வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.
                                                            திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் திருப்பதிம்

இத் திருப்பதிகத்தை அருளிய காலமும் இடமும் கிடைக்கப் பெறவில்லை.


2.102   திருச்சிரபுரம்                         பண் - நட்டராகம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அன்ன மெல்நடை அரிவையோடு இனிதுஉறை
            அமரர்தம் பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள்எருக் கம்மலர்
            வைத்தவர், வேதம்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர், பருமதில்
            சிரபுரத் தார்,சீர்ஆர்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
            வினையொடும் பொருந்தாரே.

            பொழிப்புரை :அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும் , ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும் . வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளி யிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடி களைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார் .


பாடல் எண் : 2
கோல மாகரி உரித்தவர், அரவொடும்
            ஏனக்கொம்பு இளஆமை
சாலப் பூண்டு,தண் மதியது சூடிய
            சங்கர னார்,தம்மைப்
போலத் தம்அடி யார்க்கும் இன்பு அளிப்பவர்,
            பொருகடல்     விடம்உண்ட
நீலத் தார்மிடற்று அண்ணலார் சிரபுரம்
            தொழவினை நில்லாவே.

            பொழிப்புரை :அழகிய பெரிய யானையை உரித்தவரும் , பாம்பு , பன்றிப்பல் , இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண் மதிசூடிய சங்கரனாரும் , தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும் , பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீல கண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும் .


பாடல் எண் : 3
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
            தவம்கெட மதித்து, அன்று
கானத்தே திரி வேடனாய் அமர்செயக்
            கண்டு, அருள் புரிந்தார்,பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதரும்
            சிரபுரத்து உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
            குற்றங்கள் குறுகாவே.

            பொழிப்புரை :பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும் , வண்டுகள் பூந் தேனைத் தேர்ந்து திரியும் மலர்வனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடு வினைக்குற்றங்கள் குறுகா .


பாடல் எண் : 4
மாணி தன்உயிர் மதித்துஉண வந்தஅக்
            காலனை உதைசெய்தார்,
பேணி உள்குமெய் அடியவர் பெருந்துயர்ப்
            பிணக்குஅறுத்து அருள்செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர் வியன்புகழ்ச்
            சிரபுரத் துஅமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு 
            அருவினை அடையாவே.

            பொழிப்புரை :மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும் , தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப் பிணக்கை நீக்கி அருள்புரிபவரும் , சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப் பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .


பாடல் எண் : 5
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
            பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
            தலைவனு மாய்      நின்றார்,
சேரும் சந்தனம் அகிலொடு வந்துஇழி
            செழும்புனல் கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ்சிர புரம்தொழும்
            அடியவர் வருந்தாரே.

            பொழிப்புரை :மண் , நீர் , பல கதிர்களை உடைய இரவி , தண்மதி , ஆகாயம் , வாயு , ஒளிபொருந்திய கனல் வேள்வித்தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய , ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார் .


பாடல் எண் : 6
ஊழி அந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்துஇவ்
            உலகங்கள் அவைமூட,
"ஆழி எந்தை" என்று அமரர்கள் சரண்புக,
            அந்தரத்து உயர்ந்தார்தாம்,
யாழின் நேர்மொழி ஏழையோடு இனிதுஉறை
            இன்பன்எம் பெருமானார்,
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழுதுஎழ
            வல்வினை அடையாவே.

            பொழிப்புரை :ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து ` அருட்கடலே ! எந்தையே ` என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணி புரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய , யாழ்போலும் மொழி யினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழு தெழ வல்வினைகள் அடையா .


பாடல் எண் : 7
பேய்கள் பாட, பல் பூதங்கள் துதிசெய,
            பிணம்இடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட, மாநடம்
            ஆடும்வித் தகனார்,ஒண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
            தகுசிர புரத்தார்தாம்
தாய்கள் ஆயினார், பல்லுயிர்க் கும்தமைத்
            தொழும்அவர் தளராரே.

            பொழிப்புரை :பேய்கள் பாடவும் , பலபூதங்கள் துதிக்கவும் , பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில் , மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும் , பல்வகை உயிர்கட்கும் அவ் வவற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார் .


பாடல் எண் : 8
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
            எழில்கொள்வெற்பு எடுத்தஅன்று,
கலங்கச் செய்தலும் கண்டு, தம் கழல்அடி
            நெரியவைத்து அருள்செய்தார்,
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்று
            அதன்இடைப் புகுந்துஆரும்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழுது
            எழ, வினை குறுகாவே.

            பொழிப்புரை :விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலை போலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகிய கயிலை மலையை நிலைகுலையச்செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம் திருவடி விரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றின் இடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா.


பாடல் எண் : 9
வண்டு சென்றுஅணை மலர்மிசை நான்முகன்
            மாயன்என்று இவர்அன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோடு அன்னமாய்க்
            கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டஎம்
            பசுபதி, பரமேட்டி,
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதுஎழ ,
            வினையவை கூடாவே.

            பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும் , பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா .


பாடல் எண் : 10
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
            பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும் தேர்கிலாத்
            தேவர்கள் பெருமானார்,
முறித்து மேதிகள் கரும்புதின்று ஆவியின்
            மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயல் சிரபுரம் தொழ,வினை
            விட்டிடும் மிகத்தானே.

            பொழிப்புரை :மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும் , உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும் , அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய , எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங் களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப் பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும் .


பாடல் எண் : 11
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை,
            பைஅரவோடு அக்கு
நிரைசெய் பூண்திரு மார்புஉடை நிமலனை,
            நித்திலப் பெருந்தொத்தை,
விரைசெய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை,
            விண்ணவர் பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
            பரமனைப் பணிவாரே.

            பொழிப்புரை :மழுவேந்திய கையனை , பக்தர்கள் தலைவனை , படப்பாம்பு , என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை , முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை , மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை , தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார் .

திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 263
செல்வநெடு மாளிகையில் அமர்ந்து, நாளும்
            திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து,
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி,
            மனமகிழ்ந்து போற்று இசைத்து வைகும் நாளில்,
ஒல்லைமுறை உபநயனப் பருவம் எய்த,
            உலகுஇறந்த சிவஞானம் உணரப் பெற்றார்,
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
            தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.

            பொழிப்புரை : செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந்நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 264
ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை,
            உலகுஇயல்பின் உபநயன முறைமை ஆகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி,
            எய்துவிக்கும் மறைமுனிவர் எதிரே நின்று,
"வருதிறத்தின் மறைநான்கும் தந்தோம்" என்று
            மந்திரங்கள் மொழிந்தஅவர்க்கு மதுர வாக்கால்
பொருஇறப்ப ஓதினார் புகலி வந்த
            புண்ணியனார் எண்இறந்த புனித வேதம்.

            பொழிப்புரை : எப்பிறவியிலும் வாராத இயல்புடைய பிள்ளையாரை, உலகில் மற்றவர் இயல்பில் அவரை வைத்து உபநயன முறையான இருபிறப்பின் நிலையை அதற்குரிய செயற்பாடுகளால் காட்டிச் செய்கின்ற அந்தணர்கள் எதிரில் நின்று, `வழிவழியாகக் கூறப்பெற்று வரும் தன்மையில் நான்மறைகளையும் தந்தோம்\' என்று உரிய மந்திரங்களைச் சொல்லும் அவர்களுக்குத் தம் இனிய வாக்கினால் சீகாழியில் தோன்றிய புண்ணியமே வடிவான பிள்ளையார் ஒப்பற்ற நிலையில் நின்று எண்ணற்ற புனித மறைகளையும் ஓதினார்.


பெ. பு. பாடல் எண் : 265
சுருதிஆ யிரம்ஓதி அங்கம் ஆன
            தொல்கலைகள் எடுத்துஇயம்பும் தோன்ற லாரை,
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்ன,
            பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்பு உற்று ஏத்தும்
            கலைமறையோர் கவுணியனார் தம்மை, கண்முன்
வருதியா னப்பொருள்என்று இறைஞ்சி, தாம் முன்
            வல்லமறை கேட்டு, ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்.

            பொழிப்புரை : எண்ணிறந்த பல மறைகளையும் ஓதியதுடன் அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய பெருமை வாய்ந்த பிள்ளையாரை, எண்ணற்ற கதிரவர்கள் ஒருங்கு கூடித் தம் கதிர்களை விரித்தாற் போல மேலாக விளங்கும் ஒளிப் பிழம்பாய இறைவரின் திருவருளைப் பெற்ற பான்மையின் மேன்மையை எண்ணி, அன்பும் வியப்பும் கொண்டு போற்றும் அவ்வந்தணர்கள், கவுணியர் பெருமானான பிள்ளையாரைத் `தங்கள் கண் முன் வெளிப்பட்டு வரும் தியானப் பொருள் ஆவார்\' என்று எண்ணி வணங்கித் தாங்கள் முன்னே கொண்ட மறைகளில் ஏற்பட்ட தமக்குள்ள ஐயங்களையும் கேட்டுத் தெளிந்தனர்.

            குறிப்புரை : தியானப் பொருள் - தியானிக்கப்படும் பொருள்: குருவாகவும் சிவமாகவும் எண்ணிப் போற்றப்படும் பொருள்.


பெ. பு. பாடல் எண் : 266
மந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து,
            மற்றுஅவற்றின் வைதிகநூல் சடங்கின் வந்த
சிந்தைமயக்கு உறும்ஐயம் தெளிய, எல்லாம்
            செழுமறையோர்க்கு அருளி, அவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
            முதல்ஆகும் முதல்வனார் எழுத்துஅஞ்சுஎன்பார்,
"அந்தியின்உள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்று
            அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

            பொழிப்புரை : மறைவழிப்பட்ட மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லியருளியபின், அம்மறைவழிப்பட்ட வேள்விச் செயற்பாடுகளில் அவர்களின் சிந்தையில் வந்த ஐயங்களையெல்லாம் தெளியுமாறு அவ்வந்தணர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அவர்கள் மனம் தெளியுமாறு தொன்மையும் முதன்மையும் பெற்ற எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்குக் காரணம் சிவபெருமானின் திருவைந்தெழுத்தேயாகும் என அருளுவாராய் `முப்போதும் ஓதுதற்குரிய மந்திரம் திருவைந்தெழுத்தேயாகும்\' என ஐந்தெழுத்தின் திருப்பதிகத்தையும் அருள் செய்தார்.

            குறிப்புரை : இப்பதிகம் `துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்' (தி.3 ப.22) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில்,

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

-தி.3 ப.22 பா.2 எனவரும் இரண்டாவது பாடலின் 4ஆவது அடியே ஆசிரியரால் எடுத்துக் கூறப்பட்டதாகும். அந்தி - முப்பொழுதும். இதனால் அவ்வந்தணர்களுக்குக் குரு உபதேசமும் பெற வாய்ப்பாயிற்று.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 022  பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)     பண் - காந்தாரபஞ்சமம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
துஞ்சலும் துஞ்சல்இ லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த, வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.

  
பாடல் எண் : 2
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று,அவர் தம்மை ஆள்வன,
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 3
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி. ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்து வார்க்கு,இடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 4
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ,
கொல்ல நமன்தமர் கொண்டு போம்இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 5
கொங்குஅலர் வன்மதன் வாளி ஐந்து,அகத்து
அங்குஉள பூதமும் அஞ்ச, ஐம்பொழில்,
தங்குஅர வின்படம் அஞ்சும், தம்முடை
அங்கையில் ஐவிரல், அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும்.


பாடல் எண் : 6
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினைஅடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையி னும்துணை அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தே யாகும்.


பாடல் எண் : 7
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன, பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன, மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன, அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும்.


பாடல் எண் : 8
வண்டுஅமர் ஓதி மடந்தை பேணின,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன,
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்,அவர்க்கு
அண்டம் அளிப்பன, அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.


பாடல் எண் : 9
கார்வணன் நான்முகன் காணு தற்குஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும்.


பாடல் எண் : 10
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறுஅணி வார்வி னைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.

            பொழிப்புரை :புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 11
நல்தமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

            பொழிப்புரை :நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

                                          -----  தொடரும் -----

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...