சீர்காழி - 2


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

            திருஞானசம்பந்தப் பெருமானை, அப்பர் பெருமான் சீகாழிக்கும் வந்து கண்டு அளவளாவிச் சிலகாலம் இருந்தார். அப்பர் பெருமான் விடைபெற்றுச் சென்றார். சீகாழியின் எல்லை வரை அப்பர் பெருமானுடன் சென்று, மீண்டு வந்து சீகாழியில் இருந்த காலத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பல திருப்பதிகங்களைப் பாடியருளினார்.  தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்கால் அவற்றைச் சிந்திப்போம்......

பெரிய புராணப் பாடல் எண் : 275
வாக்கின் தனிமன்னர் ஏக, மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியில் மீண்டும் புகுந்து,
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித் தொழுதுஅங்கு உறைகின்ற நாளில்.

            பொழிப்புரை : ஒப்பில்லாத திருநாவுக்கரசர் செல்ல, மாறுபாடு இல்லாத திருவுள்ளத்துடன் மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் பிள்ளையார் மீண்டு வந்து புகுந்து, நிறைந்த மறைகளின் வடிவாய்த் திருத்தோணியில் வீற்றிருக்கின்ற தோணியப்பரை அழகிய செய்யுள்களாலாகிய இனிய தமிழ் மாலைகளைப் பாடி வணங்கி அங்கு இருந்துவரும் நாள்களில்,


பெ. பு. பாடல் எண் : 276
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளால்மொழி மாற்றும்
வந்தசொல் சீர் மாலைமாற்று வழிமொழி எல்லாம் மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ்இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு.

            பொழிப்புரை : பல்வேறு வகைப்பட்ட செய்யுள்களாலான செந்தமிழ் மாலைகளாகத் `திருமொழி மாற்று' என்ற பதிகமும் வழிமொழித் `திருவிராகப் பதிகமும், `எல்லா அடிகளிலும் எல்லாச் சீர்களிலும் மடங்கி வருகின்ற இயமகமாகிய `திரு ஏகபாதப் பதிகமும்' தமிழில் சிறந்த `இருக்குக் குறள்' பதிகமும், ஆகிய இவற்றைப் பாடிச் சாத்தியதுடன், எம் தந்தைக்கு அருளிய `எழுகூற்றிருக்கையும்' `ஈரடி' என்ற திருப்பதிகமும், `ஈரடிமேல் வைப்பு' என்னும் திருப்பதிகமும்,


இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `மொழிமாற்று': காடதணி (தி.1 ப.117) - வியாழக்குறிஞ்சி
2. `மாலைமாற்று': யாமாமாநீ (தி.3 ப.117) - கௌசிகம்
3. `வழிமொழி': சுரருலகு (தி.3 ப.67) - சாதாரி
4. `ஏகபாதம்': பிரமபுரத்துறை (தி.1 ப.127) - வியாழக்குறிஞ்சி
5. `இருக்குக்குறள்': அரனை உள்குவீர் (தி.1 ப.90) - குறிஞ்சி
6. `எழுகூற்றிருக்கை': ஓருருவாயினை (தி.1 ப.128) -                                                                                                                                                வியாழக்குறிஞ்சி
7. `ஈரடி': வரமதே கொளா (தி.3 ப.110) – பழம்பஞ்சுரம்
8. `ஈரடி மேல்வைப்பு' : தக்கன்வேள்வி (தி.3 ப.5) - காந்தார பஞ்சமம்

1.     மொழிமாற்று: பாடலில் வரும் சொற்கள் பொருள் அமைவிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல் இதன் இலக்கணமாகும்.

2.   மாலை மாற்று: ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புகளுள்எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும் அம்மாலை   ஒரே தன்மையதாய்த் தோன்றுமாறு போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதியிலிருந்தோ எவ்வகையில் தொடர்ந்து வாசித்தாலும் அதே செய்யுளாக   அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரலே பெற்றிருப்பது மாலைமாற்றுச்    செய்யுளாம்.

3.                                3.  வழிமொழித் திருவிராகம்: குற்றெழுத்துப் பயின்று வரும்      முடுகிய ஓசையுடையதாய் அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத்தொடுப்பது    இவ்வகையதாம்.

4.     ஏகபாதம்: ஓரடியுள் வரும் சொற்சீர்களே நான்கு அடிகளிலும் மடக்கி வரப் பாடுவதாம். ஏகம் - ஒன்று; பாதம் - அடி = ஒரே அடி.

5.     இருக்குக்குறள்: இரு சீரால் இயன்ற நான்கு அடிகளையுடைய பாட்டாம்.

6.     திருமுக்கால்: ஒரு பாடலில் இரண்டாவது அடி மடங்கி மூன்றாவது அடியாகவும் வரப்பாடுவது இவ்வகையதாகும். இரண்டாம் அடியே மூன்றாவது அடியாக வருதலின் இப்பாடல் மூன்றடி உடையதாகிறது. ஆதலின் இதனை முக்கால் என்றனர்.

7.     எழுகூற்றிருக்கை: ஒன்று முதல் ஏழு வரையிலான எண்கள் தொடர, அவ்வெண்கள் ஒவ்வொன்றும் நிறைவுறும்பொழுது, நிரல் பட ஒன்றுவரைக் கீழிறங்கி நிற்கப் பாடுவதாம்.

8.     ஈரடி: இரண்டடிகளால் இயன்ற பாடல் வகையதாம்.

9.     ஈரடி மேல் வைப்பு: ஈரடியால் இயன்ற செய்யுளாய் அதன் மேலும் ஈரடிகள் வைத்துப் பாடின் அது ஈரடி மேல் வைப்பாம். பின்னிரண்டடியாக வரும் வைப்புப் பதிகம் முழுமையும் ஒன்றேயாக அமைவதும் உண்டு, வெவ்வேறாக அமைவதும் உண்டு. இது அடுத்து வரும் நாலடி வைப்பிற்கும் பொருந்தும்.


பெ. பு. பாடல் எண் : 277
நால்அடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇ லக்கியம் ஆக எல்லாப்பொருள் களும் முற்ற
ஞாலத்து உயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர்.

            பொழிப்புரை : `நாலடி மேல் வைப்பு\' என்ற திருப்பதிகமும், மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த `திருவிராகம்\' என்ற பதிகங்களும், மேன்மை கொண்ட `திருச்சக்கரமாற்று\' முதலான திருப்பதிகங்களும் ஆகிய இவை மூல இலக்கியங்களாக உலகத்திற்கு வழிகாட்டி நிற்குமாறு, எல்லாப் பொருள்களும் நிரம்பி இருக்கக் காணுமாறு, உலகத்தில் உயரும் சீகாழி இறைவரைத் திருஞானசம் பந்தர் பாடியருளினார்.


குறிப்புரை :
இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `நாலடி மேல் வைப்பு': இயலிசை (தி.3 ப.3) - காந்தாரபஞ்சமம்.
2. `முடுகும் இராகம்': முன்னிய கலை (தி.2 ப.29) - இந்தளம்
3. `முடுகும் இராகம்': சங்கமரு (தி.3 ப.81) - சாதாரி
4. `முடுகும் இராகம்': பெண்ணியல் (தி.3 ப. 84) - சாதாரி
5. `முடுகும் இராகம்': எந்தமது சிந்தை (தி.3 ப.75) - சாதாரி
6. `முடுகும் இராகம்': பிறையணி (தி.1 ப.19) - நட்டபாடை
7. `சக்கரம்' : விளங்கியசீர் ( தி.2 ப.73) - காந்தாரம்
8. `ஆதிவிகற்பம் முக்கால்': விண்ணவர் தொழு (தி.3 ப.94) - சாதாரி
9. `திருத்தாளச்சதி': பந்தத்தால் (தி.1 ப.126) - வியாழக்குறிஞ்சி
10. `ஆவின் பாய்ச்சல்' (கோமூத்திரி): பூமகனூர்(தி.2 ப.74) - காந்தாரம்
11.  `பல்பெயர்ப்பத்து': எரியார் (தி.1 ப.63) - தக்கேசி

1.     முடுகும் இராகம்: நெகிழ்ந்த ஓசையவாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.

2.     திருச்சக்கர மாற்று: உருள் (சக்கரம்) வடிவாக அடைத்துச் சுழன்று வருவது போலச் சீகாழியின் பன்னிரு பெயர்களும் மாறி மாறிச் சுழன்று வரப் பாடியருளிய பதிகம் இப்பெயர் அமைய அமைந்துள்ளது.

3.     திருமுக்கால்: முழுவதும் தொடர், முடுகிய ஓசையுடையதாய் வரும் பாடல் இவ்வகையதாகும். இவ்வாறு முடுகி வரும் ஓசையமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று.

4.     திருத்தாளச் சதி: ஆடரங்குகளில் மகளிர் பாடியவாறு நடித்தற்குப் பொருந்திய தாளச் சொற்கட்டுக்களாக அமைந்திருப்பது இவ்வகையாலாய பாடலாம்.

5.     கோமூத்திரி: நடையன் பசு, நீர்க்கழிவு செய்யும்பொழுது, நிலத்தில் வளைந்து வளைந்து விழும் பாங்குபோலச் செய்யுளை அமைப்பது இவ்வகையதாகும்.

6.     திருஇயமகம்: `யமகம்\' என்பது வடசொல். தமிழ் வழக்குப்படி யகரம் மொழிமுதற்கண் வாராமையின் இகரம் பெற்று இயமகம் ஆயிற்று. ஓரடியில் முன் வைத்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது இவ்வகையதாம். இதனை `மடக்கு\' என்றும் கூறுவர்.

7.     பல்பெயர்ப் பத்து: சீகாழிப் பதியின் பன்னிருபெயர்களை தனித் தனியே ஒவ்வொரு பாடலில் குறிக்கும் இப்பதிகம் அகப்பொருள் துறையில் அமைந்துள்ளது.


பெ. பு. பாடல் எண் : 278
இன்இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடிவு ஆன மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழ்இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.

            பொழிப்புரை : இனிய இசையில் முற்கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும் பெரும்பாணரும், பொருந்திய இசை, ஓர் உருவு எடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும், போற்றப்படும் ஏழிசைகளும் அமையப் பாடி இறைவரைப் போற்றப் பொன்தாளம் பெற்ற பிள்ளையார் சீகாழியில் தங்கியிருந்தார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


1.117   திருப்பிரமபுரம் மொழிமாற்று       பண் - வியாழக்குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
காடுஅது அணிகலம். கார்அர வம்பதி, கால்அதனில்
தோடுஅது அணிகுவர், சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்,
வேடுஅது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்,
பீடுஅது அணிமணி மாடப் பிரம புரத்தாரே.

            பொழிப்புரை :பெருமை பெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர்.

            குறிப்புரை :மொழிமாற்று என்பது பொருள்கோள் வகையுள் ஒன்று. பொருளுக்கு ஏற்பச் சொல்லைப் பிரித்து முன்பின் கூட்டிக் கொள்வது.


பாடல் எண் : 2
கற்றைச் சடையது கங்கணம், முன்கையில் திங்கள்கங்கை,
பற்றித்து முப்புரம், பார்படைத் தோன்தலை சுட்டதுபண்டு,
எற்றித்துப் பாம்பை, அணிந்தது கூற்றை, எழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்துஎங்கள் வேதியரே.

            பொழிப்புரை :கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.


பாடல் எண் : 3
கூவிளம் கையது, பேரி சடைமுடிக் கூட்டத்தது,
தூவிளங் கும்பொடிப் பூண்டது, பூசிற்றுத் துத்திநாகம்,
ஏவிளங் கும்நுத லாளையும் பாகம் உரித்தனர்,இன்
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

            பொழிப்புரை :இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற்பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.


பாடல் எண் : 4
உரித்தது பாம்பை, உடல்மிசை இட்டதுஓர் ஒண்களிற்றை,
எரித்தது ஓர் ஆமையை, இன்புறப் பூண்டது முப்புரத்தை,
செருத்தது சூலத்தை, ஏந்திற்றுத் தக்கனை, வேள்விபல்நூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே.

            பொழிப்புரை :பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர்.



பாடல் எண் : 5
கொட்டுவர் அக்குஅரை, ஆர்ப்பது தக்கை, குறுந்தாளன
விட்டுவர் பூதம் கலப்பிலர், இன்புகழ் என்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர், மத்தமும் ஏந்துவர்,வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துஉறை சுந்தரரே.

            பொழிப்புரை :வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று.


பாடல் எண் : 6
சாத்துவர் பாசம் தடக்கையில், ஏந்துவர் கோவணம்,தம்
கூத்துஅவர் கச்சு, குலவிநின்று ஆடுவர், கொக்குஇறகும்
பேர்த்தவர், பல்படை பேய்அவை சூடுவர், பேர்எழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

            பொழிப்புரை :தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.


பாடல் எண் : 7
கால்அது கங்கை, கற்றைச் சடையுள்ளால் கழல்சிலம்பு,
மால்அது வேந்தன், மழுஅது பாகம், வளர்கொழுங்கோட்டு
ஆல்அது ஊர்வர், அடல்ஏற்று இருப்பர், அணிமணிநீர்ச்
சேல்அது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே.

            பொழிப்புரை :அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர்.


பாடல் எண் : 8
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர், நெற்றியின்கண் 
மருப்புறு வன்கண்ணர், தாதையைக் காட்டுவர், மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
பொருப்புஉறு மாளிகைத் தென்புற வத்துஅணி புண்ணியரே.

            பொழிப்புரை :வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.


பாடல் எண் : 9
இலங்கைத் தலைவனை ஏந்திற்று, இறுத்தது இரலை, இன்னாள்
கலங்கிய கூற்றுஉயிர் பெற்றது, மாணி குமைபெற்றது,
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

            பொழிப்புரை :நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத்தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.


பாடல் எண் : 10
அடியிணை கண்டிலன் தாமரை யோன்,மால் முடிகண்டிலன்,
கொடிஅணி யும்புலி ஏறுஉகந்து ஏறுவர், தோல்உடுப்பர்,
பிடியணி யும்நடை யாள்வெற்பு இருப்பதுஓர் கூறுஉடையர்
கடிஅணி யும்பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

            பொழிப்புரை :மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும் கறைக்கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன் முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.


பாடல் எண் : 11
கையது வெண்குழை, காதது சூலம், அமணர் புத்தர்
எய்துவர் தம்மை, அடியவர் எய்தார், ஓர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம், பூண்பது உடுப்பது, மேதகைய
கொய்துஅலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

            பொழிப்புரை :சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர்.


பாடல் எண் : 12
கல்உயர் கழுமல இஞ்சியுள் மேவிய கடவள் தன்னை
நல் உரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்கு உணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீர்அரு ளால்பெற லாம்சிவ லோகம் அதே.

            பொழிப்புரை :உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

                                                            திருச்சிற்றம்பலம்

3.     117  சீகாழி      திருமாலைமாற்று       பண் -  கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

            இத் திருப்பதிகத்திற்கான விளக்கம், விளக்கக் குறிப்பு ஆகியவை எங்கள் ஆசிரியர் பெருமானார், அமரர் ந. ரா. முருகவேள் அவர்கள், 1970-களில் அடியேன் துணைச் செயலாளராகப் பணியாற்றிய சைதைத் தேவார சபையின் தலைவராக இருந்த அருமையான காலத்தில் இயற்றி அருளியவை. சைதைத் தேவார சபையின் வெளியீடாக இது வெளிவந்தது. நாங்கள் பெற்ற பெரும்பேறு. இனி எந்தப் பிறவியை எடுத்து எங்கள் ஆசிரியர் பெருமானைக் காண முடியும். கண்கள் குளமாகின்றன, அப் பெருமானாரின் அருமை பெருமைகளை எண்ணும்போது. குருநாதா, குருநாதா, குருநாதா.
  
பாடல் எண் : 1
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

இதன் பொருள்

யாம் - சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்

ஆமா -  கடவுள் என்பது பொருந்துமோ

நீ -  நீ ஒருவனுமே கடவுள் என்றல்

ஆம் ஆம் - பொருந்தும், பொருந்தும்

மா -  பெரிய

யாழீ - யாழை ஏந்தி இருப்பவனே

காமா - அனைவராலும் விரும்பப்படுபவனே

காண் நாகா-  காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்து உள்ளவனே

காணா - காண முடியாதவாறு

காமா -  மன்மதனை அனங்கனாகச் செய்தவனே

காழீயா -  சீர்காழிக்குத் தலைவனே

மாமாயா - பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே

மா - கரிய  கொடிய

மாயா - மாயையினின்றும்

            நீ -  எம்மை நீக்கிக் காத்து அருள்வாயாக.

விளக்கக் குறிப்பு
          'பிரமமே உயிர், உயிரே பிரமம்' எனத் துணிந்து,' யாங்களே கடவுள்' என்று கூறுவோரும் உளர். ஆகலின், 'யாம் ஆமா? நீ ஆம் ஆம்' என வலியுறுத்திக் கூறினார்.  "வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே" எனவும் "வருங்கடல் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே" எனவும் தேவாரப் பாடல்களில் வருதலின், இறைவன் யாழ் அல்லது வீணை ஏந்தியுள்ள திறம் உணரப்படும்.  'வீணா தட்சிணாமூர்த்தி' என்னும் திருவுருவம் உள்ளமையும் கருதுக.  இனி, 'யாளி' என்னும் சொல் 'யாழி' எனத் திரிந்து, விளிவேற்றுமையில் யாழீ என வந்தது எனினும் ஆம்.  யாளி போன்றவனே என்பது அதற்குப் பொருள். காமம் -  விருப்பம்.  காமர் - அழகு.  வியத்தகு பல திருவருட் செயல்களைச் செய்தலின் இறைவனை 'மா மாயா' என்றார்.  மா – திருமகள்.  மாயன் -  திருமால் எனக் கொண்டு திருமாலைத் திருவுருவின் ஒரு பகுதியில் கொண்டு உள்ளவனே எனவும் பொருள் கூறலாம்.  நீ - நீக்கு.


பாடல் எண். 2
            யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
            யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாய        

இதன் பொருள்

            யாகா - வேள்விப் பயனாக விளங்குபவனே

            யாழீ - யாழ் இசைப்பவனே

            காயா - அருள் உருவத் திருமேனிகள் எடுப்பவனே.

            காதா - காதுதல் ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே

            யார் ஆர் - எத்தகையவர்களுக்கும்

            ஆதாய் ஆயாய் - ஆகின்ற தாய் ஆயினவனே

            ஆயா - ஆராய முடியாத

            தார் ஆர் ஆயா - ஆத்திப் பூவை மாலையாகக்கொண்டவனே.

            தாக ஆயா - வேட்கை உற்ற தாருகாவனத்து முனிபத்தினியர் ஆகிய கூட்டத்தை  உடையவனே

            காழீயா - சீர்காழி இறைவனே

            யா - துன்பங்கள் எவற்றினின்றும்

            கா - எம்மைக் காத்தருள்க.

விளக்கக் குறிப்பு
           யாகம் - வேள்வி.  காயம் - உடம்பு, திருமேனி.  காதுதல் - கொல்லுதல்.  ஆர் - ஆத்திப் பூ.  தார் - மாலை.  தாகம் - வேட்கை.  ஆயம் - கூட்டம்.  தாக + ஆயா என்பது 'தாகாயா' என வந்தது.


பாடல் எண். 3
            தாவாமூவா தாசாகாழீ நாதாதாநீ யாமாமா
            மாமாயாநீ தாநாழீகா சாதாவா மூவாதா       

இதன் பொருள்

            தாவா -  அழியாத

            மூவா -  முதுமை அடையாத

            தாசா - தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக  உள்ளவனே

            காழீநாதா - சீர்காழிக்குத் தலைவனே

            நீ - அஞ்சி நீங்கத் தகுந்த  சுடுகாட்டில்

            யாமா - யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே

            மா - பெருமை மிகுந்தவனே

            மா மா - மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையில்மேல்

            யாநீ - ஏறி வருபவனே

            தாநஆழி -  கொடைத் தன்மையில் கடல் போன்றவனே

            சா கா - சாதலினின்று காத்தருள்க

            காசா - பொன் போன்ற ஒளியை உடையவனே

            தா - எல்லா வரங்களும் தருக

            வா - எங்கள் முன்னே வருக

            மூ - எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே

            வாதா - காற்று முதலாகிய ஐம்பூதங்களின் வடிவாய் விளங்குபவனே.

விளக்கக் குறிப்பு
           தசம் - பத்து.  "தாசா" என்னும் சொல் அதனின்றும் தோன்றியது.  தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி,  ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பன தசகாரியங்கள் எனப்படும்.  இப் பத்துவகைச் செயல்கள் மூலமாக இறைவன் அடையப் படுவான் ஆதலின் "தாசா" என்றார்.  மா மா - பெருமை உடைய விலங்கு. அஃது இங்கு ஐராவணம் என்னும் யானையைக் குறித்தது.  யாநம் - ஊர்தி, வாகனம்.  யாநீ - வாகனத்தை உடையவனே. “ தாநம் + ஆழி"  தாநாழி என வந்தது.  காசு - பொன், மணி.  வாதம் - காற்று.


பாடல் எண்.4
            நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
            மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ         

இதன் பொருள்

            நீவா - நீங்குதல் இல்லாத

            வாயா - மெய்ப் பொருளானவனே

            கா - காவுகின்ற

            யாழீ - யாழை உடையவனே

            வான்நோ -  கொடிதாகிய பிறவித்துன்பம்

            வாராமே - எங்களை அடையாமல்

            காவா - வந்து காப்பாற்றுக

            வான் நோவா வா -  தேவர்கள் வருந்தாதபடி

            மேரா - மேருமலையை வில்லாக ஏந்தியவனே

            காழீயா - சீர்காழி இறைவனே

            காயா - ஆகாய வடிவினனே

            வாவாநீ - நீ விரைந்து வருவாயாக.

விளக்கக் குறிப்பு
           நீவுதல் - நீங்குதல்.  அதனின்று 'நீவா' என்னும் எதிர்மறைப் பெயரெச்சச் சொல் அமைந்தது.  வாய்மை - மெய்ம்மை, மெய்ப் பொருள்.  வாய்மைப்பொருள் ஆகிய இறைவனை ஈண்டு 'வாயா' என விளித்தார்.  கா - காவுதல், சுமத்தல், முதனிலைத் தொழிற்பெயர்.  'காயாழ்' என்பது சுமக்கப் பெறுகின்ற யாழ் எனப் பொருள் தரும்.  பிறவித்துன்பத்தின் கொடுமை பற்றி 'வான் நோ' என விதந்தார்.  வான் - தேவர்கள்,  ஆகுபெயர்.  மேரு மலையை வில்லாக ஏந்தித் திரிபுரம் எரித்தமையினால் இறைவனை 'மேரா' என்றார்.  'காயா' என்பது ஆகாயா என்பதன் முதற்குறை.


பாடல் எண். 5
            யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
            வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா      

இதன் பொருள்
            யா - எப்பொருள்களுக்கும்

            காலா - காலவடிவமாக உள்ளவனே
           
            மேயா - எல்லாவற்றிலும் மேவி இருப்பவனே

            மேதாவீ - அறிவில் மேம்பாடு மிக்கவனே

            தாய் ஆவீ - எல்லோருக்கும் தாயாகவும், உயிராகவும் விளங்குபவனே

            வீயாதா - எக்காலத்தும் அழிவு இல்லாதவனே

            வீ தாமே - கின்னரம் என்னும் பறவைகள் தாமே இசையில் மயங்கி வந்து விழுமாறு

            யாழீ - யாழை மீட்பவனே

            யாம் - யாங்கள்

            மேல் -  மேற்கொண்டு

            ஆகு - ஆவனவற்றிற்காக

            ஆயா -  ஆராய்ந்து வருந்தாதபடி

            கா - காத்து அருள்க.


விளக்கக் குறிப்பு
           யா என்னும் வினாப் பெயர் ஈண்டு எஞ்சாமைக் குறிப்பின் வந்து, எல்லாப் பொருள்களையும் உணர்த்திற்று.  காலன் ஈண்டு இயமனைக் குறிக்காமல், கால தத்துவத்தை இயக்கி நிற்கும் இறைவனை உணர்த்திற்று.  மேவியவா என்பது மேவா என மருவி வந்தது.   மேதாவி என்பது விளிப் பொருளில் நீண்டது.  இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும், ஆவியாகவும் விளங்கி வருதலின் தாயாவீ என்றார்.  வீதமே யாழீ என்றது, இறைவன் மீட்டி அருளும் யாழின் இசையைக் கோட்டு, கின்னரம் அசுணம் முதலிய பறவாகள் தாமே வந்து கூடி, இன்னிசை கேட்டு உருகி மயங்கி மகிழும் திறம் உணர்த்திற்று.  வீ - பறவைகள்.  மே - மேவுகின்ற.


பாடல் எண். 6
            மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
            யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
  
இதன் பொருள்

            மேலே -  மார்க்கண்டேயரின் மீது

            போகாமே - கூற்றுவன் வெகுண்டு செல்லாமல்

            தேழீ - அதட்டித் தெழித்து அருளியவனே

            காலாலே - திருவடியினாலே

            கால் ஆனாயே - காலனுக்கும் காலனாக விளங்கினையே

            ஏல் - ஏற்றுக் கொள்ளத் தகுந்த

            நால் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும்

            ஆகு - ஞானாசிரியராக எழுந்தருளி
           
            ஆல் - கல்லால மர நிழலில்

            ஏலா - அவர்களை ஏற்று அருளியவனே

            காழீ தே - சீர்காழியில் விளங்கும் முழுமுதல் தெய்வமே

            மேகா - மேகம் போன்ற கொடைத் தன்மை உடையவனே

            போலேமே - அடியோங்கள் நின் தொண்டர் திரளில் ஒருவரைப் போல் ஆகமாட்டோமா
  
விளக்கக் குறிப்பு
           தெழித்தல் - அதட்டுதல்.  தெழீ - தேழீ என வந்தது, விளிவேற்றுமை.  ஆகு ஆல் ஏலா -  ஆகாலேலா என வந்தது.  ஏல் - ஏற்றல், முதல் நிலைத் தொழிற்பெயர்.  ஏலா - ஏற்று அருளியவனே.  மேகா - மேகத்தை மழை பொழியுமாறு செய்பவனே எனினுமாம்.  பயிர் விளைக்கும் புயல் அவன்காண் என்பது தேவாரம்.  போலேமே -  போல ஆகமாட்டோமா  ஆகும்படி செய்தருள்க என்பது கருத்து.


பாடல் எண்.7
            நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
            நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ         

இதன் பொருள்

            நீயா - நீங்குதல் இல்லாத

            மாநீ -  உமாதேவியை உடையவனே

            ஏயா - ஒப்பில்லாத

            மாதா - தாயாக விளங்குபவனே

            ஏழீ -  ஏழு இசையின் வடிவாகத் திகழ்பவனே

            கா நீ தானே - நீயே எளிவந்து எம்மைக் காப்பாற்றுக

            நே - நேயம் மிகுந்து நெஞ்சினையே

            தாநீ - இடமாகக் கொண்டு அருள்பவனே

            காழீ - சீர்காழியில் விளங்கும்

            வேதா - வேதங்களின் பொருளானவனே

            மாய் - எங்களைக் கொல்லவரும்

            ஆநீ - துன்பங்களை

            மாயாயே நீ - நீ மாய்த்தருள மாட்டாயா

விளக்கக் குறிப்பு
           நீ - நீத்தல், நீங்குதல்.  நீயா - நீங்குதல் இல்லாத.  மாநீ - மாநி, மானி என்பதன் விளிவேற்றுமை, மானம் உடையவள் மானி எனப்படுவள். கற்பின் மிக்க பெண்கள் அனைவரையும் குறிக்கும் இச்சொல், இங்கு உமாதேவியாரைக் குறித்து வந்தது.  ஏய்தல் - பொருந்துதல், ஒத்திருத்தல்.  ஏயா - ஒப்பில்லாத.  ஏழிசை - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன.  நே - நேயம், அன்பு.  அஃது ஆகுபெயராய் நெஞ்சத்தைக் குறித்தது.  தாநீ - ஸ்தாநத்தை உடையவன்,  ஸ்தானம், தானம் - இடம்.    ஆநீ - ஹாநி, ஆநி -  துன்பம்.


பாடல் எண். 8                
நேணவராவிழ யாசைழியே வேதகளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

இதன் பொருள்

            நே - நேயம் மிகுந்து

            அணவர் -  திருவடியை நெருங்கி நிற்கும் மெய்யடியார்களின்

            ஆ – ஆவிகள்

            விழ -  தம் வயமற்றுக் கிடக்க

            யா -  யாத்துக் கட்டிய

            சை - ஆசையாகிய கயிற்றினை

            ழியே - அருளால் அவிழ்த்து அருள்பவனே

            வேக – வேகத்தினை உடைய மானின்

            அதள் ஏரி -  தோலினை அழகுபெற அணிந்தருள்பவனே

            அளாய – துன்பங்கள் கலந்த

            உழி - இடங்களில்

            கா - எம்மைக் காத்தருள்க

            காழியுளாய் - சீர்காழிப் பதியில் வீற்றிருப்பவனே

            அரு - மன்னிப்பதற்கரிய

            ஏது - குற்றங்களை

            இளவு - எம் சிறுமைத் தன்மையினால் யாம் செய்துவிட்டோம்

            அகவே - ஆதலின் அவை நின்னால் பொறுத்தருளத் தக்கனவே ஆகுக

            ஏழிசை - ஏழிசைகளும் பாடுதலில் வல்ல

            இராவணனே -  இராவணனும் கூடத் தான் செய்த பெரும்பிழைகள் நின்னால்                                பொறுக்கப்பட்டனன் அல்லனோ

விளக்கக் குறிப்பு
           அணவர் - அண்மையில் உள்ளவர்கள்,  அடியார்கள்.  அண்மை - அருகு, சமீபம்.  ஆ -  ஆவி, ஆன்மா.  விழ -  அவிழ, முதற்குறை.  சை - ஆசை, முதற்குறை.  ழியே - அவிழியே, அவிழ்த்து அருள்பவனே, முதற்குறை.  வேகம் -  வேகமாக ஓடும் மானைக் குறித்தது.  அதள் - தோல்.  ஏரி - ஏர் (அழகு) என்னும் சொல்லடியாகப் பிறந்தது,  அழகுபெற அணிந்து அருள்பவன் என்னும் பொருளைக் குறித்தது.  ஏது - ஏதம், குற்றம், கடைக்குறை.  இளவு - இளமைத் தன்மை, சிறுமை, அற்பத்தனம்.  அஃகுதல் - நுணுகுதல், சிறியதாதல், பொறுக்கப்படுதல்.  அஃகவே என்பது எகவே என இடைக்குறைந்தது.  யாழ – முன்னிலை அசைச்சொல்.


பாடல் எண். 9
            காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
            பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.         

இதன் பொருள்

            காலே மேலே - எல்லாப் பொருள்களுக்கும் முதலும் முடிவுமாக இருப்பவனே

            காணீ - அடியார்களுக்குப் பெரும் செல்வமாக விளங்குபவனே

            காழி - சீர்காழிப் பதியில் உள்ளவனே

            மாலே - எல்லோரையும் மயக்கம் செய்பவனே

            மேபூ - மேன்மையுடன் பூத்த

            பூமேலே -  தாமரையின் மேலே வீற்றிருக்கும் பிரமதேவனும்

            மாலே - திருமாலும்

            காலேமேலே - திருவடியையும் திருமுடியையும்

            காண் நீகாழி - காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே

            கா - எம்மைக் காத்தருள்க

விளக்கக் குறிப்பு
           கால்மேல் - முதலும் முடிவும்.  காணி - நிலம், சொத்து, பெரும்செல்வம்.  மால் - மயக்கம், மயக்கம் செய்பவன்.  பூமேல்ஏ(ய்) - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்.  காழ் - மரத்திலுள்ள வயிரம், உறுதிப்பாடு.  நீ - நீத்தல், நீக்குதல்.  பூமேல்ஏ(ய்) - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்.  மாலே - திருமாலும் ஆக விளங்குபவனே.  காழீ -  அடியார்களைக் காத்தலில் உறுதிப்பாடு மிக்கவனே.  காம் - எம்மைக் கடைக்கணித்தருள்,  கண்டுகொள்.  ஈகாலே - நின் திருவடிகளை எமக்குத் தந்தருள்க.  மேலேகா -  மேற்கொண்டும் (மேற்பிறவிகளும்) எம்மைக் காப்பாற்றுக எனவும் பொருள் கொள்ளலாம்.

  
பாடல் எண். 10              
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.    

இதன் பொருள்

            வேரியும் - வாசனையும்

            ஏண் - பெருமையும்

            நவம் - புதுமையும் கொண்ட

            காழியொயே -  சீர்காழிப் பதியில் உள்ளவனே

            ஏனை -  பிறிதாகிய வெறுப்பையும்

            நீள்நேயம் - நீண்ட நேயத்தையும்

            அடு - அடுதலும்

            அள் - அள்ளுதலும்

            ஓகரது ஏ – யோகிகளினுடைய செயலேயாகும்

            தேரகளோடு -  புத்தர்களின் சொற்களையும்

            அமணே - சமணர்களின் சொற்களையும்

            நினை -  நினைத்தலையும்

            ஏய் - அவர்களுடன் கூடுதலையும்

            ஒழி - ஒழியும்படி செய்து

            காவணம் ஏ – அந்நெறிகளில் யாம் சேராமல் எம்மைக் காக்கும் தன்மைகள்

            உரிவே - உமக்கு உரியனவேயாகும்.

விளக்கக் குறிப்பு
           காழியோயே என்பது காழியொயே என வந்தது.  ஏனை - ஏனையது, மற்றையது, பிறிது, அஃது ஈண்டு வெறுப்பைச் சுட்டி வந்தது. நேம் -  நேயம், இடைக்குறை.  வெறுப்பை நீக்குதலும், நேயத்தைப் பெருக்குதலும் யோகிகளினுடைய செயல் என்பது கருத்து.  யோகர் என்பது ஓகர் என மருவி வந்தது. யோக்கிய சக்தி என்னும் தொடர் ஓக்கிய சக்தி எனச் சிவஞானசித்தி (சுபக்கம் 138) யின்கண் வந்தாற்போல.  தேரர்கள் என்பது தேரகள் என நின்றது.  அடு - அள் - நினை - ஏய் என்னும் முதலீறுகள், அடுதல், அள்ளுதல், நினைத்தல், ஏய்தல் என்னும் தொழிற்பெயர்ப் பொருளிள் வந்தன.  கா வண்ணம் -  காக்கும் தன்மை , இடைக்குறை. ( பந்தலைக் குறிக்கும் காவணம் என்பது பிறிதொரு சொல்).  உரியவே என்பது உரிவே என மருவிற்று.


பாடல் எண். 11
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளைனின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

இதன் பொருள்

            நேர் - நேர்மைக் குணத்தினை

            அகழ்ஆம் - அகழ்ந்து கல்லி எறிவது ஆகிய

            இதயஆச – மனத்தின்கண் எழும் காமவெகுளி மயக்கம்  என்னும் முக்குற்றங்களையும்

            அழி - அழிக்க வல்லவனே அழித்தருள்க எனினுமாம்

            தாய்ஏல் - உலகுக்கெல்லாம் தாயாகும் தன்மையை ஏற்கத் தக்கவன்

            நல்நீயே - நல்லவன் ஆகிய நீ ஒருவனேயாம்

            நல் - நன்மை புரிவதில்

            நீள் - உயர்வு மிக்கவனே

            ஆய்உழிகா - தளர்ச்சி நேரும் இடத்து எம்மைக் காத்தருள்க

            காழியுளானின் - சீர்காழிப் பகுதியில் உள்ள சிவபிரானைப் பற்றிய

            நையே - மன உருக்கத்தைத் தரும் இப்பாடல்களையே

            நினையே - நினைப்பாயாக

            தாழ் இசையா - அதனால் உமக்கு ஒரு குறையும் உண்டாகாது

            தமிழ் ஆகரனே - தமிழுக்கு உறைவிடம் போன்ற திருஞானசம்பந்தன் உறுதி கூறுவது.

விளக்கக் குறிப்பு
           இதய + ஆச + அழி - இதயாசழி என வந்தது.   தாய் + எல் +நல் +நீயே -  தாயே நனனியே என அமைந்தது.  நீயே என்பது நியே எனக் குறுகிற்று.  நல் + நீள் - னனிள் எனப் புணர்ந்து குறுகியது.  ஆய்தல் - தளர்தல், துன்புறுதல்.  உழி - இடம், சமயம்.  ஆய் உழி கா -  தளர்ந்த இடத்துக் காப்பாற்றுக.  நைவு - மன உருக்கம், பாடல்கலுக்குப் பெயராயிற்று.  காழியுளானின் + நையே + நினையே என்பது காழியுளா னினயே னினயே எனப் புணர்ந்து நின்றது.  தாழ்வு + இசையா - தாழிசயா என அமைந்தது.  ஆகரம் - உறைவிடம்,  நிலைக்களம்.  தமிழாகரன் -  திருஞானசம்பந்தர் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு பெயர்.  இத்திருப்பதிகம் ஓதுபவர்க்கு உண்டாகும் பயன் கூறியவாறு.  இவ்விறுதிப் பாடல், திருக்கடைக்காப்பு எனப்படும்.

                                                            திருச்சிற்றம்பலம்


3. 067 திருப்பிரமபுரம்   வழிமொழித்திருவிராகம்   பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சுரருலகு நரர்கள்பயில் தரணிதல
            முரண்அழிய, அரணமதின்முப்
புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
            கரம்உடைய பரமன்இடமாம்ஸ
வரம்அருள வரன்முறையில் நிரைநிறைகொள்
            வருசுருதி  சிரஉரையினால்
பிரமன்உயர் அரன்எழில்கொள் சரணஇணை
            பரவவளர் பிரமபுரமே.

            பொழிப்புரை : தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும் , மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய , காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஒர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான் . எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது .


பாடல் எண் : 2
தாணுமிகு ஆண்இசைகொடு ஆணு வியர்
            பேணும்அது காணும்அளவில்,
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
            மாணி மது நாணும்வகையே,
ஏணுகரி பூண்அழிய ஆண்இயல்கொள்
            மாணிபதி, சேண்அமரர்கோன்
வேணுவினை ஏணிநகர் காணில்திவி
            காணநடு வேணுபுரமே.

            பொழிப்புரை : தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட , நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார் . வளைந்த நெற்றியையும் , நீண்ட கண்களையுமுடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள் . மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும் , வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்ததால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு , தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும் . சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்த பெயர் வேணுபுரம் என்பது .


பாடல் எண் : 3
பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
            நிகழ்சரண அகவுமுனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
            முகம்உடைய பகவன்இடமாம்,
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
            மிகஅருள நிகர்இல்இமையோர்,
புகஉலகு புகழ எழில் திகழ நிகழ்
            அலர்பெருகு புகலிநகரே.

            பொழிப்புரை : சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும் , அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும் . தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது .


பாடல் எண் : 4
அம்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
            வங்கள் எழில் தங்கும்இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர்
            எங்கள்இறை தங்கும்இடமாம்,
வெங்கதிர்வி ளங்கு உலகம் எங்கும்எதிர்
            பொங்குஎரி புலன்கள் களைவோர்,
வெங்குருவி ளங்கிஉமை பங்கர்சர
            ணங்கள்பணி வெங்குரு அதே.

            பொழிப்புரை :அழகிய சந்திரனும் , கங்கை நதியும் , கொடிய பாம்புகளும் , அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர் , எங்கள் இறைவராகிய சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும் . அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும் .


பாடல் எண் : 5
ஆண்இயல்பு காணவன வாணஇயல்
            பேணியெதிர் பாணமழைசேர்
தூணிஅற நாணிஅற வேணுசிலை
            பேணிஅற நாணிவிசயன்
பாணிஅமர் பூணஅருள் மாணுபிர
            மாணி இடம், ஏணிமுறையில்
பாணி உலகு ஆளமிக ஆணின்மலி
            தோணிநிகர் தோணிபுரமே.

            பொழிப்புரை : விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு , அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி , அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும் , அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும் , வில்நாண் அறு படவும் , வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர் . அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர , அவனுக்கு அருள்புரிந்தவர் , பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக ( பொருளாக ) உள்ள சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளய கால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய , ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும் . பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர் .


பாடல் எண் : 6
நிராமய, பராபர, புராதன, பராவுசிவ ராக அருள்என்று,
இராவும் எதிராயது பராநினை புராணன் அம ராதிபதியாம்,
அராமிசை இராதஎழில் தருஆய அர பராயண வராக உருவா
தராயனை விராய்எரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.

            பொழிப்புரை : இறைவன் நோயற்றவன் . அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள் . மிகப்பழமையானவன் . பராவுசிவன் என்று இரவும், பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமையானவன் . தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை , திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
அரணை உறு முரணர்பலர் மரணம்வர
            இரணம்அதில் அரம் மலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணன் உயர்
            பரன் நெறிகொள் கரனது இடமாம்,
பரவுஅமுது விரவ விடல் புரளம்உறும்
            அரவை அரி சிரம் அரிய அச்
சிரம்அரன சரணம் அவை பரவ இரு
            கிரகம் அமர் சிரபுரமதே.

            பொழிப்புரை : மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட , காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும் , தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும் , யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும் , உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற் கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில் , தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச , அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 8
அறம்அழிவு பெறஉலகு தெறுபுயவன்
            விறல்அழிய நிறுவி விரல்மா
மறையின்ஒலி முறைமுரல்செய் பிறைஎயிறன்
            உறஅருளும் இறைவன் இடமாம்,
குறைவின்மிக நிறைதை உழி மறைஅமரர்
            நிறைஅருள முறையொடுவரும்
புறவன்எதிர் நிறைநிலவு பொறையன்உடல்
            பெற அருளும்  புறவம் அதுவே.

            பொழிப்புரை : தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி , பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும் , ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வேதங்கட்கும் , தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி , முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே , புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும் , தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும் .

  
பாடல் எண் : 9
விண்பயில மண்பகிரி வண்பிரமன்
            எண்பெரிய பண்படைகொள்மால்
கண்பரியும் ஒண்புஒழிய நுண்பொருள்கள்
            தண்புகழ்கொள் கண்டன்இடமாம்,
மண்பரியும் ஒண்பு ஒழிய நுண்புசகர்
            புண்பயில விண்படர அச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
            பண்புகளை சண்பைநகரே.

            பொழிப்புரை : சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும் , மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது , கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க , நுண்ணிய பொருளாக , இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறந்து விண்ணுலகை அடைய , துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால் , சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
பாழிஉறை வேழம் நிகர் பாழ் அமணர்
            சூழும் உட லாளர் உணரா
ஏழின்இசை யாழின்மொழி எழை அவள்
            வாழும்இறை தாழும் இடமாம்,
கீழ்இசைகொள்  மேல்உலகில் வாழ்அரசு
            சூழ்அரசு வாழ அரனுக்கு
ஆழியசில் காழிசெய ஏழ் உலகில்
            ஊழிவளர் காழிநகரே.

            பொழிப்புரை : பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .


பாடல் எண் : 11
நச்சுஅரவு கச்சுஎன அசைச்சுமதி
            உச்சியின் மிலைச்சு ஒருகையான்
மெய்ச்சிரம் அணைச்சு உலகில் நிச்சம்இடு
            பிச்சை அமர் பிச்சன் இடமாம்,
மச்சமதம் நச்சிமத மச்சிறுமி
            யைச்செய்தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர்பணி யச் சுரர்கள்
            நச்சிமிடை கொச்சைநகரே.

            பொழிப்புரை : நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி , சந்திரனைத் தலையிலே சூடி , ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி , உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க , தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 12
ஒழுகல்அரிது அழிகலியில் உழிஉலகு
            பழிபெருகு வழியை நினையா
முழுது உடலில் எழுமயிர்கள் தழுவும் முனி
            குழுவினொடு கெழுவுசிவனை,
தொழுது உலகில் இழுகுமலம் அழியும்வகை
            கழுவும் உரை கழுமலநகர்ப்
பழுதில்இறை எழுதுமொழி தமிழ்விரகன்
            வழிமொழிகள் மொழிதகையவே.

            பொழிப்புரை : நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி , உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி , சிவபெருமானைத் தொழுது , உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும் , எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன .
                                                            திருச்சிற்றம்பலம்


1.127   திருப்பிரமபுரம்     ஏகபாதம்       பண் - வியாழக்குறிஞ்சி
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

            குறிப்புரை :ஞானாகாசமாகிய பராசத்தியான பரிபூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசத்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு இறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன். மேல்நிலமாகிய ஆகாசத்தின்கண்ணேயோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமது உயிர். பிரமரூபத்திலே எண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாய் என்னை ஒக்க வந்தவன். பிரமபுரம் என்கின்ற சீகாழிப் பதியிலே வீற்றிராநின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி. பெரியோனும் எனக்கு உயிரானவனும் என்னையொக்கவந்தவனும் சீகாழிப்பதியில் வீற்றிருக்கும் கடவுள் எனக் கூட்டிப் பொருள் கொள்க.

 
பாடல் எண் : 2
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

            குறிப்புரை :அஷ்டகுல பர்வதங்களும் ஒலிசிறந்த தரிசு மணியாகவும், அகிலலோகங்களையும் உள்ளே அகப்படுத்தும் தன்மையவாயும், பெரிதாயும் உள்ள திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன். நூபுரம் எனற்பாலது நுபுரம் எனக் குறுகிநின்றது. விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரச மரத்தினீழலில் அவனுடன் இருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன். அண்ணி எனற் பாலது அணி என இடைக்குறையாய் நின்றது. தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்ற தேவேந்திரனுடைய. எணு எனற்பாலது ஏணு என நீண்டது. புரந்தரன் எனற்பாலது புரத்தரன் என வலித்து நின்றது. இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப்பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன். தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததால் வேணுபுரம் என்னும் பெயர் பெற்றது. சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை எரித்தவரும், தேவேந்திரனுடைய சோலை சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர் எனக் கூட்டி உரைத்துக் கொள்க.


பாடல் எண் : 3
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே.

            குறிப்புரை :இதய கமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன். ஆன்மாக்களுக்கு இரட்சையாக முண்டம்போலிருந்த திருநீற்றை அணியப்பட்ட மிக்க கருணையானவனே யான்பாடும் பாடலை உவந்துள்ளவன். புலிக்காலும் புலிக்கையும் பெற்றுள்ள வியாக்கிரபாதமுனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே ஆடல் செய்யும் பரதவித்தையைக் கற்றுள்ளான். வியம் எனற்பாலது விய எனக் கடைகுறைந்து நின்றது. கீழ்ச்சொன்ன லீலைகளெல்லாம் செய்கின்ற சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும் ஊர் பிரமாபூசித்த புகலி என்னும் திருப்பதி.


பாடல் எண் : 4
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

            குறிப்புரை :கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ் செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான் என்க. தீ எனற்பாலது தி எனக் குறுகிநின்றது. கழுதரு எனற்பாலது கழ்தரு என நின்றது. மாறுபாடாய்க் கதறப்பட்ட புத்தனது தலையிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி ஏவிப் புத்தரை வேரறுத்தானும் தானேயன்றி யானன்றாகும். தீ எனற்பாலது தி எனவும், காழ்தரு எனற்பாலது கழ்தரு எனவும், ஏங்கு எனற்பாலது எங்கு எனவும் குறுகிநின்றன. தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவமுருகித்தான் விஷமாகத் தூஷணப்பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டற வைத்தவன். கீழ்ச்சொல்லிப் போந்த செய்திகளெல்லாமுடையன் எத்தன்மையனோ என்னில் எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தியினால் சிறக்கப்பட்டுள்ள இயமனால் பூசிக்கப்பட்ட வெங்குரு என்னும் திருப்பதியை விரும்பியுள்ளான். வெங்குரு என்பதும் சீகாழி.


பாடல் எண் : 5
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

            குறிப்புரை :சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகைசெய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள். சூடார் எனற்பாலது சுடர் எனவும், ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகி நின்றன. துரோணம் எனற்பாலது தோணி எனமருவிற்று. என் உச்சிக்குச் சூடாமணியுமாய் என்மேல் வைத்த மாலினையுடையனுமாய் யாகத்தின்கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்கும் தன்மையை உடையவன். சூடாமணி எனற்பாலது சுடர்மணி எனவும், மாலி எனற்பாலது மாளி எனவும், தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. மாலையுடையவன் - மாலி. தோல் - யானை. சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற செனனக்கடலிலே கீழ்ப்பட்டழுந்திக் கெடாநின்ற ஆன்மாக்களுக்குக் கைப்பற்றிக் கரையேறும் தெப்பமாகப் பிரணவம் என்கிற மந்திரத்தை அவரது செவியின் கண்ணே உண்டாக்கா நின்றவன். மண்ணி என்பது மணி என இடை குறைந்து நின்றது. புரந்தவன் எனற்பாலது புரத்தவன் என வலித்தல் விகாரமாயிற்று. விளக்கத்தையுடைய நவரத்தினங்களாலே அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்திலே வீற்றிருக்கும் சிவன் இத்தன்மையன்.


பாடல் எண் : 6
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி.

            குறிப்புரை :பூமியிலுள்ளாரையும் தேவகணங்களாய் உள்ளாரையும் தனது நாபிக் கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிரமா விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும் போலப் பிரதிவிம்பியா நின்றவன். ஆடி என்பது அடி எனக் குறுகிநின்றது. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவுபெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தம் செய்தருள்பவன். சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணிய பாவக்கட்டையரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன். உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது. மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுவதாக, பூந்தராய் என்பது சீகாழி.


பாடல் எண் : 7
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

            குறிப்புரை :தனது திருவடிப் பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே. சத்தாதிகளஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். சேர் எனற்பாலது செர் எனவும், சீர் எனற்பாலது சிர் எனவும் குறுகிநின்றன. ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்திலிச்சையுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே. இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான். ஒருகால் சிரபுரம் என்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப்பொருது சிவனுடைய திருவடியிலே அடையாநிற்பன் என்பதாம்.


பாடல் எண் : 8
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்.

            குறிப்புரை :பொலிவினையுடைய மாயா நிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும் பூதபசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக உள்ளவன். சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம் புரியாநிற்கும் தபோதனன். அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடி பத்தினிகள் பிச்சையிட வந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன். பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுராதிகளைப் பாதங்களிலேயணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவம் என்னும் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதும் சீகாழி.


பாடல் எண் : 9
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்.

            குறிப்புரை :ஆத்துமாக்களிடத்துக் கருணைபிறக்கும் இடமாயுள்ளவன். அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாகவுடையான். எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள்ளானுமாய்ப் புலியினது ஊன்பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது. தூசு எனற்பாலது துசு எனக் குறுகிநின்றது. பாயான் எனற்பாலது பையானெனக்குறுகிப் போலியாயிற்று. ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரட்சையாக நின்ற விசேஷத்தையுடையவனென்றேத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனா யுள்ளவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. பத்துத்தலையுள்ள இராவணன் முரியும்படி திருவிரலாலடர்த்தவன் யாரென்னில், சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.


பாடல் எண் : 10
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே.

            குறிப்புரை :நிலைபெற்றுநின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும்பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன். திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத்தமதறிவிலே கருதாநிற்பர். விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார். ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதேது எனில், அன்னியமே கண்டனர். கண் எனற்பாலது காண் என நீண்டது. என் பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை, என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும் தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.


பாடல் எண் : 11
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

            குறிப்புரை :ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட புத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால். பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.


பாடல் எண் : 12
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

            குறிப்புரை :மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே சிர முதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும் பரிணமித்தல் - வேறுபடுதல். கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவாநிற்கும். தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக் கவளிகரித்துக் கொண்டு அந்த அருள்வழியாக என திடத்தில் இடையறாமல் வாழும் தன்னை எனக்குத் தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர். பாதி எனற்பாலது பதி எனக் குறுகி நின்றது. மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி பெத்த முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே! திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக் கீழ்ச்சொன்ன வற்றிலும் மலத் திரயங்களிலும் அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலை இடை விடாமல் உரைசெய்வீராக. காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது.
           
                                                            திருச்சிற்றம்பலம்
    

1.090   திருப்பிரமபுரம்                   பண் - குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அரனை உள்குவீர், பிரம னூருள்எம்
பரனையே மனம், பரவி உய்ம்மினே.

            பொழிப்புரை :சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.


பாடல் எண் : 2
காண வுள்குவீர் , வேணு நல்புரத்
தாணு வின்கழல் , பேணி உய்ம்மினே.

            பொழிப்புரை :சிவபிரானைக் கண்டு தொழஎண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.


பாடல் எண் : 3
நாதன் என்பிர்காள் , காதல் ஒண்புகல்
ஆதி பாதமே , ஓதி உய்ம்மினே.

            பொழிப்புரை :சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.


பாடல் எண் : 4
அங்கம் மாதுசேர் , பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் , எங்கள் ஈசனே.

            பொழிப்புரை :அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.


பாடல் எண் : 5
வாள்நி லாச்சடைத் , தோணி வண்புரத்து
ஆணி நல்பொனைக் , காணு மின்களே.

            பொழிப்புரை :ஒளி பொருந்திய, பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.


பாடல் எண் : 6
பாந்தள் ஆர்சடைப் , பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள் , வேந்தன் என்பரே.

            பொழிப்புரை :பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.

பாடல் எண் : 7
கரிய கண்டனைச் , சிரபு ரத்துள்எம்
அரசை நாள்தொறும் , பரவி உய்ம்மினே.

            பொழிப்புரை :கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.


பாடல் எண் : 8
நறவம் ஆர்பொழில் , புறவ நல்பதி
இறைவன் நாமமே , மறவல் நெஞ்சமே.

            பொழிப்புரை :தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.


பாடல் எண் : 9
தென்றில் அரக்கனைக் , குன்றில் சண்பைமன்
அன்று நெரித்தவா , நின்று நினைமினே.

            பொழிப்புரை :தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.


பாடல் எண் : 10
அயனும் மாலுமாய் , முயலும் காழியான்
பெயல்வை எய்திநின்று , இயலும் உள்ளமே.

            பொழிப்புரை :பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.


பாடல் எண் : 11
தேரர் அமணரைச் , சேர்வுஇல் கொச்சைமன்
நேர்இல் கழல்நினைந்து , ஓரும் உள்ளமே.

            பொழிப்புரை :புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.


பாடல் எண் : 12
தொழும் மனத்தவர் , கழும லத்துஉறை
பழுதுஇல் சம்பந்தன் , மொழிகள் பத்துமே.

            பொழிப்புரை :கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞானசம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

                                                            திருச்சிற்றம்பலம்
  

1.128   திருப்பிரமபுரம்                பண் - வியாழக்குறிஞ்சி
                                                திருஎழுகூற்றிருக்கை
                                                    திருச்சிற்றம்பலம்

            இத் திருப்பதிக விளக்கமும் எங்கள் ஆசிரியர் பெருமானார் அமரர் ந. ரா. முருகவேள் அவர்கள் சைதைச் தேவார சபைத் தலைவராக வீற்றிருந்த காலத்தில் அருளியதே.
  
பாடல் எண் : 1
ஓர்உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பாய்; ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;                                 5

ஓர்ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை;
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர்அயில் மூஇலைச் சூலம்                  10

நால்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிம் அஞ்சக்                         15

கொன்று தலத்துஉற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன் நால்ஆம் அந்தக் கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20

நால்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி
வரன்முறை பயின்று எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;        25

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்குநால் கடல்சூழ் வெங்குரு விளங்கினை;
பாணிமூ உலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;                                       30

வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;       35

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் எழிசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறு பதமும் ஐந்துஅமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்                              40

மூன்று காலமும் தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்          45

அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தே.

பதப்பொழிப்புரை : –

1.     ஓர் உரு ஆயினை – எல்லாத் தத்துவங்களையும் கடந்து நிற்கும் பரசிவம் ஆகிய தாங்கள் உயிர்கள் உய்யும் பொருட்டு உம் விருப்பத்தினாலேயே ஒரு திருமேனியை எடுத்துக்கொண்டீர்;

2.     மான் ஆங்காரத்து ஈர் இயல்பாய்  சத்தியை எழுச்சி உறச் செய்து, சத்திசிவம் என்னும் இரண்டு நிலைகளாய்;

3.     ஒரு விண்முதல் பூதலம் – ஒப்பற்ற ஆகாயம் முதல் ஈறாக உள்ள ஐம்பெரும் பூதங்களையும்;  ஓன்றிய இருசுடர்  பொருந்திய ஞாயிறு திங்கள் என்னும் இரண்டு பேரொளிகளையும்; உம்பர்கள் பிறவும் – வானுலகத்தில் வாழும் தேவர்களையும் மற்றும் பிற உயிர்களையும் பொருள்களையும் எல்லாம்;

4.     படைத்து அளித்து அளிப்ப மும்மூர்த்திகள் ஆயினை  தோற்றுவித்தற்குப் பிரமன், காத்தற்குத் திருமால், அழித்தற்கு உருத்திரன் என்னும் மூன்று மூர்த்திகளாகவும் நிற்கின்றீர்;

5.     இருவரொடு ஒருவன் ஆகி நின்றனை – பிரம விட்டுணுக்களைத் தங்கள் திருமேனியின் வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் தோற்றுவித்தும் ஒடுக்கிக் கொண்டும், அவ் இருவரோடு ஏகபாதர் என்னும் திருவுருவம் கொண்டு திகழ்கின்றீர்;

6.     ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும்  ஒப்பு அற்ற கல்லால மரத்தின் நிழலில் தங்களின் இரண்டு திருவடிகளையும்;

7.     முப்பொழுது ஏத்திய  காலை நண்பகல் மாலை என்னும் மூன்று காலங்களிலும் துதித்து வணங்கிய;  நால்வர்க்கு  சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர் என்னும் நான்கு முனிவர்களுக்கும்;  ஒளிநெறி காட்டினை  சிவஞான நெறியை உணர்த்தி அருளினீர்;

8.     நாட்டம் மூன்றாகக் கோட்டினை  ஞாயிற் திங்கள் தீ என்னும் சுடர்கள் மூன்றையும் மூன்று திருக்கண்களாகக் கொண்டு, உலகம் இன்புற இருளை அகற்றி அருளினீர்,  நாட்டம்  கண்;

9.     இருநதி அரவமோடு ஒருமதி சூடினை  பெரிய கங்கையாற்றையும் பாம்பினையும் ஒப்பற்ற பிறைச்சந்திரனையும் தலையில் சூடி அருளினீர்;

10.  ஒருதாள் ஈர் அயில் மூஇலைச் சூலம்  ஓர் அடிப்பகுதியினையும், ஈருகின்ற கூர்மையையும், மூன்று இலை போன்ற அமைப்பையும் உடைய சூலத்தையும்;

11.  நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை  நான்கு கால்களையுடைய மான் கன்றினையும், ஐந்து தலைகளையுடைய பெரிய பாம்பினையும் திருக்கைகளில் ஏற்று ஏந்திக் கொண்டு இருக்கின்றீர்;

12.  காய்ந்த நால்வாய்  கோபம் மிக்க தொங்குகின்ற வாயையும்;  மும்மதத்து  கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என்னும் மூன்று மதங்களையும்;

13.  இருகோட்டு  இரண்டு தந்தங்களையும் உடைய;  ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – கஜாசுரன் என்னும் அவுணன் ஆகிய ஒரு யானையினுடைய வலிமையை அழியும்படி செய்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு அருளினீர்;

14.  ஒரு தனு இருகால் வளைய வாங்கி – ஒப்பற்ற மேருமலை ஆகிய வில்லை, இரண்டு முனைகளும் வளையும்படி வளைத்து;

15.  முப்புரத்தோடு தலத்துற அவுணரை  முப்புரங்களையும் அவற்றில் வாழ்ந்த அவுணர்களையும்;

16.  நானிலம் அஞ்சக் கொன்று அறுத்தனை  பெரிய பூமியில் உள்ள யாவரும் அஞ்சுமாறு கொன்று ஒருங்கே ஒழித்தருளினீர்;

17.  ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்  சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து புலன்களையும்,  மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் உட்கருவிகள் நான்கினையும்;

18.  முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்  சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று குணங்களையும், பிராணன் அபானன் என்னும் இரண்டு வாயுக்களையும் ஒடுக்கி, ஒருமைப்பட்ட உள்ளமுடைய தேவர்கள்;

19.  ஏத்த நின்றனை  போற்றுமாறு எழுந்தருளி இருக்கின்றீர்;  ஒருங்கிய மனத்தோடு – ஒருமைப் பட்ட உள்ளத்துடன்;

20.  இருபிறப்பு ஓர்ந்து  உலகில் தோன்றியதனால் உண்டான பிறப்பும், உபநயனச் சடங்கினால் ஏற்பட்ட பிறப்பும் ஆகிய இரண்டினையும் ஆராய்ந்து;  முப்பொழுது குறை முடித்து  காலை நண்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளிலும் செபம் தர்ப்பணம் அனுட்டானம் ஓமம் என்னும் நியமங்களைச் செய்து நிறைவேற்றி;

21.  நான்மறை ஓதி  நான்கு வேதங்களையும் பாராயணம் செய்து;  ஐவகை வேள்வி அமைத்து  – வேதம் ஓதுதலாகிய பிரமயாகம்,  ஓமம் வளர்த்தல் ஆகிய தேவயாகம், நீர்க்கடன் ஆற்றுதலாகிய பிதிர்யாகம்,  விருந்தோம்பல் ஆகிய மானுடயாகம், பலியீதல் ஆகிய பூதயாகம் (சிவபூசை குருபூசை மாகேசுரபூசை அந்தணர்பூசை அதிதிபூசை) என்னும் ஐந்து வகையான வேள்விகளையும் செய்து நிறைவேற்றி;

22.  ஆறு அங்கம், முதல் எழுத்து ஓதி – மந்திரம் வியாகரணம் நிகண்டு சந்தோவிசிதம் நிருத்தம் சோதிடம் எண்ணிம் வேத அங்கங்கள் ஆறினையும்,  வேதம் முதலிய எல்லாக் கலைகளுக்கும் முதலாக உள்ள பிரணவத்தையும் உச்சரித்து

23.  வரன்முறை பயின்று  வேள்விகளையும் இயம நியமங்களையும் தொன்றுதொட்டு வரும் முறையின்படி இடைவிடைது செய்து;  எழு வான்தனை வளர்க்கும் – எழுந்து பெய்கின்ற மழையினைக் காலம் தவறாது பெய்விக்கின்ற;

24.  பிரமபுரம் பேணினை  திருப்பிரமபுரத்தினை விரும்பி எழுந்தருளி இருக்கின்றீர்;

25.  அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை  ஆறு கால்களையுடைய வண்டுகள் பண்பாடுகின்ற சோலைகள் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பி இருக்கின்றீர்;

26.  இகலிய மைந்து உணர் புகலி அமர்ந்தனை  தேவர்கள் தம்மைப் பகைத்த சூரபதுமனின் வலியை உணர்ந்து அடைக்கலம் புகுந்த புகலியில் அமர்ந்து இருக்கின்றீர்;

27.  பொங்கும் நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை – பொங்கிப் பெருகிவரும் பிரளய வெள்ளம் ஆகிய நான்கு கடல்களும் சூழ்ந்து கொண்ட வெங்குருவில் விளங்குகின்றீர்;

28.  பாணி மூவுலகும் புதைய    ஊழிநீர் வெள்ளத்தில் மூன்று உலகங்களும் அமிழ்ந்து போகவும்;

29.  மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை – தான் மட்டும் அழியாமல் தோணியின் வடிவம் கொண்டு மிதந்த புரத்தில் உறைகின்றீர்;

30.  தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை  ஒரு காலத்தும் அழியாத பெருஞ்செல்வம் பொருந்திய பூந்தராயில் ஏய்ந்து பொருந்தி வாழ்கின்றீர்;

31.  ஒருபுரம் என்று உணர் சிரபுரத்து உறைந்தனை  ஒப்பு அற்ற தலம் என்று உணர்ந்து யாவரும் போற்றுகின்ற சிரபுரத்தில் தங்கி உறைந்து வருகின்றீர்;

32.  ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்  ஓப்பு உயர்வு அற்ற திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற மிக்க வலிமை உடைய இராவணனின்;

33.  விறல் கெடுத்து அருளினை  வெற்றியைக் கெடுத்துப் பின்னர் அருள் புரிந்தீர்;  புறவம் புரிந்தனை  திருப்புறவம் என்னும் இத்தலத்தில் விருப்பம் கொண்டு வீற்றிருக்கின்றீர்;

34.  முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை  திருப்பாற்கடலில் அறிதுயில் புரிகின்ற திருமாலும் பிரமனும் அறிந்துகொள்ள இயலாத பெருமையுடண் திகழ்கின்றீர்;

35.  சண்பை அமர்ந்தனை  திருச்சண்பை என்னும் இத்தலத்தில் விருப்பம் கொண்டு அமர்ந்து இருக்கின்றீர்;

36.  ஐயுறும் அமணரும்  கடவுள் உண்மையில் ஐய உணர்வினை உடைய சமணர்களும்; அறுவகைத் தேரரும்  முடிவில் யாவும் அற்று ஒழிந்துவிடும் என்னும் புத்தர்களும்;

37.  ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை  எக்காலத்தும் உணர்ந்து கொள்ளாத நிலையில் சீர்காழியில் நிலையாக வாழ்ந்து வருகின்றீர்;

38.  எச்சன்  வேள்வித் தலைவனாயும்;  ஏழ் இசையோன்  குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசைகளின் வடிவினனாயும்;  கொச்சையை மெச்சினை – கொச்சை வயத்தை வியந்து இருப்பிடமாகக் கொண்டு உள்ளீர்;

39.  ஆறு பதமும்  பிரத்தி பிரத்தியாகாரம் துல்லியம் துல்லியாதீதம் வித்தை அவித்தை என்னும் ஆறுபதங்களும்;  ஐந்து அமர் கல்வியும்  ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் விரையம் என்கிற ஐந்து விதமான கல்வியும்;

40.  மறைமுதல் நான்கும்  முதன்மையான இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும்;

41.  மூன்று காலமும்    இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் காலங்கள் மூன்றும்;  தோன்ற நின்றனை  தோன்றுவதற்கு ஏதுவாக நின்றீர்;

42.  இருமையின் ஒருமையும் – உயிர்களோடு கலந்து ஒருமைப்பட்டு அத்துவிதம் ஆகியும்; ஓருமையின் பெருமையும்  எல்லாம் தன்னுள் அடக்கிய எல்லை அற்ற ஒரு பரம்பொருள் ஆகிய சிவம் ஆகியும் திகழ்கின்றீர்;

43.  மறுஇலா மறையோர்  குற்றம் இல்லாத வேதங்களை உடைய அந்தணர் குலத்தில் தோன்றி;

44.  கழுமலம் – மலம் கழுவப்பெற்ற நிலையில்;   முதுபதி  அநாதி நித்திய சிவத்தன்மையை அடைந்த;   கவுணியன்  கவுணிய கோத்திரத்திலே தோன்றியருளிய திருஞானசம்பந்தன் ஆகிய யான் கூறிய;  கட்டுரை  திருவெழுகூற்றிருக்கை என்னும் இந்தத் திருப்பதிகத்தினை;

45.  கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்  கழுமலம் என்னும் பழம்பெரும் தலத்தில் எழிந்தருளி உள்ள,  பிரமனின் தலையாகிய கலத்தில் உண்கின்ற இறைவன் உவந்து அருள்புரிவர்;

46.  அனைய தன்மையை ஆதலின்  அத்தகைய சிறந்த பண்பை உடையவர் ஆகையால்; நின்னை  தேவரீரை;

47.  நினைய வல்லவர்  நினைந்து தியானிக்க வல்லவர்களுக்கு;  நீள் நிலத்து இல்லை – நீண்ட பெரிய இவ் உலகத்தில் பிறவி இல்லையாகும்.

பெயர்க்காரணங்கள்
           
            இத்திருப்பதிகத்தின்கண் தொகுத்து அருளப்பெற்ற பிரமபுரம் முதலிய பன்னிரண்டு திருப்பெயர்கள் ஏற்பட்டமைக்குரிய காரணங்கள் வருமாறு::

1. பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
            சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
            வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
            செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
            கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

            2. வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம்.  தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

            3. புகலி  சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

            4. வெங்குரு  அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

            5. தோணிபுரம்  ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

            6. பூந்தராய்  சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

            7. சிரபுரம்  சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

            8. புறவம்  சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

            9. சண்பை  கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர்  செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

            10. சீர்காழி  காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

            11. கொச்சைவயம்  பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

            12. கழுமலம்  உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

                                                            திருச்சிற்றம்பலம்



3. 110  திருப்பிரமபுரம் - ஈர்அடி          பண் - பழம்பஞ்சுரம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வரமதேகொளா உரமதேசெயும் புரம்எரித்தவன் பிரமநற்புரத்து
அரன்நல்நாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.

            பொழிப்புரை : தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது , தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான் . திருப்பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும் .


பாடல் எண் : 2
சேண்உலாமதில் வேணு மண்ணுளோர் காண மன்றல்ஆர் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவர் ஆணிஒத் தவரே.

            பொழிப்புரை : ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த , நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர் .


பாடல் எண் : 3
அகலம் ஆர்தரைப் புகலுநான் மறைக்கு இகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோன் எதிர்ச் சகலசேகரன் அகிலநா யகனே.

            பொழிப்புரை : விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார் .


பாடல் எண் : 4
துங்கமாகரி பங்கமாஅடுஞ் செங்கையான்நிகழ் வெங்குருத்திகழ்
அங்கணான் அடி தங்கையால் தொழத் தங்குமோ வினையே.

            பொழிப்புரை : உயர்ந்ததும் , பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும் , புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா .


பாடல் எண் : 5
காணிஒண்பொருட்கு அற்றவர்க்கு ஈகை உடைமையோர்அவர் காதல்செய்யும் நல்
தோணிவண்புரத்து ஆணிஎன்பவர் தூமதி யினரே.

            பொழிப்புரை : நிலங்களையும் , அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர் .


பாடல் எண் : 6
ஏந்துஅராஎதிர் வாய்ந்தநுண்இடைப் பூந்தண் ஓதியாள் சேர்ந்த  பங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேல் சேர்ந்துஇரா வினையே.

            பொழிப்புரை : படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைத் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும் .


பாடல் எண் : 7
சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் சித்திபெற் றவரே.

            பொழிப்புரை : தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர் .


பாடல் எண் : 8
உறவுமாகி அற்றவர்களுக்கு மா நெதிகொடுத்து நீள் புவியிலங்கு சீர்ப்
புறவமாநகர்க்கு இறைவனே எனத் தெறகிலா வினையே.

            பொழிப்புரை : வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற , இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா .




பாடல் எண் : 9
பண்புசேர் இலங் கைக்கு நாதன்நல் முடிகள் பத்தையும் கெடநெரித்தவன்
சண்பை ஆதியைத் தொழும் அவர்களைச் சாதியா வினையே.

            பொழிப்புரை : பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்களை வினைகள் துன்புறுத்தா . வலியிழந்துபோம் .


பாடல் எண் : 10
ஆழிஅங்கையில் கொண்ட மால்அயன் அறிவொணாததுஓர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுள் நாமமே கற்றல்நல் தவமே.

            பொழிப்புரை : சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும் , பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும் , சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும் .


பாடல் எண் : 11
விச்சை ஒன்றுஇலாச் சமணர்சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன்
கொச்சை மாநகர்க்கு அன்புசெய்பவர் குணங்கள் கூறுமினே.

            பொழிப்புரை : மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர் , புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள் .


பாடல் எண் : 12
கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு முக்கணெம் மிறையே.

            பொழிப்புரை : திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ் மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான் .
                                                 திருச்சிற்றம்பலம்



3.005      திருப்பூந்தராய்                    பண் - காந்தாரபஞ்சமம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்றது ஆகிய நம்பன் தானே.

            பொழிப்புரை :சிவனை மதியாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனாகிய , திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய , இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள் . அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற , அனைவராலும் விரும்பப்படுகின்ற அச் சிவபெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான் .


பாடல் எண் : 2
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே.

            பொழிப்புரை :பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப் பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும் . ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான் .


பாடல் எண் : 3
வேந்த ராய்உலகு ஆள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந்து ஏத்தி உள்கிடச்
சாதி யாவினை ஆன தானே.

            பொழிப்புரை :நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள் . மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைந்து , போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா . எனவே பிறவி நீங்கும் . வீடுபேறு உண்டாகும் .


பாடல் எண் : 4
பூசு ரர்தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோய்அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

            பொழிப்புரை :இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .


பாடல் எண் : 5
பொலிந்த என்புஅணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தை ஆயஎம் ஈசன் தானே.

            பொழிப்புரை :எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை , நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட , நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன் , நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்கு தலோடு , இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான் . தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால் , பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந் துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும் , யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும் .


பாடல் எண் : 6
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.

            பொழிப்புரை :திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க , குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடை முடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான் .


பாடல் எண் : 7
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
சேஅது ஏறிய செல்வன் தானே.

            பொழிப்புரை :புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து , திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க , விடையேறும் செல்வனான அவன் , நாம் மனம் , வாக்கு , காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்

பாடல் எண் : 8
போத கத்துஉரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞ கனே.

            பொழிப்புரை :யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான் .


பாடல் எண் : 9
மத்தம் ஆன இருவர் மருவஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள் அதாக அடைந்து உய்ம்மின் நும்வினை
மாளுமாறு அருள் செய்யும் தானே.

            பொழிப்புரை :தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திரு மாலும் , பிரமனும் , அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவ பெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடை யுங்கள் . அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள் புரிவான் .

  
பாடல் எண் : 10
பொருத்தம் இல்சமண் சாக்கியப் பொய்கடிந்து
இருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி எம்இ றையே.

            பொழிப்புரை :வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர் , புத்தர் களின் பொய்யுரைகளை ஒதுக்கி , விண்ணோர்கள் வணங்கும்படி வீற்றிருக்கும் கடவுள் , திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான் .


பாடல் எண் : 11
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும்நும்
பந்தம் ஆர்வினை பாறி டுமே.

            பொழிப்புரை :உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞான சம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள் . உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும் .


                                                            திருச்சிற்றம்பலம்
  

3.003   திருப்புகலி                    பண் - காந்தாரபஞ்சமம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
இயல்இசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுஉடைப் புண்ணியனே,
கயல்அன வரிநெடும் கண்ணியொடும்
அயல்உல குஅடிதொழ அமர்ந்தவனே,

கலன்ஆவது வெண்தலை, கடிபொழில் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற, நிறைமதி அருளினனே.

            பொழிப்புரை :இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற , கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே ! கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே ! உனக்கு அணிகலனாக அல்லது உண்கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும் . நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து இந்நில வுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபரஞான, பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய் .


பாடல் எண் : 2
நிலைஉறும் இடர்நிலை யாதவண்ணம்
இலைஉறு மலர்கள்கொண்டு ஏத்துதும்யாம்,
மலையினில் அரிவையை வெருவ வன்தோல்
அலைவரு மதகரி உரித்தவனே.

இமையோர்கள்நின் தாள்தொழ, எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை, உயர்திரு அடியிணையே.

            பொழிப்புரை :ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே ! அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய் . எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும் , மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம் .


பாடல் எண் : 3
பாடினை அருமறை வரன்முறையால்,
ஆடினை காணமுன் அருவனத்தில்,
சாடினை காலனைத் தயங்குஒளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே.

நினையேஅடி யார்தொழ நெடுமதில் புகலிந்நகர்
தனையேஇடம் மேவினை தவநெறி அருள்எமக்கே.

            பொழிப்புரை :ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே ! அரிய வேதங் களை இசையிலக்கண முறைப்படி, பாடியருளினாய்! முனிவரும் அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய்! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய்! முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய்! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக! சுந்தரர் இறைவனிடம் `தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே` என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.


பாடல் எண் : 4
நிழல்திகழ் மழுவினை, யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே,
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே

முடிமேல்மதி சூடினை, முருகுஅமர் பொழில்புகலி,
அடியார்அவர் ஏத்துற, அழகொடும் இருந்தவனே.

            பொழிப்புரை :ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே ! யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே ! திருவடியில் விளங்கும் வீரக் கழல்களும் , சிலம்பும் ஒலிக்க , நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே ! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே ! அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும் படி வீற்றிருந்தருளினாய் .


பாடல் எண் : 5
கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
உரிமையின் உலகுஉயிர் அளித்த, நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்,
அருமையில் அளப்பரிது ஆயவனே

அரவுஏர்இடை யாளொடும், அலைகடல் மலிபுகலி,
பொருள்சேர்தர நாள்தொறும், புவிமிசைப் பொலிந்தவனே.

            பொழிப்புரை :பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு, உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே ! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியோடு, அலைகளை யுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலியிலே, இப்பூவுலகில் நாள்தோறும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந்தருளுகின்றாய் .


பாடல் எண் : 6
அடைஅரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே,
படைஉடை நெடுமதில் பரிசு அழித்த
விடைஉடைக் கொடிமல்கு வேதியனே.

விகிர்தா, பரமா, நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய் மட மாதொடும், தாள்பணிந் தவர்தமக்கே.

            பொழிப்புரை :சிங்கத்தின் தோலைப் போர்த்து , புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே ! படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே ! இடபக் கொடியுடைய வேத நாயகனே ! விகிர்தனே ! எப்பொருட்கும் மேலானவனே ! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய் .


பாடல் எண் : 7
அடியவர் தொழுதுஎழ, அமரர் ஏத்த,
செடியவல் வினைபல தீர்ப்பவனே,
துடிஇடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடிஅணி மார்புஉறப் புல்கினனே,

புண்ணியா, புனிதா, புகர்ஏற்றினை, புகலிந்நகர்
நண்ணினாய், கழல்ஏத்திட நண்ணகி லாவினையே.

            பொழிப்புரை :அடியவர்கள் தொழுதெழ , தேவர்கள் புகழ்ந்து வணங்க , அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த் தருளும் எம் இறைவனே ! உடுக்கை போன்ற இடையையும் , அகன்ற அல்குலையும் , தூய மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே ! புண்ணிய மூர்த்தியே ! புனிதனே ! இடபவாகனனே ! திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெரு மானே ! உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா .


பாடல் எண் : 8
இரவொடு பகல்அதாம் எம்மான்உன்னை,
பரவுதல் ஒழிகிலேன் வழிஅடியேன்,
குரவிரி நறும்கொன்றை கொண்டுஅணிந்த
அரவுஇரி சடைமுடி ஆண்தகையே

அனமெல்நடை யாளொடும், அதிர்கடல் இலங்கைமன்னை
இனம்ஆர்தரு தோள்அடர்த்து, இருந்தனை புகலியுளே.

            பொழிப்புரை :இரவு , பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் எம்பெருமானே ! வழி வழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்து வணங்கிப் போற்றுதலில் தவறேன் . குராமலர்களையும் , விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும் , பாம்பையும் சடைமுடியில் அணிந்து , எம்மை ஆண்டருளும் பெருமானே ! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களையும் அடர்த்த நீ அன்னம் போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில் எழுந்தருளியுள்ளாய் .


பாடல் எண் : 9
உருகிட உவகைதந்து, உடலின் உள்ளால்
பருகிடும் அமுதுஅன பண்பினனே,
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்குஎரியாய்

உயர்ந்தாய், இனி  நீஎனை, ஒண்மலரடி இணைக்கீழ்
வயந்துஆங்கு உறநல் கிடு,மதில் புகலிமனே.

            பொழிப்புரை :உள்ளமும், உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே ! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு மலையாய், உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய். மதில்களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே ! நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி அருள்புரிவாயாக.


பாடல் எண் : 10
கையினில் உண்பவர், கணிகைநோன்பர்,
செய்வன தவம்அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே

வியந்தாய்வெள் ஏற்றினை, விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயில்உள் ஒருங்குஉடன் இருந்தவனே.

            பொழிப்புரை :கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும் , கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர் . உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது , மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ , விரும்பி அருள் புரிபவனே ! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய் . விண்ணவர்களும் தொழ , திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங் கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய் .


பாடல் எண் : 11
புண்ணியர் தொழுதுஎழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்

நடலைஅவை இன்றிப் போய், நண்ணுவர் சிவனுலகம்
இடர்ஆயின இன்றித் தாம் எய்துவர் தவநெறியே.

            பொழிப்புரை :சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில் , விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை , மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்று படப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று , பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர் .

                                                            திருச்சிற்றம்பலம்



2.029  திருப்புகலி                              பண் - இந்தளம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முன்னிய கலைப்பொருளும், மூவுலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர், பழ வூர்வினவில், ஞாலம்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்கும்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர்யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.


பாடல் எண் : 2
வண்டுஇரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டுஎரிகை ஆடுபர மன்பதியது என்பர்,
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்திரை கடல்பொலி திருப்புகலி யாமே

            பொழிப்புரை :வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும் , தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும் .


பாடல் எண் : 3
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன் விருப்பிடமது என்பர்,
பூவணவு சோலைஇருள் மாலைஎதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத் தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.


பாடல் எண் : 4
மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி என்பர்,
செய்பணி பெருத்துஎழும் உருத்திரர்கள் கூடித்
தெய்வமது இணக்குறு திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.


பாடல் எண் : 5
முன்னம்இரு மூன்றுசம யங்கள்அவை யாகிப்
பின்னைஅருள் செய்தபிறை யாளன்உறை கோயில்,
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்டச்
செந்நெல்வயல் ஆர்தரு திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.


பாடல் எண் : 6
வங்கமலி யும்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய்து இருக்கும்இடம் என்பர்,
கொங்குஅண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்குஅணவு தேன்மலி திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.


பாடல் எண் : 7
நல்குரவும் இன்பமும் நலங்கள்அவை ஆகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிடம் என்பர்,
பல்கும்அடி யார்கள்படி ஆரஇசை பாடிச்
செல்வமறை யோர்உறை திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.


பாடல் எண் : 8
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்,வரை தன்னால்
அரக்கனை அடர்த்துஅருளும் அண்ணல்இடம் என்பர்,
நெருக்குறு கடல்திரைகள் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.

 
பாடல் எண் : 9
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடுஅரவம் வைத்தருளும்அப்பன், இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலும் அடி பேணித்
தேட உறையும் நகர் திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.


பாடல் எண் : 10
கற்றஉமணர் உற்றுஉலவு தேரர்உரை செய்த
குற்றமொழி கொள்கையது இலாதபெரு மான்ஊர்,
பொன்தொடிமடந்தையரும் மைந்தர்புலன் ஐந்தும்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

            பொழிப்புரை :கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.


பாடல் எண் : 11
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு ஆயபெரு மானைப்
பந்தன்உரை செய்தமிழ்கள் பத்தும்இசை கூர
வந்தவணம் ஏத்தும்அவர் வானம்உடை யாரே.

            பொழிப்புரை :செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்.
                                                            திருச்சிற்றம்பலம்

                                                                                          ----- தொடரும் -----

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...